“மேற்கு வங்க மக்களால் துலி செய்ய முடியவில்லை.”

நெல் சேமிக்க பபான் மஹாதோ உருவாக்கும் ஆறடி உயரம் மற்றும் நான்கடி அகலம் கொண்ட “ தான் தோரார் துலி” யின் தன்மை குறித்து யதார்த்தமாக பேசுகிறார் பபான் மஹாதோ.

முதல்முறை எங்களுக்கு சரியாக புரியவில்லையென நினைத்து, பிகாரை சேர்ந்த அந்த கைவினைஞர், “துலி செய்வது சுலபம் இல்லை,” என்கிறார். உருவாக்கத்தில் இருக்கும் பல கட்டங்களை சொல்லத் தொடங்குகிறார். “ கந்தா சாத்னா, காம் சாத்னா, தல்லி பிதானா, காதா கர்னா, புனாய் கர்னா, தெரி சந்தானா ( நீள, செங்குத்து குச்சிகள், வட்ட அமைப்பை அமைத்தல், கூடை செவ்வகத்தை அமைத்தல், நெய்து முடித்தல், இறுதி நெசவுகளை செய்தல்) என பல வேலைகள் இருக்கின்றன.”

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

பபான் மஹாதோ மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்துக்கு மூங்கில் கூடைகள் செய்ய பிகாரிலிருந்து புலம்பெயர்ந்திருக்கின்றனர். நெசவு தயார் செய்ய, மூங்கில் தண்டுகளை உடைத்து (வலது) வெயிலில் (இடது) காய வைக்கிறார்

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

பாபனின் விரல்கள் நுட்பமாக கூடைகளை (இடது) நெய்கிறது. அடிபாகத்தை அவர் முடித்த பிறகு, கூடையை திருப்பி (வலது)நெசவை தொடர்கிறார்

52 வயது பாபன் இந்த வேலையை கடந்த 40 வருடங்களாக செய்து வருகிறார். “பால்ய காலத்திலேயே என் பெற்றோர் இதை செய்ய எனக்குக் கற்றுக் கொடுத்து விட்டனர். அவர்கள் இந்த வேலையை மட்டும்தான் செய்தார்கள். பார்வையற்றவர்கள் அனைவரும் துலி செய்வார்கள். அவர்கள் டோக்ரிகள் (சிறு கூடைகள்) செய்வார்கள், மீன் பிடிப்பார்கள், படகோட்டுவார்கள்.”

பிகாரில் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (EBC) சேர்ந்த பைண்ட் சமூகத்தை (சாதிவாரி கணக்கெடுப்பு 2022-23) சேர்ந்தவர் பாபன். பெரும்பாலான துலி கைவினைஞர்கள் பைண்ட் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்கிறார் அவர். ஆனால் கனு மற்றும் ஹல்வாய் சமூகங்களை (EBC) சேர்ந்தவர்களும் கூட செய்கிறார்கள். பைண்ட் மக்களுடன் நெருக்கமாக பல காலம் வாழ்ந்ததில் அவர்கள் அத்தொழிலைக் கற்றுக் கொண்டார்கள்.

“என் கை கொண்டிருக்கும் அளவை கொண்டு வேலை செய்கிறேன். கண்கள் மூடியிருந்தாலும் இருட்டாக இருந்தாலும், என் கைகளில் திறன் எனக்கு வழிகாட்டும்,” என்கிறார் அவர்.

மூங்கிலின் கிடைமட்டப் பகுதியை அறுக்கத் தொடங்குகிறார். 104 துண்டுகளாக்குகிறார். இதற்கு அதிக நிபுணத்துவம் வேண்டும். பிறகு நுட்பமான கணிப்பில், வட்டமான மூங்கில் வடிவம் “ சய் யா சாத் ஹாத்” (9-லிருந்து 10 அடிவரை தேவையான சுற்றளவில் அமைக்கப்படுகிறது. ஒரு ஹாத் என்பது, கையின் நடுவிரல் தொடங்கி, தோள் வரையிலுமான அளவு. இந்தியாவின் பெரும்பாலான கைவினைஞர் குழுக்கள் பயன்படுத்தும் இந்த அளவு, கிட்டத்தட்ட 18 அங்குலங்கள் வரும்.

