மாட்டுச்சாணம், களிமண் மற்றும் மூங்கில் ஆகியவை இங்கு மஜுலியில் முகமூடி தயாரிக்க ஒன்றாகின்றன. பிரம்மபுத்திராவின் இத்தீவில் பல தலைமுறைகளாக கலைஞர்களால் செய்யப்பட்டு வரும் கலை இது. “எங்கள் கலாசாரத்தில் முகமூடிகள் முக்கியமானவை. அவற்றை செய்யும் கடைசி குடும்பம் நாங்கள்தான்,” என்கிறார் கைவினைஞரான அனுபம் கோஸ்வாமி. இங்கு தயாரிக்கப்படும் எளிய மற்றும் நுட்பமான முகமூடிகள், இத்தீவில் கொண்டாடப்படும் வருடாந்திர நிகழ்வுகளிலும் நாடு முழுக்க நடக்கும் பல விழாக்களிலும் அணியப்படுகின்றன.
”என் குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல நான்தான் பொறுப்பு,” என்கிறார் 25 வயது அனுபம். அவரின் குடும்பம் இதை பல தலைமுறைகளாக செய்து வருகிறது. ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தில் அனைவரும் இக்கலையில் ஈடுபடுகின்றனர்.
“பல சுற்றுலாவாசிகள் உலக நாடுகளிலிருந்து மஜூலிக்கு வருகின்றனர். முகமூடிகளை நினைவுப் பரிசாக வாங்கி செல்கின்றனர்,” என்கிறார் திரன் கோஸ்வாமி. அவர் அனுபமின் 44 வயது மாமா. பல அளவுகளிலான முகமூடிகளை அவர் குடும்பத்துக்கு சொந்தமான கடையில் விற்கிறார். ஒரு முகமூடியின் விலை ரூ.300. பெரிய, பிரத்யேக வேலைப்பாடுகளுடன் கூடிய முகமூடிகளின் விலை ரூ.1000 வரை கூட செல்லும்.
மஜுலி இந்தியாவின் பெரிய ஆற்றுத் தீவு. ‘அசாமிய வைணவ மதத்தின் நரம்பாக கருதப்படுகிறது. 62 சத்திரங்கள் (வைணவ மடங்கள்) இருந்த கலாசாரம் கொண்டது’ என சுட்டிக் காட்டுகிறது 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு.
முகமூடி செய்யத் தேவைப்படும் மூங்கிலையும் களிமண்ணையும் பிரம்மபுத்திரா தருகிறது. இந்த ஆற்றில் இடம்பெற்றிருக்கும் பெரிய தீவு, மஜுலி ஆகும். கிட்டத்தட்ட 194,413 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட உலகின் பெரும் ஆற்றங்கரை அமைப்பை கொண்டிருக்கிறது. இமயமலையின் பனி உருகுவதும் கன மழைப்பொழிவும் இந்த ஆற்றுக்கு நீரை வழங்குகிறது. வெள்ளமும் ஏற்படுவதுண்டு. வருடந்தோறும் மஜுலியிலும் சுற்றியிருக்கும் தீவுகளிலும் அரிப்பு ஏற்படும் அச்சுறுத்தலும் உண்டு.
முகமூடி தயாரிப்பவர்கள் அரிப்பின் தாக்கத்தை உணர்கிறார்கள். “தொடர் அரிப்பால், மஜுலியின் நிலத்தில் முகமூடிக்கான களிமண் கிடைப்பது கஷ்டமாகி வருகிறது,” என திரன் கோஸ்வாமி இண்டியன் டெவலப்மண்ட் ரிவியூவில் எழுதியிருக்கிறார். அவர்கள் அருகாமை சந்தையிலிருந்து களிமண்ணை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1500 என்கிற விலையில் பெறுகின்றனர். “முன்பெல்லாம் முகமூடிகளுக்கு வண்ணமடிக்க இயற்கையான அச்சுகளை பயன்படுத்தினோம். ஆனால் இப்போது அவற்றை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் அனுபம்.
