“ரயில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறைதான் நிற்கும். கூட்டத்துக்கு நடுவே முண்டியடித்துக் கொண்டு நாங்கள் ரயிலில் ஏறுவோம். சில நேரங்களில் ரயில் நகரத் தொடங்கிவிடும். சில மூட்டைகளை பிளாட்ஃபார்மிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டியிருக்கும்.” சாரங்கா ராஜ்போய் கயிறு செய்பவர். பிளாட்ஃபார்மில் அவர் விட்டுவிட்டு செல்ல வேண்டியிருந்த மூட்டைகள், அவரைப் போன்ற பெண்கள் விற்பதற்கான கயிறுகள் செய்யத் தேவைப்படும் ஜவுளி ஆலையின் மிச்ச இழைகள். பசுக்களையும் மாடுகளையும் கட்டவும் ட்ரக்குகள் மற்றும் டிராக்டர்களில் சரக்கு ஏற்றவும் துணி காயப்போடக் கூட கயிறுகள் தேவைப்படும்.
“நாங்கள் செய்வது குடும்பத் தொழில்,” என்கிறார் சாந்த்ரா ராஜ்போய். அகமதாபாத்தின் வத்வாவில் இருக்கும் வீட்டுக்கருகே இருக்கும் திறந்த வெளியில் அமர்ந்திருக்கும் அவர், குவிந்து கிடக்கும் சிந்தடிக் இழைகளிலிருந்து முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார்.
சாரங்காவும் சாந்த்ராவும் குஜராத்தின் நாடோடி சமூகமான ராஜ்போய் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அகமதாபாத்திலிருந்து சூரத்துக்கு பயணித்து ஜவுளி ஆலைகளிலிருந்து கழிக்கப்படும் மிச்ச இழைகளை வாங்குவார்கள். அவற்றை அவர்கள் கயிறாக மாற்றுவார்கள். இந்த வேலைக்காக இரவு 11 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் அவர்கள் அடுத்த நாள் இரவு 7 மணிக்குதான் வீடு திரும்புகிறார்கள். குழந்தைகளை பக்கத்து வீட்டாரிடமும் உறவினர்களிடமும் விட்டுச் செல்கின்றனர்.
அவர்கள் ஏறும் ரயில்கள், சமயங்களில் அதிகாலை ஒன்று அல்லது இரண்டு மணிக்கு கூட சென்று சேரும். எனவே கயிறுகள் செய்யும் அப்பெண்கள், ரயில் பிளாட்பாரங்களில் படுத்து தூங்குவார்கள். பாலியல் ரீதியாக அச்சுறுத்தப்படுவதுமுண்டு. “காவல் நிலையத்துக்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டு, இரண்டு-மூன்று மணி நேரங்கள் கேள்வி எங்களிடம் கேள்வி கேட்பார்கள். ஏழைகளைத்தான் காவலர்கள் பிடிப்பார்கள்,” என்கிறார் கருணா. “சிறையில் அடைக்க வேண்டுமென அவர்கள் விரும்பினால், அதையும் செய்வார்கள்.”
கருணாவும் சாந்த்ராவும் சாரங்காவும் வத்வாவில் இருக்கும் சார் மலியா நகராட்சி குடியிருப்பில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள். குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் அங்கு இல்லை என்கின்றனர். பெரும் போராட்டத்துக்கு பிறகுதான் மின்சார இணைப்புகளே கிடைத்தன.
அவர்கள் சார்ந்திருக்கும் ராஜ்போய் சமூகத்தில், பெண்களுக்கான பாரம்பரியத் தொழில்கள் கயிறு தயாரிப்பதாகும். ஆண்கள், காது மெழுகு சுத்தப்படுத்தும் வேலை பார்க்கின்றனர். அவர்களின் சமூகம் அங்கீகாரத்துக்கும் வாழ்க்கைத்தரம் உயர அரசின் பலன்களையும் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறது. ராஜ்போய்கள் நாடோடி சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் “எங்களின் சமூகம் நிகாமுடன் (குஜராத்தின் நாடோடி, சீர்மரபினர் மேம்பாட்டு வாரியம்) பட்டியலிடப்படவில்லை,” என்கிறார் சமூகத்தின் தலைவரான ராஜேஷ் ராஜ்போய்.