PHOTO • Gagan Narhe
PHOTO • Gagan Narhe

நல்ல மூங்கில் தண்டை (இடது) கண்டறிய நெசவாளர் மூங்கில் புதருக்குள் செல்கிறார். பிறகு அதை தன் பணியிடத்துக்கு (வலது) கொண்டு வருகிறார்

PHOTO • Gagan Narhe

துலி கூடையின் அடிபாகத்தை மூன்றடி அகலத்துக்கு மூங்கில் துண்டுகலை ஊடு நெசவு செய்து உருவாக்குகிறார் பாபன்

பாரியுடன் பாபன், அலிபுர்துவார் (முன்பு ஜல்பைகுரி) மாவட்டத்தில் பேசுகிறார். பிகாரின் பக்வானி சப்ராவிலுள்ள அவரது வீட்டிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் அது இருக்கிறது. வருடந்தோறும் அவர் பயணித்து  மேற்கு வங்கத்தின் வடக்கு சமவெளிகளுக்கு வேலை பார்க்க வருகிறார். சம்பா சாகுபடி நடக்கும் கர்திக் (அக்டோபர்-நவம்பர்) வருவார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு தங்கி, துலி உருவாக்கி விற்பார்.

அவர் தனியாக இல்லை. “அலிபுர்துவார் மற்றும் வங்கத்தின் கூச் பெகார் மாவட்டங்களின் ஒவ்வொரு வாரச் சந்தையிலும் எங்களின் பக்வானி சப்ரா கிராமத்து துலி செய்பவர்கள் இருப்பார்கள்,” என்கிறார் புரான் சகா. துலி செய்யும் பணியில் இருக்கும் அவரும் பிகாரிலிருந்து வருடந்தோறும் கூச் பெகார் மாவட்டத்தின் காக்ராபாரி டவுனின் தோதியர் சந்தைக்கு புலம்பெயர்கிறார். இந்த வேலைக்காக புலம்பெயருபவர்கள் பெரும்பாலும் ஐந்திலிருந்து 10 பேர் கொண்ட குழுவாக வருகின்றனர். ஒரு சந்தையை தேர்ந்தெடுத்து, அவர்கள் அங்கு முகாமிடுகின்றனர்.

பாபன் முதன்முதலாக 13 வயதில் மேற்கு வங்கத்துக்கு வந்தார். அவரின் குருவான ராம் பர்பேஷ் மஹாதோவுடன் வந்தார். “என் குருவுடன் 15 வருடங்களாக நான் பயணிக்கிறேன். பிறகுதான் துலியை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது,” என்கிறார் துலி கைவினைஞர் குடும்பத்திலிருந்து வரும் பாபன்.

PHOTO • Gagan Narhe

அலிபுர்துவாரின் மதுராவிலுள்ள வாரச்சந்தையில், கூடை நெய்பவர்கள் ஒரு குழுவாக, தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு முன், துலிகளை செய்து விற்கின்றனர்

*****

தீயை மூட்டுவதிலிருந்து பாபனின் நாள் தொடங்குகிறது. குடிசைக்குள் மிகவும் குளிராக இருக்கும். எனவே அவர் வெளியே சாலையருகே நெருப்பு மூட்டி அமர்கிறார். “அதிகாலை 3 மணிக்கு எழுவேன். இரவில் குளிராக இருக்கும். எனவே படுக்கையிலிருந்து எழுந்து, வெளியே தீ மூட்டி, அதனருகே அமர்ந்து கொள்வேன்.” ஒரு மணி நேரத்துக்கு பிறகு, அவர் வேலையைத் தொடங்குகிறார். வெளியே இருட்டாக இருந்தாலும் மங்கலான தெரு விளக்கு ஒளி அவருக்கு போதாது.

துலி கூடை செய்வதற்கான முக்கியமான விஷயம், சரியான மூங்கில் வகையை தேர்ந்தெடுப்பது என்கிறார். “மூன்று வருட மூங்கில் சரியாக இருக்கும். ஏனெனில் உடைப்பதற்கும் அது எளிது. தேவையான தடிமனும் இருக்கும்,” என்கிறார் பாபன்.

சரியான அளவு பார்த்து வட்ட மூங்கில் அமைப்பை வைப்பது கடினமான விஷயம். ‘தாவோ’ (அரிவாள்) என்கிற கருவியை பயன்படுத்துகிறார். அடுத்த 15 மணி நேரங்களில் அவர் காலை உணவுக்கு பீடி பிடிப்பதற்கும் மட்டும்தான் இடைவேளை எடுத்துக் கொள்கிறார்.

