“ஆசாரிகள் விஸ்கர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மரம், உலோகம், கல் முதலியவற்றில் சிற்பங்கள் செய்பவர்கள். படைப்பூக்கம் என்பதைத் தாண்டி, பலரும் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில், உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருப்பவர்களாக மாறி விட்டனர். அடுத்த தலைமுறையினர், இதை விட்டு, அலுவலகப் பணிகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்,” என டி.எம்.கிருஷ்ணா, செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் நூலில் எழுதுகிறார்.
“பாரம்பரியம், சாதி வழித் தொழில் என்று பேசுகையில், தலைமுறை தாண்டி வளரும் தொழில்நுட்பம் / அறிவார்ந்த செயல்பாடுகள் என்று அதை உயர்த்திப் பிடிக்கும் தவற்றைச் செய்துவிடக் கூடாது. எல்லாத் தொழில்களும், மக்களும் நிதர்சனத்தில் சமமாகக் கருதப்படுவதில்லை,” என கிருஷ்ணா சுட்டிக் காட்டுகிறார். சமூகத்தில் உயர்தட்டில் இருக்கும் சாதிகளில், பிறப்பு வழியே பிள்ளைகளுக்குத் தொழில் செல்வது அறிவு என்றும், அப்படித் தொழில்கள் சாதி அடையாளங்களுக்குள்ளேயே நிறுத்தப்படுவது, பாதுகாக்கப்படுதல் என்றும் பார்க்கப்படுகிறது. அப்படித் தொழில்களுக்குள் இருப்பவர்கள் ஒடுக்கப்படுவதில்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதிகள் பின்பற்றும் சாதிவழித் தொழில்கள் ‘அறிவு’ எனக் கருதப்படுவதில்லை. அவர்கள் அறிவார்ந்த செல்வத்தை உருவாக்குபவர்கள் எனக் கருதப்படுவதில்லை. அவர்களது தொழில் வெறும் உடல் உழைப்பு என்றே இழிவாகப் பார்க்கப்படுகிறது. அத்தகைய மக்கள் சாதி வழி ஒடுக்குதல்களுக்கும் வன்முறைக்கும் ஆளாகிறார்கள். பலசமயங்களில், சமூகக் காரணங்களால், ஒடுக்கப்பட்ட சாதியினர் வேறு வழியின்றி தங்கள் குலத்தொழில்களையே தேர்ந்தெடுக்க நேரிடுகிறது.”
”இசைக் கருவிகளைச் செய்பவர்களைப் பற்றி மிக அரிதாகவே பேச்சுக்கள் வரும். அப்படியே பேசினாலும், அது அக்கருவிகளின் தொழில்நுட்ப அலகுகளைப் பற்றியதாக இருக்கும்,” என்கிறார் கிருஷ்ணா. ”கட்டுமானத் தொழில்களில் பணி செய்யும் ஒரு தச்சரைப் போலவோ அல்லது மேஸ்திரியைப் போலவோதான் அவர்கள் நடத்தப்படுகிறார்கள். இசை வாத்தியத்தை வாசிப்பவர் கட்டிட வடிவமைப்பாளர் போன்றவர். இசை வாத்தியத்தை உருவாக்குபவருக்கு மிக அரிதாகவே பாராட்டுக்கள் கிடைக்கும். போனால் போகுது என்பது போல பாராட்டுவார்கள். அதன் காரணம் சாதிதான்.”
மிருதங்க வாத்திய உற்பத்தியில் பெரும்பாலும் ஆண்கள்தான் இருக்கிறார்கள் என்கிறார் குப்புசாமி. “சில பெண்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் தோலை மிருதங்கத்தில் கட்டும் பணியில். ஆனால், மரவேலைப்பாடுகள் முழுக்க முழுக்க ஆண்கள் வசமே உள்ளது. மரம் பெரும்பாலும் காய்ப்பு நின்றுவிட்ட பலா மரங்கள். வயதான, காய்ப்பது நின்றி விட்ட மரங்களை வெட்டி விடுவார்கள்,” என்கிறார் குப்புசாமி. “பத்து மரத்தை வெட்டினா, 30 புதுச் செடிகளை நடுவார்கள்.”
குப்புசாமி, மரத்தை வாங்கப் பல தகுதிகளை வைத்திருக்கிறார். 9-10 அடி உயரம் கொண்டதாக, அகலமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். சாலையோரமாகவோ அல்லது வேலியோரமாகவோ வளர்ந்த மரமாக இருக்க வேண்டும். அடர்த்தியான வண்ணம் கொண்ட அடிமரத்தையே பெரும்பாலும் விரும்புகிறார். அதில் இசை அதிர்வுகள் நன்றாக இருக்கும் என்பது அவரது கருத்து.
ஒரு நாளில் 6 மிருதங்கங்களுக்கான மரத்தை வெட்டி, செதுக்கி விடுவார். அதற்கு நகாசு வேலைகளைச் செய்ய மேலும் இரண்டு நாட்கள் பிடிக்கும். பெரிதான லாபம் இல்லை. ஒரு மிருதங்கத்துக்கு 1000 ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிறார். ”இதற்கு வேலையாட்கள் கூலி 1000 ரூபாய் ஆகும். கடினமான வேலை. சரியான கூலி தரவில்லை என்றால், வேலையாட்கள் வரமாட்டார்கள்.”
மரம் வருடம் முழுவதும் கிடைக்காது. காய்க்கும் காலத்த்தில் மரத்தை யாரும் வெட்ட மாட்டார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ”அதனால, நான் வருஷம் முழுசுக்கும் தேவையான மரத்தை வாங்கி ஸ்டாக் வச்சிக்கனும்,” என்கிறார். ஐந்து லட்சம் முதலீடு செய்து, 20 மரங்களை, சராசரியா 25000 ரூபாய் என வாங்கி வைத்துக் கொள்கிறார். இங்குதான் அவர் அரசின் உதவியை எதிர்பார்க்கிறார். ”மரம் வாங்க மானியமோ கடனோ கொடுத்தால் நல்லா இருக்கும்.”
உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில், மிருதங்கங்களுக்கான தேவை நல்லா இருக்கு என்கிறார் குப்புசாமி. ”மாசம் 50 மிருதங்கம், 25 தவில் வித்திருவேன்,” என்கிறார். ”இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, நல்ல மரத்தைவாங்கி, ஒரு 4 மாசம் அதைச் சரியா பதப்படுத்தி வைக்கனும். அதுக்கு பண்ருட்டி பலாதான் பெஸ்ட்,” என்கிறார் குப்புசாமி. இதுக்குக் காரணம் இங்கிருக்கும் செம்மண் என்பது அவரின் கருத்து.