நாடோடி சமூகங்களுக்கான வேலைவாய்ப்புகளையும் பிற திட்டங்களையும் அடைவதென்பது எளிதான காரியம் அல்ல. “’ராஜ்போய் என்பதற்கு பதிலாக ‘போய்ராஜ்’ என நாங்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறோம். அரசாங்க வேலை கிடைப்பதில் அது ஒரு பிரச்சினையாக இருக்கிறது.”
ராஜ்போயும் சரி போய்ராஜும் சரி, குஜராத் அரசாங்கத்தின் இணையதளம் கொண்டிருக்கும் 28 நாடோடி பழங்குடிகள் மற்றும் 12 சீர்மரபினர் பட்டியலில் இடம்பெறவில்லை. குஜராத்தின் ‘போய்’, இந்தியாவின் சீர்மரபினர், நாடோடி பழங்குடிகள் மற்றும் அரைப் பழங்குடிகள் பட்டியல் வரைவில் (சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தள் அமைச்சகம்) இடம்பெற்றிருக்கிறது. குஜராத்தில், போய்ராஜ் சமூகம், பிற பிற்படுத்தப்பட்ட சமூகமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. “எங்களின் சமூகத்தை சேர்ந்த மக்கள், குஜராத்துக்கு வெளியே சாலாத்-கெரா என குறிப்பிடப்படுவர். அரவைக் கல் செய்யும் வேலையை செய்வார்கள்,” என்கிறார் ராஜேஷ். சலாத் - கெராவும் நாடோடி பழங்குடிதான். இணையதளத்திலும் அப்படித்தான் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
*****
கயிறுகள் தயாரிப்பதற்கான இழைகள் கிடைக்க, இப்பெண்கள், சூரத்தின் ஜவுளி ஆலைகளை தேடி செல்கின்றனர். “வத்வாவிலிருந்து மணி நகருக்கும் மணி நகரிலிருந்து கிம்முக்கும் செல்வோம். மூலப்பொருட்களை கிலோ இருபத்து ஐந்து ரூபாய் என நாங்கள் வாங்குவோம்,” என்கிறார் வெற்றிலையை மென்று கொண்டே சாரங்கா ராஜ்போய். அவரின் கைகள் தொடர்ந்து இழைகளை திரித்துக் கொண்டிருக்கிறது.
அகமதாபாத்தின் மணிநகரிலிருந்து சூரத்தின் கிம் வரை தூரம் கிட்டத்தட்ட 230 கிலோமீட்டர்கள். அவர்களுக்கு ரயிலை தவிர வேறு வழியில்லை. கட்டணம் அதிகம். ஆனால் சாரங்கா சிரித்தபடி, வாயில் வழியும் வெற்றிலைச் சாறை துடைத்துக் கொண்டு, “நாங்கள் டிக்கெட்டுகள் எடுப்பதில்லை,” என்கிறார். கிம் ரயில் நிலையத்திலிருந்து இப்பெண்கள், ரிக்ஷாவில் ஜவுளி ஆலைகளுக்கு செல்கின்றனர்.
“சேதமான பொருட்கள் ஓரமாக வைக்கப்படும். பணியாளர்கள் அவற்றை எங்களுக்கோ காய்லான் கடைக்காரர்களுக்கோ விற்பார்கள். காய்லான் கடைக்காரர்கள் வாங்கியிருந்தால் பிறகு அவற்றை எங்களுக்கு விற்பார்கள்,” என்கிறார் 47 வயது கீதா ராஜ்போய். எல்லா இழைகளும் பயன்பட்டுவிடாது என விளக்குகிறார் கருணா: “பருத்தியால் எங்களுக்கு பயனில்லை. சிந்தடிக் பட்டைதான் நாங்கள் பயன்படுத்த முடியும். அவற்றை கொண்டிருக்கும் ஆலைகள் கிம்மில் மட்டும்தான் இருக்கின்றன.”
