“இந்த மரம்... இந்த வீடு... இந்த மண்ணில் இருக்கும் மென்மை... இந்த அன்பை எங்கே எடுத்துச் செல்வோம்?"
அபன்குடி ஹெம்ப்ராம் கோபமாகவும், சோகமாகவும் இருக்கிறார். 40 வயது சந்தாலி பழங்குடியான அவர், நிலத்தில் போடப்பட்டுள்ள ஒரு அடையாளத்தில் இருந்து இன்னொரு அடையாளம் வரை காட்டி விட்டுச் சொல்கிறார், “இவையெல்லாம் என்னுடையவை. எனக்குச் சொந்தமாக நிலம் இருக்கிறது,” என. அவர் தனது 5-6 பிகா நிலத்தில் (சுமார் ஒன்றரை ஏக்கர்) நெல் பயிரிட்டு வந்தார்.
“இத்தனை ஆண்டுகளாக நான் கட்டியமைத்த எல்லாவற்றையும் அரசாங்கத்தால் திருப்பித் தரமுடியுமா?” மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் அமையவுள்ள தேவ்சா பச்சாமி நிலக்கரி சுரங்கத் திட்டம் 10 ஊர்களை அழித்துவிடும். அபன்குடியின் ஹரின்சிங்கா கிராமமும் இதில் அடக்கம்.
“எல்லாத்தையும் விட்டுட்டு நாங்க எங்கே போவோம்? நாங்க எங்கேயும் போகமாட்டோம்,” என்று உறுதியாக கூறுகிறார் அபன்குடி. சுரங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ளவர்களில் ஒருவர் இந்தப் பெண். போலீஸ், ஆளுங்கட்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வலிமைக்கு எதிராக இவரைப் போன்ற பெண்கள் கூட்டங்கள், பேரணிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். தடிகள், துடைப்பம், அருவாள், கொடுவாள் போன்ற வேளாண் மற்றும் சமையல் கருவிகளே இவர்களது ஆயுதங்கள்.
குளிர்கால பிற்பகல் நேரத்தில் ஹரின்சிங்கா கிராமத்தில் தகதகவென்று காய்கிறது சூரியன். ஊரின் நுழைவாயிலில் அமைந்துள்ள தமது அண்டைவீட்டுக்காரர் லப்சாவின், செங்கல்லால் கட்டப்பட்ட அறைகளைக் கொண்ட ஓட்டு வீட்டின் தாழ்வாரத்தில் நின்றுகொண்டு நம்மிடம் பேசுகிறார் அபன்குடி.
பகலுணவு சாப்பிட்டுக்கொண்டே உரையாடலில் கலந்துகொண்ட 40 வயதான லப்சா ஹெம்ப்ரம் “எங்கள் நிலத்தை எடுக்க வேண்டுமானால், எங்கள் உயிரை எடுக்கவேண்டும்,” என்கிறார். முந்தைய இரவில் சமைத்து மீந்த பொறியலோடு, தண்ணீர் விட்டு சோறு சாப்பிட்ட அவர், கற்களை உடைக்கும் பகுதியில் வேலை செய்கிறார். அங்கே தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை தினக்கூலி கிடைக்கும்.
ஹரின்சிங்கா கிராமத்தில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடிகள். இது தவிர, தலித் இந்துக்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒடிஷாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்த ஆதிக்கசாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரும் இருக்கின்றனர்.
அபன்குடி, லப்சா ஆகியோரது நிலங்கள், பிரம்மாண்டமான தேவ்சா – பசாமி – திவான்கஞ்ஜ் – ஹரின்சிங்கா நிலக்கரித் தொகுப்பு அமைந்துள்ள நிலத்தின் மேலே உள்ளன. மேற்கு வங்க மின்சார வளர்ச்சிக் கழகத்தின் மூலம், 12.31 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ( 3,400 ஏக்கர் ) திறந்த நிலை சுரங்கமாக விரைவில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள இந்த சுரங்கம், ஆசியாவில் மிகப் பெரியது, உலகத்தில் இரண்டாவது பெரியது என்கிறது மாவட்ட நிர்வாகம்.
