ஸ்ரீநாத் சிங் கர்வார், தானும் தன் நண்பர்களும் டெண்டு (டயோஸ்பைரோஸ் மெலனாக்ஸைலான்) இலைகளைப் பறிக்க அதௌராவின் அடர்ந்த காடுகளுக்குள் நுழையும்போது நிலவிய அமைதியை நினைவுகூருகிறார். அந்த அமைதி விரைவிலேயே அவரது சக ஆதிவாசிகளின் பேச்சாலும் பாடல்களாலும் மாறிவிடும். "நாங்கள் வீட்டிலிருந்து உணவும் தண்ணீரும் கொண்டு செல்வோம். நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டும் இருக்கும்போது, காடு உயிரோடு இருப்பதாக தோன்றும்," என்று தனது பசுமையான நினைவுகளை ஶ்ரீநாத் பகிர்கிறார்.
47 வயதான ஸ்ரீநாத், ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை அசைபோடுகிறார். நாங்கள் அதௌரா மலைகளுக்கு செல்லும் பேருந்தில் அருகருகே அமர்ந்திருந்தோம். பீகாரின் தெற்கு மாவட்டமான கைமூரில் உள்ள நகரமான பாபுவாவிலிருந்து அந்தப் பேருந்து அதிகாலையில் புறப்பட்டது. எங்களுடன் பயணிப்பவர்களில் பெரும்பாலானோர், வேலைக்காக இடம்பெயர்ந்து தற்போது கிராமங்களுக்குத் திரும்பும் பழங்குடியினர் ஆவர்.
ஸ்ரீநாத் தனது சன்புரா கிராமத்திற்குத் திரும்புகிறார். அவர் இப்போது பீகாரிலிருந்து பிரிக்கப்பட்ட அண்டை மாநிலமான ஜார்க்கண்டின் பத்ராதுவில் உள்ள ஒரு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இதற்கு முன்பு, அவர் டெல்லி, மகாராஷ்டிரா போன்ற தொலைதூர மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்துள்ளார். ஆனால் இப்போது அங்கு இல்லை. "டெல்லி அல்லது மகாராஷ்டிராவைப் போலல்லாமல், பத்ராதுவிலிருந்து வீட்டிற்கு விரைவாக செல்ல முடியும்," என்று ஸ்ரீநாத் மேலும் கூறுகிறார்
வளைந்து செல்லும் சாலையில் பயணித்து, பேருந்து மெதுவாக அதௌரா மலைகளில் ஏறும்போது சூரியன் உதித்திருந்தது. வழி நெடுகிலும், இந்த வெப்பமண்டல வறண்ட இலையுதிர் மற்றும் சால் மரங்கள் கலந்த காடுகளில் உள்ள பெரிய மரங்கள், தங்கள் மஞ்சள் நிற இலைகளை உதிர்த்து, எலும்புக்கூடுகளாக காட்சி அளிக்கின்றன. மலைகளில் ஏறத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மொபைல் நெட்வொர்க் துண்டிக்கப்பட்டுவிட்டது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நெட்வொர்க் மட்டுமே இங்கு செயல்படுகிறது.


















