“எங்கள் தலைமுறை பெண்கள் படித்திருந்தால், நிறைய விஷயங்கள் மாறியிருக்கும்,” என்கிறார் சுர்ஜீத் கவுர், கிஷான்கர் சேதா சிங் வாலா வீட்டு வராண்டாவில் அமர்ந்தபடி. அவரின் பேத்தி மற்றும் பேரன் ஆகியோர் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கின்றனர். 5ம் வகுப்பிலிருந்து படிப்பு நிறுத்தப்பட்டபோது, அவருக்கு கிட்டத்தட்ட அவர்களின் வயதுதான்.

“கல்வி, ஒரு மனிதரின் மூன்றாம் கண்ணை திறந்து விடும்,” என்கிறார் 63 வயதாகும் அவர்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் 75 வயது ஜஸ்விந்தர் கவுர் ஆமோதித்து தலையசைக்கிறார். “பெண்கள் வெளியே செல்கையில், உலகை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்,” என்கிறார் அவர்.

கல்வியை முடிக்க முடியாத நிலையிலிருந்த அவர்களுக்கு இன்னொரு சம்பவம் பெரிய அளவில் கல்வி புகட்டியதாக அவர்கள் கூறுகிறார்கள். 2020-21ல் 13 மாதங்களாக நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகள் போராட்டத்தில், கிராமத்திலிருந்து கலந்து கொண்ட 16 பெண்களில் சுர்ஜீத்தும் ஜஸ்விந்தரும் அடக்கம். குறைந்தபட்ச ஆதார விலைக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு வருட காலமாக தில்லி எல்லையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அவரைப் போன்ற லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்டங்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள .

இச்செய்தியாளர் கிஷான்கர் சேதா சிங் வாலாவுக்கு மே 2024 அன்று சென்றபோது, பஞ்சாபில் உள்ள பல கிராமங்களை போல, இக்கிராமமும் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. ஜூன் 1ம் தேதி தேர்தலுக்கும் கிராம மக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். ஒன்றிய ஆளுங்கட்சியின் விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளால், போராட்டங்கள் மூண்டு ஏற்கனவே சூழல் சூடாக இருந்தது.

“பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், இந்த வேளாண் சட்டங்களை மீண்டும் அவர்கள் கொண்டு வருவார்கள்,” என்கிறார் 60 வயது ஜர்னைல் கவுர். கிஷான்கர் சேதா சிங் வாலாவில் அவரது குடும்பத்துக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. “புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும்.”

(ஷிரோமணி அகாலிதலத்தின் ஹர்சிம்ராட் கவுர் பாதல், 2024 தேர்தலில் பதிண்டா தொகுதியில் வெற்றி பெற்றார். முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்பட்டன.)

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: சுர்ஜீத் கவுர் கிஷான்கர் கிராமத்திலுள்ள தன் வீட்டில். வலது: பஞ்சாபின் மன்சா மாவட்டத்திலுள்ள அதே கிராமத்தின் வீட்டில் ஜஸ்விந்தர் கவுர்

டிசம்பர் 2021, முடிந்த விவசாயப் போராட்டத்தின் பாடங்கள், இன்னும் கிராமத்தில் எதிரொலிக்கின்றன. “அரசாங்கம் எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்க பார்க்கிறது,” என்கிறார் ஜஸ்விந்தர் கவுர். “எப்படி நாங்கள் அவர்களை அனுமதிக்க முடியும்?” எனக் கேட்கிறார்.

பிற கவலைகளும் இருந்தது. “சில வருடங்களுக்கு முன், கிஷான்கர் சேதா சிங் வாலாவிலிருந்து வேறு நாடுகளுக்கு எந்த குழந்தைகளும் புலம்பெயராமல் இருந்தனர்,” என்கிறார் சுர்ஜீத். மேற்படிப்புக்காக சமீபத்தில் கனடா நாட்டின் ப்ராம்ப்டனுக்கு புலம்பெயர்ந்த உறவினர் குஷால்தீப் கவுர் பற்றி பேசுகிறார் அவர். “வேலை கிடைக்கவில்லை,” என்கிறார் அவர். “இங்கு வேலை இருந்தால், ஏன் அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும்?” எனக் கேட்கிறார் அவர்.

