சட்ஜெலியாவில் இருக்கும் ஒரே தபால் அலுவலகம் உங்களின் கண்ணுக்கு படாமல் போகலாம். மண் குடிசையில் இருக்கும் அந்த அலுவலகத்துக்கு வெளியே தொங்கும் சிவப்புப் பெட்டி மட்டும்தான் அதற்கான அடையாளம்.
மேற்கு வங்க தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இருக்கும் இந்த 80 வருட துணை தபால் அலுவலகம் ஏழு ஊர் பஞ்சாயத்துகளுக்கு சேவை அளிக்கிறது. சுந்தரவனத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய அய்லா மற்றும் அம்பான் புயல்களையும் தாண்டி இந்த மண் கட்டுமானம் நின்று கொண்டிருக்கிறது. தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்குகளை வைத்திருக்கும் பலருக்கு இருக்கும் வாழ்வாதாரம் இது. அவர்களுக்கான அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல அரசு ஆவணங்கள் இங்குதான் வந்து சேரும்.
கொசாபா ஒன்றியம் மூன்று ஆறுகளால் சூழப்பட்டிருக்கிறது. வடமேற்கில் கோமதியும் தெற்கில் தத்தாவும் கிழக்கில் கண்டாலும் ஓடுகிறது. லக்ஸ்பாகன் கிராமத்தை சேர்ந்த ஜெயந்த் மண்டல், “இந்த தபால் அலுவலகம்தான் இந்தத் தீவில் (அரசு ஆவணங்கள் கிடைக்க) எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை,” என்கிறார்.
தற்போதைய தபால் அலுவலரான நிரஞ்சன் மண்டல், 40 வருடங்களாக இங்கு பணிபுரிந்திருக்கிறார். அவருக்கு முன்பு, அவரின் தந்தை தபால் அலுவலராக இருந்தார். தினசரி அவர் வீட்டிலிருந்து பணியிடத்துக்கு நடந்து செல்வார். சில நிமிட நடை. தபால் அலுவலத்துக்கு அருகே இருக்கும் உள்ளூர் டீக்கடையில் நாள் முழுவதும் மக்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். எனவே தபால் அலுவலகத்துக்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
59 வயது தபால் அலுவலரின் பணி நேரம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிகிறது. தபால் அலுவலகத்துக்கான மின்சாரம் சூரியத் தகடுகளில் கிடைக்கிறது. மழைக்காலத்தில் மின்சாரம் சிரமம்தான். சூரியத் தகடுகளில் மின்சாரம் கிடைக்காவிட்டால், பணியாளர்கள் மண்ணெண்ணெய் விளக்கை பயன்படுத்துகிறார்கள். நிர்வாகத்துக்கென அவர்களுக்கு மாதந்தோறும் 100 ரூபாய் கிடைக்கிறது. வாடகைக்கு ரூ.50, பிறவற்றுக்கு ரூ. 50 என்கிறார் நிரஞ்சன்.
நிரஞ்சனுடன் பியூன் பாபு பணியாற்றுகிறார். வீடு வீடாக சென்று தபால் கொடுப்பதுதான் அவருக்கான பணி. அந்த வேலைக்கு அவர் தன் சைக்கிளை பயன்படுத்துகிறார்.
அரை நூற்றாண்டு காலமாக தபால் அலுவலர் வேலை பார்த்திருக்கும் நிரஞ்சன் பாபு, சில வருடங்களில் ஓய்வு பெற இருக்கிறார். “அதற்கு முன், ஒரு நல்ல கட்டடம் தபால் அலுவலகத்துக்கு கட்டப்பட வேண்டும் என்பதுதான் என் கனவு,” என்கிறார் அவர்.
இக்கட்டுரைக்கு உதவிய ஊர்னா ராவத்துக்கு கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்
தமிழில்: ராஜசங்கீதன்