இக்கலையின் வேர்களை மகாபுருஷா ஸ்ரீமந்தா சங்கரதேவாவின் நாடகங்களில் கண்டறிகிறார் திரன். “வெறும் ஒப்பனை கொண்டு புராணப் பாத்திர தோற்றங்களை கொண்டு வருவது கடினம். எனவே சங்கரதேவா நாடகத்தில் அணியவென முகமூடிகளை உருவாக்கினார். அப்படித்தான் இந்த பாரம்பரியம் தொடங்கியது.”
1663ம் ஆண்டின் காலத்தை கொண்ட சமகுரி சத்திரத்தில்தான் கோஸ்வாமியின் குடும்பம் சங்கீத் கலா கேந்திரா கடையை நடத்துகிறது. பாரம்பரியக் கலைகளை நிகழ்த்தவென சமூக சீர்திருத்தவாதியும் துறவியுமான மகாபுருஷா ஸ்ரீமந்த சங்கரதேவாவால் உருவாக்கப்பட்டவைதான் இந்த சத்திரங்கள்.
’முகமூடிகள் எங்கள் கலாசாரத்தில் முக்கியமானவை. அவற்றை உருவாக்கும் கடைசி குடும்பங்களில் நாங்களும் ஒன்று,’ என்கிறார் அனுபம் கோஸ்வாமி
வீட்டிலிருந்து 10 அடி தொலைவில் இருக்கும் அவர்களின் பட்டறையில் இரு அறைகள் இருக்கின்றன. ஒரு பெரிய, முடிக்கப்படாத யானை முகமூடியின் மூங்கில் கூடு ஒரு மேஜையின் மூலையில் முடிக்கப்பட காத்திருக்கிறது. 2003ம் ஆண்டில் திரன் கோஸ்வாமியின் காலஞ்சென்ற தந்தை கோஷா கண்டா தேவா கோஸ்வாமி, இந்த பட்டறையை நிறுவியதற்காகவும் இக்கலைக்கான பங்களிப்புக்காகவும் சங்கீத் நாடக் அகாடெமி விருதை பெற்றார்.
பட்டறையிலுள்ள கண்காட்சி கூடத்தின் சுவர்களில் பல வடிவங்களிலும் வண்ணங்களிலுமான முகமூடிகள் கண்ணாடி பெட்டிகளுக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே வைக்க முடியாத பெரிய, 10 அடி உயரம் கொண்ட முழு உடலுக்கான முகமூடிகள் வெளியே வைக்கப்பட்டிருக்கின்றன. இத்தீவின் பாவோனா (மத செய்திகள் கொண்ட பாரம்பரிய பொழுதுபோக்கு வடிவம்) அல்லது ராஸ் மகோத்சவ் (கிருஷ்ண நடன விழா) ஆகிய விழாக்களில் பயன்படுத்தப்படும் கருடனுக்கான முழு உடல் முகமூடியை திரன் நமக்கு காட்டுகிறார்.
“2018ம் ஆண்டில் இந்த அளவில் 10 முகமூடிகள் செய்வதற்கான ஆர்டர் அமெரிக்காவிலிருந்து எங்களுக்குக் கிடைத்தது. அனுப்ப முடியாதளவு கனமிருந்ததால் நாங்கள் வடிவமைப்பை மாற்றி அனுப்பினோம்,” என்கிறார் அனுபம்.
புது விஷயங்களை உருவாக்குவதற்கான தொடக்கமாக அது இருந்தது. மடித்து எளிதாக அனுப்பக்கூடிய வகையிலான முகமூடிகளை கலைஞர்கள் உருவாக்கத் தொடங்கினார்கள். “முகமூடிகள் கொடுக்கப்படும் விதத்தை நாங்கள் மாற்றியமைத்தோம். ஒருமுறை சில சுற்றுலாவாசிகள் சுவரில் தொங்கவிடும் வகையில் பரிசுகளாக கொடுக்க வேண்டுமென கேட்டதும், அதைப் போல முகமூடிகளை நாங்கள் செய்து தந்தோம். காலவோட்டத்தில் அனைவரும் மாற வேண்டியிருக்கிறது,” என்கிறார் அனுபம் பாரம்பரியத்தை மீறிவிட்டதாக சொல்லப்படும் விமர்சனங்களை புறம் தள்ளி.