எனவே குறைந்தபட்ச ஆதார விலையும், குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்குமான வேலைவாய்ப்பும்தான் இக்கிராமத்து மக்களின் பிரதான பிரச்சினையாக இருக்கின்றன.

”அவர்கள் (அரசியல்வாதிகள்), முதியோர் ஓய்வூதியம், சாலைகள், கழிவு நீர் வசதி போன்ற பிரச்சினைகளில் நாங்கள் தொடர்ந்திருக்க விரும்புவார்கள்,” என்கிறார் சுர்ஜீத். “எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து இப்பிரச்சினைகள் சார்ந்துதான் கிராமங்கள் வாக்களித்து வருகின்றன.”

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: சுர்ஜீத் கவுர், விவசாய நிலத்தில் வெங்காயங்களையும் பூண்டுகளையும் பார்த்துக் கொள்கிறார். வலது: அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிருக்கு நடுவே நடக்கும் அவர்

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: இயந்திரங்களால் பெண்களின் நேரம் மிச்சமாகி இருக்கிறது. இதனால்தான் அவர்களால் போராட்டங்களில் பங்கெடுக்க முடிகிறது. வலது: சேகரிக்கப்பட்ட அறுவடையின் பதர்கள்

*****

கிஷன்கர் சேதா சிங் வாலா கிராமம், பஞ்சாபின் மன்சா மாவட்டத்துக்கு தெற்கே உள்ளது. பிஸ்வதாரி முறைக்கு எதிரான பெரும் போராட்டத்துக்கு பிறகு 1952ம் ஆண்டில் நிலமற்ற விவசாயிகள் வென்றெடுத்த நிலவுரிமைக்கான பெப்சு முசாரா இயக்கத்தில் (PEPSU Muzara) முக்கியமான பங்கு வகித்த பகுதி அது. மார்ச் 19, 1949 அன்று நான்கு போராட்டக்காரர்கள் இங்கு கொல்லப்பட்டனர். அவர்களின் வழி வந்தவர்கள் 2020-21 விவசாயப் போராட்டங்களில் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

வரலாற்றுரீதியான பங்கை கிராமம் கொண்டிருந்தாலும், பெரும்பாலான பெண்கள் சமீபத்திய விவசாயப் போராட்டத்துக்கு முன் எந்தப் போராட்டத்திலும் பங்கெடுத்திருக்கவில்லை. ஆனால் இப்போது உலகை பற்றி தெரிந்து கொள்வதற்கான அத்தகைய வாய்ப்புகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். “தொடக்கத்தில், எங்களுக்கு நேரம் இல்லை,” என்கிறார் சுர்ஜீத் கவுர். “நிலங்களில் நாங்கள் வேலை பார்த்தோம். பருத்தி அறுவடை செய்தோம். நூல் நூற்போம். ஆனால் தற்போது எல்லாவற்றையும் இயந்திரங்கள் செய்கின்றன.”

அவரின் மைத்துனி மஞ்சீத் கவுர் சொல்கையில், “பருத்தி இங்கு பயிரிடப்பட்டதில்லை. மக்கள் காதி உடுத்துவதில்லை. வீட்டில் நெசவு செய்யும் வழக்கமே இல்லாமல் போய்விட்டது.” இந்த மாற்றம், பெண்கள் போராட்டங்களில் பங்கெடுக்கும் வாய்ப்பை உருவாக்கியதாக அவர் கருதுகிறார்.

கிராமப் பெண்கள் சிலர் தலைமைப் பொறுப்புகளை வகித்தபோதும், அவை வெறும் பெயரளவில் இருந்த பொறுப்புகள்தாம் என்பது அவர்களின் பேச்சில் தெரிய வருகிறது.

