தில்லியின் சோம்பலான குளிர்கால பிற்பகல் அது. ஜனவரி மாத சூரியன், விருந்தாளியை போல் முற்றங்களில் வீற்றிருக்கும்போது கமார், அவரின் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தாய் கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறார். 75 வயது ஷமிமா காதூனுடன் பேசுகையில், பிகாரின் சிதாமரி மாவட்டத்தின் பாரி புல்வாரியா கிராமத்திலிருந்து பால்யகால வீட்டுக்கு அவர் பயணித்தார்.
தொலைபேசியின் இரு பக்கங்களின் குரல்களையும் அந்த மதியப் பொழுதில் கேட்டிருந்தால், வித்தியாசமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள். உருது மொழியில் பேசும் அவர், “ அம்மி, சாரா எ பேடாயெகா பச்பன்மெயின் ஜோ மெரே சார் பே சகாம் ஹோதா தா நா உஸ்கா இலாத் கைசே கர்தே தே? ” (சிறுவயதில் என் தலையில் ஏற்பட்ட தோல் வெடிப்பை எப்படி சரி செய்தீர்கள்?”
“ சீர் மெயின் ஜோ ஹோ ஜாஹாயி - டோரொஹோ ஹோலா ரஹா - பகோரா கஹா ஹயி ஓகோ இதார். ரெ, சிக்னி மிட்டி லகாகே தோலியா ரஹா, மகர் லகா ஹயி பகுத். தா சூட் கெலாயி ” (உன் உச்சந்தலையில் இருப்பதை இங்கு பத்கோரா என்பார்கள். உன் தலையை நான் ரெ (உப்பு மண்) மற்றும் சிக்னி மிட்டி (களிமண்) ஆகியவற்றை கொண்டு அலசினேன். ஆனால் அது மிகவும் வலித்தது. இறுதியில், அது சரியானது,)” என சிரிக்கிறார் வீட்டு மருத்துவத்தை விவரித்து. அவரின் மொழி கமாரின் மொழியிலிருந்து மாறுபட்டிருந்தது.
அவர்களின் உரையாடலில் எந்த வித்தியாசமும் இல்லை. கமாரும் அவரின் தாயும் எப்போதும் வேறு மொழிகளில்தான் பேசிக் கொள்வார்கள்.
“அவரின் வட்டார வழக்கு எனக்கு புரியும், ஆனால் பேசத் தெரியாது. உருது என் ‘தாய்மொழி’தான், ஆனால் என் தாய் வித்தியாசமான வழக்கில் பேசுவார்,” என அவர் அடுத்த நாள் நடந்த பாரிபாஷா சந்திப்பில் கூறினார். அங்குதான் சர்வதேச தாய்மொழி தினத்துக்கான கட்டுரைக் கருப்பொருள் குறித்து நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். “அவரின் மொழிக்கான பெயரை பற்றி யாருக்கும் தெரியாது. அம்மிக்கும் தெரியாது. குடும்பத்தில் இருக்கும் எவருக்கும் தெரியாது. அதை பேசும் எவருக்கும் கூடத் தெரியாது,” எனக் கூறுகிறார் அவர். வேலை தேடி கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்த அவர் உள்ளிட்ட ஆண்கள் அம்மொழியை பேசுவதில்லை. கமாரின் குழந்தைகள் இன்னும் தள்ளிச் சென்றுவிட்டனர். பாட்டியின் வழக்கு அவர்களுக்கு புரிவதில்லை.
“மேலதிகமாக தெரிந்து கொள்ள முயன்றேன்,” என்கிறார அவர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மொழியியலாளரான முகமது ஜஹாங்கீர் வர்சி அதை ‘மைதிலில் உருது’ என அழைக்கிறார். JNU-வை சேர்ந்த இன்னொரு பேராசிரியரான ரிஸ்வானூர் ரஹ்மான் சொல்வதன்படி, பிகாரின் அப்பகுதி வாழ் இஸ்லாமியர் அதிகாரப்பூர்வமாக உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வீட்டில் வேறு வழக்கை பயன்படுத்துகிறார்கள். உருது, பாரசீகம், அரபி, இந்தி மற்றும் மைதிலி ஆகியவற்றின் கலைப்பைதான் தாய் பேசுவதாக தெரிகிறது. அப்பகுதியில் உருவான மொழி அது.”
அடுத்தடுத்த தலைமுறைகளில் தொலைந்து போகும் தாயின் மொழி.
அவ்வளவுதான்! வார்த்தை தேடலை நோக்கி கமார் எங்களை செலுத்தினார். எங்களின் தாய்மொழிகளில் தொலைந்து போன வார்த்தைகளை தேடி அனைவரும் பின்னோக்கி சென்று ஆராய முடிவெடுத்தோம். தடத்தை பின்பற்றி, துப்புகளை சேகரித்து, அந்த வார்த்தைகள் தொலைந்த காரணத்தை கண்டறிய முயன்றோம். ஆனால் போர்ஜெஸின் அலெஃப் பகுதியை வெறித்து பார்க்கப் போகிறோமென்பதை விரைவிலேயே அறிந்து கொண்டோம்.
*****
ராஜாதான் முதலில் பேசினார். “பிரபலமான பழமொழி ஒன்றைப் பற்றிய திருக்குறள் ஒன்று உண்டு,” என்கிறார்.
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா
அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் (
குறள் # 969
)
இக்குறள் இப்படி மொழிபெயர்க்கப்படுகிறது. கவரிமானின் உடலிலிருந்து ஒரு முடி உதிர்ந்தால், அது உயிரிழந்து விடும். அதே போல, மானம் கொண்ட ஒருவர் அவமதிக்கப்பட்டால் அவர் உயிர் விடுவார்.
