”காட்டுக்கு குங்கு அணிந்து சென்றால், இடி உங்களை தாக்காது,” என்கிறார் ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்திலுள்ள குஜாம் கிராமத்தை சேர்ந்த ஷுகானி அசுர். மலூ என்கிற கொடியின் இலைகளை கொண்டு செய்யப்படும் ஒரு குடை வகைதான் குங்கு.
வருடத்தின் எல்லா நாட்களும் குங்கு பயன்படுகிறது. கோடைக்காலங்களில் அது லூவிலிருந்து வெப்பக்காற்றிலிருந்தும் குளிர்காலங்களில் குளிர் காற்றிலிருந்தும் மழைக் காலங்களில் மழையிலிருந்தும் காக்கிறது. முக்கியமாக குவிமாட வடிவத்தில் இருக்கும் குங்கு தலைக்கு மேல் வைக்கப்பட்டதும் கைகளை கொண்டு அதை பிடித்திருக்க வேண்டியதில்லை.
ஷுகானி, தன் தாயிடமிருந்து குழந்தைப் பருவத்திலேயே குங்கு செய்யக் கற்றுக் கொண்டார். “முன்பு அனைவரும் காட்டில் வளரும் மலூ இலைகளை சேகரித்து குங்கு செய்வார்கள்,” என்கிறார் 56 வயது நிறைந்த அவர். “ஆனால் இப்போது சிலர்தான் அதை பயன்படுத்துகின்றனர். சிலர்தான் அதை செய்கின்றனர்.”
அதிகம் பாதிக்கத்தக்க பழங்குடி குழுவாக (PVTG) வகைப்படுத்தப்பட்டிருக்கும் ஷுகானி அசுர் சமூகத்தை சேர்ந்தவர். 10 ஏக்கர் நிலத்தில் அவரது குடும்பம் விவசாயம் பார்க்கிறது. பெரும்பாலும் நெல், சோளம், குண்ட்லி (சிறு தானியம்) போன்றவற்றை விளைவிக்கின்றனர்.
பஷுன்பூர் காடு பரப்பு, ஷுகானியின் மூன்று அறை மண் வீட்டின் 500 மீட்டர் தொலைவிலிருந்து தொடங்குகிறது. அந்த வீட்டில் 12 பேர் வசிக்கின்றனர். குஜமில் வசிப்பவர்கள் விறகு, பழங்கள், மேய்ச்சல் என பல விஷயங்களுக்காக காட்டை சார்ந்திருக்கின்றனர். “எங்களின் வாழ்வாதாரமும் பிழைப்பும் இங்குதான் இருக்கிறது,” என்கிறார் ஷுகானி.
