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: பஞ்சாபின் மன்சா மாவட்டத்துக்கு தெற்கே உள்ள கிஷன்கர் சேதா சிங் வாலா கிராமம், பெப்சு முசாரா இயக்கத்தில் (PEPSU Muzara) முக்கியமான பங்கு வகித்த பகுதி. வலது: மைத்துனிகளான சுர்ஜீத் கவுர் மற்றும் மஞ்சீத் கவுர் தங்களின் நாளை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: மஞ்சீத் கவுர் வீட்டில் பின்னிக் கொண்டிருக்கிறார். வலது: மஞ்சீத் கவுரின் கணவரான குல்வந்த் சிங் (மைக் பிடித்திருப்பவர்), பாரதிய கிசான் சங்கத்தின் தகாந்தா - தானெர் பிரிவுக்கான தலைவர்

6000 பேரைக் கொண்ட கிஷான்கர் சேதா சிங் வாலா கிராமத்தின் முதல் பெண் தலைவர் மஞ்சீத் ஆவார். இரு பெண்களும் மாமன் மகன்களை மணம் முடித்துக் கொண்டவர்கள். “முதல் முறை நான் போட்டியிட்டபோது, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டேன்.” அது 1998ம் ஆண்டு. அந்த தொகுதி பெண்களுக்கான தொகுதி. “அடுத்த தேர்தலில் ஆண்களுக்கு எதிராக போட்டி போட்டு, 400-500 வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்,” என நினைவுகூரும் மஞ்சீத் வீட்டில் பின்னிக் கொண்டிருக்கிறார்.

அந்த பொறுப்பை 12 பெண்கள் வகித்திருந்தபோதும், ஆண்கள்தான் முடிவுகளை எடுத்ததாக மஞ்சீத் கூறுகிறார். “எப்படி விஷயங்களை செய்ய வேண்டுமென தெரிந்திருந்த ஒரே பெண் நான் மட்டும்தான்,” என்கிறார் அவர், தன் 10ம் வகுப்பு வரையிலான படிப்புக்கும், பாரதிய கிசான் சங்கத் (ஏக்தா) தலைவரும் முன்னாள் ஊர்த்தலைவருமான கணவருமான குல்வந்த் சிங்குக்கு நன்றி சொல்லி. 1993ல் அவர் ஊர்த்தலைவராக இருந்தார்.

ஆனால் சுர்ஜீத், “ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி மக்கள் ஒருவரை ஒருவர் கட்டாயப்படுத்திய கடினமான தேர்தல் அது. யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பது கணவர்களாலோ உறவினர்களாலோ பெண்களுக்கு தெரிவிக்கப்படும். மக்களவை தேர்தல்களில் அப்படி கிடையாது.”

2009ம் ஆண்டிலிருந்து ஷிரோமணி அகாலிதளத்தின் ஹர்சிம்ராட் கவுர் பாதல், இக்கிராமத்தை உள்ளடக்கிய பதிண்டா தொகுதியின் பிரதிநிதியாக இருந்தார். வரும் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியான பாஜகவின் பரம்பால் கவுர் சிது, காங்கிரஸின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜீத் மொஹிந்தர் சிங் சிது மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் விவசாயத்துறை அமைச்சர் குர்மீத் சிங் ஆகியோரும் போட்டி போட்டனர்.

PHOTO • Courtesy: Manjit Singh Dhaner
PHOTO • Arshdeep Arshi

இடது: கிஷான்கர் கிராமத்து பெண்கள், மார்ச் 2024-ல் தில்லியில் மஞ்சித் சிங் தானெர் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். வலது: மஞ்சீத் கவுர் (இடது ஓரம்) மற்றும் சுர்ஜீத் கவுர் (மஞ்சீத்துக்கு பக்கத்தில் நிற்பவர்) ஆகியோர் லூதியானாவின் ஜக்ராவோனில் நடந்த மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில்

2020-2021 தில்லி போராட்டங்கள், பல பெண்களுக்கு மாற்றத்தை கொடுத்தது. இம்முறை, யாரும் அவர்களின் வாக்குகளை தீர்மானிக்க முடியாது எனக் கூறுகின்றனர். “பெண்கள் சிறைவாசிகள் போல வீட்டில் இருக்கின்றனர். இந்த போராட்டங்கள் எங்களுக்கு பள்ளிக்கூடங்கள் போல இருக்கின்றன. நிறைய கற்றுக் கொடுத்திருக்கின்றன,” என்கிறார் சுர்ஜீத்.