“மனிதரின் சுயமரியாதையை கவரிமானின் முடியோடு இக்குறள் ஒப்பிடுகிறது. அப்படித்தான் மு.வரதராசனாரின் உரை கூறுகிறது,” என்கிறார் சற்று தயக்கத்துடன். “ஆனால் முடி உதிர்வதால் ஏன் ஒரு மான் வகை இறக்கிறது? இந்தியவில் ஆய்வாளரான ஆர் பாலகிருஷ்ணனின் சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் கட்டுரையில்தான் உண்மை புரிந்தது. இக்குறள் குறிப்பிடும் ‘கவரிமா’ என்பது ஒரு இமயமலையில் இருக்கும் ஒரு மாட்டின் வகை; மான் வகை அல்ல.
“இமயமலையின் மாட்டு வகையா? ஆனால் இமயமலையில் காணப்படும் விலங்குக்கு, நாட்டின் மறுஓரத்தில் இருக்கும் மக்கள் பேசும் தமிழ்மொழியின் இலக்கியத்தில் என்ன வேலை. நாகரிக புலப்பெயர்வு என அதை ஆர்.பாலகிருஷ்ணன் விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரை சிந்து சமவெளியில் வசித்த மக்கள் தங்களின் வார்த்தைகள், வாழ்க்கைமுறை மற்றும் ஊர்ப் பெயர்களுடன் தெற்கை நோக்கி புலம்பெயர்ந்திருக்கின்றனர்.”
”இன்னொரு அறிஞரான வீ.அரசு இன்னொரு வாதத்தை வைக்கிறார்,” என்கிறார் ராஜா. “இந்திய துணைக்கண்ட வரலாற்றை, இன்றைய நாடு, தேசம், மாநிலம் முதலிய கருத்தாக்கங்களை கொண்டு அணுகக் கூடாது என்கிறார். மேலும் அவர், மொத்த இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பிலும் ஒரு காலத்தில் திராவிட மொழிகளை பேசிய மக்களே வாழ்ந்திருக்கும் சாத்தியமும் இருப்பதாக குறிப்பிடுகிறார். வடக்கே சிந்து சமவெளி தொடங்கி, தெற்கே இலங்கை வரையிலான மொத்த நிலப்பரப்பிலும் வாழ்ந்திருந்த மக்களின் மொழியில், இமயமலையில் வாழ்ந்த விலங்கின் பெயர் இடம்பெறுவதில் ஆச்சரியம் இருக்க முடியாது.”
”கவரிமா, உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தும் வார்த்தைதான்!” என்கிறார் ராஜா. “சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழ் அகராதியான க்ரியா வில் கவரிமா என்கிற வார்த்தை இடம்பெறவில்லை.”
*****
அகராதிகளில் காணப்படாத வார்த்தைகள் பற்றிய கதைகள் பல நம்மிடையே உண்டு. ஜோஷுவா அதை, தரப்படுத்தும் அரசியல் என்கிறார்.
“பல நூற்றாண்டுகளாக, வங்காளத்தின் விவசாயிகளும் குயவர்களும் வீட்டில் உள்ளவர்களும் கவிஞர்களும் கைவினைக் கலைஞர்களும் தங்களின் வட்டார வழக்குகளான ராரி, வெரெந்திரி, மன்புமி, ரங்புரி முதலியவற்றில்தான் எழுதவும் பேசவும் செய்தனர். 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலவிய வங்க மறுமலர்ச்சியில், வங்காள மொழியின் பல வட்டார வழக்குகளும் அரபு பாரசீக சொற்களஞ்சியமும் காணாமல் போனது. தரப்படுத்தவும் நவீனப்படுத்தவும் என அடுத்தடுத்து நேர்ந்த அலைகள் சமஸ்கிருதமயமாக்கத்துடன் இணைந்து கொண்டது. ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளின் தாக்கம் வார்த்தைகளிலும் சொல்லாடல்களிலும் அதிகமானது. அது, வங்காள மொழியின் பன்முக இயல்பை பறித்துக் கொண்டது. அப்போதிருந்து, பழங்குடி மொழிகளான சந்தாளி, குர்மாளி, ராஜ்போங்க்ஷி, குருக், நேபாளி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டிருந்த வார்த்தைகள் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.”
இந்த நிலை வங்காளத்தில் மட்டும் நடப்பதல்ல. இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மொழியிலும், ” பார் கவ் எ போலி பாதலா ” (ஒவ்வொரு 12-15 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய வட்டார வழக்கு ஒலிக்கும்) என்பதற்கு நிகரான தன்மை வெளிப்படும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் காலனியாதிக்கத்தின்போதும் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோதும் அதற்குப் பிறகும் இதே வகையிலான தேய்மானத்தைதான் எதிர்கொண்டன. இந்தியாவில் மாநில மொழிகள், அரசியல் பண்பாட்டு விளைவுகளை வரலாறு முழுவதும் எதிர்கொண்டு வருகிறது.
“நான் பங்குராவிலிருந்து வருகிறேன்,” என்கிறார் ஜோஷுவா. மல்லபும் ராஜ்ஜியத்தின் மையப்பகுதியாக இருந்த பகுதி. பலவகை தேசிய இனக் குழுக்கள் அங்கு வாழ்ந்திருக்கின்றன. மொழி மற்றும் பண்பாட்டு பரிவர்த்தனை தொடர்ந்து அங்கு நடந்து வந்திருக்கிறது. அப்பகுதியின் மொழி ஒவ்வொன்றும் எண்ணற்ற வார்த்தைகளையும் அவற்றை சொல்லும் முறைகளையும் குர்மாலி, சந்தாளி, பூமிஜ் மற்றும் பிர்ஹோரி ஆகிய மொழிகளிலிருந்து கடன் பெற்றிருக்கின்றன.
“ஆனால் நவீனமயமாக்கல், தரப்படுத்துதல் என்கிற பெயர்களில் அரா (நிலம்), ஜும்ராகுச்சா (எரிந்த மரம்), காக்தி (ஆமை), ஜோர் (ஓடை), அக்ரா (மேலோட்டமான), பிலாதி பேகுன் (தக்காளி) போன்ற பல வார்த்தைகள், மேட்டுக்குடியினராலும் கொல்கத்தாவின் காலனியாதிக்க தாக்கம் கொண்ட உயர்சாதியினராலும் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருதமய வார்த்தைகள் மற்றும் ஐரோப்பிய சொல்லாடல்களால் தொடர்ந்து மாற்றப்பட்டன.”
