"நாங்கள் எங்கு சென்றாலும், ஒன்றாகவே செல்வோம்", என்று கீதா தேவி அருகில் நிற்கும் தனது தோழி சகுனியை பாசத்துடன் பார்க்கிறார்.
இருவரும் அருகிலுள்ள காட்டில் குங்கிலிய(ஷோரியா ரோபஸ்டா) இலைகளை சேகரித்து அதன் மூலம் தொன்னைகள் (கிண்ணங்கள்) மற்றும் பட்டல்களை (தட்டுகள்) தயாரித்து பலாமு மாவட்ட தலைமையகமான டால்டன்கஞ்ச் நகரில் விற்கின்றனர்.
கீதாவும், சகுனி தேவியும் கோபி கிராமத்தில் உள்ள நதிதோலா என்ற சிறிய குக்கிராமத்தில் 30 ஆண்டுகளாக அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் உள்ள பல கிராமவாசிகளைப் போலவே, கீதாவும், சகுனியும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு காட்டை நம்பியுள்ளனர்.
ஏழு முதல் எட்டு மணி நேரம் காட்டில் செலவழிக்கும் அவர்கள், கால்நடைகள் மேய்ச்சல் முடிந்து திரும்புவதை பார்த்தவுடன் வீட்டிற்குச் செல்கின்றனர். போதுமான இலைகளை சேகரிக்க அவர்களுக்கு இரண்டு நாட்கள் வரை ஆகும். பல மணிநேரங்கள் வேகமாக கடக்கின்றன, அவ்வப்போது சிறு இடைவேளைகளையும் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தங்கள் குடும்பத்தைப் பற்றி அரட்டை அடித்தபடியும், உள்ளூர் செய்திகளைப் பேசியபடியும் வேலை செய்கின்றனர்.
தினமும் காலையில், பக்கத்து வீட்டிலிருந்து வரும் அழைப்பிற்காக கீதா காத்திருக்கிறார், " நிகாலே... " சிறிது நேரத்தில், அவர்கள் இருவரும் புறப்படுகின்றனர். ஆளுக்கொரு பழைய சிமெண்ட் சாக்குகளால் செய்யப்பட்ட பை, ஒரு நெகிழி தண்ணீர் பாட்டில், ஒரு சிறிய கோடரி, ஒரு பழைய துண்டு எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்கள். அவர்கள் ஜார்க்கண்டின், பலாமு புலிகள் காப்பகத்தின் இடைப்பட்ட மண்டலத்தில் ஹிஹிகரா என்ற காட்டை நோக்கிச் செல்கின்றனர்.
தோழிகள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் - கீதா, புய்யா தலித், சகுனி, ஓரான் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். நாங்கள் நடந்து செல்லும்போது, கீதா எச்சரிக்கிறார்: "இங்கே தனியாக வர வேண்டாம்," என்று. "சில நேரங்களில் காட்டு விலங்குகள் குறுக்கிடும். நாங்கள் டெண்டுவாக்களைப் [சிறுத்தைகளை] பார்த்திருக்கிறோம்!" பாம்புகள் மற்றும் தேள்களின் அச்சுறுத்தலும் பெரிதாக உள்ளது, "நாங்கள் பல முறை யானைகளை எதிர்கொண்டுள்ளோம்," என்று சகுனி மேலும் கூறுகிறார். பலாமு புலிகள் காப்பகத்தில் 73 சிறுத்தைகளும், சுமார் 267 யானைகளும் உள்ளன ( 2021 வனவிலங்கு கணக்கெடுப்பு ).
இந்த பனிமூட்டம் நிறைந்த குளிர்கால காலையில், ஐம்பது வயதுகளில் இருக்கும் கீதாவும், சகுனியும் லேசான சால்வை மட்டுமே அணிந்திருந்தனர். லதேஹர் மாவட்டத்தின் மணிகா வட்டத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஔரங்கா ஆற்றை அவர்கள் முதலில் கடக்கின்றனர். குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக ஓடும் போது இந்த ஆற்றை நடந்து கடப்பது எளிது, ஆனால் மழைக்காலங்களில் பெண்கள் பெரும்பாலும் கரையை அடைய கழுத்தளவு தண்ணீரில் நடந்துச் செல்ல வேண்டும்.
மறுபுறம் சென்றதும், இன்னும் 40 நிமிட நடை – அவர்களது செருப்புகளின் தக்-தக்-தக் சத்தம் எழுப்பிய தாள லயத்தால் மட்டுமே காட்டின் நிசப்தம் உடைந்தது. அவர்கள் ஒரு பெரிய இலுப்பை மரத்தை (மதுகா லாங்கிஃபோலியா) நோக்கிச் செல்கின்றனர். இது குங்கிலிய மரங்கள் அடர்த்தியாக வாழும் பகுதியின் அடையாளமாகும்.