நவம்பர் 26, 2020-ல் தில்லிக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுகூருகின்றனர். “பெரிய திட்டங்களின்றி நாங்கள் சென்றோம். பாதுகாப்பு படையினர் விவசாயிகளை அனுமதிக்காது என அனைவரும் நினைத்தார்கள். எங்கு நிறுத்தப்பட்டாலும் அங்கேயே அமர்ந்து விடுவது என்ற முடிவில் இருந்தோம்,” என்னும் அவர், திக்ரி எல்லையில் முகாமிட குறைவான பொருட்களுடன் சென்றதாகவும் சொல்கிறார். “உணவு சமைக்க தேவையான பொருட்கள் எங்களிடம் இல்லை. எனவே நாங்கள் புதிதாக யோசித்தோம். கழிவறைகள், குளியலறைகளும் இல்லை.” எனினும் அவர்கள் அங்கு ஒரு வருடத்துக்கு மேலாக இருந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வைத்தனர்.

உயர்கல்வி இல்லையென்றாலும் படிக்கவும் வாசிக்கவும் எப்போதும் விரும்பியதாக சுர்ஜீத் கூறுகிறார். “கல்வி கற்றிருந்தால் இன்னும் அதிகமாக போராட்டத்துக்கு பங்களித்திருக்க முடியுமென பெண்கள் நினைக்கின்றனர்.”

*****

ஹர்சிம்ராட் கவுர் பாதல் சமீபத்தில் பிரசாரத்துக்காக கிராமத்துக்கு சென்றிருந்தார். “தேர்தலின்போதுதான அவர்கள் வருவார்கள்,” என்கீறார் சுர்ஜீத் கவுர், மல்பெரிகளை உண்டுகொண்டே.

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் நிலத்துக்கருகே சுர்ஜீத் கவுர். வலது: சுர்ஜீத் கவுர் நிலத்தில் மல்பெரிகளை பறிக்கிறார்

செப்டம்பர் 2021-ல், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை கண்டித்து, பாதல் ஒன்றிய அமைச்சகத்திலிருந்து ராஜிநாமா செய்தார். “விவசாயிகள் அவர்களை (ஷிரோமணி அகாலிதளம்) எதிர்த்து போராடத் துவங்கிய பிறகுதான் அவர் ராஜிநாமா செய்தார்,” என்கிறார் சுர்ஜீத். “அதற்கு முன், அவரும் பிரகாஷ் சிங் பாதலும் வேளாண் சட்டங்கள் தரும் பயன்களை பற்றி விவசாயிகளிடம் விளக்கிக் கொண்டிருந்தனர்,” என்கிறார் அவர் எரிச்சலாக.

13 மாதங்களாக சக விவசாயிகளுடன் துயரான நிலையை எதிர்கொண்டு சுர்ஜீத், பாதலி பிரசாரத்துக்கு மயங்காமல் இருந்தார். “அவர் பேசுவதை கேட்க நான் செல்லவில்லை,” என்கிறார் அவர் உறுதியாக.

தமிழில்: ராஜசங்கீதன்

Arshdeep Arshi

عرش دیپ عرشی، چنڈی گڑھ کی ایک آزاد صحافی اور ترجمہ نگار ہیں۔ وہ نیوز ۱۸ پنجاب اور ہندوستان ٹائمز کے ساتھ کام کر چکی ہیں۔ انہوں نے پٹیالہ کی پنجابی یونیورسٹی سے انگریزی ادب میں ایم فل کیا ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز Arshdeep Arshi
Editor : Vishaka George

وشاکھا جارج، پاری کی سینئر ایڈیٹر ہیں۔ وہ معاش اور ماحولیات سے متعلق امور پر رپورٹنگ کرتی ہیں۔ وشاکھا، پاری کے سوشل میڈیا سے جڑے کاموں کی سربراہ ہیں اور پاری ایجوکیشن ٹیم کی بھی رکن ہیں، جو دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب کا حصہ بنانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز وشاکا جارج
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan