கோண்டி சிறந்த காலங்களையும் கடந்து வந்துள்ளது.
பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையத்தின் இணையதளத்தில் “...கோண்டி என்பது கோண்ட்வானா என்ற பண்டைய இராஜ்ஜியத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது. அதற்குரிய சொந்த எழுத்து, இலக்கணம், பேச்சு உருவங்கள், சொற்பிறப்பியல் மற்றும் இலக்கியம் இருந்தன. இன்றும் கிடைக்கின்றன,” என்று கோண்டி இலக்கிய அறிஞர் மோத்திராம் கங்காலி, கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
கோண்டிகள் ஒரு காலத்தில் இன்றைய மத்தியப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தவர்கள். “நாங்கள் கவுரா தேவியின் [இந்து புராணங்களின்படி பார்வதி மற்றும் துர்கை] சந்ததியினர். அதனால்தான் எங்களுக்கு கோண்ட் என்று பெயர் வந்தது,” என்று சிந்த்வாராவைச் சேர்ந்த கோண்ட் சமூக சேவகர் ராம்நாத் பர்தேடி கூறுகிறார். இருப்பினும், சமகாலத்தில், கோண்ட் அரசி, ராணி கம்லபதியின் பெயரை ஒரு ரயில் நிலையத்திற்கு வைப்பது போன்ற ஆறுதலுக்கான செயல்களால் மட்டுமே, சமூகத்தின் வளமான மரபு மற்றும் வரலாறு கௌரவிக்கப்படுகிறது என்கிறார்.
பெரும்பாலும் இல்லங்களுக்குள் மட்டுமே பேசப்படுவதால், அவர்களின் மொழியும் மறக்கப்பட்டு வருகிறது. பொது வெளியில், இச்சமூகத்தைச் சேர்ந்தோர் பெரும்பாலும் இந்தியில் பேசுகின்றனர். வயதானவர்கள் மட்டுமே இன்னும் கோண்டி மொழி பேசுகிறார்கள்; இளைய தலைமுறையினர், இம்மொழியைக் கற்றுக்கொள்ளவும், பேசவும் தயங்குகின்றனர். மக்களுக்கு புரியாது, அல்லது கோண்டி அறியாதவர்களால் கேலி செய்யப்படுவார்கள் என்ற பயமே இதற்குக் காரணம் என்று பலர் கூறுகின்றனர்.
லோனாடேய் விவசாயியான பிரார்த்தனாவின் தந்தை மந்த்ராம் பர்தேட்டி, வீட்டில் தனது பிள்ளைகளுடன் கோண்டியில் மட்டுமே பேசுகிறார்; இருப்பினும், வீட்டிற்கு வெளியே, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயும் இந்தியில் பேசிக் கொள்கிறார்கள். "கோண்டி அறியாதவர்கள் எங்களை கேலி செய்கின்றனர். சில சமயங்களில் எங்களைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர்," என்று அவர் கூறுகிறார். "இப்போதும் கூட, நாங்கள் கோண்டி பேசும்போது, மக்கள் எங்களை கிண்டல் செய்கிறார்கள்."
மந்த்ராம் சமீபத்தில் தனது மகன் பிருத்விராஜை, பள்ளியில் சந்திக்கச் சென்றபோது நடந்த சம்பவத்தை விவரிக்கிறார். "நான் என் மகனிடம் கோண்டி மொழியில் பேச ஆரம்பித்தேன். அந்த மொழி தெரியாத ஆசிரியர்களும், மற்ற குழந்தைகளும் எங்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர். எனக்கு அவமானமாகிவிட்டது," என்கிறார். அன்றிலிருந்து அவரது மகன், பள்ளியில் அவரிடம் கோண்டியில் பேசுவதைத் தவிர்த்து விட்டு "நான் வீட்டில் இருக்கும்போது நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கோண்டி பேசலாம் என்று கூறிவிட்டார்."
லோனாடேய், பெரும்பான்மையாக கோண்ட் சமூகத்தைக் கொண்டிருந்தாலும், இளம் தலைமுறையினரை தாய்மொழியான கோண்டி மொழி பேசவும், அதனால் பெருமைப்படவும் வைக்க போராடுகிறது. லோனாடேயில் நிகழ்வது, மாவட்டத்தின் பெரிய சூழ்நிலையின் பிரதிபலிப்பு மட்டுமே என்று ராம்நாத் சுட்டிக்காட்டுகிறார். "இங்கே, சிந்த்வாராவில், கோண்ட்கள் தாழ்ந்த சாதியினராகக் கருதப்படுகிறார்கள். எனவே, பொது இடங்களில் கோண்டி மொழியில் பேசினால், மற்றவர்கள் தங்களை இழிவாகப் பார்ப்பார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே, அவர்கள் தங்களுக்குள் மட்டுமே கோண்டி மொழியில் பேச விரும்புகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.
கோண்ட்களுக்கு எதிரான பாகுபாட்டை, பள்ளி அமைப்பும் நிலைநிறுத்துகிறது என்றும், கோண்டி மொழியை, அதன் சமுகத்திடம் இருந்து அந்நியப்படுத்துவதில் ஒரு பங்கு வகிக்கிறது என்று ராம்நாத் நம்புகிறார். அதர்வாடா தொகுதியில் உள்ள தனது கிராம அரசுப் பள்ளியில், தனது சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் எவ்வாறு அவமானப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் அவர் நினைவுகூருகிறார்.
உயர்சாதி ஆசிரியர், கோண்ட் குழந்தைகளை மற்ற சாதி மற்றும் ஆதிவாசி மாணவர்களிடமிருந்து பிரித்து தனித்தனியாக உட்கார வைப்பார். அதுமட்டுமல்லாமல், “நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது, ஷர்மா சார், என் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு கோண்ட் மாணவர்களை அடித்து, 'நீங்கள் கோண்ட் சந்ததியினர். நான் எவ்வளவு கடினமாக சொல்லிக்கொடுத்தாலும், உங்களுக்கு புரியாது’ என்று திட்டினார். அதற்குப் பிறகு அவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டனர்.