"கொல்கத்தா, ஜெய்ப்பூர், டெல்லி அல்லது பம்பாய் எதுவாக இருந்தாலும், மூங்கில் போலோ பந்துகள் நேரடியாக தியோல்பூரிலிருந்து சென்றன" என்று இந்தியாவில் போலோ விளையாட்டு விளையாடப்பட்ட இடங்களைப் பட்டியலிடுகிறார் ரஞ்சித் மால்.
மேற்கு வங்கத்தின் தியோல்பூரைச் சேர்ந்த போலோ பந்து கைவினைஞரான 71 வயது ரஞ்சித், சுமார் 40 ஆண்டுகளாக குவாடுவா மூங்கிலின் கிழங்குகளில் இருந்து பந்துகளை செதுக்கி வருகிறார். உள்நாட்டில் பான்ஸ்-எர் கோர்ஹா என்று அழைக்கப்படும் கிழங்குகள் மூங்கில் தாவரத்தின் நிலத்தடி பகுதியை உருவாக்குகின்றன, இது அவை வளரவும் பரவவும் உதவுகிறது. அவர் அந்த கைவினைத் தொழிலின் கடைசி சிற்பி (கைவினைஞர்) ஆவார். அந்தத் திறமை காலாவதி ஆகி விட்டதென அவர் சுட்டிக்காட்டுகிறார்
ஆனால், 160 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன போலோ விளையாடப்படுகிறது - தொடக்கத்தில் இராணுவம், அரச குடும்பத்தினர், செல்வந்தர்களின் க்ளப்களில் விளையாடப்பட்டன. இதற்கு மூங்கில் பந்துகள் தியோல்பூரிலிருந்து வந்தன. சொல்லப் போனால், உலகின் முதல் போலோ க்ளப் 1859-ம் ஆண்டில் அசாமின் சில்சாரில் நிறுவப்பட்டது; இரண்டாவது 1863-ல் கல்கத்தாவில் கட்டப்பட்டது. நவீன போலோ என்பது சாகோல் காங்ஜேயின் தழுவல் பதிப்பாகும் (மணிப்பூரில் மெய்த்தெய் சமூகத்தின் பாரம்பரிய விளையாட்டு), மேலும் மூங்கில் கிழங்கு பந்துகளை விளையாட பயன்படுத்தியவர்கள் மெய்த்தெய்கள்.
1940களின் முற்பகுதியில், தியோல்பூர் கிராமத்தில் ஆறு முதல் ஏழு குடும்பங்கள் 125க்கும் மேற்பட்ட கைவினைஞர்களை வேலைக்கு அமர்த்தியது, அவர்கள் கூட்டாக ஆண்டுக்கு ஒரு லட்சம் போலோ பந்துகளை தயாரித்தனர். "எங்கள் திறமையான சிற்பக்காரர்கள் போலோ சந்தையை அறிந்திருந்தனர்", என்று ரஞ்சித் கூறுகிறார். அவரது கூற்றுகளுக்கு ஹவுரா மாவட்டத்தின் பிரிட்டிஷ் கால கணக்கெடுப்பு மற்றும் குடியேற்ற அறிக்கை சான்று தருகிறது: "இந்தியாவில் போலோ பந்துகள் தயாரிக்கப்படும் ஒரே இடம் தியோல்பூர் என்று தெரிகிறது."
ரஞ்சித்தின் மனைவி மினோத்தி மால் கூறுகையில், "போலோ பந்துகள் தயாரிக்கும் தொழில் வளர்வதைப் பார்த்து, எனது தந்தை எனக்கு 14 வயதாக இருக்கும்போது இங்கு திருமணம் செய்து வைத்தார்" என்று கூறுகிறார். அவருக்கு இப்போது அறுபது வயதாகிறது, ஒரு தசாப்தத்திற்கு முன்பு வரை, அவர் தனது கணவருக்கு கைவினையில் உதவி வந்தார். இந்த குடும்பம் மேற்கு வங்கத்தில் பட்டியல் சாதியாக பட்டியலிடப்பட்ட மால் சமூகத்தைச் சேர்ந்தது; ரஞ்சித் தனது வாழ்நாள் முழுவதும் தியோல்பூரில் கழித்துள்ளார்.
தனது வீட்டில் உள்ள மதூர் புல், பாயில் அமர்ந்து பழைய செய்தித்தாள் துணுக்குகள் மற்றும் பத்திரிகை கட்டுரைகளின் பொக்கிஷமான தொகுப்பை அவர் படித்துக் கொண்டிருக்கிறார். "இந்த உலகில் எங்காவது லுங்கி அணிந்து போலோ பந்துகளை உருவாக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை நீங்கள் கண்டால், அது என்னுடையதாக இருக்கும்" என்று அவர் பெருமிதத்துடன் கூறுகிறார்.