இழைகள் ஒன்றாக முடிச்சு போடப்பட்டிருக்கும் என்கிறார் கீதா. அவை விலை மலிவாக இருக்கும். கிலோவுக்கு ரூ.15-லிருந்து 27 வரை இருக்கும். சோஃபாக்களிலும் படுக்கைகளிலும் தலையணைகளிலும் பயன்படுத்தப்படும் வெள்ளை இழையின் விலை அதிகம். கிலோவுக்கு 40 ரூபாய் ஆகும்.
“ஒரு பெண்ணால் 100 கிலோ கொண்டு வர முடியும். 25 கிலோவோ சில நேரங்களில் 10 கிலோவோ ஒருவர் கொண்டு வருவார்,” என்கிறார் சாந்த்ரா. ஆனால் அந்தளவுக்கு கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது. இழை வாங்குவதற்கு பலர் முனைவார்கள். போதுமான இழை இருப்பதில்லை.
கிம்மிலிருந்து அகமதாபாத்துக்கு பொருட்களை கொண்டு போக, அவர்கள் “கிம்மில் பல ஆலைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி, ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்,” என விளக்குகிறார் சாரங்கா.
ரயில் நிலையத்தில், அவர்களின் பெரிய மூட்டைகள் ரயில் பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும். “எங்களை அவர்கள் பிடித்துவிட்டால், சில நேரங்களில் எங்களின் ஏழ்மையை விளக்கியதும் அனுப்பி விடுவார்கள். தலைக்கனம் பிடித்த அதிகாரி வந்தால், 100-200 ரூபாய் வரை நாங்கள் கொடுக்க வேண்டி வரும்,” என்கிறார் கருணா ராஜ்போய். “ஒவ்வொரு முறையும் 1000 ரூபாய் அளவுக்கு நாங்கள் பொருட்கள் வாங்குகிறோம். முன்னூறு ரூபாய் பயணத்துக்கே செலவாகி விடுகிறது.” தேவைப்படும் பொருட்கள் கிடைக்கிறதோ இல்லையோ 300 ரூபாய் மட்டும் செலவாகி விடும்.
செய்து முடிக்கப்பட்ட ஒரு கயிறு 30 கை நீளம் இருக்கும். 80 ரூபாய்க்கு விற்கப்படும். 50 கை நீளமுள்ள கயிறின் விலை 100 ரூபாய் ஆகும்.
40-50 கயிறுகளை பெண்கள் சுமந்து செல்கிறார்கள். சில நேரங்களில், எல்லாவற்றையும் அவர்கள் விற்க முடிகிறது. சில நேரங்களில் மகெம்தாபாத், ஆனந்த், லிம்பாச்சி, தாராபூர், கத்லால், கெதா, கோவிந்த்புரா, மதார், சங்கா, பல்லா,கோம்திப்பூர் போண்ற சிறு டவுன்களிலும் நகரங்களிலும் 20 விற்பார்கள்.
“கயிறுகள் தயாரிக்க கடினமாக உழைக்கிறோம். நாடியாட் மற்றும் கெதா கிராமங்களுக்கு சென்று விற்க, பணம் செலவழிக்கிறோம். 50-60 ரூபாய் வரை பேரம் பேசி விலை குறைப்பார்கள்,” என்கிறார் சாரங்கா. பயணமும் அபராதங்களும் அவர்களின் வருமானத்தை குறைக்கின்றன.
கயிறு செய்வது கடினமான, சோர்வை கொடுக்கும் வேலை. வீட்டு வேலைகலுக்கு நடுவேதான் அதை அவர்கள் செய்கின்றனர். “குழாயில் நீர் வரும்போது நாங்கள் எழுவோம்,” என்கிறார் அருணா ராஜ்போய்.
அவர்களின் வீடுகள் வேலை பார்க்க முடியாதளவுக்கு சிறியதாக இருப்பதால், வெயிலை தடுக்கும் எந்த வழியுமின்றி திறந்தவெளியில் பெண்கள் வேலை செய்கின்றனர். “ஏழு மணியிலிருந்து நண்பகல் வரை வேலை செய்வோம். பிறகு இரண்டு மணி முதல், பிற்பகல் ஐந்தரை வரை,” என்கிறார் அவர். “கோடைகாலத்து நாட்கள் நீளமாக இருக்கும் என்பதால் அப்போது அதிகக் கயிறுகளை தயாரிக்க முடியும். 20-25 மணி நேரங்கள் செய்வோம். குளிர்காலத்திலோ 10-15 மணி நேரங்கள்தான் வேலை செய்வோம்,” என்கிறார் ரூபா.
