டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் புகைப்படம் ஜார்கண்டில் உள்ள செச்சாரியா கிராமத்தில் உள்ள சவிதா தேவியின் மண் வீட்டு சுவரில் தெரிகிறது. “பாபாசாகேப் எங்களுக்கு [வாக்களிக்கும் உரிமையை] கொடுத்திருக்கிறார். அதனால்தான் நாங்கள் வாக்களிக்கிறோம்,” என்கிறார் சவிதா.
சவிதாவுக்கு ஒரு பிகா (0.75 ஏக்கர்) நிலம் உள்ளது. சம்பாப் பருவத்தில் நெல் மற்றும் மக்காச்சோளத்தையும், குறுவைப் பருவத்தில் கோதுமை, சுண்டல் மற்றும் எண்ணெய் வித்துக்களையும் பயிரிடுகிறார். வீட்டு முற்றத்தில் உள்ள நிலத்தில் காய்கறிகள் பயிரிட எண்ணியிருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் இல்லை. தொடர் வறட்சியால் அவரது குடும்பம் கடனில் தத்தளிக்கிறது.
முப்பத்திரண்டு
வயதான சவிதா, தனது நான்கு குழந்தைகளுடன், பலமு மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமத்தில்
வசிக்கிறார். அவரது கணவரான 37 வயது பிரமோத் ராம், 2,000 கிலோமீட்டர் தொலைவில், புலம்பெயர்
தொழிலாளியாக பெங்களூரில் பணிபுரிகிறார். "அரசாங்கம் எங்களுக்கு வேலை தருவதில்லை,"
என்று கூறும் சவிதா, ஒரு தலித் தினசரி கூலித் தொழிலாளி. "குழந்தைகளுக்கு உணவளிக்கக்
கூட போதுமான வருமானம் இல்லை."
கட்டுமானத் தளங்களில் பணிபுரியும் பிரமோத், மாதம் சுமார் ரூ.10,000-12,000 சம்பாதிக்கிறார். சில நேரங்களில் அவர் ஒரு டிரக் டிரைவராகவும் பணிபுரிகிறார், ஆனால் அந்தப் பணி, வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. “வீட்டு ஆண்கள் நான்கு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால், நாங்கள் பிச்சை எடுக்க வேண்டியது தான். வேறு என்ன செய்ய முடியும் [இடம்பெயர்வதை தவிர]?” என்று கேட்கிறார், சவிதா.
960 பேர் வசிக்கும் கிராமமான (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) செச்சாரியாவில் உள்ள பெரும்பாலான ஆண்கள், "இங்கு வேலை வாய்ப்புகள் இல்லை," என வேலை தேடி வெளியேறுகிறார்கள். ”வேலை இருந்தால், மக்கள் ஏன் வெளியில் செல்ல வேண்டும்?” என கேட்கிறார், சவிதாவின் 60 வயதான மாமியார், சுர்பதி தேவி.
வேலைவாய்ப்புகளுக்காக ஜார்கண்டிலிருந்து எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறுகிறார்கள் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011). "நீங்கள் இந்தக் கிராமத்தில் 20 முதல் 52 வயது வரையிலான எவரும் வேலை செய்வதை பார்க்க முடியாது," என்கிறார் ஹரிசங்கர் துபே. “எஞ்சியிருப்பது ஐந்து சதவீதம் மட்டுமே. மீதமுள்ள அனைவரும் இடம்பெயர்ந்துவிட்டனர்,” என்கிறார் செச்சாரியாவை அடக்கிய பஸ்னா பஞ்சாயத்து சமிதி உறுப்பினர்.
“இந்த முறை அவர்கள் வாக்கு கேட்க வரும்போது, எங்கள் கிராமத்துக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்கப் போகிறோம்?” என சவிதா கோபமாகவும் உறுதியாகவும் கூறுகிறார். அவர், மற்ற குடும்ப உறுப்பினர்களுடன், இளஞ்சிவப்பு நிற நைட்டி அணிந்து, மஞ்சள் துப்பட்டாவை தலையில் போர்த்திக்கொண்டு தன் வீட்டின் முன் அமர்ந்துள்ளார். நண்பகல் வேளை அது. பள்ளியிலிருந்து திரும்பியுள்ள அவரது நான்கு பிள்ளைகளும், மதிய உணவு திட்டத்தில், கிச்சடி சாப்பிட்டுவிட்டு வந்துள்ளனர்.