ஒரு துலி என்பது ஐந்தடி உயரமும் நான்கடி சுற்றளவும் கொண்டிருக்கும். ஒரு நாளில் மகனின் உதவியின்றி இரண்டு துலி கூடைகளை பாபன் செய்ய முடியும். அவற்றை அலிபுர்துவார் மாவட்டத்தில் திங்கட்கிழமைகளில் நடக்கும் மதுரா வாரச்சந்தையில் விற்பார். “சந்தைக்கு நான் செல்லும்போது பல அளவுகளிலான துலியை நான் கொண்டு வருவேன். 10 மன், 15 மன், 20 மன், 25 மன் நெல்லை கொள்ளக் கூடிய பல அளவு கூடைகள்.” ஒரு ‘மன்’ என்பது 40 கிலோ ஆகும். எனவே ஒரு 10 மன் துலியில் 400 கிலோ நெல் கொள்ள முடியும். துலியின் அளவுகள் 5லிருந்து 8 அடி உயரம் வரை பல அளவுகளில் இருக்கின்றன.

காணொளி: பாபன் மஹாதோவின் பெரிய மூங்கில் கூடைகள்

பால்யகாலத்தில் என்னுடைய பெற்றோர் துலி செய்யக் கற்றுக் கொடுத்தனர். அவர்கள் தாங்களாகவே இந்த வேலையை செய்தனர்

“அறுவடைக் காலம் தொடங்கியதும் ஒரு துலிக்கு 600-லிருந்து 800 ரூபாய் வரை எங்களுக்குக் கிடைக்கும். அறுவடைக் காலம் முடியும்போது தேவை குறையும். விலை குறைவாக நாங்கள் விற்போம். கூடுதலாக 50 ரூபாய் வருமானம் பெற, கூடையை நானே சென்று கொடுக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

ஒரு துலி எட்டு கிலோ எடை கொண்டிருக்கும். பாபனால் மூன்று துலிகள் வரை (கிட்டத்தட்ட 25 கிலோ) தலையில் சுமக்க முடியும். “கொஞ்ச நேரத்துக்கு 25 கிலோ எடையை தலையில் நான் சுமக்க முடியாதா?” எனக் கேட்கிறார் அவர், அது ஒன்றும் பெரிய காரியம் அல்ல என்பது போல.

தான் கடை போட்டிருக்கும் வாரச்சந்தையின் ஊடாக நடந்தபடி பாபன், பிகாரின் சக கிராமவாசிகளை பார்த்து தலையசைக்கிறார். அவரது சமூகத்தினர் போட்டிருக்கும் கடைகளையும் உதவிகரமாக இருக்கும் உள்ளூர்வாசிகளையும் சுட்டிக் காட்டுகிறார். ”எல்லா முகங்களும் பரிச்சயமானவை,” என்கிறார் அவர். “என்னிடம் பணம் இல்லையென்றால், அரிசிக்கும் பருப்புக்கும் ரொட்டிக்கும் அவர்களை கேட்பேன். அவர்களும் என்னிடம் காசு இருக்கோ இல்லையோ கொடுப்பார்கள்,” என்கிறார் அவர்.

PHOTO • Gagan Narhe
PHOTO • Gagan Narhe

வாடிக்கையாளருக்கு (இடது) கொடுக்கவென ஒரு துலியை சைக்கிளில் தனக்கு பின்னால் (வலது) வைத்து கொண்டு போகிறார்

அவரின் நாடோடி வாழ்க்கை, சொந்த ஊரான போஜ்பூரியையும் தாண்டி பல இடங்கள் பற்றிய அறிவை அவருக்கு வழங்கியிருக்கிறது. அவர் இந்தி, வங்காளி மற்றும் அஸ்ஸாமிய மொழிகள் பேசக் கூடியவர். அலிபுர்துவார் மாவட்ட (முன்பு ஜல்பைகுரி மாவட்டம்) தக்‌ஷின் சகோவாகெதி பகுதியில் வாழும் மெச் சமூகத்தினரின் மெச்சியா மொழியை புரிந்து கொள்கிறார்.

ஒருநாளைக்கு 10 ரூபாய்க்கு மதுவை “உடல்வலிக்கு வாங்குகிறேன். வலியை மறக்கடிக்க மது உதவுகிறது.”

