“என்னிடம் எப்போதுமே பணம் இருப்பதில்லை,” என்கிறார் பபிதா மித்ரா, குடும்பத்துக்கான பட்ஜெட் திட்டமிடுவதில் உள்ள சிரமத்தை குறித்து. “உணவுக்கென ஒரு பகுதி பணத்தை எடுத்து வைத்து விடுவேன். ஆனால் மருந்துகளுக்கு அதை செலவழிக்கும் சூழல் ஏற்படும். மகன்களுக்கான ட்யூஷன் பணம், உணவுப் பொருளை வாங்க செலவாகிறது. மாதந்தோறும் வேலைக்கு அமர்த்துபவர்களிடமிருந்து நான் கடன் பெற வேண்டியிருக்கிறது…”
கொல்கத்தாவின் கலிகாபூர் பகுதியின் இரு வீடுகளில் வேலை பார்க்கும் 37 வயது தொழிலாளரான அவர், வருடத்துக்கு 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். மேற்கு வங்க நாடியா மாவட்ட ஆசான் நகரிலிருந்து இங்கு புலம்பெயர்ந்தபோது அவருக்கு வயது 10. “என் பெற்றோரால் மூன்று குழந்தைகளை வளர்க்க முடியவில்லை. எனவே கொல்கத்தாவில் இருந்த எங்கள் ஊரை சேர்ந்தவர்களின் வீட்டில் வேலை பார்ப்பதற்காக நான் அனுப்பி வைக்கப்பட்டேன்.”
அப்போதிருந்து பல வீடுகளில் பபிதா வேலை பார்த்து வருகிறார். கொல்கத்தாவில் அவர் இருந்த காலத்தில் 27 பட்ஜெட்கள் வந்து விட்டன. அவரது வாழ்க்கையோ அவரைப் போன்ற 4.2 மில்லியன் வீட்டு பணியாளர்களின் வாழ்க்கையோ எந்தவிதத்திலும் மாறவில்லை. சுயாதீன கணக்கெடுப்புகள் அவர்களது எண்ணிக்கையை 50 மில்லியன் எனக் குறிப்பிடுகின்றன.
2017ம் ஆண்டில் பபிதா, தெற்கு 24 பர்கானாஸின் பகாபன்பூர் பகுதியிலுள்ள உச்சேபொடா பஞ்சாயத்தை சேர்ந்தவரும் நாற்பது வயதுகளில் இருந்தவருமான அமல் மித்ராவை மணம் முடித்துக் கொண்டார். ஆலையில் தொழிலாளராக இருந்த கணவரால் அவரின் பொறுப்புகள் அதிகமாகின. குடும்பத்துக்கு கணவரால் குறைந்த பங்களிப்புதான் வந்தது. அவருடைய வருமானம்தான் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை ஓட்ட பெரிதும் உதவுகிறது. 5 மற்றும் 6 வயதுகளில் மகன்களும் 20 வயதுகளில் ஒரு மகளும் அவரின் மாமியாரும் என பபிதாவும் அமலும் வசித்து வருகின்றனர்.
4ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட பபிதாவுக்கு பாலினம் சார்ந்த பட்ஜெட் குறித்து கொஞ்சம் தெரியும். பெண்கள் முன்னெடுக்கும் வளர்ச்சி என நிர்மலா சீதாராமன் 2025-26 பட்ஜெட் உரையில் குறிப்பிட்டதை குறித்தும் தெரியும். ஆனால் அவரின் அன்றாட வாழ்க்கை அறிவு, அவருடைய பதிலில் வெளிப்படுகிறது: “கஷ்ட காலங்களில் எந்த உதவியும் பெற முடியாத பெண்களை பெருமையாக பட்ஜெட்டில் பேசுவதால் என்ன பயன்?” கோவிட் தொற்றுக்கால நினைவுகளை அவர் மறக்கவில்லை.