சுபாஷ் பாகின் பட்டறையில் வேலை செய்த ஒரு சாதாரண நாளை ரஞ்சித் நினைவுகூருகிறார், முகமது ரஃபியின் பாடல்கள் அவரது டேப் ரெக்கார்டரில் ஒலிக்கின்றன. "நான் ஒரு பெரிய ரஃபி பக்தர் (ரசிகன்). அவரது பாடல்களின் தொகுப்பை கேசட்டுகளில் நான் பதிவு செய்திருந்தேன்" என்று புன்னகையுடன் கூறுகிறார். கொல்கத்தா வில்லியம் கோட்டையிலிருந்து போலோ விளையாடும் ராணுவ அதிகாரிகள் பந்துகளை வாங்க வருவார்கள். "கான் ஷோனி பொச்சொன்டோ ஹோய் கி சிலோ. சோப் கேசட் நியே கெலோ [அதிகாரிகள் பாடல்களைக் கேட்டு ரசித்தனர். பின்னர் அவர்கள் அனைத்து கேசட்டுகளையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர்", என்று ரஞ்சித் நினைவுகூர்ந்தார்.
ஹவுரா மாவட்டத்தின் இந்த பகுதியில் ஏராளமாகக் காணப்படும் கோரோ பான்ஸ் என்று அழைக்கப்படும் குவாடுவா மூங்கில் உள்நாட்டில் எளிதாகக் கிடைப்பதே தியோல்பூரின் பெருமை. குவாடுவா மூங்கில் கொத்து கொத்தாக வளர்கிறது, இது தரைக்கு அடியில் உறுதியான மற்றும் நீளமான கிழங்குகளை உருவாக்க வழிவகுக்கிறது, இதிலிருந்து போலோ பந்துகள் வடிவமைக்கப்படுகின்றன.
"எல்லா மூங்கில் வகைகளிலும் போலோ பந்துகளுக்கான எடை மற்றும் அளவு தரநிலைகளுக்கு தகுதியான கிழங்கு இருப்பதில்லை" என்று ரஞ்சித் விளக்குகிறார். ஒவ்வொரு பந்தும் சுமார் 78-90 மிமீ விட்டம் மற்றும் 150 கிராம் எடையுடன் துல்லியமாக வடிவமைக்கப்பட வேண்டும், இந்திய போலோ சங்கம் பரிந்துரைத்த தரங்களுக்கு ஏற்ப.
1990கள் வரை, அனைத்து போலோ பந்துகளும் இந்த பொருளிலிருந்து மட்டுமே தயாரிக்கப்பட்டன. "அவை (மூங்கில் பந்துகள்) படிப்படியாக அர்ஜென்டினாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஃபைபர் கிளாஸ் பந்துகளால் மாற்றப்பட்டன" என்று மூத்த கைவினைஞர் கூறுகிறார்.
ஃபைபர் கிளாஸ் பந்துகள் அதிக காலம் உழைக்கக் கூடியவை. மூங்கில் பந்துகளை விட அதிக விலை கொண்டவை. ஆனால் "போலோ என்பது புரோச்சூர் தோணி லோக் [மிகவும் பணக்காரர்களின்] விளையாட்டாக தொடர்கிறது. எனவே அதிக பணம் [பந்துகளுக்கு] செலவிடுவது அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமல்ல," என்று ரஞ்சித் கூறுகிறார். சந்தையின் இந்த மாற்றம் தியோல்பூரில் உள்ள கைவினையை நசுக்கியுள்ளது. "2009க்கு முன்பு இங்கு 100-150 பந்து தயாரிப்பாளர்கள் இருந்தனர்," என்று அவர் கூறுகிறார், "2015-ம் ஆண்டில், நான் மட்டுமே போலோ பந்துகளை தயாரித்தேன்." ஆனால் வாங்குவோர் இல்லை.
*****
ஒரு அரிவாளை சுமந்தபடி மினோத்தி வழிநடத்த, நானும் ரஞ்சித்தும் அவரை பின்தொடர்ந்து அவர்களின் பன்ஸ்-எர் பாகனுக்கு (மூங்கில் தோப்பு) சென்றோம். இந்த தம்பதியினர் தங்கள் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஆறு கதா நிலத்தைக் கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக பழங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிடுகிறார்கள். கூடுதலாக கிடைக்கும் உற்பத்திப் பொருட்களை உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்கிறார்கள்.