பிர்பூம் மாவட்டத்தின் மொஹம்மது பஜார் வட்டாரத்தில் உள்ள ஹாட்காச்சா, மக்தூம் நகர், பகதூர்கஞ்ஜா, ஹரின்சிங்கா, சந்தா, சலுகா, திவான்கஞ்ஜ், அலி நகர், கபில் நகர், நிஷ்சிந்தபூர் மோசா, ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களை இந்த சுரங்கத் திட்டம் விழுங்கும்.
தேவ்சா பச்சாமி சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கத்தில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். “நாங்கள் (ஊர்) இந்த முறை ஒன்றிணைந்து நிற்கிறோம். இந்த நிலம் வெளி ஆட்களுக்குச் செல்லாது. உளப்பூர்வமாக அதைக் காப்பாற்றுவோம்,” என்கிறார் லப்சா.
இவர்களைப் போல ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக, நிலமற்றவர்களாக இந்தத் திட்டம் மாற்றும். இந்தத் திட்டத்தால் “மேற்கு வங்கம் அடுத்த நூறாண்டு காலத்துக்கு வளர்ச்சி ஒளியில் திளைக்கும்” என்று அதிகாரிகள் சொல்வதைப் போல நடக்காது.
இந்த ஒளிக்கு கீழே இருள் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. நிலக்கரி போலவே இறுகிப்போன இருள் அது. இந்த திட்டம் சுற்றுச்சூழலையும் நாசமாக்கும்.
சூழலியலாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் புகழ் பெற்ற மனிதர்கள் இணைந்து இந்த திட்டம் குறித்த கவலையை வெளியிட்டு 2021 டிசம்பர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “திறந்த நிலை நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும்போது பல நூறாயிரம் ஆண்டுகளாக உருவான மேல் மண் அழிந்து குப்பைக் குவியலாக மாறிவிடும். நிலச்சரிவு ஏற்படுவது மட்டுமல்ல, நிலம் நீர் வாழிகளின் உயிர்ச்சூழல் பெருமளவில் சேதாரம் அடையும். மழைக்காலங்களில் இந்தக் குப்பைக் குவியல் கரைந்து மண் அடித்துச் சென்று இந்தப் பகுதியில் உள்ள ஆறுகளில் படியும். இதனால், எதிர்பாராத வெள்ளம் ஏற்படும். […] இது இந்தப் பகுதியில் நிலத்தடி நீரோட்டத்தை மட்டும் பாதிக்காது; வேளாண் உற்பத்தி, காட்டு உற்பத்தியையும் பாதிப்பதோடு, இந்த வட்டாரத்தின் சூழலியல் சமநிலை முழுவதிலுமே சேதாரத்தை ஏற்படுத்தும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தாம்சா, மாதோல் ஆகிய இசைக் கருவிகளையும் ஏந்திச் செல்கிறார்கள். இவை வெறும் இசைக் கருவிகள் அல்ல. தாம்சாவும் மாதோலும் இந்தப் பழங்குடி சமூகத்தின் போராட்டங்களோடு பின்னிப் பிணைந்தவை. தங்கள் வாழ்வின், போராட்டங்களின் குறியீடாக உள்ள இந்தக் கருவிகளில் தெறிக்கும் தாளத் துடிப்புகள், அவர்களது “அபுயா திசம், அபுயா ராஜ்” என்ற முழக்கத்தோடு ஒத்திசைந்து ஒலிக்கின்றன. இந்த முழக்கத்தின் பொருள் “எங்கள் நிலம், எங்கள் ஆட்சி” என்பதாகும்.
போராடும் பெண்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆதரவாக நிற்பதற்காக தேவ்சா பச்சாமி சென்ற நான், இந்தப் படங்களை உருவாக்கினேன். எல்லோருக்கும் வீடு, மறுகுடியேற்றம் செய்யும் இடங்களில் தார்ச்சாலை, குடிநீர், மின்சாரம், சுகாதார மையம், பள்ளி, போக்குவரத்து உள்ளிட்டவை தரப்படும் என்று அரசாங்கம் தந்த வாக்குறுதி குறித்து அவர்கள் பேசுவதைக் கேட்டேன்.
