திருமணத்திற்குப் பிறகு, லோனடேய் கிராமத்தில் அமைந்துள்ள தனது புகுந்த வீட்டிற்குள் ரீனா பார்டேட்டி முதன்முதலில் காலெடுத்து வைத்தபோது, அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.
"குடும்பத்தில் இருந்த சிறு குழந்தைகள் கூட, தாய்மொழியான [கோண்டி] மொழியை சரளமாகப் பேசினார்கள்," என்று அவர் நினைவுகூருகிறார். ஆனால் ரீனாவிற்கோ, தனது கோண்ட் சமூகத்தின் மொழியைப் புரிந்துகொள்வதே மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், "எனது சொந்த கிராமமான [மோயா] கிராமத்தில் கோண்டி மொழியைப் பேசுவதற்கு யாருமே இல்லை," என்று 34 வயதான அந்த ஆதிவாசி விவசாயி கூறுகிறார்.
லோனடேய் கிராம மக்கள் தொகையில், சுமார் 80 சதவீதம் பேர் கோண்ட் பழங்குடியை சேர்ந்தவர்களாவர். "கோண்ட் சமூகத்தைச் சாராதவர்கள் கூட, இம்மொழியைப் கற்றுக்கொண்டு பேசுகிறார்கள்," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ரீனா வீட்டு குழந்தைகள் அவரை கிண்டல் செய்வார்கள்: "மாமி கோ கோண்டி போல்தே நஹி ஆத்தி, சாச்சி கோ கோண்டி போல்தே நஹி ஆத்தி [எங்கள் அத்தைக்கு கோண்டி மொழி பேசத் தெரியவில்லை]!" அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து சிரித்தபடியே அவர் மேலும் கூறுகிறார்: "ஆரம்பத்தில் நான் பேசுவதற்கு திணறினாலும், நாளடைவில் அவர்களுடன் தாய்மொழியிலேயே பேசத் தொடங்கிவிட்டேன்."
கோண்டி ஒரு திராவிட மொழி. இது ஒரு காலத்தில் மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாமல், மத்திய இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவலாகப் பேசப்பட்டது. இன்று, இது யுனெஸ்கோவால் பாதிக்கப்படக்கூடிய மொழிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய ஆதிவாசி சமூகங்களில் கோண்ட் சமூகம் ஒன்று என்றாலும், அவர்களின் மொழி அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
