"மூங்கில் செடியின் தண்டு வெட்டப்பட்டவுடன், தரைக்கு அடியில் இருந்து கிழங்கு பிரித்தெடுக்கப்படுகிறது" என்று மினோத்தி பிரித்தெடுக்கும் செயல்முறையை விவரிக்கிறார். இது தியோல்பூரில் உள்ள சர்தார் சமூகத்தால் முதலில் செய்யப்பட்டது. ரஞ்சித் அவர்களிடமிருந்து மூங்கில் கிழங்குகளை வாங்குவார். 2-3 கிலோ எடையுள்ள ஒரு கிழங்கு ரூ.25-32-க்கு விற்கப்பட்டது.
கிழங்குகள் சுமார் நான்கு மாதங்கள் வெயிலில் உலர்த்தப்படும். "நா ஷுக்லே, காச்சா ஒபோஸ்தா-தே பால் சிட்-கே ஜாபே. தேதா பெகா ஹோய் ஜாபே [சரியாக உலர்த்தாவிட்டால், பந்து விரிசல் விழுந்து வடிவமின்றி இருக்கும்]" என்று ரஞ்சித் விளக்குகிறார்.
இதன் பிறகு, அவை 15-20 நாட்கள் ஒரு குளத்தில் ஊறவைக்கப்படும். "ராட்-இ பக்கா [வெப்பத்தால் சுடப்பட்ட] கிழங்கை மென்மையாக ஊறவைப்பது அவசியம். இல்லையெனில் கிழங்கை வெட்ட முடியாது," என்று அனுபவம் மிக்க கைவினைஞர் மேலும் கூறுகிறார். "நாங்கள் அதை மீண்டும் 15-20 நாட்களுக்கு உலர்த்துவோம். அப்போதுதான் அது வடிவமைக்கத் தயாராக இருக்கும்," என்கிறார்.
கட்டாரி (அரிவாள்) அல்லது குருல் (கை கோடாரி) கொண்டு கிழங்கைத் துடைப்பது முதல் சீரற்ற பகுதியை உருளை வடிவ துண்டுகளாக வெட்டுவதற்கு ஒரு கோராத் (கோபிங் ரம்பம்) பயன்படுத்துவது வரை, "செயல்முறையின் ஒவ்வொரு படியும் ஒருவர் தரையில் உட்கார்ந்து செய்ய வேண்டியிருந்தது," என்று கூறும் ரஞ்சித், இப்போது நாள்பட்ட முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் மெதுவாக மட்டுமே நடக்க முடியும். "போலோ விளையாட்டு கைவினைஞர்களாகிய எங்களின் முதுகில் விளையாடப்பட்டது," என்று அவர் கூறுகிறார்.
உருளை வடிவிலான துண்டுகள் கிழங்கிலிருந்து வெட்டப்பட்டதும், அவை ஒரு கல்லால் கைப்பிடி தட்டப்பட்ட உளி கொண்டு ஒரு குறிப்பிட்ட வட்டமாக வடிவமைக்கப்படுகின்றன. கிழங்கின் அளவைப் பொறுத்து, ஒரு துண்டில் இருந்து இரண்டு, மூன்று அல்லது நான்கு பந்துகளை நாங்கள் செதுக்க முடியும்," என்று ரஞ்சித் கூறுகிறார். பின்னர் அவர் பந்தை உள்ளங்கை பிடித்த ராண்டா மூலம் அதன் மேற்பரப்பில் உள்ள சிராய்ப்புகளை சரிசெய்வார்.
ஹவுரா மாவட்டத்தின் இந்த பகுதியில் ஏராளமாக காணப்படும் கோரோ பான்ஸ் என்று அழைக்கப்படும் குவாடுவா மூங்கில் உள்நாட்டில் எளிதாகக் இங்கு கிடைப்பதே தியோல்பூரின் பெருமை
ஒரு பழைய பந்தை எடுத்துக் கொண்டு, மினோத்தி மெருகூட்டும் பணியை விளக்குகிறார்: "வீட்டு வேலைகளுக்கு இடையில், ஷிரிஷ் பேப்பர் நியே பால் ஆமி மஜ்தம் [நான் மணல் காகிதத்துடன் மென்மையாக்கி இறுதி வடிவம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்]. பின்னர் வெள்ளை வண்ணம் பூசப்படும். சில நேரங்களில் நாங்களே அதற்கு முத்திரையிடுவோம்," என்று அவர் விளக்குகிறார்.
ஒவ்வொரு பந்தையும் முடிக்க 20-25 நிமிடங்கள் ஆனது. "ஒரு நாளில், நாங்கள் இருவரும் 20 பந்துகளை முடித்து ரூ.200 சம்பாதிக்க முடியும்," என்கிறார் ரஞ்சித்.