விடுதலை பெற்று இவ்வளவு காலம் ஆன பிறகு அடிப்படை உரிமையாக இருக்கவேண்டிய இவற்றையெல்லாம் பேரம் பேசுவதற்கான உத்தியாகப் பயன்படுத்துவது நகை முரணாக உள்ளது.
தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று உறுதியாக உள்ள மக்கள் ‘பிர்பூம் ஜமி-ஜீவன்-ஜீவிகா-பிரக்ரிதி பச்சாவ் மகா சபா’ (பிர்பூம் நிலம், வாழ்க்கை, வாழ்வாதாரம், இயற்கை பாதுகாப்புப் பேரவை) என்ற அமைப்பின் கீழ் ஒன்று திரண்டுள்ளார்கள். நகர்ப்புறத்தில் இருந்து சிபிஐஎம்எல் (லிபரேஷன்), ஜெய் கிசான் அந்தோலன், ‘எகுஷேர் டாக்’ என்ற மனித உரிமை அமைப்பு போன்ற அமைப்புகளும், தனி நபர்களும் நில எடுப்புக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக நிற்பதற்காக தேவ்சா வருகிறார்கள்.
கிழிந்த தார்ப்பாயைக் கொண்டு உருவாக்கப்பட்ட தற்காலிக கழிவறையைக் காட்டி, “இந்தப் படத்தைக் கொண்டு போய் உங்கள் அரசாங்கத்திடம் காட்டுங்கள்,” என்றார் ஹரின்சிங்காவை சேர்ந்த சுஷிலா ராவுத் என்பவர்.
இங்கிருந்து ஒரு மணி நேரம் நடந்தால் திவான்கஞ்ஜ் என்ற ஊர் வருகிறது. அங்கே, தேவ்சா கௌரங்கினி உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஹுஸ்னஹாரா என்பவரை சந்தித்தோம். “இவ்வளவு நாளும் அரசாங்கம் எங்களைப் பற்றி நினைக்கவில்லை. இப்போது எங்கள் வீடுகளுக்குக் கீழே நிலக்கரி இருக்கிறது என்கிறார்கள். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் எங்கே போவோம்?” என்று கேட்கிறார் அந்த மாணவி.
சைக்கிளில் பள்ளி செல்லவும், வரவும் அவளுக்கு மொத்தமாக மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால், தனது ஊரில் உயர் நிலைப்பள்ளி கூட வேண்டாம், ஒரு தொடக்கப்பள்ளி கட்டக்கூட அரசாங்கம் இவ்வளவு நாளும் முன்வரவில்லை என்று சுட்டிக்காட்டுகிறாள் அந்தப் பெண். “பள்ளி செல்லும்போது எனக்குத் தனிமையாகத் தெரியும். ஆனாலும், நான் படிப்பதை கைவிடவில்லை,” என்று கூறுகிறாள் ஹுஸ்னஹாரா. அவளது நண்பர்கள் பலர் கொரோனா பொது முடக்கத்தின்போது பள்ளிப் படிப்பைக் கைவிட்டுவிட்டனர். “ஆனால், இப்போது தெருக்களில் வெளியாட்களும், போலீஸ்காரர்களும் நடமாடுவதால் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் அச்சப்படுகிறார்கள். எனவே நான் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை,” என்கிறாள் அந்தப் பெண்.
