”இந்த பகுதியில்தான் கிட்டத்தட்ட முழுவதுமாக பனியில் நான் புதைந்து போனேன். பலரும் நான் இறந்துவிட்டதாகவே நினைத்தார்கள்.”
17,480 அடி வரை தங்கலாங் லா மலைக்கணவாயில் பொழிந்த கடும்பனியை நினைவுகூருகிறார் ஷராப். “பிற தொழிலாளர்கள் என்னை காப்பாற்ற ஓடி வந்தார்கள்,” என்கிறார். ராணுவ மருத்துவமனை அருகே இருந்தது அவரது நல்வாய்ப்பு. உடனே அவருக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது.
ஷராப்பை போல, லடாக்கின் உயர்மலைத் தொடர்களில் சாலை கட்டுமானப் பணி செய்யும் தொழிலாளர்கள், நிச்சயமற்ற வானிலையையும் அதன் விளைவுகளையும் எதிர்கொள்வது வழக்கம். தட்பவெப்பம் அடிக்கடி, உறைகுளிருக்கும் கீழ் செல்லும். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில், இன்னும் அதிக சிக்கல்கள் நேருகின்றன. “இப்போதெல்லாம் பனி பொழியும் காலம் காலநிலை மாற்றத்தால் தாமதமாக வருவதாலும் தாமதமான பனிப்பொழிவு அதிக பனியை கொண்டு வருவதாலும் நாங்கள் பெரும் சிரமங்களை சந்திக்கிறோம்,” என்கிறார் லெ மாவட்டத்தின் க்யா கிராமத்தில் வசிக்கும் ஷராப்.
இப்பகுதியின் இரண்டாவது உயரமான மலைக்கணவாயான தங்க்லங் லாவை திறக்க வேண்டியது ஷராப் மற்றும் அவரது குழுவினரின் பொறுப்பு. கடும் குளிரும் தீவிர வானிலையும் அக்டோபர் முதல் மே மாதம் வரை கணவாயை மூடிவிடுகிறது. இக்கணவாய் திறக்கப்பட்டால் லே-மணாலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீர்பெறும். 428 கிலோமீட்டர் பயணம் கொண்ட நெடுஞ்சாலையில் நான்கு கணவாய்கள் இருக்கின்றன. தங்க்லங் லாதான் உயரமான கணவாய். இங்கிருந்து பார்க்கும்போது அற்புதமாக இருக்கும். ஆனால் 10-15 நிமிடங்களுக்கு மேல் எவரும் அந்த காட்சியை காண முடியாதளவுக்கு காற்றும் குளிரும் இங்கு இருக்கும்.


