*****
ஒரு வார்த்தை மறைந்து போனால் என்ன நடக்கும்? முதலில் வார்த்தை மறையுமா அல்லது அதன் அர்த்தங்கள் மறையுமா? அல்லது அதன் பின்னணி மறைந்து மொழியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குமா? ஆனால் வார்த்தை இழப்புக்கு பின் உருவாகும் வெற்றிடத்தை நிரப்ப புதியவொன்று வராதா?
’ உரல்பூல் ’ (பறக்கும் பாலம்) என்கிற புதிய வார்த்தை, வங்காள மொழியில் மேம்பாலம் என்கிற வார்த்தைக்கான மாற்றாக உருவாகும்போது, நாம் இழக்கிறோமா அல்லது புதியவொன்றை பெறுகிறோமா? நாம் இழந்தவை, புதிதாக சேர்ந்தவற்றைக் காட்டிலும் அதிகமானதாக இருக்குமா? ஸ்மிதா யோசித்துக் கொண்டிருந்தார்.
வங்காளத்தின் வழங்கப்படும் ஒரு பழைய வார்த்தையை நினைவுகூருகிறார் குல்குலி . காற்றோட்டத்துக்காகவும் வெளிச்சத்துக்காகவும் கூரைக்குக் கீழே பாரம்பரியமாக வைக்கப்படும் சிறு போக்கிடத்துக்கான பெயர் அது. “இப்போது அதெல்லாம் கிடையாது,” என்கிறார் அவர். “10 நூற்றாண்டுகளுக்கு முன், அறிவார்ந்த பெண்ணான கானா தன் முதுமொழி செய்யுளான கனார் பச்சானி ல் விவசாயம், சுகாதாரம், மருத்துவம், வானியல், வீட்டு கட்டுமானம் போன்றவற்றை பற்றி ஆச்சரியகரமான யதார்த்தத்துடன் எழுதியிருக்கிறார்.
அலோ ஹவா பெந்தோ நா
ரோகே போகே மோரோ நா
காற்றும் வெளிச்சமும்
இல்லாம அறை கட்டாதே
கட்டினால் நோய் வந்து நீ செத்துப் போகலாம்
பிரே உஞ்சு மெஜே கல்
தார் துக்கோ சோர்போகால்
வெளியே இருக்கும்
நிலத்தை விட தளம் கீழாக இருக்கிறது
அதன் இருளையும் அழிவையும் மறைக்க முடியாது.
எங்களின் முன்னோர்கள் கானாவின் அறிவை நம்பினார்கள். வீடுகளில் குல்குலி அமைக்க இடம் விட்டார்கள்,” என்கிறார் ஸ்மிதா. “ஆனால் நவீனமாக தற்காலத்தில் அரசின் சமூக பாதுகாப்பின் கீழ் சாமானியர்களுக்கென கட்டப்படும் ஒற்றைத்தன்மையிலான வீட்டுத் திட்டங்களில், பாரம்பரிய அறிவுக்கான இடம் இல்லை. அலமாரிகளை கொண்ட சுவர்கள், குலுங்கி என சொல்லப்படும் மாடங்கள், சதால் எனப்படும் திறந்த வெளிகள் ஆகியவை அருகிப் போன யோசனைகள். குல்குலிகள் மறைந்துவிட்டன. எனவே அந்த வார்த்தையும் பொதுப் புழக்கத்திலிருந்து மறைந்து விட்டது,” என்கிறார் அவர்.
ஆனால் வீடுகள் புறாக்கூடுகளாக மாற்றப்படும் இக்காலத்தில் குல்குலி அல்லது அந்த வார்த்தை குறித்து மட்டும் அவர் புலம்பவில்லை. பிற உயிரினங்களுடனும் இயற்கையுடனும் நாம் கொண்டிருந்த தொடர்பு அழிந்து போனது குறித்தும் ஸ்மிதா கவலையுறுகிறார். குல்குலிகளில் ஒரு காலத்தில் வசித்திருந்த வீட்டுக் குருவிகளின் இழப்பையும் அவர் நினைவுருகிறார்.
*****
“செல்பேசி கோபுரங்களும் கல் வீடுகளும், மூடியிருக்கும் சமையலறைகளும், கிருமிநாசினியின் அதிக பயன்பாடும்தான் நம் வீடுகளிலும் தோட்டங்களிலும் பாடல்களிலும் இடம்பெற்ற சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணம்,” என்கிறார் கமல்ஜித்.
நிச்சயமாக! மொழிக்கும் சூழலியல் பன்மையத்துக்கும் இடையிலுள்ள முக்கியமான தொடர்பை அவர் விளக்கினார். பஞ்சாபி கவிஞரான வரிஷ் ஷா எழுதிய சில வரிகளை அவர் குறிப்பிடுகிறார்:
“சிரி சூக்டி நல் ஜா துரே பந்தி
பையன் துத் தே விச் மதனியன் நி
குருவிகளின் சத்தம் கேட்டு பயணத்தை தொடங்குவர் பயணிகள்
ஒரு பெண் பாலிலிருந்து வெண்ணெய் தயாரிப்பது போல
குருவிகளின் சத்தம் கேட்டு விவசாயிகள் தங்களின் நாளையும் பயணிகள் தங்களின் பயணத்தையும் தொடங்கிய காலம் ஒன்று இருந்தது. அவைதான் இயற்கையாக நாம் கொண்டிருந்த நேரசொல்லிகள். இப்போதோ நான், செல்பேசியில் பதிவு செய்யப்பட்ட ஒரு சத்தத்தை கேட்டுதான் கண் விழிக்கிறேன். பருவக்காலங்களை விவசாயிகள் அனுமானித்து, பயிர் நடவை திட்டமிட பறவைகளின் இயல்பு உதவியது. அவற்றின் சிறகுகள் அசைவுகளில் சில நல்ல சகுனமாக கூட பார்க்கப்படுகிறது.
சிரியான் கம்ப் கிலேரே
வஸ்ஸான் மீன் பகுதெரே.