ஹுஸ்னஹாராவின் பாட்டி லால்பானு பீபி, தாய் மினா பீபி ஆகியோர் வீட்டின் வெளி முற்றத்தில், அந்துமா பீபி உள்ளிட்ட அந்தப் பகுதிப் பெண்களோடு சேர்ந்து நெல் அடிக்கிறார்கள். குளிர்காலத்தில் இந்த ஊர் பெண்கள், இந்த நெல்லில் இருந்து அரிசி மாவு தயாரித்து விற்கிறார்கள். “எங்கள் திவான்கஞ்ஜ் கிராமத்தில் நல்ல சாலைகளோ, பள்ளியோ, மருத்துவமனையோ இல்லை. யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் தேவ்சாவுக்கு அழைத்துச் செல்லவேண்டும். எப்போதாவது இங்கே வந்து கருவுற்ற பெண்கள் படும் பாட்டைப் பார்த்திருக்கிறீர்களா? இப்போது அரசாங்கம் மேம்பாடு பற்றிப் பேசுகிறது. என்ன மேம்பாடு?” என்று கேட்கிறார் அந்துமா பீபி.
திவான்கஞ்ஜ் கிராமத்தில் இருந்து தேவ்சா மருத்துவமனைக்கு செல்ல சுமார் 1 மணி நேரம் ஆகும் என்றும் கூறினார் அந்துமா பீபி. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் என்றால் அது பச்சாமியில் இருப்பதுதான். இல்லாவிட்டால், மொகம்மது பஜார் என்ற ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்குதான் செல்லவேண்டும். அங்கு செல்வதற்கும் ஒரு மணி நேரம் ஆகும். சிக்கலான பிரச்சனை என்றால் சூரி என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.
கல் குவாரிகளில் வேலை செய்யும் அவர்களது கணவன்மார்கள் தினம் 500-600 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். இந்த வருவாயில்தான் குடும்பங்கள் நடக்கின்றன. சுரங்கம் அமைக்கத் திட்டமிட்டுள்ள பகுதியில் 3,000 குவாரி மற்றும் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களது நிலத்தை எடுப்பதற்கு இழப்பீடு தந்தாக வேண்டும் என அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த கிராமங்களில் இருந்து அவர்கள் இடம் பெயர்ந்தால், கல் உடைக்கும் தொழிலில் இருந்து கிடைக்கும் வருவாயும் நின்றுபோகும் என்று இந்த ஊர்ப் பெண்கள் கவலைப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு தருவதாக அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதி மீது அவர்களுக்கு ஐயம் இருக்கிறது. படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் ஊரில் இருப்பதாகவும் அவர்களுக்கு வேலை இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
நெல் காய வைத்துக்கொண்டிருக்கிற தன்சிலா பீபி, மேய வரும் ஆடுகளை விரட்டுவதற்காக கையில் கோல் வைத்திருக்கிறார். எங்களைப் பார்த்தவுடன் கையில் கோலோடு எங்களை நோக்கி ஓடிவந்தார் அவர். “நீங்கள் எல்லாம், ஒன்று கேட்பீர்கள் வேறொன்று எழுதுவீர்கள். எங்களோடு இந்த மாதிரி விளையாடுவதற்கு ஏன் வருகிறீர்கள்? நான் ஒன்று சொல்கிறேன். நான் என் வீட்டை விட்டுப் போகமாட்டேன். இது இறுதியான சொல். எங்கள் வாழ்க்கையை நரகமாக்க போலீசை அனுப்பினார்கள். இப்போது ஒவ்வொரு நாளும் பத்திரிகையாளர்களை அனுப்புகிறார்கள்,” என்று கூறிய அவர், குரலை உயர்த்திக் கூறினார்: “நாங்கள் சொல்வதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது: நாங்கள் எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.”
2021 முதல் 2022 வரை என்னுடைய பயணத்தில் நான் சந்தித்த பல பெண்கள் நில உரிமைக்கான போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். அதன் பிறகு, அந்தப் போராட்டம் தனது வீரியத்தை இழந்தது. ஆனால் எதிர்ப்புக் குரல் உறுதியாகவே இருக்கிறது. ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக இந்தப் பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீதிக்கான அவர்களது முழக்கம், ‘ஜல், ஜங்கல், ஜமீன்’ (நீர், காடு, நிலம்) என்றுதான் எப்போதும் எதிரொலிக்கும்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்