"ஹரியானா, பஞ்சாப் ஹூன் லேகே ஜெய்சல்மர் தக் சாரோ தேஷ் ம்ஹாரொ பகா ஹூ நபேடோ ஹைன் [ஹரியானா, பஞ்சாப் முதல் ஜெய்சல்மர் வரை, நாடு முழுவதையும் எங்கள் கால்களால் அளந்து கடந்துள்ளோம்.] நாங்கள் பார்க்காத இடமே இல்லை" என்கிறார் வடமேற்கு ராஜஸ்தானில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்துள்ள 65 வயதான பாதர் போப்பா.
குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வசிக்கும் நாடோடி போப்பா சமூகத்தைச் சேர்ந்த பாதர், மூங்கில் மற்றும் தேங்காய் ஓடுகளால் செய்யப்பட்ட 'ராவன்ஹத்தா' எனும் நரம்பு இசைக் கருவியை வாசித்தவாறே நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்துள்ளார். "நாங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று, தங்கி, இசை நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, அங்கிருந்து வேறு இடத்துக்கு செல்வோம்," என்று அவர் பாரியிடம் கூறுகிறார்.
இறுதியில், 11 ஆண்டுகளுக்கு முன்பு, பாதரும் அவரது ஐந்து மகன்களும் சூரு மாவட்டத்தில் குடியேறினர். "நாடோடி வாழ்க்கையால் நான் சோர்வடைந்துவிட்டேன், அதனால் ஒரு கிராமத்தில் குடியேறினேன்," என்று தற்போது தீர்வஸ் பாரா கிராமத்தில் வசிக்கும் அவர் கூறுகிறார். பலமுறை அந்த கிராமத்தின் வழியாகப் பயணித்ததாலும், அங்குள்ள மக்கள் பரிச்சயமானவர்கள் என்பதாலும் அவர் அக்கிராமத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். போப்பா குடும்பத்தினர் எங்கள் கிராமத்தின் வழியாகப் பயணிக்கும் இசைக்கலைஞர்களாக வந்ததை என் தாத்தா நினைவுகூருகிறார்.
இக்குடும்பத்தினர் தங்களை நாயக் சமூகத்துடன் (பட்டியல் சாதி) அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இருப்பினும் ராஜஸ்தானில் போப்பாக்கள் 'இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்' (ஓபிசி) பிரிவினராகக் கருதப்படுகிறார்கள். நாயக் சமூகத்தினரும் இவர்களைத் தங்கள் சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
தொடக்கத்தில், தீர்வஸ் பாராவில் நிலம் அதிக விலையுடைதாக இருந்தது. அதனால் அவர்கள் முதல் இரண்டு ஆண்டுகள் கிராமத்திற்கு வெளியிலேயே தங்கினர். "பின்னர் நாங்கள் ஊர் தலைவரை அணுகினோம். அவர் எங்களுக்கு இந்த நிலத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்தார்," என்று பாதர் போப்பாவின் மகன் பன்வார் லால் கூறுகிறார். "இது ஏறக்குறைய ஒரு பிகா மற்றும் மூன்று பிஸ்வா அளவு [சுமார் 0.75 ஏக்கர்] நிலமாகும்."
தீர்வஸ் பாரா கிராமத்தின் முக்கிய பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு நோக்கி, வயல்வெளிகளுக்குச் செல்லும் கச்சா ரோட்டில் நடந்தால், நீங்கள் இரண்டு ஸம்ஷன் பூமி (தகன மேடைகள்) வரும். முதல் மயானம் சுவாமி சமூகத்தினராலும் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்), சற்று தொலைவில் உள்ள அடுத்தது பட்டியல் சாதியினராலும் பயன்படுத்தப்படுகிறது. சாலையின் ஒரு புறம் மயானங்களும், மறுபுறம் தலித் குடியிருப்புகளும் அமைந்துள்ளது. அதற்கும் அப்பால் இறந்த கால்நடைகளுக்கான ஹத்வார் உள்ளது.
ஹத்வாரின் ஒரு பகுதியில், தற்காலிக குடிசைகளில் பாதர் போப்பாவின் சுமார் 50 பேர் கொண்ட பெரிய குடும்பம் வசிக்கிறது. முன்பு போல நாடோடிகளாக அல்லாமல், முற்றிலும் மாறுபட்ட, நிலையாக ஓரிடத்தில் வாழும் வாழ்க்கையை இப்போது வாழ்கின்றனர்.