"காடு, முன் போல் இப்போது இல்லை. முன்னாடி மிகவும் அடர்த்தியாக இருந்தது. நாங்கள் இவ்வளவு தூரம் வர வேண்டியிருக்கவில்லை," என்கிறார் சகுனி. 2001-2022-க்கு இடைப்பட்ட காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தனது 5.62 கிலோ ஹெக்டேர் மரங்களை இழந்ததாக குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் தரவு சொல்கிறது.
சில தசாப்தங்களுக்கு முன்பு காட்டுக்குள் தனது பயணங்களை நினைவுகூரும் சகுனி, "எந்த நேரத்திலும், 30 - 40 பேர் காட்டில் இருப்பார்கள். இப்போது பெரும்பாலும் ஆடு மேய்ப்பவர்களும், விறகு சேகரிப்பவர்களும் இருக்கிறார்கள்", என்று கூறுகிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூட பல பெண்கள் இந்த கைவினைத் தொழிலில் ஈடுபட்டனர். ஆனால் இதில் வருமானம் குறைவு என்பதால், அவர்கள் தொடரவில்லை என்று கீதா கூறுகிறார். கிராமத்தில் இந்த கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள கடைசி பெண்கள் இவர்கள் தான்.
விற்பனைக்கு விறகு சேகரிப்பது இப்போது தடை செய்யப்பட்டுள்ளதால் பெண்கள் இத்தொழிலுக்கு வருவதில்லை. "இது 2020-ம் ஆண்டில் ஊரடங்கின் போது நிறுத்தப்பட்டது", என்று சகுனி கூறுகிறார். ஜார்க்கண்ட் அரசு தொடக்கத்தில் விறகு சேகரிப்புக்கு கட்டணம் விதித்தது, பின்னர் திரும்பப் பெற்றாலும், கிராமவாசிகள் விறகுகளை விற்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
காட்டு நடைபயணம் தங்களையும், தங்கள் குடும்பங்களையும் ஆதரிக்கிறது. சகுனி தனது இருபதுகளில் இந்த வேலையைத் தொடங்கினார். "சின்ன வயதிலேயே எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, ” என்கிறார். குடிகார கணவர் விட்டுச் சென்றபோது, சகுனி தன்னுடன், தனது மூன்று மகன்களையும் பராமரிக்க ஒரு வழி தேட வேண்டியிருந்தது. "மிக சிறிய வேலையே [கிடைத்தது]," என்று அவர் கூறுகிறார், "இலைகளையும் தத்வானையும் விற்று என் குழந்தைகளை நான் வளர்த்தேன், ” என்று கூறுகிறார்.
சகுனி, தனது இளைய மகனான 17 வயது அகேந்தர் ஓரானுடன் இரண்டு அறைகள் கொண்ட கச்சா வீட்டில் வசித்து வருகிறார். அவரது மூத்த மகன்கள் இருவரும் திருமணமாகி கோப் கிராமத்தில் தனித்தனி வீடுகளில் வசிக்கின்றனர்.
ஒரு மகள், மூன்று மகன்கள், ஒரு மருமகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் என ஏழு பேர் கொண்ட பெரிய குடும்பத்துடன் கீதா ஒரு மண் வீட்டில் வசிக்கிறார். இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கீதாவின் இளைய மகளான 28 வயது ஊர்மிளா தேவியும் தொன்னை விற்கிறார். "எனது மூத்த மகளை ஒரு ஏழைக் குடும்பத்திற்கு திருமணம் செய்து வைத்தேன். என் இளைய மகளுக்கு அப்படி செய்ய மாட்டேன். தேவைப்பட்டால் வரதட்சணை கூட தருவேன்," என்கிறார் கீதா.
ஏழு சகோதர, சகோதரிகளில் இளையவரான கீதா சிறு வயதிலிருந்தே பள்ளிக்குச் சென்றதில்லை. "நான் பள்ளிக்குச் சென்றால், வீட்டு வேலைகளை யார் செய்வார்கள்?” என்று அவர் கேட்கிறார். சமைப்பது, சுத்தம் செய்வது, காட்டுக்குச் செல்வதற்கு முன்பு கால்நடைகளை (ஒரு பசு மற்றும் இரண்டு காளைகள்) மேய்ச்சலுக்கு அனுப்புவது போன்ற வீட்டு வேலைகள் அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. அவரது தோழியும் இதே போன்ற வழக்கத்தைக் கொண்டுள்ளார். ஆனால் கீதாவைப் போல பிற வேலைகளில் உதவும் மருமகள் சகுனிக்கு இல்லை.