இந்த வேலைக்குத் தேவையான திறமை, அறிவு மற்றும் நுட்பங்கள் அறிந்திருந்தபோதிலும், ரஞ்சித் பல ஆண்டுகளாக குறைந்த லாபத்தையே பெற்றார். அவர் ஒரு கார்கானாவில் (பட்டறை) போலோ பந்துகளை தயாரிக்கத் தொடங்கியபோது, ஒரு துண்டுக்கு 30 பைசா மட்டுமே சம்பாதித்தார். கடந்த, 2015-ம் ஆண்டில், ஒரு பந்துக்கான கூலி, 10 ரூபாயாக மட்டுமே உயர்ந்தது.
"ஒவ்வொரு பந்தும் தியோல்பூரில் இருந்து ரூ.50க்கு விற்கப்பட்டது," என்று அவர் கூறுகிறார். கல்கத்தா போலோ கிளப் வலைத்தளத்தின் வணிகப் பிரிவைப் பார்த்தால், கைவினைஞர்களின் உழைப்பிலிருந்து அவர்கள் எவ்வளவு இலாபம் பார்த்தனர் என்பது புலனாகிறது.
வலைத்தளத்தில் பந்துகள் "மேற்கு வங்கத்தில், கிராமத் தொழிலில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மூங்கில் பந்துகள்," என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும் ஒவ்வொன்றும் தற்போது ரூ.150 க்கு விற்கப்படுகின்றன. ஒவ்வொரு பந்தின் விலையும் ரஞ்சித்தின் ஊதியத்தை விட 15 மடங்கு அதிகம்.
ஒரு போலோ போட்டிக்கு 25 முதல் 30 மூங்கில் பந்துகள் தேவைப்பட்டன. அவர் மேலும் விளக்குகிறார், " கிழங்கு இயற்கையானது, என்பதால் அதன் எடை மாறுபடும். இது போலோ போட்டியின் போது மீண்டும் மீண்டும் மட்டையால் தட்டப்படும்போது விரைவாக வடிவத்தை இழக்கிறது அல்லது விரிசல்களை உருவாக்குகிறது. மறுபுறம், ஃபைபர் கிளாஸ் பந்துகள் நீண்ட காலம் நீடிக்கும்: "ஒரு போலோ போட்டிக்கு இவற்றில் மூன்று முதல் நான்கு பந்துகள் மட்டுமே தேவை," என்று ரஞ்சித் கூறுகிறார்.
1860களின் முற்பகுதியில் வெறும் 30 கி.மீ தூரத்தில் கல்கத்தா போலோ கிளப் நிறுவப்பட்டது, தியோல்பூரில் போலோ பந்து தயாரிப்பை அதிகரித்தது. ஆனால் இந்த பந்துகளுக்கான தேவை குறைந்ததால் 2015க்குள் மூங்கில் பந்துகளை வாங்குவதை க்ளப் முற்றிலுமாக நிறுத்தியது.
*****
விளையாட்டு அல்லது விளையாட்டுத்திறனுக்கு ரஞ்சித் புதியவர் அல்ல - அவர் தியோல்பூர் பிரகதி சங்கா என்ற கிராம விளையாட்டு க்ளப்பிற்காக கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடினார். க்ளப்பின் முதல் செயலாளராக அவர் இருந்தார். "கூப் நாம் தா ஹமாரா கோன் மே" [நான் கிராமத்தில் பிரபலமாக இருந்தேன்] ஒரு வேகப்பந்து வீச்சாளராகவும், டிஃபென்டராகவும்," என்று அவர் நினைவுகூர்ந்தார்.
சுபாஷ் பாக் என்பவருக்கு சொந்தமான பட்டறையில் முதன்முதலாக ரஞ்சித் பணியை தொடங்கினார். சுபாஷின் தாத்தா, போலோ பந்துகள் தயாரிக்கும் கைவினையை தியோல்பூருக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இப்போது 55 வயதாகும் சுபாஷ்தான், போலோ மற்றும் தியோல்பூருக்கு இடையிலான ஒரே இணைப்பு. ஆனால் அவர் போலோ மட்டைகளை உற்பத்தி செய்யும் தொழிலுக்கு மாறிவிட்டார்.
