பக்துவார் ஆரம்பப் பள்ளியின் பழைய கட்டடத்துக்கு முன் நின்று, மாணவ காலத்தை நினைவுகூருகிறார் அவர். சிறுவனாக இருந்தபோது அவருக்கு படிப்பு பிடிக்காது. ஊரில் உள்ள பிற குழந்தைகளை போல, மதிய உணவுதான் அவரை வீட்டிலிருந்து 1.5 கிலோமீட்டர் நடந்து பப்தைல் கிராமத்திலுள்ள பள்ளிக்கு செல்ல வைத்தது.
“பள்ளியில் அனைவருடனும் சண்டை போடுவேன். பாடங்களை படிக்க மாட்டேன். தினசரி ஆசிரியர்கள் என்னை அடிப்பார்கள். 5ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தினேன். அச்சமயத்தில் பம்பாய் பற்றிய விருப்பம் எனக்கு இருந்தது,” என்கிறார் 24 வயது நபின் தாகூர். இப்போது (ஆகஸ்ட் 2024) அவர், குடும்பத்தில் நடக்கும் மண நிகழ்ச்சிக்காக தன் கனவு நகரத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 11 வருடங்களாக மும்பையின் கட்டுமானத் தளங்களில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார் நபின்.
“அந்த நாட்களில், கரிபரா பகுதியில் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்த பெரும்பாலான குழந்தைகள், ஆரம்பப் பள்ளிக்கல்வியை நிறுத்திவிட்டு, வேலை தேடுவார்கள்,” என்கிறார் அவர். ”ஆனால் வேலை இருக்காது. எட்டு, ஒன்பது வயது சிறுவர்களாக இருந்தாலும் சரி, ஐம்பது வயதுகளில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் பிழைப்பு தேடி புலம்பெயர்வார்கள். வேறு என்ன வழி எங்களுக்கு இருக்கும்?” எனக் கேட்கிறார் நபின், ஏன் புலம்பெயர்கிறார்கள் என்கிற கேள்விக்கு பதிலாக.
























