வீட்டின் ஜன்னலிலிருந்து பார்க்கும் தூரம் வரை, எங்கும் நீர்தான். இந்த வருட வெள்ளம் இன்னும் வடியவில்லை. ருபாலி பெகு, சுபன்சிரி ஆற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வாழ்கிறார். பிரம்மப்புத்திராவின் துணை ஆறான சுபன்சிரி, வருடந்தோறும் அஸ்ஸாமின் நிலப்பரப்புகளில் வெள்ளச்சேதத்தை ஏற்படுத்துகிறது.
சுற்றுப்பகுதி முழுக்க நீர் இருந்தாலும் குடிநீர் கிடைக்கவில்லை என்கிறார் அவர். அஸ்ஸாமின் லகிம்பூர் மாவட்டத்டின் போர்துபி மலுவால் கிராமத்தில் இருக்கும் குடிநீர் அசுத்தமாக இருக்கிறது. “எங்கள் ஊரின் அடிகுழாய்களில் பெரும்பாலானவை நீரில் மூழ்கி கிடக்கிறது,” என விளக்குகிறார் ருபாலி.
சாலைக்கருகே இருக்கும் அடிகுழாயில் நீர் எடுக்க அவர் ஒரு சிறு படகில் செல்கிறார். மூன்று பெரிய ஸ்டீல் பாத்திரங்களுடன், ருபாலி சாலையை நோக்கி படகில் செல்கிறார். சாலையும் ஒரு பகுதி மூழ்கி கிடக்கிறது. ஒரு பெரிய மூங்கில் குச்சியை பயன்படுத்தி அவர் படகை வெள்ளத்தினூடாக செலுத்துகிறார். “மோனி, என்னோடு வா!” என அவர் பக்கத்து வீட்டுக்காரரை அழைக்கிறார். இருவரும் பாத்திரங்களை நிரப்ப ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள்
சில நிமிடங்களுக்கு அடிகுழாயை அடித்த பிறகு, ஒருவழியாக சுத்தமான நீர் வரத் தொடங்குகிறது. “மூன்று நாட்களாக மழை பெய்யாததால், நீரை பிடிக்க எங்களுக்கு முடிகிறது,” என்கிறார் ஆறுதலான புன்னகையுடன் ருபாலி. நீர் கொண்டு வருவது பெண்களின் உழைப்பாக பார்க்கப்படுகிறது. ஆற்றுநீர் உயர்ந்தால், அதிகரிக்கும் சுமையை பெண்கள்தான் தாங்க வேண்டும்.
அடிகுழாய் ஏமற்றி விட்டால், “சுட வைத்து இதை நாங்கள் குடிப்போம்,” என்கிறார் 36 வயது ருபாலி, வீட்டை சுற்றி தேங்கி நிற்கும் நீரைக் காட்டி.
இப்பகுதியில் இருக்கும் பலரைப் போல ருபாலியின் மூங்கில் வீடு, வெள்ளத்தை தாங்கவென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீடு ஆகும். உள்ளூரில் சங் கர் என சொல்லப்படும் இந்த வீடுகள், வெள்ளத்தை தவிர்க்கும் பாணியில் மூங்கில் தளங்களுக்கு மேல் கட்டப்படுகிறது. அவரின் வீட்டை தங்களின் வசிப்பிடமாக வாத்துகள் மாற்றிக் கொண்டன. அவற்றின் சத்தம் வீட்டை நிறைக்கிறது.
வீட்டில் கழிவறை இருந்தது. ஆனால் தற்போது அதுவும் நீரில் மூழ்கி விட்டது. எனவே படகில் சென்றுதான் இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்கிறார் ருபாலி. “நாங்கள் தூரமாக ஆற்றை நோக்கி செல்ல வேண்டும்,” என்கிறார் அவர். அந்தப் பயணத்தை இருட்டுக்குள் மேற்கொள்கிறார் ருபாலி.
தினசரி வாழ்க்கைகள் மட்டுமின்றி, இங்கு வசிக்கும் மைசிங் சமூகத்தை சேர்ந்த பெரும்பாலானோரின் வாழ்வாதாரங்களும் பாதிப்பை சந்தித்தது. “எங்களிடம் 12 பிகா நிலம் இருந்தது. நெல் விளைவித்தோம். ஆனால் இந்த வருடம், எல்லா பயிர்களும் மூழ்கி விட்டன. எல்லாவற்றையும் இழந்து விட்டோம்,” என்கிறார் ருபாலி. அவரின் நிலத்தின் ஒரு பகுதியை ஆறு ஏற்கனவே விழுங்கி விட்டது. “வெள்ளம் வடிந்த பிறகுதான் எந்தளவுக்கு நிலத்தை இந்த வருடம் ஆறு எடுத்துக் கொண்டது என தெரிய வரும்,” என்கிறார் அவர்.
மைசிங் மக்களின் (பட்டியல் பழங்குடிகள்) பாரம்பரியத் தொழில், விவசாயம்தான். அதை செய்ய முடியாமல், பலரும் பிழைப்பு தேடி புலம்பெயரும் கட்டாயத்தில் இருக்கின்றனர். 2020ம் ஆண்டின் ஆய்வு ப்படி, லக்கிம்பூரை விட்டு வெளியேறும் மக்களின் அளவு 29 சதவிகிதமாக இருக்கீறது. தேசிய சராசரியை விட மூன்று மடங்கு. ருபாலியின் கணவர் மானஸ் ஹைதராபாத்துக்கு சென்று காவலாளி வேலை பார்க்கிறார். வீட்டையும் ஒரு மகன் மற்றும் மகளையும் ருபாலிதான் பார்த்துக் கொள்கிறார். மானஸ் மாதத்துக்கு 15,000 ரூபாய் வருமானம் ஈட்டி, வீட்டுக்கு ரூ.8,000-10,000 அனுப்புகிறார்.
வருடந்தோறும் வீடுகளை வெள்ளம் சூழலும் ஆறு மாதங்களுக்கு, வேலை கிடைப்பது கஷ்டம் என்கிறார் ருபாலி. “கடந்த வருடத்தில் அரசங்கம் கொஞ்சம் உதவியது. பாலிதீன் ஷீட்டுகள், உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொடுத்தது. ஆனால் இந்த வருடம் ஒன்றும் தரவில்லை. பணம் இருந்திருந்தால், நாங்கள் வெளியேறி இருப்போ,” என்கிறார் அவர் சோகமாக.
தமிழில் : ராஜசங்கீதன்