லதேரா டோலாவில் சாலையின் இருபுறங்களிலும் இரண்டு டஜன் பழங்குடியின வீடுகள் உள்ளன. சில வீடுகள் கான்கிரீட்டிலும், மற்றவை ஓலை குடிசை வீடுகளாகவும் உள்ளன. செப்டம்பர் மாதத்தில் ஒரு மதிய நேரம் அங்கு மழை ஓய்ந்திருந்தது. வானம் தெளிவாக இருக்கிறது. சாலையோர வீடுகளில் உள்ள வயதான பெண்கள் சிலர் வாசலில் அமர்ந்தபடி கதை பேசிக் கொண்டிருக்கின்றனர்.
புல்மானியின் கூன் முதுகும், தீவிர சுருக்கங்களும் அவரது முதுமையை வெளிக்காட்டுகின்றன. கையில் தடியை பிடித்துக் கொண்டு என்னை நோக்கி அவர் நடந்து வந்தார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தபோது புல்மானிக்கு மூன்று வயது. ஜமுய் மாவட்டம் லதேரா டோலாவில் வசிக்கும் இந்த பழங்குடிப் பெண்மணி 21 வயதிலிருந்து வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று வந்தார். ஆனால் கடந்த மாதம் அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது. 80 வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் புல்மானிக்கு எஞ்சிய வாழ்க்கையைப் பற்றிய கவலை வந்துவிட்டது. வாக்களிக்க முடியாவிட்டால், முதியோர்களுக்கான அரசின் உதவித் திட்டங்களுக்கு தான் தகுதி பெற முடியாது என அவர் அஞ்சுகிறார்.
துபாராதரி கிராமத்தின் கனார் பழங்குடியின டோலாவைச் சேர்ந்த விஷ்ணுதேவி ஹன்ஸ்தாவின் பெயரும் வாக்காளர் பட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ராஜூ கிஸ்குவுக்கும் அப்படித்தான். புல்மானி குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் ஐந்து உறுப்பினர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. கிர்போஜ்னா (கிழக்கு), உத்கிராமித் மத்திய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடி எண் 14ல் அவர்கள் அனைவரின் பெயர்களும் வருகின்றன. ஐம்பது பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. அவற்றை நான் சரிபார்த்த போது, அவர்களில் பாதிப்பேர் பழங்குடியினர். திருத்தப்பட்ட இறுதி பட்டியல் வெளியானபோது, இவ்வாக்குச் சாவடியில் 661 வாக்காளர்கள் இடம்பெற்றனர்.
2025 ஜூலையில் பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்யும் பணி நடைபெற்றதில் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் என காரணங்களை சொல்லி 66 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. படிக்கவும்: பிகாரில் தம் கதைகள் சொல்லும் மரணமுற்ற பழங்குடிகள்
இம்மாநில மக்கள்தொகையில் பழங்குடியினர் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். அண்மை தேர்தல்களுக்கு முன் செய்யப்பட்ட SIRல் அவர்களின் பெயர்கள்தான் அதிகம் நீக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அருகில் உள்ள மலைக்குன்றுகளில் விளையும் பொருட்களை அதிகம் சார்ந்துள்ளனர். அவர்கள் காடுகளில் இருந்து நாள் முழுவதும் விறகு சேகரித்து மாலையில் அருகாமை சந்தையில் அவற்றை விற்று ரூ.150-200 சம்பாதிக்கின்றனர். இதுதவிர 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் விவசாய கூலி வேலைகளுக்கும் செல்கின்றனர்.
















