தினசரி காலை ஹிரா லால் ரஸ்பா, லிந்தூர் அருகே இருக்கும் தன் வயலுக்கு அச்சத்துடன்தான் செல்கிறார். “ஒரு பதட்டம் என்னை பீடித்துக் கொள்ளும்,” என்கிறார் அவர். “இன்னும் அதிக நிலப்பகுதி உள்ளே சென்று விட்டதா? மிச்சம் எவ்வளவு இருக்கும்?”
இமாச்சல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிதி பகுதியை சேர்ந்த லிந்தூர் கிராமத்தின் 55 வயது பழங்குடி விவசாயியான ரஸ்பா, ஏப்ரல் 2025-ல் தன் 2.5 பிகா (0.2 ஏக்கர்) நிலத்தில் உருளைக் கிழங்குகள் விதைத்திருந்தார். மே மாத நடுவில், அவரின் நிலத்தில் பாதி அளவு, விரிவடையும் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டது.
மிச்ச பயிர் இன்னும் ஆரோக்கியமாக நின்று கொண்டிருந்தாலும், ரஸ்பாவுக்கு நம்பிக்கை இல்லை.
வருடந்தோறும் ஆறு மாதங்களுக்கு பனி மூடும் லஹால் மற்றும் ஸ்பிதி வாழ் மக்களுக்கு கோடைக்காலமான ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து அக்டோபர் வரையிலான காலம் மிகவும் முக்கியமானது. அந்த சமயத்தில் மட்டும்தான் உணவையும் பணப்பயிரையும் வளர்க்க முடியும்.
கடும் உழைப்பு மற்றும் நம்பிக்கைக்கான காலமாக இருக்கும் ஜூன் மாதத்தை இந்த வருடம் அச்சம் பீடித்திருக்கிறது. மக்கள் கடினமாக வயல்களில் பதட்டமான மனங்களுடன் உழைக்கின்றனர்.
“ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், நிலத்தில் கொஞ்ச பகுதி மறைந்து கொண்டிருக்கிறது,” என்கிறார் ரஸ்பா.
அவநம்பிக்கையுடன் அவர் சொல்கிறார்: “எங்களின் வீடுகளும் வயல்களும் நிலங்களும் மறைந்து கொண்டிருக்கின்றன. ஏன் கடவுள் எங்களை தண்டிக்கிறார் என எங்களுக்கு புரியவில்லை. லிந்தூரை சேர்ந்த நாங்கள் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”
நிலத்துக்கு அடியில் இருக்கும் பகுதிகளின் மாற்றங்களால் மேலே உள்ள நிலம் உள்வாங்குவதுதான் அவர் குறிப்பிடும் நரகம்.