தலித் சாமர் சமூகத்தைச் சேர்ந்த சவிதா, இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றி கிராமத்தில் வசிப்பவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாட்டங்களிலிருந்து தெரிந்து கொண்டதாக கூறுகிறார் - அவர்களின் கிராமத்தில் 70 சதவீதம் பேர் பட்டியல் சாதி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அம்பேத்கரின் ஃபிரேம் செய்யப்பட்ட புகைப்படம், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்வா நகர் சந்தையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு கிடைத்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்பு, ஊர்த் தலைவர் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, கடுமையான காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் சவிதா. "அவர் வெற்றி பெற்றால் எங்களுக்கு ஒரு அடிகுழாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்." அவர் வெற்றி பெற்ற பிறகு, வாக்குறுதியை நிறைவேற்றாததால், சவிதா அவரது வீட்டிற்கு இரண்டு முறை சென்றுள்ளார். “என்னிடம் பேசுவதை விடுங்கள், என்னை பார்க்கக் கூட இல்லை. அவரும் ஒரு பெண் தானே! ஆனால் மற்றொரு பெண்ணின் அவலநிலை அவருக்கு சற்றும் புரியவில்லை.”
செச்சாரியா கிராமம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இங்குள்ள 179 வீடுகளுக்குமான தண்ணீர் ஆதாரம், ஒரு கிணறு மட்டுமே. சவிதா 200 மீட்டர் தூரத்தில் மலையில் உள்ள அடி குழாயில் தினமும் இரண்டு முறை தண்ணீர் எடுத்து வருகிறார். காலை நான்கு அல்லது ஐந்து மணிக்குத் தொடங்கி, தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரத்தை, தண்ணீர் தொடர்பான வேலைகளுக்கே செலவிடுகிறார். "அடிகுழாய் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு அல்லவா?" என்று அவர் கேட்கிறார்.
ஜார்கண்ட் தொடர்ச்சியான வறட்சியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது: 226 தொகுதிகள் கொண்ட, முழு மாநிலமும் 2022-ல் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, 2023-ல், 158 தொகுதிகள் வறட்சியால் பாதிக்கப்படுள்ளன.
“குடிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்தலாம் என்பதை சிந்தித்து செலவிட வேண்டும்,” என்று கூறும் சவிதா, கடந்த மாதம் முதல், அதாவது 2024-ன் கோடையின் தொடக்கத்திலேயே, வறண்டு போன அவரது கல் வீட்டின் முற்றத்தில் உள்ள கிணற்றைக் சுட்டிக் காட்டுகிறார்.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் நான்காவது கட்டமாக மே 13 அன்று, செச்சாரியாவில் தேர்தல் நிகழ்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளிகளான பிரமோதும், அவரது இளைய சகோதரரும், அதற்கு முன் வீடு திரும்புவார்கள். "வாக்களிப்பதற்காக மட்டுமே வருகிறார்கள்," என்கிறார் சவிதா. பயணச் செலவு மட்டுமே அவர்களுக்கு சுமார் ரூ.700 ஆகிவிடும். இதனால், தங்களின் தற்போதைய வேலைகளை அவர்கள் இழக்கக்கூடும். மீண்டும் தொழிலாளர் சந்தையில் வேலை தேட வேண்டியிருக்கும்.
*****
செச்சாரியாவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில், ஆறு வழிச்சாலைக்கான பணி நடைபெறுகிறது, ஆனால் இன்னும் ஒரு சாலையும் இவர்களது கிராமத்தை வந்து சேர்ந்த பாடில்லை. அதனால், 25 வயதான ரேணு தேவிக்கு, பிரசவ வலி ஏற்பட்டபோது, அரசு ஆம்புலன்ஸ்) அவரது வீட்டு வாசலுக்கு வர முடியவில்லை. "நான் பிரசவ வலியுடன் [சுமார் 300 மீட்டர்] நடந்தே பிரதான சாலைக்கு செல்ல வேண்டியிருந்தது," என்று கூறும் அவரின் மனதில், 11 மணி இரவில் நடந்து சென்ற சம்பவம் பெரும் வடுவாக பதிந்துவிட்டது.
ஆம்புலன்ஸ்கள் மட்டுமல்ல, மற்ற அரசின் திட்டங்களும் இவர்களுக்கு வந்த பாடில்லை போலும்.
செச்சாரியாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், சுல்ஹாவில் சமைக்கிறார்கள் - அவர்கள் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டரைப் பெறவில்லை. சிலிண்டர்களை வாங்குவதற்கு அவர்களிடம் பணமும் இல்லை.
செச்சாரியாவில் வசிப்பவர்கள் அனைவரிடமும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை (MNREGA) மற்றும் புத்தகம் உள்ளது. இது வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கும் ஒரு உத்தரவாதம் ஆகும். ஆனால் அட்டைகள் வழங்கி ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதில் பக்கங்கள் காலியாகவே உள்ளன. புதுக் காகிதத்தின் வாசனை கூட இன்னும் மாறவில்லை.