இப்போது அவர்களின் விற்பனை பிரதானமாக சுற்றுலாவை நம்பியிருக்கிறது. “கடந்த காலத்தில் வருமானத்தில் நாங்கள் கவனம் கொள்ளவில்லை. சுற்றுலாவாசிகள் வரும் மாதங்களில் கூட நிலையான வருமானம் இருப்பதில்லை,’ என கவலையுடன் அனுபம் சொல்கிறார்.
சமநிலையை கண்டறியும் முயற்சியில், திப்ருகர் பல்கலைக்கழகத்தில் முதுகலை சுற்றுலாத்துறை படிப்பை சமீபத்தில் முடித்த பட்டதாரியான அவர், இத்துறையில் வாய்ப்புகள் தேடுகிறார். “நம் பாரம்பரிய வணிகத்தை எப்படி வளர்ப்பதென பல யோசனைகளும் கனவுகளும் எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு செலவிட முதலில் நான் சேமிப்பை உருவாக்க வேண்டுமென எனக்கு தெரியும்.”
கற்றுக் கொள்ள விரும்பும் எவருக்கும் கலையை கற்பிக்கும் வேலையை குடும்பம் தொடர்கிறது. “வருடத்துக்கு 10 மாணவர்களாவது வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் பக்கத்து கிராமங்களில் விவசாயம் பார்க்கும் குடும்பங்களிலிருந்து வருகின்றனர். முன்பு, இக்கலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால் இப்போது அது மாறிவிட்டது,” என்கிறார் அனுபம். பட்டறையில் மாணவர்களால் செய்யப்படும் முகமூடிகள் விற்பனைக்காக கேந்திராவில் காட்சிப்படுத்தப்படுகிறது. விற்பனையிலிருந்து மாணவருக்கு ஒரு சதவிகிதம் கொடுக்கப்படுகிறது.
மாணவர்களில் ஒருவரான கவுதம் புயான் தற்போது பட்டறையில் ஓர் ஆர்டருக்காக முகமூடி செய்து கொண்டிருக்கிறார். 22 வயது நிறைந்த அவர், கமலாபாரி ஒன்றியத்தின் பொத்தியாரி குக்கிராமத்தில் வசிக்கிறார். அங்கு அவரது குடும்பம் எட்டு ஏக்கர் நிலத்தில் அரிசி விளைவிக்கிறது. “இங்கு மக்கள் முகமூடிகள் செய்வதை பார்த்து ஆர்வம் கொண்டேன். எனவே விவசாயத்தில் உதவும் வேலை இல்லாதபோது பள்ளி முடிந்ததும் இங்கு வந்து கற்றுக் கொள்கிறேன்,” என்கிறார் அவர்.
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக முகமூடிகளுக்கான ஆர்டர்களை பெறுகிறார் கவுதம். அவர் சொல்கையில், “என்னுடைய வருமானம் ஆர்டரை சார்ந்திருக்கிறது. சில நேரங்களில் பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்போது நான் இங்கும் (கேந்திராவில்) பணிபுரிகிறேன்.” பணம் மட்டுமின்றி, நிறைய விஷயங்களை இக்கலையை கற்பது மூலம் பெறுவதாக சொல்லும்போது அவர் புன்னகைக்கிறார். “முகமூடிகளான நாடக நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் பயணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். அந்த பாலிவுட் இசை காணொளியில் கூட நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது!”
கவுதமும் அனுபமும் சமீபத்தில் நடித்த பாலிவுட் இசை காணொளிக்கு யூ ட்யூபில் 450 மில்லியன் பார்வைகளுக்கும் மேலாக கிடைத்துள்ளது. ராமாயணத்தின் பத்து தலை ராவணனாக அனுபம் நடித்தார். முதல் ஷாட்டில் அவர் உருவாக்கிய முகமூடி அணிந்து அவர் தோன்றினார். “இறுதியில் போட்ட பெயர்களில் என் பெயர் இடம்பெறவில்லை,” என சுட்டிக்காட்டும் அவர், நிகழ்ச்சிக்காக ஆடைகளை உருவாக்கி நடித்துக் கொடுத்த இரு சக கலைஞர்களின் பெயர்களும் கூட வரவில்லை என்கிறார்.
கட்டுரையாளர் பாரியின் பயிற்சிப் பணியாளர் சப்சரா அலி, நந்தினி போரா மற்றும் விருந்தா ஜெயின் ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்
தமிழில் : ராஜசங்கீதன்