மனோஜ் செளத்ரியின் வாழ்க்கை சில நொடிகளில் நொறுங்கியது.
“என் தாயும் மனைவியும்தான் என் உலகம். ஆனால் இப்போது இரண்டு குழந்தைகள் மட்டும்தான் மிஞ்சியிருக்கின்றனர்,” என்கிறார் சந்திரப்பூரின் கிராமத்தை சேர்ந்த 35 வயது மனோஜ்.
“என் தாயும் மனைவியும் காட்டுக்கு சென்றபோது குழந்தைகளும் நானும் தூங்கியிருந்தோம்.” மே 10, 2025 அன்று சில மணி நேரங்கள் கழித்து, 60 வயது கந்தா புதாஜி செளத்ரியும் 30 வயது ஷுபாங்கியும் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புதர்க்காட்டில் புலி தாக்குலில் கொல்லப்பட்டனர். அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான 50 வயது சரிகா ஷாலிக் ஷெண்டே மூன்றாவதாக பலியானார்.
அந்த மூன்று பெண்களும் பிறருடன் சேர்ந்து தெண்டு இலைகளை சேகரிக்க காட்டுக்கு சென்றிருந்தனர்.
ஆயிரத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் வசிக்கும் மகாராஷ்டிராவின் சந்திராப்பூர் மாவட்டத்திலுள்ள மெந்தா கிராமம் துயரத்தில் மூழ்கியது. கிராமத்தில் உள்ளவர்கள் சிறு விவசாயிகளும் நிலமற்ற தொழிலாளர்களாகவும் இருக்கின்றனர். மனோஜ் போன்றோர் வேலைகள் தேடி பிற மாநிலங்களுக்கும் நகரங்களுக்கு செல்கின்றனர். வருடந்தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அவர்கள் காடுகளிலிருந்து தெண்டு இலைகளும் இலுப்பை பூக்களும் சேகரித்து வருமானம் ஈட்டுகின்றனர்.
சிந்தவாஹி தாலுகாவிலுள்ள அந்த கிராமம், மெந்தமால் குஜாரி என அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் கிராமத்துக்கு வெளியே உள்ள பெயர்ப்பலகை ‘மெந்தா (மால்)’ என ஊர் பெயரை குறிப்பிடுகிறது. தடோபா அந்தாரி புலிகள் சரணாலயத்துக்கு அருகே அந்த ஊர் அமைந்திருக்கிறது. வெளியார் அனுமதிக்கப்படாத 625 சதுர கிலோமீட்டர் மையக்காட்டுடன் மக்கள் வாழும் பரப்புடன் சேர்த்து மொத்தம் 1,102 சதுர கிலோமீட்டர் பரப்பளவு.
சந்திரப்பூர் மாவட்டத்தில் 223 புலிகள் உள்ளன. அவற்றில் 120-125 அந்த சரணாலயத்தில் இருப்பதாக சமீபத்திய வனத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. ஊர் மக்கள் சொல்கிறபடி, மெந்தா (மால்) கிராமத்தை சேர்ந்த ஒருவர் புலியால் கொல்லப்படுவது இதுவே முதன்முறை.
மூன்று பெண்களும் ஒரு பெண் புலி மற்றும் மூன்று புலிக்குட்டிகளால் கொல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் தகவலை ஊர்க்காரர்கள் சொல்கின்றனர்.
பலிகள் பெரும் எழுச்சியை உருவாக்கின. போராட்டங்கள் வெடித்தன. கோபத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்களையும் ஊர் மக்களையும் மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் வந்து சந்தித்தனர்.
























