கூடைகளுடன் நடந்து செல்லும் பெண்கள், கோடரிகளுடன் செல்லும் ஆண்கள், மாட்டு வண்டிகளை ஓட்டிச் செல்லும் விவசாயிகள், கவுர் மரியாவின் இசைக்கு நடனம் ஆடும் இளைஞர், இளம்பெண்கள் – இதுவே கர்பெங்கலில் மூங்கிலால் வேலியிடப்பட்ட பழமையான மண் குடிசையின் முற்றத்தில் இருந்து காணும் கோண்ட் பழங்குடியினரின் உலகம். நாராயண்பூரின் அடர்ந்த வெப்ப மண்டல காட்டுப் பகுதிக்குள் இக்கிராமம் உள்ளது. அந்த இடமே இதமான, மண் வாசனையும், மரத்துண்டுகள் வெட்டப்பட்ட நறுமணத்தாலும் நிரம்பியுள்ளது. சில மரத்துண்டுகள் பாதி செதுக்கப்பட்டு சிதறிக் கிடக்கின்றன. ஒவ்வொரு மரத்துண்டும் ஒரு கதை சொல்ல காத்திருக்கிறது. போலவே தனது கருவிகள், மரத்துண்டுகள், உதவியாளர்கள் சூழ, வயதான பண்டி ராமும் அமர்ந்திருக்கிறார்.
குத்துக்காலிட்ட நிலையில் அமர்ந்து, மங்கிப்போன தனது கண் பார்வையோடு பாதுகாப்பு கவசம் அணிந்தபடி மரத்துண்டை செதுக்கி இந்த 70 வயது முதியவர் இறுதி வடிவம் தருகிறார். அவர் சென்னி, திரிகோண், ரெஜி, படாசி, ஹத்தோரி என வட்டார மொழிப் பெயர்களில் தனது சிறப்பு கருவிகளை அவ்வப்போது உதவியாளர்களிடம் கேட்கிறார். அவரிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு செதுக்கும்போது தனது கை அசைவதை காட்டி தாய்மொழியான கோண்டில் சொல்லித் தருகிறார். பண்டி ராம், மரத்தில் செதுக்கும்போது காட்டின் சுவாசம் வெளிப்படுகிறது. காடுகளுடன் இணக்கமாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையை அவரது முரியா கோண்ட் சமூகத்தின் ஒரு தலைமுறை தெளிவாக நினைவில் வைத்துள்ளது.
இப்போதெல்லாம் வேலை செய்வது அவருக்கு கடினமாக இருந்தாலும், அதிலிருந்து விலகி இருப்பது இன்னும் வலியைத் தருகிறது. “சரியான மரத்துண்டை தேர்வு செய்து செதுக்குவது எப்படி என்று எனக்கு நன்றாக தெரியும்,” என்கிறார், அவரது மகனும், மரச்சிற்ப கலைஞருமான பால்தேவ். “இக்கலை எனக்கு மூச்சுக்காற்று போன்றது,” என்கிறார் பண்டி ராம். இக்கலையைவிட்டு என்னால் வாழ முடியாது.” நான்கு, ஐந்து பேர் மரங்களை அறுக்கின்றனர், மரத்துண்டுகளில் சிலை வடிக்கின்றனர், மரங்களை சுமந்து செல்கின்றனர். அந்த தாழ்வாரத்தில் அவரும் அமர்ந்திருக்கிறார்.
"இது ஏதோ நாட்டுப்புற கலை என்று தான் முதலில் நினைத்தேன்,” என்கிறார் பண்டி ராம். "நகர மக்கள் வந்து என்னை பாராட்டியபோது தான் இதை ஒரு தொழிலாக உணர்ந்தேன். என் வாழ்வாதாரமாக இக்கலையை ஏற்க முடிவு செய்த பிறகு தந்தையிடம் மெல்ல இதை கற்று தேர்ந்தேன்.” 35 ஆண்டு காலமாக பழங்கால மரக்கலையை உயிர்ப்புடன் வைத்து அவர் தனது சமூகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கிறார். மரங்களும், மரப் பொருட்களும் அச்சமூகத்தின் வீடுகளில் அன்றாட வாழ்வின் அங்கமாக அலங்காரப் பொருட்களாக, வீட்டு உபயோகப் பொருட்களாக, சடங்குகள், திருவிழாக்களில் இடம்பெறுகின்றன.


