*****
பாதுகாப்பு மண்டலத்தை அடைந்ததும், இரண்டு பெண்களும் தங்கள் பைகளை கீழே வைக்கின்றனர். இந்தக் குளிரான காலைப் பொழுதிலும் நடைபயிற்சியால் வியர்த்து புடவையின் நுனியால் நெற்றி, கழுத்தை அவர்கள் துடைத்துக் கொள்கிறார்கள்.
பணியை தொடங்குவதற்கு முன், பழைய துணியின் மூலைகளை உடனடியாக பையாக முடித்து அதில் இலைகளை சேகரிப்பார்கள். தங்கள் புடவைகளின் முந்திகளை இடுப்பில் செருகிக்கொண்டு, தோளில் தொங்கும் பையை இப்போது தயாராக்கிக் கொள்கின்றனர்.
தங்கள் இடது கையால் கிளையைப் பிடித்துக் கொண்டு பெரிய, நீள்வட்ட இலைகளை வலது கையால் கிழிக்கிறார்கள். "இந்த மரத்தில் மட்டாக்கள் (சிவப்பு எறும்புகள்) உள்ளன, கவனம்", என்று சகுனி தனது தோழியை எச்சரிக்கிறார்.
"நாங்கள் நல்ல இலைகளை, குறைவான துளைகள் கொண்ட இலைகளைத் தேடுவோம்", என்று கீதா சில இலைகளை தனது பையில் சேகரித்தபடி கூறுகிறார். தாழ்வான கிளைகளிலிருந்து முதலில் பறிக்கின்றனர். பிறகு உச்சியை அடைய மரத்தில் ஏறி கோடரியைப் பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக குங்கிலிய மரங்கள் மெதுவாக 164 அடி உயரம் வரை வளரும். இருப்பினும், இந்த காட்டில், குங்கிலிய மரங்கள் சுமார் 30-40 அடி உயரத்தில் இளசாக காணப்படுகிறது.
சுமார் 15 அடி உயரமுள்ள மரங்களில் ஒன்றில் ஏற தயாராகிறார் சகுனி. சேலையை மடித்து முழங்கால்களுக்கு நடுவில் செருகிக் கொள்கிறார். கீதா, கோடரியை அவரிடம் கொடுக்கிறார். "அதை வெட்டு," என்று ஒரு கிளையைக் காட்டுகிறார். கிளைகளை சீரான நீளத்திற்கு வெட்டி தத்வானாக – பற்களை சுத்தம் செய்யும் குச்சியாக பயன்படுத்துவார்கள். அதையும் அவர்கள் விற்பனை செய்வார்கள்.
"இது சரியான அளவில் இருக்க வேண்டும்", என்று கீதா ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு நகரும்போது தனது கோடரியால் பாதையில் உள்ள புதர்களை அகற்றுகிறார். "குங்கிலியக் கிளைகள் மிகவும் நல்லது. ஏனென்றால் அவை விரைவாக காய்ந்துவிடாது. இதை 15 நாட்கள் வரை கூட வைத்திருக்கலாம்," என்கிறார் அவர்.
இலைகள் மற்றும் கிளைகளை சேகரிப்பது எளிதான வேலை அல்ல. "குளிர்காலம் மிகவும் கடினமானது; எங்களது கைகள் மரத்துப் போய்விடுகின்றன", என்று கீதா கூறுகிறார். மேலும் "கோடரியை இறுக்கமாகப் பிடித்த பிறகு என் கைகள் வலிக்கத் தொடங்குகின்றன", என்கிறார்.
