"வயலில் வேலை செய்யும்போது மதிய உணவிற்கு வழக்கமாக கேபி தான் சமைப்போம்," என்கிறார் விவசாயி அசினோ மியேசிசியெனோ மெயாசே. குறைந்த மசாலாப் பொருட்கள் மட்டுமே தேவைப்படும் இந்தக் குழம்பிற்கான பொருட்கள் அனைத்தும் வயலில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு நாகாலாந்தின் கோனோமா பகுதியிலேயே எளிதாகக் கிடைக்கின்றன.
"சில சமயம், நாங்கள் கால்ஹோவையும் சமைப்போம்," என்று கீரைகள், காட்டு காய்கறிகள், உள்ளூர் மசாலாக்கள் மற்றும் புகைமூட்டப்பட்ட பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சி ஆகியவற்றைச் சேர்த்து சமைக்கப்படும் சத்தான உணவான ஒரு கஞ்சியை குறிப்பிட்டு சொல்கிறார். "இது அங்கமி மக்களின் ஒரு சிறப்பு உணவு," என்று 36 வயது அசினோ கூறுகிறார்.
இதமான குளிர்கால காலைப் பொழுதில், அசினோ தனது நெருங்கிய தோழியான உட்சோனோ மெருவுடன் கோனோமாவின் ஜும் வயல்களுக்குச் செல்லும் குறுகிய பாதையில் நடந்து செல்கிறார். நாகாலாந்தில், மலைச்சரிவுகளில் 'ஜும்' முறை பொதுவாகப் பின்பற்றப்படுகிறது. அவர்கள் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நடந்து செல்லும்போதே திடீரென குனிந்து கீரைகளையும் தாவரங்களையும் பறிக்கிறார்கள். "நாங்கள் இருவரும் மிகச் சிறந்த தோழிகள். ஒன்றாக இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம்," என்று அசினோ கூறுகிறார். சிறுவயதுத் தோழிகளான இவர்கள் தங்கள் நேரத்தை ஒருங்கிணைத்து, ஜும் வயல்களில் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.
42 வயதான உட்சோனோ, தன் கையில் புதிதாகப் பறித்த மூலிகைகளின் கட்டைக் காட்டி, அவற்றின் பெயர்களை டெனிடியெ மொழியில் வரிசையாகக் கூறுகிறார் கதா (ஃபிஷ் மின்ட்), ககெய் (இமயமலை நாட்வீட்), காம்ஹூ (காட்டு பெரில்லா) மற்றும் கக்ரா (ஜாவா வாட்டர் டிராப்வார்ட்).
"நாங்கள் கதா கீரையை காரமான மிளகாயான கிங் சில்லியுடன் சேர்த்து சட்னி செய்து கேபியுடன் சாப்பிடுவோம். மீதமுள்ள கீரைகளை கேபி குழம்பிலேயே சேர்த்துவிடுவோம். எஞ்சியிருப்பதை பின்னர் உபயோகிக்க வீட்டுக்கு கொண்டு சென்றுவிடுவோம்," என்று அவர் விளக்குகிறார்.






