பாலைவனத்தின் ஓரத்தில் இருப்பதை குஜராத்தியில் ரான் என குறிப்பிடுகிறோம். எனக்கு முன்னால் ஒருவர் நிற்கிறார். லேசான மாறுகண், நரைத்த முடி, வெடித்த செருப்புகளை அணிந்திருக்கும் கால்கள், வெயிலில் கறுத்திருக்கும் உடல், கன்னங்கள், உதடுகள் மற்றும் உப்பு துகள்களுடனான உறுதியான உடல் ஆகியவற்றுடன் நிற்கிறார். எளிதில் அவரை எவருக்கும் தெரிந்து விடும். அவர் ஒரு அகரியா, உப்பளத் தொழிலாளர்.
காராகோதா பாலைவனத்தில் மண் இல்லை. உப்பு மண்தான் எங்கும். மழைக்காலத்தில் நீர் நிரம்பும். அதற்கு பிறகு மண் மட்டும்தான். தினசரி வெயில் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பாலைவனத்தில் காய்ந்திருக்கும் மண்ணைதான் பார்க்க முடியும். அடிவானம் வரை ஒரு மரம் இல்லை. முட்புதர்கள் மட்டும் ஆங்காங்கே இருக்கின்றன. இதைக் கேட்பதே களைப்பை கொடுக்கும் நிலையில், இத்தகைய பகுதியில் வேலை பார்ப்பதை குறித்து யோசித்துப் பாருங்கள். எத்தனை தூரமும் நீங்கள் நடக்கலாம். எந்த இடத்தையும் அடைய முடியாது. எனினும் வேறு வழியில்லை. வாழ்க்கைப்பாட்டுக்காக இங்கு அல்லல் பட வேண்டும்.
“இந்த சாலை புதியதல்ல,
ஆனாலும் பாலைவனத்தில் தொலைந்து விட்டேன்.
என் முன்னோரின் வழியில்தான் சென்றேன்,
ஆனாலும் பாலைவனத்தில் தொலைந்து விட்டேன்.”
உப்பளத் தொழிலாளர் வாழ்க்கையின் துயரத்தை எழுதியிருக்கும் 65 வயது கவிஞரான டாக்டர் கே.வனியா, “இப்பகுதியை சேர்ந்த 99 சதவிகித அகரியாக்கள், சீர்மரபு சமூகமான சும்வாலியா கோலி சமூகத்தை சேர்ந்தவர்கள்.” அகமதாபாதில் இருக்கும் விராம்கமின் வடகிழக்கு பகுதியான சும்வால் பகுதியிலிருந்து வந்ததால் சும்வாலியா என அழைக்கப்படுகின்றனர். குஜராத்தியில் சும்வாலிகள் என்றால் 44 என அர்த்தம். அப்பகுதின் 44 கிராமங்களை அந்த வார்த்தை குறிப்பிடுகிறது. இக்குழுவின் மக்கள் பதட்டத்திலும் துயரத்திலும் வாழ்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு போராட்டக் கதை இருக்கிறது. அவற்றில் சில, மனதை ரணப்படுத்துபவை. மோதல்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மற்றவர்களும் அதை கவனிப்பதில்லை.































