துணியை தடவி பார்ப்பதை ருகாபாய் படாவியால் தவிர்க்க முடியவில்லை. எங்களின் உரையாடலினூடாக, அவர் அப்படி தடவுவது அவரை வேறொரு காலத்துக்கும் வாழ்க்கைக்கும் இட்டுச் செல்வதை உணர்ந்தேன்.
“இது என்னுடைய திருமணப் புடவை,” என்கிறார் அவர் பில் மொழியில். அக்ரானி தாலுகாவின் மலை மற்றும் பழங்குடி பகுதிகளில் பேசப்படும் மொழி அது. கட்டிலில் அமர்ந்திருக்கும் அந்த 90 வயது பெண், இளஞ்சிவப்பு மற்றும் தங்க ஜரிகை போட்ட பருத்திப் புடவையை தன் மடியில் வைத்து மெல்ல தடவி பார்க்கிறார்.
“என் பெற்றோர் இதை கடும் உழைப்பில் சம்பாதித்த பணத்தை கொண்டு வாங்கினார்கள். அவர்களின் நினைவுக்கான அடையாளமாக நான் கொண்டிருப்பது இப்புடவை மட்டும்தான்,” என்கிறார் அவர் குழந்தைத்தனமான புன்னகையுடன்.
மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்திலுள்ள அக்ரானி தாலுகாவின் மொஜாரா கிராமாத்தில் ருகாபாய் பிறந்தார். இப்பகுதியில்தான் அவர் எப்போதும் வசித்திருந்தார்.
“என் திருமணத்துக்கு என் பெற்றோர் 600 ரூபாய் செலவழித்தனர். அச்சமயத்தில் அது பெரும் பணம். இந்த புடவை உள்ளிட்ட ஆடைகளை ஐந்து ரூபாய்க்கு அவர்கள் வாங்கினார்கள்,” என்கிறார் அவர். நகைகளை மட்டும் வீட்டில் தாய் செய்திருக்கிறார்.
“நகை ஆசாரி அல்லது கைவினைஞர் யாரும் இல்லை. வெள்ளி நாணயங்களை கொண்டு ஒரு கழுத்தணியை என் தாய் செய்தார். நிஜ காசுகள். நாணயங்களில் துளையிட்டு, கோத்டியின் (கையால் தைக்கப்பட்ட படுக்கைகள்) ஒரு தடிமனான நூலில் அவற்றை கோர்த்தார்,” என்கிறார் ருகாபாய் சிரித்தபடி. பிறகு மீண்டும் அவர் சொல்கிறார், “வெள்ளி நாணயங்கள். இன்றுள்ள காகித பணம் அல்ல.”