![](/media/images/02a-IMG20250203132847-SK-Sarkar_makes_such.max-1400x1120.jpg)
![](/media/images/02b-IMG20250203133738-SK-Sarkar_makes_such.max-1400x1120.jpg)
பபிதா மித்ராவின் கண்கள், கோவிட் தொற்றுக்கால கஷ்டங்களை நினைக்கையில் கண்ணீர் சுரக்கிறது. அவரது கர்ப்பத்தின் கடைசி காலத்தில் அரசின் உதவியும் இன்றி, சத்துணவும் புரத உணவும் இன்றி, வைட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டது. அதன் அறிகுறிகள் இன்றும் அவரது உடலில் இருக்கிறது
![](/media/images/03a-IMG20250203132920-SK-Sarkar_makes_such.max-1400x1120.jpg)
![](/media/images/03c-IMG20250203132155-SK-Sarkar_makes_such.max-1400x1120.jpg)
பள்ளிக்கு செல்லும் இரு சிறுவர்களின் தாயான அவர், வீட்டு வேலை செய்து கிடைக்கும் குறைந்த வருமானத்துடன் சிரமப்பட்டு வருகிறார். கஷ்டகாலங்களில் அவரைப் போன்றோருக்கு உதவாமல், பெண்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் பட்ஜெட்டால் எந்தப் பயனும் இல்லை என்கிறார்
“அதுதான் என் வாழ்வின் மோசமான காலம். இரண்டாம் குழந்தையை கருவில் சுமந்து கொண்டிருந்தேன். முதல் குழந்தை பாலூட்டும் வயதில்தான் இருந்தது. என் உடலில் பலம் இல்லை.” இப்போது பேசும்போதும் அவரின் குரல் உடைகிறது. “எப்படி பிழைத்தேன் என்றே எனக்கு தெரியவில்லை.”
“கர்ப்பகாலத்தின் பெரிய வயிற்றைக் கொண்டு, பல மைல்கள் நடந்து நீண்ட வரிசைகளில் நின்று, தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் உணவுப் பொருட்களை நான் பெற வேண்டியிருந்தது,” என்கிறார் அவர்.
“பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 5 கிலோ இலவச அரிசியை மட்டும் கொடுத்து விட்டு அரசாங்கம் கை கழுவி விட்டது. கர்ப்பிணிகளுக்கு கிடைக்க வேண்டிய மருந்துகளும் உணவும் (சத்துணவு மற்றும் புரத சத்துப்பொருட்கள்) எனக்குக் கிடைக்கவில்லை,” என்கிறார் அவர். தொற்றுக்காலத்தில் சத்துக்குறைபாடு உருவாக்கிய ரத்தசோகை மற்றும் கால்சியம் குறைபாடு ஆகியவற்றின் அடையாளங்கள் இன்றும் அவரின் கைகளிலும் கால்களிலும் இருக்கிறது.
“பெற்றோரும் கணவர் வீட்டாரும் பராமரிக்காத ஏழை பெண்ணுக்கு அரசாங்கம்தான் உதவ வேண்டும்.” பிறகு வருமான வரி கட்ட உயர்த்தப்பட்டிருக்கும் தனி நபர் வருமானம் பற்றி புலம்புகிறார்: “எங்களுக்கு அதில் என்ன இருக்கிறது? நாங்கள் வாங்கும் பொருட்களில் வரிகள் கட்டுகிறோம் அல்லவா? அரசாங்கம் பெரிய அளவில் பேசுகிறது. ஆனால் எல்லா பணமும் எங்கள் வரியில் இருந்துதான் வருகிறது.” வேலை பார்க்கும் வீட்டிலுள்ள பால்கனியில் காயும் துணிகளை எடுக்கத் தொடங்குகிறார்.
எங்களின் உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்: “எங்களுடைய பணத்தைதான் அரசாங்கம் கொடுக்கிறது. ஆனால் அதற்கு பெரியளவில் பெருமை பேசிக் கொள்கிறது!”
தமிழில்: ராஜசங்கீதன்