அவரின் சக பிகாரிகள் ஒன்றாக வாழ்ந்தாலும் பாபன் தனியே வாழவே விரும்புகிறார். “ஒரு 50 ரூபாய்க்கு நான் சாப்பிட்டால், உடன் இருப்பவருக்கும் பங்கு கொடுக்க வேண்டும். அதனால்தான் தனியே உண்டு வாழ விரும்புகிறேன். அந்த வகையில் நான் எதை வேண்டுமானாலும் உண்ண முடியும். எவ்வளவும் சம்பாதிக்க முடியும்.”

பிகாரின் பைண்ட் மக்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகள் குறைவு என்கிறார் அவர். எனவேதான் பல தலைமுறைகளாக அவர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர். பாபனின் 30 வயது மகன், அர்ஜுன் மஹாதோவும் தன் பால்ய காலத்தில் அவருடன் புலம்பெயர்ந்திருக்கிறார். அவர் தற்போது மும்பையில் பெயிண்டராக பணிபுரிகிறார். “எங்களின் சொந்த ஊர் இருக்கும் பிகாரில் வருமானத்துக்கான வாய்ப்புகள் குறைவு. மண் அகழ்வு மட்டும்தான் அங்கு இருக்கும் தொழில்துறை. மொத்த பிகாரும் அதை சார்ந்திருக்க முடியாது.”

PHOTO • Shreya Kanoi

அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடையில் வருடந்தோறும் மேற்கு வங்கத்தின் நெடுஞ்சாலையில் பணிபுரிந்து வாழ்கிறார் பாபன்

PHOTO • Shreya Kanoi

இடது: பாபனின் தற்காலிக குடிசையில்தான் துலிகளை செய்கிறார். வலது: அவரின் மகனான சந்தன், முக்கியக் கட்டங்களை பாபன் செய்து முடித்த பிறகு கூடை நெய்து முடிக்கிறார்

பாபனின் எட்டு குழந்தைகளில் இளையவரான சந்தன், இந்த வருடம் (2023) அவருடன் வந்தார். மேற்கு வங்கத்திலிருந்து அஸ்ஸாம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை - 17க்கு அருகே தேயிலைத் தோட்டங்களை தாண்டி அவர்கள் குடிசை அமைத்திருக்கின்றனர். மூன்று பக்கம் தார்ப்பாயும் தகரக் கூரையும் மண் அடுப்பும், ஒரு படுக்கையும் துலி கூடைகள் வைக்க கொஞ்சம் இடமும் அவரது வீடு கொண்டிருக்கிறது.

இயற்கை கடன் கழிக்க தந்தைக்கும் மகனுக்கும் திறந்த வெளிதான். குளிக்க, அவர்கள் அருகே இருக்கும் அடிகுழாயில் நீர் பிடித்துக் கொள்கிறார்கள். “இந்த நிலையில் தங்குவதில் எனக்கு பிரச்சினை இல்லை. என் வேலைக்கு ஏற்றார்போல்தான் என் வாழ்க்கை,” என்கிறார் பாபன். வெளிப்புறத்தில் அவர் துலி செய்து விற்கிறார். சமைப்பதற்கு தூங்குவதற்கும் உள்ளே சென்று விடுகிறார்.

ஊருக்கு கிளம்புவது மிகவும் கஷ்டமாக இருக்கும் என்கிறார் அவர். “வீட்டின் உரிமையாளர் கொஞ்சம் பிரியாணி இலைகளை அவரின் தோட்டத்தில் இருந்து கொடுத்து, ஊருக்குக் கொண்டு போக சொன்னார்.”

*****

நெல் சேமிப்பதற்கான பிளாஸ்டிக் பைகள் வந்ததும் பதப்படுத்தும் பாணி மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் நேர்ந்த மாற்றங்களும் துலி செய்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கிறது. “எங்களின் வேலையை, கடந்த ஐந்து வருடங்களாக இப்பகுதியில் அதிகரித்து வரும் அரிசி மில்கள் பாதித்திருக்கின்றன. முன்பு சேமித்து வைத்திருந்ததை போலில்லாமல், பதப்படுத்துவதற்கென விவசாயிகள் நெல்லை நேரடியாக நிலங்களிலிருந்து மில்களுக்குக் கொடுத்து விடுகின்றனர். மக்களும் நிறைய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்,” என்கிறார் பிகாரை சேர்ந்த குழு ஒன்று.