சிறு கை சக்கரமும் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும் சக்கரமும் அவர்களின் வணிகத்துக்கு முக்கியமானவை.
ஒரு பெண் சக்கரம் சுற்ற, இன்னொருவர் இழைகள் ஒட்டாத வண்ணம் பிடித்துக் கொள்கிறார். இன்னொரு பெண், கயிற்றின் இரு முனைகளை பார்த்துக் கொள்கிறார். ஒரு நேரத்தில் மூன்று அல்லது நான்கு பேர் வேண்டும் என்பதால் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக பணிபுரிகின்றனர். “சக்கரத்தை நாங்கள் சுற்றிக் கொண்டிருக்கும்போது, இழைகள் ஒரு கோலில் சுற்றப்படும். மூன்று தனி இழைகள் உருவாக்கி, கயிறாக திரிப்போம்,” என்கிறார் சர்வில்லா ராஜ்போய். 15-20 அடி கயிற்றை தயாரிக்க 30-45 நிமிடங்கள் பிடிக்கும் என்கிறார் அவர். ஒருநாளில், ஒரு குழு 8-10 கயிறுகளை தயாரிக்கும். சில நேரங்களில் 20 கூட தயாரிக்கும். ஆர்டர் வந்தால், 50-100 அடி நீளக் கயிறுகளை கூட செய்வார்கள்
மாநிலத்தின் போய் சமூகம் பெரும்பாலும் சவுராஷ்டிரா பகுதியில் இருக்கின்றனர். 1940களில் பதிப்பிக்கப்பட்ட தகவல் களஞ்சியமான பக்வத்கோமண்டலின்படி, ”பிற்படுத்தப்பட்ட சூத்திர சமூகத்தவரான போயர்கள்” முன்பு தோல்ப் பதனிடும் தொழிலில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை சமூகமான சமணர்கள், விலங்குகளை கொல்வதை எதிர்த்ததால், அவர்களில் பலரும் விவசாயம் மற்றும் பிற கூலி வேலைகளுக்கு நகர்ந்தனர். வெவ்வேறு தொழில்களை செய்யத் தொடங்கிய போய்கள், வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர். ராஜ்போயர்கள், பல்லக்கு தூக்கிகளாக இருக்கலாம்.
பெண்களின் கூட்டுழைப்பை சமூகத்தினரின் ஆண் உறுப்பினர்கள் பொருட்படுத்துவதில்லை. இதற்கு பானு ராஜ்போயும் விதிவிலக்கு அல்ல. காது சுத்தம் செய்யும் வேலை பார்க்கும் அவர், பெண்கள் ஈட்டும் பணத்தை குறித்து இப்படி கூறுகிறார்: “அது அதிகம் பயன்படுவதில்லை. வீட்டு செலவுகளுக்கு ஆகும். அவ்வளவுதான்.” சாதி சார்ந்து பாரம்பரியமாக தொடரப்பட்டு செய்யப்படும் தொழிலில் ஈட்டப்படும் வருமானம் வெறுமனே வீட்டு செலவுக்கு மட்டுமே ஆகும் அளவுக்குதான் இருக்கிறது.
ஆனால் கீதா ராஜ்போய்க்கு, வேலைக்கு செல்வதை விட இது பரவாயில்லை எனத் தோன்றுகிறது. அவர் தெளிவாக, “10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பிறகு கல்லூரி எல்லாம் படிக்க வேண்டும். பிறகுதான் வேலை கிடைக்கும். அதைவிட சொந்தமாக ஒரு வேலையை பார்ப்பது சரிதான்,” என்கிறார்.
செய்தியாளர் ஆதிஷ் இந்த்ரேகர் சாராவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்
தமிழில்: ராஜசங்கீதன்