குருவி ஒவ்வொரு முறை சிறகுகளை விரிக்கும்போதும்
வானம் மழையைப் பொழியும்.
உயிர்களின் பேரழிவில் நாம் இருப்பது யதேச்சையான விஷயம் கிடையாது. செடி, விலங்கு மற்றும் பறவை இனங்கள் அழிந்து வரும் நிலையில், நாமும் நம் மொழி மற்றும் பண்பாட்டு பன்மையத்தை இழந்து வருகிறோம். 2010ம் ஆண்டுக்கான இந்திய மொழியியல் கணக்கெடுப்பில் டாக்டர் கணேஷ் தேவி, இந்தியாவில் மொழிகள் அபாயகரமான வேகத்தில் அழிந்து வருவதாக கூறுகிறார். 60 வருடங்களில் 250 மொழிகள் அழிவதாக குறிப்பிடுகிறார்.
பஞ்சாபில் சரிந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை பற்றி பறவையியலாளர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், திருமண நிகழ்வுகளில் பாடப்படும் பழைய நாட்டுப்புற பாடலை நினைவுகூருகிறார் கமல்ஜித்.
சதா சிரியன் டா சம்பா வே
பாபுல் அசான் உத் ஜானா
குருவிகளை போலத்தான் நாமும்
கூடுகளை விட்டு தூரம் செல்வோம் நாமும்.
“நாட்டுப்புற பாடல்களில் எப்போதும் குருவிகள் இடம்பெறுவதுண்டு. ஆனால், இப்போது இல்லை,” என்கிறார் அவர்.
*****
மறைந்து கொண்டிருக்கும் வாழ்க்கைகளும் கூட காலநிலை மாற்றத்தைப் போலவும் இடப்பெயர்வு போலவும் மொழியுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்கிறார் பங்கஸ். “ராங்கியா, கோரேஸ்வர் மற்றும் அசாமின் எல்லா இடங்களிலும் மலிவான இயந்திர உற்பத்தி கமோச்சாக்கள் (துண்டாகவும் தலைக்குக் கட்டவும் பயன்படுத்தப்படும் மெல்லிய பருத்தி துணி) மற்றும் சதோர்-மேகேலா (பெண்களுக்கான பாரம்பரிய முக்காடும் இடுப்புத் துணியும் ஆகும்) பிற மாநிலங்களிலிருந்து பெறப்படுகிறது. அசாமின் பாரம்பரிய கைத்தறி துறை இறந்து கொண்டிருக்கிறது. எங்களின் பாரம்பரியப் பொருட்களும் அவற்றுடனான வார்த்தைகளும் அழிந்து வருகிறது,” என்கிறார் அவர்.
“அக்ஷய் தாஸுக்கு வயது 72. அவரின் குடும்பம் அசாமின் பெபாரி கிராமத்தில் இன்றும் கூட கைத்தறித் தொழில் செய்து வருகிறது. அந்தத் திறன் தொலைந்துவிட்டதாக சொல்கிறார் அவர். ‘60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கவஹாத்திக்கு இளைஞர்கள் இடம்பெயருகின்றனர். நெசவு பாரம்பரியத்திலிருந்து தள்ளிச் சென்று விடும் அவர்களுக்கு செரெகி போன்ற வார்த்தைகள் தெரிவதில்லை.” ஜோதோர் என்ற சுழலும் சக்கரத்தின் உதவியில் மொஹுரா என்கிற உருளை சுற்றி நூல் சுற்ற உதவும் மூங்கில் வளையத்தைதான் அக்ஷய் சொல்கிறார்.
“ஒரு பிகு பாடல் வரி நினைவுக்கு வருகிறது,” என்னும் பங்கஜ் “ செரெகி குராடி நாஸ் (சுழலும் செரெகி போல் ஆடு),” என்கிறார். அதற்கான பின்னணி தெரியாத ஒருவர் அந்த வார்த்தையை என்னவாக புரிந்து கொள்வார்? அக்ஷயின் 67 வயது அண்ணி பிலாதி தாஸ் (காலஞ்சென்ற அண்ணன் நாராயண் தாஸின் மனைவி) இன்னொரு பாடல் பாடுகிறார்.
தெதெலிர் தொலோதே, காபூர் போய்
அசிலோ, சொரையே சிகிலே சூட்டா
புளியமரத்துக்குக் கீழ் நான் நெய்து கொண்டிருந்தேன், பறவைகள் நூல்களை
கிழித்தன.
நெசவுப்பா பின்னுவதை எனக்கு அவர் விவரித்தார். புதிய கருவிகளும் இயந்திரங்களும் சந்தைக்கு அதிகம் வருவதால் உள்ளூர் கருவிகளும் தொழில்நுட்பமும் தொலைவதாக சொல்கிறார்.
*****
“நாம் இப்போது சர்வநாஷ் தொழில்நுட்பத்தில் இருக்கிறோம்,” என மர்மமான சிரிப்புடன் சொல்கிறார் நிர்மல்.
“சமீபத்தில், சட்டீஸ்கரின் படாந்தடார் கிராமத்தில் ஒரு பயணத்தை மேற்கொண்டேன்.” நிர்மல் கதையை சொல்லத் தொடங்குகிறார்: “நாங்கள் நடத்தவிருந்த பூஜைக்காக தூப் (பெர்முடா புல்) தேடினேன். சமையற்கட்டு தோட்டத்துக்கு சென்று பார்த்தேன். ஒரு புல் கூட கிடைக்கவில்லை. எனவே வயல்களுக்கு சென்றேன்.
“அறுவடைக்கு சில மாதங்களுக்கு முன். புது நெல் விளைந்து, விவசாயிகள் அவர்களின் வயல்களை வணங்கள் செல்லும் காலம். அவர்களும் புனிதமான அந்த புல்லை பயன்படுத்துவார்கள். வயல்களில் நான் நடந்தேன். ஆனால் வெல்வெட் போல மென்மையாக காலடியில் உணரப்பட வேண்டிய புற்கள் காய்ந்திருந்தன. பெர்முடா புல், சாதாரண புல், காண்டி (பசிய தீவனம்) எல்லாமும் காணாமல் போய்விட்டது. ஒவ்வொரு இதழும் காய்ந்து கருகிப் போயிருக்கிறது!”
”வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டபோது, “சர்வநாஷ் தாலா காயா ஹை, இஸ்லியே (ஏனென்றால் அழிவு தெளிக்கப்பட்டிருக்கிறது,” என்றார். ஏதொவொரு பூச்சிக்கொல்லி மருந்தின் பெயரைத்தான் அவர் சொல்கிறாரென புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது. அவர் சட்டீஸ்கரி மொழியில் நிண்ட நாஷக் (களைகொல்லி) என சொல்லவில்லை. நாங்கள் அடிக்கடி பேசும் ஒடியா மொழியில் காஸ் மாரா என்றும் சொல்லவில்லை. அல்லது இந்தி பேசும் பகுதிகளில் சொல்லப்படுவதை போல கர்பத்வார் நாஷக் என்றோ சராமர் என்றோ கூட சொல்லவில்லை. அந்த வார்த்தைகள் எல்லாவற்றுக்கும் பதிலாக சர்வநாஷ் என்கிற வார்த்தை வந்திருக்கிறது!”
ஒவ்வொரு துண்டு நிலத்தையும் சுரண்டி நம் வாழ்க்கைக்காக பயன்படுத்துவதற்கான மனித குலத்தின் யத்தனிப்புதான் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் அதிகமாக ஆதிக்கம் செலுத்துவதற்கான காரணமாக இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லாத விவசாயி கூட, பாரம்பரியக் கருவிகளுக்கு பதிலாக ட்ராக்டரை வாடகைக்கு எடுக்கும் வாய்ப்பே அதிகம் என்கிறார் நிர்மல்.
”இரவுபகலாக ஆழ்துளைக் கிணறுகள் கொண்டு நீர் உறிஞ்சப்பட்டு, நம் தாய்நிலத்தை வறட்சிக்குள்ளாக்குகிறது. மாதி மஹ்தாரி , அவளின் கருவறை (மேற்பகுதி மண்) ஆறு மாதத்துக்கு ஒருமுறை கரு கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறது,” என்கிறார் துயர் நிரம்பிய குரலில். “எத்தனை நாள்தான் அவள் ரசாயனம் நிரம்பிய ‘சர்வநாஷை’ சகித்துக் கொள்வாள்? விஷம் நிரம்பிய பயிர்கள் மனித ரத்தத்தை சென்றடையும். நாம் எதிர்நோக்கியிருக்கும் அழிவுக்காலத்தை என்னால் உணர முடிகிறது.
“மொழியைப் பொறுத்தவரை, ஒரு நடுத்தர வயது விவசாயி ஒருமுறை என்னுடன் பேசுகையில், நாகர் (கலப்பை), பகார் (களையெடுக்கும் கருவி), கொபார் (களிமண் கட்டிகளை உடைக்க பயன்படும் மரக் கட்டை) போன்றவற்றின் பெயர்கள் எவருக்கும் தெரிவதில்லை என்றார். டவுன்ரி பெலான் (மாட்டு வண்டி) முற்றிலும் வேறு இடத்துக்கு உரியது.
“ மெடிகம்பாவைப் போல,” என்கிறார் ஷங்கர்.
“ மெடிகம்பா தடியை, கர்நாடகாவின் உடுப்பியிலுள்ள வந்த்சே கிராமத்திலுள்ள எங்கள் வீட்டு முற்றத்தில் இருந்தது நினைவில் இருக்கிறது,” என நினைவுகூருகிறார். “விவசாயத்துக்கான தடி என அர்த்தம். ஒரு பலகையை - ஹாதிமஞ்சாவை அதனுடன் கட்டுவோம். நெல்லை அதில் அடித்து அரிசியாக பிரிப்போம். அதில் எருதைக் கட்டி, நெற்கதிர்களில் நடக்கவிட்டு மிச்ச தானியத்தையும் எடுப்போம். இப்போது அந்த தடி இல்லை. நவீன அறுவடை இயந்திரங்கள் இம்முறையை எளிதாக்கி விட்டது,” என்கிறார் ஷங்கர்.
“வீட்டின் முன் மெடிகம்பா தடியை வைத்திருப்பது கெளரவம். வருடத்துக்கு ஒருமுறை நாங்கள் அதற்கு பூஜை செய்வோம். நல்ல விருந்து வைப்போம்! தடி, பூஜை, விருந்து, அந்த வார்த்தை, ஒரு பெரும் வாழ்க்கை - இப்போது இல்லை.”
*****
”போஜ்பூரி மொழியில் ஒரு பாடல் இருக்கிறது,” என்னும் ஸ்வர்ண காந்தா, “ ஹர்தி ஹர்த்பூர் ஜெய்ஹா எ பாபா, சோனே கே குடாலி ஹர்தி கொரி எ பாபா (அப்பா, ஹர்த்பூரிலிருந்து மஞ்சள் கொண்டு வாருங்கள், தங்க மண்வெட்டி கொண்டு மஞ்சளை தோண்டி எடுத்து வாருங்கள்). இப்பாடல், போஜ்பூரி பேசப்படும்ப் பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் உப்தான் (மஞ்சள் பூசும்) சடங்குகளில் பாடப்படும். தொடக்கத்தில், உறவினர்களின் வீடுகளுக்கு மக்கள் சென்று மஞ்சளை ஜாந்தாவில் (அரவைக்கல்) அரைப்பார்கள். இப்போது அவர்களின் வீடுகளில் அரவைக்கற்கள் கிடையாது. சடங்கும் மறைந்துவிட்டது.
‘ஒருநாள்
என் தூரத்து உறவினரின் மனைவியும் நானும் உப்தான் பாடலில் இடம்பெற்றிருக்கும் கோடல்
(மண்வெட்டி), கொர்னா (தோண்டுதல்), உப்தான் (மஞ்சள் குளித்தல்), சின்ஹோரா (குங்குமப்
பெட்டி), தூப் (பெர்முடா புல்) போன்ற வார்த்தைகள் காணாமல் போயிருக்கிறது என பேசினோம்,’
என்கிறார் நகர்ப்புற இந்தியாவில் நேரும் பண்பாட்டு இழப்பு குறித்து சொல்கிறார் ஸ்வர்ண
காந்தா
*****
நாம் அனைவரும் நமது தனிப்பட்ட நிலையிலிருந்தும் பண்பாட்டிலிருந்தும் வர்க்கங்களிலிருந்தும் பேசுகிறோம். எனினும் தொலைந்து போன வார்த்தைகள் மற்றும் தேய்ந்து வரும் அர்த்தங்கள் ஆகியவற்றுடன் சொந்த பூர்விகத்துடனும் சூழலுடனும் இயற்கையுடனும் நம் கிராமங்களுடனும் காடுகளுடனுமான நம் உறவும் பலவீனமாகி வருகிறது. ஏதோவொரு கட்டத்தில் ‘வளர்ச்சி’ என்கிற வேறொரு விளையாட்டை நாம் ஆடத் தொடங்கி விட்டோம்.
விளையாட்டுகளும் கூட காலப்போக்கில் மறைந்துவிட்டன. சுதாமயியும் தேவேஷும் அதைப் பற்றிதான் பேசுகிறார்கள். “குழந்தைகள் விளையாடாத விளையாட்டுகளைப் பற்றி கேட்டால் ஒரு பட்டியலே கொடுக்க முடியும்,” என்கிறார் சுதாமயி. “கூழாங்கல்லை தூக்கிப் போட்டு கையில் பிடிக்கும் கச்சாகாயலு அல்லது யல்லஞ்சி விளையாட்டு; சோழி அல்லது புளியங்கொட்டைகளை இரு வரிசைகளில் இருக்கும் 14 குழிகளில் போட்டு விளையாடும் ஒமனகுண்டாலு , கண்ணாமூச்சி விளையாட்டான கல்லாகண்டாலு போன்ற பல விளையாட்டுகள்,” என்கிறார் அவர்.
“ ‘சதீலோ’ போன்ற விளையாடுகளை விளையாடிய நினைவுகள் இருக்கிறது,” என்கிறார் தேவேஷ். இரண்டு அணிகள் விளையாடும். ஏழு கற்கள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்படும். ஒரு அணி பந்தை எறிந்து கற்கோபுரத்தை சாய்க்க முனையும். இன்னொரு அணி அவுட்டாகாமல் கோபுரத்தை மீண்டும் கட்ட முனையும். ஒரு கட்டத்தில் அலுப்பு தட்டியவுடன், ‘ஜெனா பாத்பாத்’ என்கிற விளையாட்டை நாங்கள் கண்டுபிடித்தோம். இறுதி இலக்கு எதுவுமில்லை. அணிகளுமில்லை. அனைவரையும் இலக்காக்கி அனைவரும் பந்தெறிந்தோம்! காயம் ஏற்படும் என்பதால், இதை ‘சிறுவர்கள்’ விளையாட்டு என சொல்வார்கள். சிறுமிகள் ஜெனா பாத்பாத் விளையாடவில்லை.”
“நான் சொன்ன எந்த விளையாட்டையும் நான் விளையாடியதில்லை,” என்கிறார் சுதாமயி. “அவற்றை என் தாய் வழி பாட்டி கஜுலாவர்தி சத்யா வேதமிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன். எங்களின் ஊர் கொலாகலுருவிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சினாகெடெலாவருவை சேர்ந்தவர் அவர். அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இந்த விளையாட்டுகளை பற்றி எனக்கு சாப்பாடு கொடுக்கும்போதோ என்னை தூங்க வைக்கும்போதே அவர் சொன்னதாக ஒரு நினைவு மங்கலாக இருக்கிறது. என்னால் விளையாட முடியவில்லை. பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது!”
“எங்களின் பகுதி சிறுமிகள் ‘குத்தே’ என்ற விளையாட்டை கற்கலை கொண்டு விளையாடுவார்கள்,” என்கிறார் தேவேஷ். அல்லது ‘பிஷ் அம்ரித்’ (விஷம் - தேன்) என்கிற ஓடிப் பிடிக்கும் விளையாட்டு. ‘லாங்டி தாங்’ என்ற விளையாட்டு கூட எனக்கு நினைவிருக்கிறது. தரையில் வரைந்த ஒன்பது கட்டங்களில் ஆட்டக்காரர்கள் நொண்டி அடித்து விளையாடும் விளையாட்டு அது.
”குழந்தைகள் டிஜிட்டல் சாதனத்துடன் வளரவில்லை. அவர்களின் பால்யகாலமும் மொழியும் தொலைந்துவிட்டது. இன்று பக்கிராவை சேர்ந்த என் உடன்பிறந்தவரின் மகனான 5 வயது ஹர்ஷித்துக்கும் கொராக்பூரை சேர்ந்த இன்னொரு உறவினரின் மகளான 6 வயது பைரவிக்கும் இந்த விளையாட்டுகளின் பெயர்களே தெரியாது,” என்கிறார் தேவேஷ்.
*****
ஆனால் ஓரளவுக்கான இழப்பை தவிர்க்க முடியாதுதானே? பிரணதி யோசித்துக் கொண்டிருந்தார். சில துறைகளில் நேரும் மாற்றங்கள் நம் மொழியை மாற்றத்தானே செய்யும்? உதாரணமாக, அறிவியல் துறையில் பல நோய்களும், அவற்றுக்கான காரணங்களும் தடுப்பும், மக்களிடையே உருவாகும் விழிப்புணர்வும் அவற்றை மக்கள் பார்க்கும் விதங்களை மாற்றும். குறைந்தபட்சம், அவற்றை அடையாளம் காணும் முறைகளாவது மாறுமே. ஒரிசாவின் உள்ளூர் மொழியில் நுழையும் அறிவியல் சொற்களை வேறெப்படி ஒருவரால் விளக்க முடியும்?
“ஒரு காலத்தில் கிராமங்களில் நோய்களுக்கு பல்வேறு பெயர்கள் இருந்தன. பெரியம்மை, படிமா ; சின்னம்மை சோடிமா ; வயிற்றுப்போக்கு படி , ஹைஜா அல்லது அமஷய் ; டைஃபாய்டு, அந்த்ரிகா ஜ்வார் . நீரிழிவுக்கு கூட வார்த்தை உண்டு - பகுமுத்ரா , மூட்டுவலி - கந்திபாட் மற்றும் தொழுநோய், படாரோகா . ஆனால் இன்று மக்கள் இந்த ஒடியா வார்த்தைகளை மெல்ல ஒதுக்கி, ஆங்கில வார்த்தைகளை சொல்லத் தொடங்கியிருக்கின்றனர். கவலைக்கு இதுதான் காரணமா? எனக்கு தெரியவில்லை.”
மொழி வல்லுநர்களோ இல்லையோ மொழி நிலையானது கிடையாது என்பது நமக்கு தெரியும். அது ஆற்றைப் போல, காலத்துக்கும் பல மக்கட்பிரிவுகளிடையே ஓடுவது; எப்போதும் மாறியும் பிரிந்தும் ஒன்றாகியும் சுருங்கியும் மங்கியும் புதிது புனைந்தும் இயங்குவது. பிறகு ஏன் இழப்புக்கு இத்தனை வருத்தமும் ஆர்ப்பாட்டமும்? சில நேரங்களில் மறதியும் நல்ல விஷயம்தானே?
*****
“நம் மொழிகளுக்கு பின் இருக்கும் சமூகக் கட்டுமானங்களை நான் யோசிக்கிறேன். முர்தாத் மட்டன் என்கிற வார்த்தையைப் பாருங்கள்,” என்கிறார் மேதா. “இந்த வார்த்தையை, எதற்கும் ஒத்து வராத நபரை குறிக்க பயன்படுத்துவோம். ஆனால் பல கிராமங்களில் தலித்துகள் உண்ணக் கட்டாயப்படுத்தப்படும் இறந்த ஆட்டுக் கறிதான், முர்தாத் மட்டன் . அங்கிருந்துதான் இந்த வார்த்தை வந்திருக்கிறது.”
ராஜீவ் மலையாள மொழி குறித்து யோசிக்கிறார். “ஒரு காலத்தில் கேரளாவின் பட்டியல் சாதி வசிப்பிடங்கள் சேட்டா குடிசை என அழைக்கப்பட்டன,” என்கிறார். “அத்தகைய வீடுகளில் பட்டியல் சாதி வசிப்பதால், அந்த வார்த்தை வசவு சொல்லாகவும் மாறியது. அவர்களது வீடுகளை புறம் அல்லது வீடு என அழைக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்த வார்த்தைகள் உயர்சாதிகளுக்கானது. அவர்களின் குழந்தைகள், உயர்சாதி குழந்தைகள் அழைக்கப்படுவது போல் உண்ணி என அழைக்கப்படுவதில்லை. அடாவடிக்காரர்கள் என பொருள்படும் சேக்கர்கள் என அழைக்கப்படுவர். தம்மை கூட அவர்கள், ‘கீழ்ப்படியும் பணியாள்’ என்கிற பொருள்படும் அடியான் என்கிற வார்த்தை கொண்டுதான் உயர்சாதி மக்களிடையே குறிப்பிட வேண்டும். இந்த வார்த்தைகள் இப்போது பயன்பாட்டில் இல்லை,” என்கிறார் அவர்.
“சில வார்த்தைகளும் பயன்பாடும் தொலைந்து போவதே மேல்,” என்கிறார் மேதா. “மராத்வடாவின் தலித் தலைவரான வழக்கறிஞர் ஏக்நாத் அவாத், அவரும் அவரது நண்பர்களும் உருவாக்கிய மொழி குறித்து அவரது சுயசரிதையில் பேசுகிறார். ( Strike a blow to change the world என ஜெர்ரி பிண்டோவால் மொழிபெயர்க்கப்பட்டது). அவர்கள் மடாங் மற்றும் பிற தலித் சாதிகளை சேர்ந்தவர்கள். வறுமையில் வாடி, உணவை திருடும் நிலையில் இருந்தவர்கள். அவர்களின் ரகசிய மொழி அவர்களை காத்தது. அடுத்தவரை எச்சரிக்கவும், மாட்டாமல் தப்பிக்கவும் அம்மொழி உதவியது. ‘ஜிஜா’ என அழைக்கப்படும் அவர், ’இம்மொழி மறக்கப்பட வேண்டும். யாரும் இதைத் தெரிந்து கொள்ளக் கூடாது. மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டியதில்லை,” என்கிறார்.
சொலாப்பூர் மாவட்டத்தின் சங்கோலாவை சேர்ந்த வழக்கறிஞர் நிதின் வாக்மாரே மற்றும் திபாலி புஸ்னர் ஆகியோர், காய் மங் கருட்யசாரகா ரஹாதுய் (ஏன் மங் அல்லது கருடி போல நிற்கிறாய்?) போன்ற பல சொல்லாடல்களையும் வார்த்தைகளையும் பட்டியலிடுகின்றனர். இந்த வார்த்தை பயன்பாடு, வறுமையிலும் சாதிய ஒடுக்குமுறையிலும் வாழும் தலித்களில் நிலவுவதாக கருதப்படும் அசுத்தம் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் சாதிய அடுக்குமுறையோடு இயங்கும் மொழியில் ஒரு மனிதரை பார்தி, மங், மகர் எனச் சொல்வது பெரும் அவமதிப்பு. அத்தகைய வார்த்தைகளை நாம் களைய வேண்டும்.”
*****
ஒரு விஷயம் பாதிப்பின்றி காப்பாற்றப்பட வேண்டும். நம் மொழிகளில் இருக்கும் நெருக்கடி கற்பனையான விஷயம் அல்ல. பெகி மோகன் குறிப்பிடும் ‘நிலக்கரி சுரங்கத்தின் முதல் கேனரி பறவை’போல. மோசமான விஷயங்கள் நடக்கவிருப்பதற்கான அறிகுறியா இது? மக்களாகவும் பண்பாடாகவும் நம் பன்மைத்தன்மை கொள்ளப் போகும் பேரழிவை நோக்கி நாம் நகர்கிறோமா? அதன் தொடக்கத்தைதான் மொழிகளில் பார்க்கிறோமா? எங்கு இது முடியும், எப்படி மீளும்?
“வேறெங்கு, நம் சொந்த மொழிகளிலிருந்துதான்,” என்கிறார் 69 வயது ஜெயந்த் பர்மார். அவர் ஒரு குஜராத்தை சேர்ந்த தலித் கவிஞர் ஆவார். உருதுவில் எழுதுபவர்.
“அம்மா அவரின் குஜராத்தி மொழியில் பல உருது வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்,” என்கிறார் அவரும் அவரின் தாய் தாகிபென் பார்மரும் மொழியுடன் கொண்டிருக்கும் உறவை விவரித்து. “குறிப்பிட்ட பாத்திரத்தை கொண்டு வரச் சொல்ல அவர், “ ஜா , கடோ லாய் ஆவ் கவா கது என்பார். அத்தகைய பாத்திரங்கள் இருக்கிறதா என்று கூட எனக்கு தெரியாது. அவற்றில்தான் நாங்கள் சோறை பிசைந்து சாப்பிடுவோம். காலிப் படித்தபிறகுதான் கடா என்கிர வார்த்தையை நான் உணர்ந்தேன்,” என்கிறார் அவர்.
““ தாரா ‘தீதர்’ தோ ஜோ ,” (உன்னுடைய தோற்றத்தை கவனி), “ தாரு ‘கமிஸ்’ தோவா ஆப் (உன்னுடைய சட்டையை துவைக்கப் போடுகிறேன்)” போன்ற பல வாக்கியங்கள் இருந்தன. அல்லது அவர், “ முல்லானே த்யாந்தி ‘கோஷ்’லாய் ஆவ் (முல்லா வீட்டிலிருந்து கறி எடுத்து வா) என சொல்வார். கோஷ்ட் என்பதுதான் அந்த வார்த்தை. பேசப்படும் மொழியில் அது கோஷ் எனப்படுகிறது. நம் போலி யின் பகுதியாக இருக்கும் இந்த வார்த்தைகள் தற்போது மறக்கப்பட்டு வருகின்றன. இந்த வார்த்தைகளை உருது கவிதைகளில் நான் பார்க்கும்போதெல்லாம், என் தாயின் பிம்பத்தைதான் அங்கு பார்க்கிறேன்.”
இப்போது சூழல் மாறிவிட்டது. நகரத்தின் பூகோளமும் மாறிவிட்டது. “அப்போது எல்லா சமூகத்தினரும் அகமதாபாத்தின் சுவர் நகரத்துக்குள் வாழ்ந்தனர். பண்பாட்டில் மதவாதம் இருக்கவில்லை. தீபாவளியின்போது, இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் நம் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டது. ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்வோம். அனைவரும் சென்று தாஜியா ஊர்வலத்தை முகரத்தின்போது பார்ப்போம். அவற்றில் சில அழகாக அலங்கரிக்கப்பட்ட தேவதை மாடங்களாகவும் இருந்தன.
அப்போது ஆதான் - பிரதான் என்கிற உண்மையான வெளிப்படையான பரிவர்த்தனை இருந்தது. “இப்போது அச்சூழலில் நாம் இல்லை. அது நம் மொழிகளில் வெளிப்படுகிறது,” என்கிறார் அவர். “ஆனால் கவிதையில் நம்பிக்கை இருக்கிறது. மராத்தி, பஞ்சாபி, வங்காளம் போன்ற மொழிகள் எனக்குத் தெரியும். அவற்றிலிருந்து பல வார்த்தைகளை உருது மொழிக்குக் கொண்டு வந்திருக்கிறேன். ஏனெனில், கவிதை கொண்டுதான் இவை காக்கப்படுமென நான் நம்புகிறேன்.”
வார்த்தைகள் என்பது என்ன, மணல் துகளில் வெளிப்படும் உலகங்கள்தானே.
பல பூகோளப்பகுதிகளை உள்ளடக்கியிருக்கும் இக்கட்டுரை பாரிபாஷா உறுப்பினர்களான தேவேஷ் (இந்தி), ஜோஷுவா போதிநெத்ரா (வங்காளம்), கமல்ஜித் கவுர் (பஞ்சாபி), மேதா கலே (மராத்தி), முகமது கமார் தப்ரெஸ் (உருது), நிர்மல் குமார் சாஹு (சட்டீஸ்கரி), பங்கஜ் தாஸ் (அசாமி), பிரணதி பரிதா (ஒடியா), ராஜசங்கீதன் (தமிழ்), ராஜீவ் செலானத் (மலையாளம்), ஸ்மிதா காடோர் (வங்காளம்), ஸ்வர்ண காந்தா (போஜ்பூரி), ஷங்கர் என். கெஞ்சானுரு (கன்னடம்) மற்றும் சுதாமயி சட்டெனப்பல்லி (தெலுங்கு) ஆகியோரின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது.
ஜெயந்த் பார்மர் (உருது மொழியில் எழுதும் குஜராத்தி தலித் கவிஞர்), ஆகாங்ஷா, அந்தரா ராமன், மஞ்சுளா மஸ்திகட்டே, பி. சாய்நாத், புருஷோத்தம் தாகூர், ரிதாயன் முகெர்ஜி மற்றும் சங்கேத் ஜெயின் ஆகியோரின் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கட்டுரையை பி. சாய்நாத், ப்ரிதி டேவிட், ஸ்மிதா காடோர் மற்றும் மேதா கலே ஆகியோரின் உதவியுடன் பிரதிஷ்தா பாண்டியா தொகுத்திருக்கிறார். மொழிபெயர்ப்பு உதவி: ஜோஷுவா போதிநெத்ரா . படத்தொகுப்பு மற்றும் வடிவமைப்பு: பினாய்ஃபர் பருச்சா
தமிழில்: ராஜசங்கீதன்