அரை நூற்றாண்டுக்கு முன்பு, தியோல்பூரில் வசிப்பவர்கள் மேற்கொண்ட பல கைவினைகளில் போலோ பந்து தயாரிப்பு வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான மற்றொரு வழியாகும். "ஜரி-ஆர் காஜ் [உலோக-நூல் எம்பிராய்டரி வேலை], பீடி பந்தா [பீடி உருட்டுதல்], போலோ பந்து தயாரிப்பு வரை, எங்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், எங்கள் மூன்று குழந்தைகளை வளர்க்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தோம்," என்று மினோத்தி கூறுகிறார். "சோப் அல்போ பொய்சா-ஆர் காஜ் சிலோ. கூப் கோஷ்தோ ஹோயே சிலோ [இவை அனைத்தும் குறைவான ஊதியமும், அதிக உடலுழைப்பும் தர வேண்டிய வேலைகள். நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம்," என்கிறார் ரஞ்சித்.
"இப்போது நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள துலாகர் சவுராஸ்டாவுக்கு அருகில் நிறைய தொழிற்சாலைகள் வந்துள்ளன," என்று தியோல்பூர் குடியிருப்புவாசிகளுக்கு சிறந்த வேலைகள் இருப்பதைக் கண்டு ரஞ்சித் மகிழ்ச்சியடைகிறார். "கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இப்போது சம்பளத்திற்கு வேலை செய்கிறார். ஆனால் சிலர் இன்னும் வீட்டில் ஜரி-ஆர் கஜ் செய்கிறார்கள்," என்கிறார் மினோத்தி. தியோல்பூரில் சுமார் 3,253 பேர் வீட்டுத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு).
இத்தம்பதியினர் தங்களது இளைய மகனான 31 வயது ஷவுமித், மருமகளான 31 வயது ஷூமோனா ஆகியோருடன் வசித்து வருகின்றனர். ஷவுமித், கொல்கத்தா அருகே உள்ள ஒரு சிசிடிவி கேமரா நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஷூமோனா தனது இளங்கலை பட்டப்படிப்பை படித்து வருகிறார். பிறகு வேலை கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.
*****
"என்னைப் போன்ற கைவினைஞர்கள், கைவினையை அனைவருக்கும் கொடுத்தனர். ஆனால் இதற்கு கைமாறாக போலோ வீரர்களிடமிருந்தோ, அரசிடமிருந்தோ எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை", என்று ரஞ்சித் கூறுகிறார்.
2013ஆம் ஆண்டில், மேற்குவங்க அரசு யுனெஸ்கோவுடன் இணைந்து மாநிலம் முழுவதும் பாரம்பரிய கலை மற்றும் கைவினை வடிவங்களை உருவாக்க கிராமப்புற கைவினை மைய திட்டங்களைத் தொடங்கியது. இந்த அமைப்பு இன்று, மூன்றாவது கட்டத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் 50,000 பயனாளிகளை கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களில் ஒருவர் கூட மூங்கில் போலோ பந்துகளை தயாரிக்கும் கைவினைஞர்கள் அல்ல.
"நாங்கள் 2017-18 ஆம் ஆண்டில் நபன்னாவுக்கு [மாநில அரசு தலைமையகம்] சென்றோம். எங்கள் கைவினைப்பொருட்கள் நிலைக்க உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினோம். நாங்கள் எங்கள் நிலைமையைப் புகாரளித்தோம், மனுக்களை அளித்தோம். ஆனால் பதில் எதுவும் வரவில்லை," என்று ரஞ்சித் கூறுகிறார். "எங்கள் நிதி நிலைமை எப்படி இருக்கும்? நாங்கள் என்ன சாப்பிடுவோம்? எங்கள் கைத்திறன் மற்றும் வாழ்வாதாரம் போய்விட்டது, என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம்."
"போலோ பந்துகள் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும், அது சிலருக்கு முக்கியம்" என்று சொல்லும் ரஞ்சித் ஒரு கணம் நிறுத்திவிட்டு, "... எங்களைப் பற்றி யாரும் யோசித்து பார்ப்பதில்லை."
மினோத்தி, தூரத்தில் மதிய உணவிற்காக பாட்டா (நன்னீர் மைனர் கெண்டை) மீன்களை சுத்தம் செய்து செதில் எடுக்கிறார். ரஞ்சித்தின் பேச்சைக் கேட்ட அவர், "எங்கள் தொடர் உழைப்புக்கு ஏதாவது அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது," என்கிறார்.
ஆனால், ரஞ்சித்துக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. "போலோ உலகம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கைவினைஞர்களான எங்களையே முழுமையாக நம்பியிருந்தது. ஆனால் அவை மிக விரைவாக மாறின," என்று அவர் கூறுகிறார். "அழிந்துபோன ஒரு கலைக்கு நான் மட்டுமே சான்று."
தமிழில்: சவிதா