ரேணுவின் சகோதரியான பிரியங்கா, பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாததால், 12 ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். 20 வயதான இவர், தையல் வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், தனது அத்தையிடம் இருந்து ஒரு தையல் இயந்திரத்தை சமீபத்தில் கடனாக வாங்கி பயன்படுத்துகிறார். பிரசவத்திற்குப் பிறகு தனது பிறந்த வீட்டில் தங்கியிருக்கும் ரேணு, “அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது,” என்கிறார். “மாப்பிள்ளைக்கு வேலை இல்லை, கல் வீடும் இல்லை. ஆனால் திருமணத்திற்கு அவர் ரூ. 2 லட்சம் கேட்கிறார்." குடும்பத்தினரும் இதற்காக ஏற்கனவே கடன் வாங்கிவிட்டனர்.
வருமானம் இல்லாதபோது, செச்சாரியாவில் வசிப்பவர்கள் கடன் வாங்க வேண்டியுள்ளது. அதற்கு அதிக வட்டி விகிதமும் செலுத்த வேண்டியுள்ளது. "இந்த கிராமத்தில் கடன் சுமை இல்லாத வீடே இல்லை," என்று சுனிதா தேவி கூறுகிறார், அவரது இரட்டை மகன்களான லவ் மற்றும் குஷ் இருவரும் வேலைக்காக மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் வசிக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் அனுப்பும் பணம் மட்டுமே இவர்களின் வாழ்வாதாரம். “சில சமயங்களில் 5,000 மற்றும் சில சமயங்களில் 10,000 [ரூபாய்] அனுப்புகிறார்கள்,” என்கிறார் அவர்களுடைய 49 வயது தாயார்.
கடந்த ஆண்டு தங்கள் மகளின் திருமணத்திற்காக, சுனிதாவும், அவரது கணவர் ராஜ்குமார் ராமும், ஐந்து சதவீத வட்டிக்கு, உள்ளூர் கந்துவட்டிக்காரரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். ரூ.20,000 மட்டுமே திருப்பி செலுத்தியுள்ள நிலையில், கடன் பாக்கி இன்னும் 1.5 லட்சம் உள்ளது.
“கரீப் கே சாவ் ட்யூ லா கோயி நாய்கே. அகர் ஏக் தின் ஹமன் ஜூரி நஹி லானாப், தா அக்லா தின் ஹமன் கே சுல்ஹா நஹி ஜல்தி [ஏழைகளுக்கு உதவ யாரும் இல்லை. ஒரு நாள் விறகு எடுக்காமல் போனால், அடுத்த நாள் எங்கள் வீடுகளில் அடுப்புகள் எரியாது],'' என்கிறார் சுனிதா தேவி.
கிராமத்தைச் சேர்ந்த மற்ற பெண்களுடன், தினமும் 10-15 கிலோமீட்டர் தூரம் நடந்து மலையில் இருந்து விறகு சேகரிக்கச் செல்லும் இவர், வனக் காவலர்களிடமிருந்து தொடர் தொல்லைகளையும் எதிர்கொள்கிறார்.
2019 ஆம் ஆண்டு, கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு, சுனிதா தேவி கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுடன் சேர்ந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் வீடு வேண்டி விண்ணப்பித்திருந்தார். "ஒருவருக்கும் வீடு கிடைக்கவில்லை," என்னும் அவர் மேலும் "எங்களுக்கு கிடைக்கும் ஒரே பலன் ரேஷன் மட்டுமே. அதுவும் கூட, ஐந்திற்குப் பதிலாக 4.5 கிலோ மட்டுமே கிடைக்கிறது,” என்று கூறுகிறார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் விஷ்ணு தயாள் ராம் மொத்த வாக்குகளில் 62 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் குரன் ராமை தோற்கடித்தார். இந்த வருடமும் அதே தொகுதியில் தான் போட்டியிடுகிறார்.
கடந்த 2023-ம் ஆண்டு வரை அவரைப் பற்றி சுனிதா கேள்விப்பட்டதே இல்லை. ஒரு உள்ளூர் கண்காட்சியில், அவர் பெயரில் சில கோஷங்களை மட்டும் கேட்டுள்ளார். “ஹமாரா நேதா கைசா ஹோ? வி டி ராம் ஜெய்சா ஹோ!”
"ஆஜ் தக் உன்கோ ஹம்லோக் தேகா நஹி ஹை [நாங்கள் இன்றுவரை அவரை பார்த்தது கூட இல்லை]", என்கிறார் சுனிதா.
தமிழில் : அஹமத் ஷ்யாம்