ஏப்ரல்-மே மாதங்களில் புதிய இலைகள் தோன்றுவதற்கு முன்பு, குங்கிலிய மரம் அதன் இலைகளை உதிர்க்கும். இதனால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அவர்களுக்கு வேலை இருக்காது. இந்த நேரத்தில், சகுனி இலுப்பைப் பூக்களை சேகரிக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் (2023), அவர் காட்டில் இருந்து 100 கிலோ இலுப்பை பழங்களை சேகரித்து உலர்த்தி உள்ளூர் வியாபாரி ஒருவரிடம் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்றார். பச்சை பழங்கள் மதுபானம் தயாரிக்கவும், பழத்தின் விதைகள் சமையல் எண்ணெய் எடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் கீதா இந்த நேரத்தில் வருவாய் ஈட்டுவதில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அவரது மூன்று மகன்களின் வருமானம் குடும்பத்தை பராமரிக்க உதவுகிறது. வீட்டில் வைத்திருக்கும் இலுப்பை மரம் அவர்களின் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
*****
காட்டில் மூன்று நாட்கள் வேலை செய்த பிறகு கீதாவும், சகுனியும் போதுமான இலைகளை டால்டன்கஞ்சிற்கு எடுத்துச் செல்ல சாக்குகளில் சேகரிக்கின்றனர். சுமார் 30 கிலோ எடையுள்ள மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு அவர்கள் 30 நிமிட நடைபயணத்தில் ஹிஹிகரா ரயில் நிலையத்தை அடைகின்றனர். கீதா சிரித்துக் கொண்டே, "இந்த முறை நான் அதிக தத்வான் எடுத்துள்ளேன்", என்று கூறுகிறார். அவர்களின் முதுகில் உள்ள பைகளுடன், கதகதப்பிற்கு ஒரு போர்வையும் உள்ளது.
ஹிஹிகரா நிலையத்தில், பெண்கள் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து, மதியம் 12 மணிக்கு டால்டன்கஞ்ச் அழைத்துச் செல்லும் உள்ளூர் ரயில் வண்டிக்காக காத்திருக்கிறார்கள்.
" பட்டா-தத்வான் விற்பவர்களுக்கு டிக்கெட் தேவையில்லை" என்று ரயிலின் கதவுக்கு அருகில் உள்ள இருக்கையில் தனது உடமைகளை வைத்தபடி சகுனி செய்தியாளரிடம் கூறுகிறார். மெதுவாகச் செல்லும் இந்த பயணிகள் ரயில் 44 கிலோமீட்டர் தூரத்தை கடக்க மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்ளும். "ஒரு நாள் முழுவதும் பயணத்தில் வீணாகி விட்டது," என்று சகுனி பெருமூச்சு விட்டபடி கூறுகிறார்.
ரயில் நகரத் தொடங்கியதும், கீதா தனது 2.5 ஏக்கர் நிலத்தைப் பற்றி பேசத் தொடங்குகிறார். மழைக்காலத்தில் நெல் மற்றும் மக்காச்சோளமும், குளிர்காலத்தில் கோதுமை, பார்லி மற்றும் கொண்டைக்கடலை போன்றவற்றையும் அங்கு அவர் பயிரிடுகிறார். "இந்த வருடம் நெல் சரியாக விளையவில்லை, ஆனால் நாங்கள் 250 கிலோ மக்காச்சோளத்தை 5,000 ரூபாய்க்கு விற்றோம்," என்கிறார் அவர்.
சகுனி தேவிக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு அவர் சம்பா மற்றும் குறுவை பருவங்களில் விவசாயம் செய்கிறார். "இந்த முறை, நான் சாகுபடி செய்யவில்லை; நெல் விதைத்திருந்தேன், ஆனால் அது வளரவில்லை", என்கிறார்.
அரட்டையடிக்கும்போது, அவர்களின் கைகள் தொன்னைகளை வடிவமைப்பதில் மும்முரமாகி விடுகின்றன - நான்கு முதல் ஆறு இலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மூங்கில் கீற்றுகளால் ஒன்றாக தைக்கின்றனர். மென்மையான இலைகள் பல முறை மடிக்கும்போதும் உடைவதில்லை, அவை தட்டுகளாக மாறுகின்றன. "இலை பெரிதாக இருந்தால், இரண்டு இலைகள் கொண்டு ஒரு தொன்னை செய்துவிடலாம். இல்லையெனில், ஒரு தொன்னைக்கு நான்கு முதல் ஆறு இலைகள் தேவைப்படும்," என்று சகுனி விளக்குகிறார்.
விளிம்புகளை மடித்து ஒரு வட்ட வடிவத்தை அவர்கள் உருவாக்குகின்றனர். இதனால் உணவு பரிமாறப்படும் போது அது வெளியே வராது. "அதில் குழம்பு ஊற்றினாலும் கசியாது", என்று கீதா தேவி கூறுகிறார்.
12 தொன்னைகள் கொண்ட ஒரு கட்டு நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 60 இலைகள் உள்ளன. சுமார் 1500 இலைகளைப் பறித்தல், கைவினை செய்தல், கொண்டு செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அவர்களின் வருமானம் 100 ரூபாயாக மிஞ்சுகிறது.
தத்வான் மற்றும் போலா (குங்கிலிய இலைகள்) 10 கட்டுகளாக முறையே ஐந்து மற்றும் 10 ரூபாய் விலையில் பெண்கள் விற்கின்றனர். " தத்வானுக்கு ஐந்து ரூபாய் கொடுக்க கூட மக்கள் விரும்பவில்லை. பேரம் பேசுகிறார்கள்" என்கிறார் சகுனி.
மாலை 5 மணிக்கு, ரயில் டால்டன்கஞ்ச் அடைகிறது. ரயில் நிலையத்திற்கு வெளியே, சாலையின் ஓரத்தில் கீதா ஒரு நீல நிற நெகிழி தாளை தரையில் விரிக்க, இருவரும் அமர்ந்து தொன்னைகளை வடிவமைக்கும் பணியை மீண்டும் தொடங்குகிறார்கள். பட்டல் அல்லது தட்டுகளுக்கான ஆர்டர்களையும் பெறுகிறார்கள். ஒரு தட்டை வடிவமைக்க 12-14 இலைகள் தேவைப்படும். ஒரு தட்டை, ஒன்று முதல் ஒன்றரை ரூபாய் வரை விற்கிறார்கள். கிரஹா பிரவேசம் (புதுமனை புகுவிழா) அல்லது நவராத்திரி, கோயில்களில் உணவு விநியோகம் போன்ற நிகழ்வுகளுக்கு அவை பயன்படுத்தப்படும். 100 பட்டல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய ஆர்டர்களுக்கு, பல தொழிலாளர்கள் ஒன்றிணைகிறார்கள்.
கீதாவும், சகுனி தேவியும் தங்கள் பொருட்கள் அனைத்தும் விற்கப்படும் வரை இங்கேயே இருப்பார்கள். ”சில நேரங்களில் மற்ற தொன்னை விற்பவர்களும் வந்தால் எட்டு நாட்கள் கூட ஆகலாம்", என்று சகுனி கூறுகிறார். இதுபோன்ற சூழல்களில், நீல நிற விரிப்பு, இரவில் அவர்களின் தற்காலிக படுக்கையாக மாறும். அவர்கள் எடுத்து வந்த போர்வைகளும் படுக்கைக்கு உதவுகின்றன. சில நாட்கள் தங்க வேண்டியிருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு முறை சத்து (சன்னா கஞ்சி) சாப்பிடுவார்கள், ஒவ்வொரு நாளும் அதை வாங்க தலா 50 ரூபாய் செலவழிக்கிறார்கள்.
அவர்களின் 'கடை' 24x7 மணி நேரமும் திறந்திருக்கும். இரவு ரயிலில் பயணிகள் அவர்களிடமிருந்து தத்வான் வாங்குகிறார்கள். மாலையில், கீதாவும், சகுனியும் ரயில் நிலையத்திற்கு செல்கின்றனர். டால்டன்கஞ்ச் ஒரு சிறிய நகரம். அதன் ரயில் நிலையம் ஒரு பாதுகாப்பான புகலிடமாகவும் திகழுகிறது.
*****
மூன்று நாட்கள் கழித்து, கீதா 30 கட்டு டோனா மற்றும் 80 கட்டு தத்வான் விற்று ரூ.420 சம்பாதித்துள்ளார். சகுனி, 25 கட்டு டோனா மற்றும் 50 கட்டு தத்வான் விற்று ரூ.300 சம்பாதித்துள்ளார். தங்கள் சம்பாத்தியத்துடன், இருவரும் நள்ளிரவு புறப்படும் பலாமு எக்ஸ்பிரஸில் ஏறி, மறுநாள் காலை பர்வாடிக்கு செல்கின்றனர். அங்கிருந்து, அவர்கள் ஹிஹிகராவுக்குச் செல்ல உள்ளூர் ரயிலுக்கு மாற வேண்டும்.
சகுனிக்கு சம்பாத்தியம் போதவில்லை. "இது கடினமான வேலை, பணம் போதவில்லை", என்று அவர் தனது சாக்கை கட்டிக் கொண்டே கூறுகிறார்.
ஆனால் அவர்கள் ஓரிரு நாட்களில் திரும்பி
வர வேண்டும். "இதுதான் எனது வாழ்வாதாரம்", என்கிறார் கீதா. "என் கைகளும் கால்களும் இயங்கும்
வரை இதைச் செய்வேன்."
இந்தக் கட்டுரை, மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் (எம்.எம்.எஃப்) மானிய ஆதரவில் எழுதப்பட்டது.
தமிழில்: சவிதா