PHOTO • Gagan Narhe
PHOTO • Gagan Narhe

இடது: துலி செய்பவர்கள் எல்லா கூடைகளையும் இந்த சீசனில் (2024) விற்க முடியவில்லை. வலது: பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவே விவசாயிகள் விரும்புகின்றனர்

சிறு அளவிலான கூடைகள் (டோக்ரிகள்) தயாரிக்கவும் முடியும். ஆனால் உள்ளூரில் அவற்றை தயாரிப்பவர்களுடன் பிரச்சினை ஆகிவிடக் கூடாது என நினைக்கிறார்கள். அவர்களிடம், ‘சகோதரா, சிறு கூடைகள் செய்யாதீர்கள். உங்களின் பெரிய கூடைகளை செய்யுங்கள். எங்கள் வாழ்வாதாரங்களை எங்களிடமிருந்து பறிக்காதீர்கள்’ எனக் கேட்கின்றனர்.

கூச் பெகார் மற்றும் அலிபுர்துவார் மாவட்டங்களின் சந்தைகளில் ஒரு  பிளாஸ்டிக் பையின் விலை 20 ரூபாய்தான். ஆனால் ஒரு துலியின் விலை 600லிருந்து 1,000 ரூபாய் வரை இருக்கும். பிளாஸ்டிக் பையில் 40 கிலோ அரிசி கொள்ளும். ஒரு துலியில் 500 கிலோ அரிசி கொள்ளும்.

நெல் விவசாயியான சுஷிலா ராய் துலியைத்தான் விரும்புகிறார். 50 வயதுக்காரரான அவர் அலிபுர்துவாரின் தக்‌ஷின் சகோயகேதி கிராமத்தை சேர்ந்தவர். “பிளாஸ்டிக் பையில் அரிசியை வைத்தால், பூச்சிகள் வந்துவிடும். எனவே துலி பயன்படுத்துகிறோம். எங்களுக்கான அரிசியை பெருமளவில் வருடந்தோறும் சேமிக்கிறோம்.”

மேற்கு வங்கம்தான் நாட்டின் மிகப்பெரிய அர்சி (மொத்த அரிசி உற்பத்தியில் 13 சதவிகிதம்) உற்பத்தியாளர். வருடந்தோறும் 16.76 மில்லியன் டன் அரிசியை அது உற்பத்தி செய்வதாக விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் 2021-22 அறிக்கை தெரிவிக்கிறது.

PHOTO • Shreya Kanoi
PHOTO • Gagan Narhe

இடது: பாதி முடித்த துலிகளை அலிபுர்துவாரின் அறுவடை முடிந்த நிலங்களினூடாக கொண்டு செல்கிறார். வலது: அடுத்த வருட உணவுக்காக விவசாயி அறுவடையை சேமிக்க கூடைகள் உதவுகிறது. மாட்டுச்சாணத்தால் பூசப்படுவதால், கூடையின் இடைவெளிகள் அடைந்து விடும். அரிசியும் சிந்தாது

*****

அக்டோபர் பாதியிலிருந்து டிசம்பர் வரை மேற்கு வங்கத்தில் வசிக்கும் பாபன், பிறகு பிகாருக்கு குறைந்த காலம் திரும்புகிறார். மீண்டும் பிப்ரவரி மாதத்தில், அவர் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களுக்கு புலம்பெயர்ந்து அடுத்த ஆறிலிருந்து எட்டு மாதங்களுக்கு வசிக்கிறார். ”அஸ்ஸாமில் நான் செல்லாத இடமே இல்லை. திப்ருகர், தேஜ்பூர், தின்சுகியா, கோலாகத், ஜோர்ஹாத், குவஹாத்தி எனப் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன்,” என பெயர்களை பட்டியலிடுகிறார்.

அஸ்ஸாமில் அவர் தயாரிக்கும் மூங்கில் கூடைகளுக்கு தோகோ என பெயர். துலியோடு ஒப்பிடுகையில், தோகோ உயரம் குறைவு. மூன்றடிதான். தேயிலை பறிக்க உதவுபவை. ஒரு மாதத்தில் 400 கூடைகள் வரை அவர் தயாரிக்கிறார். பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் ஆர்டர் கொடுத்து, வசிப்பிடமும் மூங்கிலும் கொடுக்கின்றன.

