தன்னுடைய ஒரு ஏக்கர் திராட்சை நிலத்தில் மலோஜி சவானுக்கு உதவி ஏதும் தேவையில்லை. நண்பர் சந்தோஷ் ஹிங்க்மிரேவிடமிருந்து நகரும் அவருக்கு பார்வையைக் காட்டிலும் உள்ளுணர்வு கைகொடுக்கிறது. 31 வயது ஆகும் அந்த விவசாயிக்கும் கண் பார்வை கிடையாது. எனினும் வயல் பரப்பு தெரிந்திருக்கிறது.
“இந்த கிளையை பார்த்தீர்களா?” எனக் கேட்கிறார் அவர், திராட்சைக் கொடிக்கான இரும்பு கம்பத்தை காட்டி.
“எது?” என புரியாமல் கேட்டோம்.
முரண்நகையில் புன்னகைத்து மலோஜி முன்னே சாய்ந்து, ஐந்து இலைகளுடன் படர்ந்திருக்கும் கொடியை மெதுவாக தூக்குகிறார். அதன் மீது வருடியபடி அமைதியாக சொல்கிறார், “முழுமையாக வளரவில்லை. வேர்கள் சேதமடைந்திருந்தன. பல மாதங்களாக வெயில் இவற்றின் மீது படவில்லை,” என.
அந்த ஒரு கொடி, ஒரு ஏக்கர் திராட்சை தோட்டத்தின் கதையை சொல்கிறது. பெற்றோரான தானாஜி மற்றும் புஷ்பாபாய்க்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நீர்ப்பாசன நிலத்தின் ஒரு பகுதி இது. இந்த வருடம் திராட்சைகள் கிடையாது. கரும்பு பயிரும் பிற பழ மரங்களும் கூட அழுகிக் கொண்டிருக்கின்றன. மொத்தமாக 10 லட்சம் ரூபாய் நஷ்டமாகி இருக்குமென குடும்பம் கணக்கிடுகிறது. பத்தாண்டுகளேனும் இந்த இழப்பு குடும்பத்தை பின்னோக்கி தள்ளும்.
இந்த பேரழிவு சேதத்துக்கு காரணம், 2025ம் ஆண்டு மழைக்காலத்தில் நிற்காமல் பெய்த தீவிர கனமழைதான். ஜம்காவோனில் பெய்யவில்லை. சோலாப்பூர் மாவட்டம் முழுமைக்கும் கூட பெய்யவில்லை. பக்கத்திலுள்ள பீட் மற்றும் தாராஷிவ் மாவட்டங்களில் கூட மழை இருக்கவில்லை. நவம்பர் 2025-ன் தொடக்கத்தில் சோயாபீன் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் சீரழிந்து கிடந்தன. வருடத்தின் பெரும்பாலான காலத்துக்கு வறண்டு கிடக்கும் சிற்றாறுகளில் நீர் பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டது.
2025 மே மாதத்துக்கு நடுவே தொடங்கி அக்டோபர் மாத இறுதி வரை மேற்கு மகாராஷ்டிரா மற்றும் மராத்வடாவில் இடையறாது கனமழை பெய்தது. செப்டம்பர் 19லிருந்து 25ம் தேதி வரை சூழல் கடுமையாக மாறியது. மேகவிரிசல் மழைப்பொழிவும் திடீர் வெள்ளங்களும் ஏற்பட்டு பயிர்களையும் பழத்தோட்டங்களையும் மண்ணையும் கால்நடைகளையும் சேதப்படுத்தியது. பல இடங்களில் மனித உயிர்களையும் பறித்தது. சோலாப்பூர் மாவட்டம் முழுக்க 47,000 ஹெக்டேர் அளவுக்கு பயிர் சீரமைக்க முடியாதளவு சேதத்தை கண்டிருப்பதாக அதிகாரிகள் கணக்கிட்டிருக்கின்றனர்.













