மகாராஷ்டிரத்தில், காட்சிக்கு இனிய தில்லாரி காட்டுப்பகுதி வழியாக சென்றுகொண்டிருக்கிறோம். காட்டுப்பகுதியை ஒட்டி இருக்கும், கால்நடைகள் மேய்ப்போர் வசிக்கும் சிற்றூர்களில் உள்ள பெண்களை சந்தித்து அவர்களது உடல் நலச் சிக்கல்கள் குறித்துப் பேசுவதற்காக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்த்கட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, 50 வயது கடந்த ஒரு பெண்ணைப் பார்த்தேன். தன்னுடைய நான்கு ஆடுகளை கவனித்துக்கொண்டே, சாலையோரம் உள்ள மரத்துக்குக் கீழே அமர்ந்துகொண்டு ஒரு புத்தகத்தைக் கையில் வைத்திருந்தார் அவர்.
மேகம் சூழ்ந்த ஒரு மே மாதப் பகல் பொழுதில், வழக்கத்துக்கு மாறான இந்தக் காட்சியால் கவரப்பட்டு எங்கள் காரை நிறுத்திவிட்டு அந்தப் பெண்ணை நோக்கி நடந்து சென்றோம். ரேகா ரமேஷ் சந்த்கட் என்ற அந்தப் பெண்மணி விட்டோபா மீது ஆழமான ஈடுபாடு கொண்ட ஒரு பக்தை. மகாராஷ்டிரத்திலும், கர்நாடகத்திலும் பல சமூகங்கள் வணங்கும் தெய்வம் விட்டோபா. நாங்கள் அவரோடு பேசத் தொடங்கியவுடனே, அவர் விட்டோபாவின் பெயரைத் துதிக்கும் நாம்தேவ் இயற்றிய அபங் (பஜனைப் பாடல்) ஒன்றை எங்களுக்குப் பாடிக்காட்டத் தொடங்கினார். மகாராஷ்டிரத்தில் பிறந்து பாடல்கள் இயற்றிய ஞானியான நாம்தேவ், பஞ்சாபிலும் வணங்கப்படுகிறவர். விட்டோபாவை வணங்குவதற்காக வாரி நடைபயணம் செல்கிறவர்களைக் கொண்ட ‘வார்கரி பந்த்’ பக்திக் கூட்டத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவரான நாம்தேவ் இயற்றிய அபங் பாடல்கள் பக்தி இயக்க மரபை வெளிப்படுத்துபவை. சமயத்தில் இருக்கிற அதிகார அடுக்குகளைக் கேள்வி கேட்ட பக்தி இயக்கம், சடங்குகள் இல்லாமல் வணங்குவதை ஊக்குவித்தது. இந்த பக்தி இயக்கத்தைப் பின்பற்றுகிறவர் ரேகாதாய்.
ஒவ்வோர் ஆண்டும், ஜூன், ஜூலையில் வருகிற ஆஷாட மாதம் மற்றும் அக்டோபர், நவம்பரில் தீபாவளிக்குப் பிறகு வருகிற கார்த்திகை மாதம் ஆகிய இரு மாதங்களில் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சோலாப்பூர் மாவட்டம் பண்டரிபுரம் விட்டோபா கோயிலுக்கு பல பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்வார்கள். ‘வாரி’ என அழைக்கப்படும் இந்த நடைபயணத்தில் பங்கேற்கிறவர்கள் தியானேஸ்வர், துகாராம், நாம்தேவ் போன்ற ஞானியரின் பாடல்களையும், கவிதைகளையும் பாடியபடியே செல்வார்கள். இந்தப் பயணத்தில் சிரத்தையோடு இணைந்துகொள்கிறார் ரேகாதாய்.
“ஆடு மேய்க்கச் செல்லவேண்டாம். வீட்டிலேயே மகிழ்ச்சியாக இரு என்றுதான் என் குழந்தைகள் கூறுகிறார்கள். ஆனால், இங்கே உட்கார்ந்து விட்டோபாவின் நாமத்தை துதித்தபடியே இந்த பஜனைகளைப் பாடுவது எனக்குப் பிடித்திருக்கிறது. காலம் அப்படியே பறக்கிறது. மனம் களிப்பில் நிரம்புகிறது,” என்று கூறும் ரேகாதாய் தீபாவளிக்குப் பிறகு வரும் கார்த்திகை வாரி நடைபயணத்தில் பங்கேற்க ஆவலோடு இருக்கிறார்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்