"நாங்கள் பணக்காரர்கள் இல்லையென்றாலும், எங்கள் மெஹ்மானை [விருந்தினர்களை] கவனித்துக்கொள்ள தவறுவதில்லை. அதனால், தயவுசெய்து வாருங்கள்," என்கிறார் லக்பத் தாலுகா மோரி கிராமத்தைச் சேர்ந்த கரீம் ஜாட். பல ஆண்டுகளாக பாரிக்காக நான் ஆவணப்படுத்திய பல ஃபகிரானி ஜாட்களில், நாற்பது வயதைக் கடந்த அவரும் ஒருவர். சவ்லா பிர் கண்காட்சி முடிந்து கிளம்பிய என்னை லக்பத்தை விட்டு வழியனுப்பிய அதே வேளையில், அவர்களுடன் ஈத் அல் பிதர் கொண்டாடவும் என்னை வரவேற்றார். அது மார்ச் 2024, தற்போது மார்ச் 2025. கரீம் பாயின் அழைப்பை மதித்து, நான் மறுபடியும் குஜராத் கச் நகரின் மோரிக்கு பயணிக்கிறேன்.
"நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி," என்று குரலில் உற்சாகத்துடனும் பாசத்துடனும், ஆரத்தழுவி வரவேற்க காத்திருக்கிறார். "இந்த வருட ரமலான் மாத இறுதி தொழுகைக்கு இன்னும் நேரம் இருப்பதால், கொஞ்சம் நடக்கலாம்." ஒரு சில கற்றாழைகள் மட்டுமே வரிசையாக நிற்கும் வறண்ட பூமியான மோரிக்கு, தனித்துவமான அழகு உண்டு. மாலை நேரம் ஆனபின்னும் சூரியன் மறையவில்லை. இருந்தாலும், கச் வளைகுடாவில் வீசும் காற்று, நடுக்கும் குளிரைக் கொடுத்துவிட்டு போகிறது.
சிறிய குளத்தின் ஓரத்தில் நின்றுகொண்டு, அழகான சூரியனைப் பார்க்கிறோம். "நான் வண்டிகளை விற்றுவிட்டேன்," என்று கரீம் பாய் கிசுகிசுக்கிறார். "ஆனால் இன்னும் சுமார் 200 ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன, அதை என் இளைய மகன் மேய்க்கிறான். ஆனால் வருமானமும், மேய்ச்சல் நிலங்களும் குறைந்து வருகின்றன." பேச்சை இடைநிறுத்தியவர், தழுதழுத்த குரலைத் தெளிவுபடுத்தி, "மாலை தொழுகைக்கான நேரம் நெருங்கிவிட்டது. நாளை ஈத். அதனால் வருத்தமாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எல்லோரும் ஒன்றாக கொண்டாடுவோம்," என்று கூறுகிறார்.










