கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் எல்லையில் உள்ள கனியன்புரா காலனியில் கே. சுனில் வசிக்கிறார். கனியன்புரா ஒரு பழங்குடி குக்கிராமம் மற்றும் அதே பெயரில் ஒரு பெரிய கிராமமும் உள்ளது. அவர் சோளிகா பழங்குடியைச் சேர்ந்தவர் - அவரது தாயும் தந்தையும் கூலித் தொழிலாளர்கள். சகோதரி வீட்டில் அவர் இருக்கிறார்.
19 வயதாகும் சுனில் 10ஆம் வகுப்பு படித்துள்ளார். அவர் தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களின் முச்சந்திப்பான முதுமலை தேசிய பூங்கா வனஉயிரின சரணாலயத்தில் உள்ள காருகுடி கிராமத்தில் வேலை செய்கிறார். அது பந்திப்பூர் தேசிய பூங்காவின் தொடர்ச்சி. மாணவர்களின் கள ஆய்வு, மரங்களை அளவிட செல்லும் போது, உடனிருக்க இந்திய அறிவியல் நிறுவனத்தால் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.












