ஹரியானா கிராமங்களின் கூடுகைகளில் ஹூக்கா எப்போதும் இடம்பெறுகிறது. “ஹூக்கா உதவியில்தான் பஞ்சாயத்து நடக்கிறது,” என்கிறார் ரோஹ்தாஸ், கிராமத்து மையத்தில் ஹூக்கா தென்படுவது குறித்து.
“தேநீர், நீர் போலல்ல ஹூக்கா. அவை நாள் முழுக்க நீடிக்காது. ஆனால் ஹுக்காவில் புகையிலையை நிரப்பி ஒருமுறை பற்ற வைத்தால் போதும். போய்க் கொண்டே இருக்கும். ஐந்திலிருந்து பத்து பேர் ஒன்றாக உட்கார்ந்து பல மணி நேரங்களுக்கு ஹூக்கா அடிக்கலாம். பொழுதுபோக்கவும் அது உதவுகிறது என்கிறார் ரோஹ்தாஸ் (இந்தப் பெயரை மட்டும்தான் அவர் பயன்படுத்துகிறார்).
40 வயது ஹூக்கா கைவினைரான அவர் புன்னகைத்து சொல்கிறார்: “இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சாவ்பால் (கிராமத்து மையம்) இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஹூக்கா இருக்கிறது.” வேலை நேர இடைவேளையில் பேசுகையில், ஹூக்காவை இழுக்கிறார். இக்கலையை செய்யத் தொடங்கிய 12 வருடங்களுக்கு முன்பிருந்து இந்தப் பழக்கம் அவருக்கு இருக்கிறது.
ஹூக்கா இழுக்கும் குழாய், 16ம் நூற்றாண்டின் மொகலாய காலத்தில் வட இந்தியாவில் முதன்முதலில் உருவானதாக நம்பப்படுகிறது. மூன்றாம் மொகலாய மன்னரான அக்பர், ஹூக்கா பிடித்த முதல் நபர்களில் ஒருவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் பிற வரலாற்று குறிப்புகள், இன்னும் முன்னதாக, மத்திய மற்றும் மேற்காசியாவில் அது உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுகின்றன.
எது எப்படியென்றாலும், ஹரியானா மக்களின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியமாக இது தொடருகிறது. “எங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி இது,” என்கிறார் தாரம்பீர். “ஹூக்கா இழுத்துதான் பெரிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.”




