“மூங்கில் வேலை செய்திருக்கிறேன். மண் வேலையும் செய்திருக்கிறேன். மாட்டுச் சாணத்திலும் வேலை செய்திருக்கிறேன். விவசாயம் பார்க்கிறேன். கொஞ்ச காலம் ஐஸ் விற்று கூட பிழைத்திருக்கிறேன்,” என்கிறார் பாபன், வருடம் முழுக்க தான் செய்யும் வேலைகளை குறிப்பிட்டு.

அஸ்ஸாமில் கூடை ஆர்டர்கள் குறைந்ததும் அவர் ராஜஸ்தானுக்கோ டெல்லிக்கோ செல்வார். ஐஸ் க்ரீம் விற்பார். அவரின் கிராமத்தை சேர்ந்த பிறரும் இந்த வேலை செய்கின்றனர். எனவே தேவைப்படும்போது அவர்கள் செல்லும் வண்டியில் அவர் ஏறிக் கொள்கிறார். “ராஜஸ்தான், டெல்லி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய இடங்களுக்கு இடையேதான் என் மொத்த வாழ்க்கையும் நடக்கிறது,” என்கிறார் அவர்.

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

இடது: துலியின் அடிபாகத்தை தயாரிக்க, சரியான அளவுகளை கணக்கிட்டு நெசவாளர் நெய்ய வேண்டும். அத்திறனை கைகொள்ள அனுபவம் தேவை. அடிபாகம் கூடையின் சமநிலையை தீர்மானிக்கும். வலது: பாபன் நெய்து முடித்த துலி டெலிவரிக்கு தயார். திறன் வாய்ந்த நெசவாலரான அவர், கூடை செய்ய ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொள்கிறார்

பல ஆண்டுகளாக கைவினைஞராக இருந்தாலும் பாபன் பதிவு செய்யவில்லை. (ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும்) கைவினைஞர் மேம்பாடு வாரியத் தலைவர் அளிக்கும் கைவினைஞர் அடையாள அட்டை அவருக்குக் கிடையாது. அந்த அட்டையைக் கொண்டு, பல்வேறு அரசாங்கத் திட்டங்களையும் கடன்களையும் ஓய்வூதியத்தையும் அவர் பெற முடியும். விருதுகளுக்கான தகுதியும் பெற முடியும். திறன் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை பெற முடியும்.

“எங்களை (கைவினைஞர்கள்) போன்ற பலர் இருக்கின்றனர். ஆனால் ஏழைகளை பற்றி யார் கவலைப்படுகிறார்? அனைவரும் அவரவர் வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொள்கின்றனர்,” என்கிறார் வங்கிக் கணக்கு இல்லாத பாபன். “எட்டு குழந்தைகளை வளர்த்திருக்கிறேன். உடல் ஒத்துழைக்கும் வரை, சம்பாதித்து உண்ணுவேன். இதைத் தாண்டி என்ன செய்வது? வேறு என்ன செய்ய முடியும்?”

இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை (MMF) மானிய ஆதரவில் எழுதப்பட்டது.

தமிழில்: ராஜசங்கீதன்

Shreya Kanoi

شریا کنوئی ایک ڈیزائنر ریسرچر ہیں، جو دستکاری سے جڑے معاش کے سوالوں پر کام کرتی ہیں۔ وہ سال ۲۰۲۳ کی پاری-ایم ایم ایف فیلو ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Shreya Kanoi

گگن نرہے، کمیونی کیشن ڈیزائن کے پروفیسر ہیں۔ وہ بی بی سی جنوبی ایشیا کے لیے وژوئل جرنسلٹ کے طور پر بھی کام کر چکے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Gagan Narhe
Photographs : Shreya Kanoi

شریا کنوئی ایک ڈیزائنر ریسرچر ہیں، جو دستکاری سے جڑے معاش کے سوالوں پر کام کرتی ہیں۔ وہ سال ۲۰۲۳ کی پاری-ایم ایم ایف فیلو ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Shreya Kanoi
Editor : Priti David

پریتی ڈیوڈ، پاری کی ایگزیکٹو ایڈیٹر ہیں۔ وہ جنگلات، آدیواسیوں اور معاش جیسے موضوعات پر لکھتی ہیں۔ پریتی، پاری کے ’ایجوکیشن‘ والے حصہ کی سربراہ بھی ہیں اور دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب تک پہنچانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priti David
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan