’சுதந்திரப் போராட்ட காலகட்டத்திலும் கூட நிச்சயமற்ற தன்மை நிலவியது. நாங்கள் ஜெயிக்க மாட்டோம் என்று கூட எங்களுக்கு சொல்லப்பட்டது. இந்த உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை எதிர்த்து நிற்கிறீர்கள் என்றார்கள். ஆனால் அந்த மிரட்டல்களையும் எச்சரிக்கைகளையும் தாண்டி நாங்கள் எழுந்து நின்றோம். தயக்கமின்றி போராடினோம். அதனால்தான் நாங்கள் இன்று இங்கு இருக்கிறோம்.’
ஆர். நல்லகண்ணு
*****
“மஞ்சள் பெட்டிக்கு வாக்களியுங்கள்!” என்றன கோஷங்கள். “மங்களகரமான மஞ்சள் பெட்டியை தேர்ந்தெடுங்கள்!”
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 1937-ம் ஆண்டில் நடந்த மெட்ராஸ் மாகாண தேர்தலின் நிலவரம் இது.
மேளம் அடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள்தான் இந்த முழக்கங்களை போட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்களிக்கும் வயதை கூட அடைந்திருக்கவில்லை. அந்த வயதில் இருந்தாலும் வாக்களிக்கும் தகுதி அவர்களுக்குக் கிடையாது. வளர்ந்தவர்கள் அனைவராலும் ஓட்டு போட முடியாத காலக்கட்டம் அது.
நிலம் மற்றும் சொத்துரிமை கொண்டவர்களால் மட்டுமே ஓட்டு போட முடியும். கிராமப்புறங்களில் பணக்கார விவசாயிகள் மட்டும்தான் ஓட்டு போட முடியும்.
வாக்குரிமை இல்லாத இளைஞர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் காட்சி, முற்றிலும் புதிய காட்சி அல்ல.
ஜூலை 1935-ம் ஆண்டில் நீதிக்கட்சியின் உறுப்பும் செய்தித்தாளுமான ஜஸ்டிஸ் , அலட்சியமாகவும் சற்றே அவமதிக்கும் தொனியுடனும் இப்படி குறிப்பிட்டிருந்தது:
நீங்கள் எந்த கிராமத்துக்கும் செல்லலாம். காங்கிரஸ் கதர் ஆடைகளையும் காந்தி குல்லாய்களையும் அணிந்து கொண்டு மூவண்ண பதாகைகளை சுமந்து வரும் குழுக்களை நிச்சயமாக நீங்கள் எதிர்கொள்வீர்கள். அவர்களின் எண்பது சதவிகித ஆண்களும் தொழிலாளர்களும் தன்னார்வலர்களும் வாக்குரிமையற்றவர்கள். சொத்துகள் இல்லாதவர்கள். வேலைகள் இல்லாத நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் மக்களில் இருந்து வந்தவர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள்...
1937-ம் ஆண்டில் அத்தகைய இளையோர் கூட்டத்தில் ஒருவராக இருந்தவர்தான் R.நல்லகண்ணு. அப்போது அவருக்கு 12 வயது. தற்போது (2022-ம் ஆண்டில்) 97 வயதாகும் அவர், அன்று நடந்த அந்த சம்பவங்களை விவரிக்கிறார். அவர் இளைஞனாக இருந்தபோது நடந்த அவற்றை சிரித்தபடி சொல்கிறார். “நிலம் சொந்தமாக வைத்திருந்தவர்களும் பத்து ரூபாயும் அதற்கு மேலும் நிலவரி கட்டியவர்களும்தான் ஓட்டு போட முடியும்,” என நினைவுகூருகிறார். எப்படி இருந்தாலும் “15-லிருந்து 20 சதவிகித இளைஞர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில்”தான் தேர்தல் முறை உருவாக்கப்பட்டிருந்தது என்கிறார் அவர். மேலும் “ஒரு தொகுதியில் 1000-லிருந்து 2000 பேர் வரைதான் வாக்களிக்க முடியும்.”
அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த ஸ்ரீவைகுண்டத்தில்தான் நல்லகண்ணு பிறந்தார். தற்போதைய தமிழ்நாட்டின் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது.
நல்லகண்ணுவின் அரசியல் செயல்பாடு சற்று முன்னதாகவே தொடங்கி விட்டது.
“நான் குழந்தையாக இருக்கும்போதே அரசியல் செயல்பாட்டுக்கு வந்து விட்டேன். நான் இருந்த பகுதிக்கு அருகே இருந்த தூத்துக்குடியின் ஆலைத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பருத்தி ஆலைகள் குழுமத்தின் ஓர் ஆலை. பஞ்சாலை தொழிலாளர் வேலை நிறுத்தம் எனக் குறிப்பிடப்பட்டது.
“அவர்களை ஆதரிக்கும் வகையில் எங்கள் டவுனின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி சேகரிக்கப்பட்டு பெட்டிகளில் தூத்துக்குடி போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எங்களைப் போன்ற சிறுவர்கள்தான் சென்று அரிசியை சேகரிப்போம்.” மக்கள் ஏழைகளாகதான் இருந்தார்கள். “ஆனாலும் அவர்களால் முடிந்த அளவுக்கு கொடுத்தார்கள். அச்சமயத்தில் எனக்கு வயது 5 அல்லது 6 இருக்கும். ஆனால் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவு எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் சற்று முன்னதாகவே நான் அரசியல் செயல்பாட்டில் இறங்கி விட்டேனென சொல்லலாம்.”
அவரை மீண்டும் 1937-ம் ஆண்டின் தேர்தல்களுக்கு கொண்டு வந்தோம்: மஞ்சள் பெட்டிக்கு ஓட்டு போடுவது என அவர் எதை சொல்கிறார்?
"அச்சமயத்தில் மெட்ராஸில் இரண்டு பிரதானக் கட்சிகள்தான் இருந்தன,” என்கிறார் அவர். “காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சி. தேர்தல் சின்னங்களுக்கு பதிலாக கட்சிகளுக்கு பயன்படுத்தப்படும் ஓட்டு பெட்டியின் நிறத்தைக் கொண்டு கட்சிகள் அடையாளப்படுத்தப்பட்டன. நாங்கள் பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் பெட்டி வழங்கப்பட்டிருந்தது. நீதிக்கட்சிக்கு பச்சைப்பெட்டி. அந்த காலக்கட்டத்தில் ஒரு வாக்காளர், தான் ஆதரிக்கும் கட்சியை அடையாளப்படுத்துவதற்கான சிறந்த வழியாக அது மட்டும்தான் இருந்தது.”
நிச்சயமாக தேர்தல்களில் நிறைய வேடிக்கைகளும் நாடகங்களும் வண்ணங்களும் நிறைந்திருந்தன. “தேவதாசி பிரச்சாரகர் தஞ்சாவூர் காமுகண்ணம்மாள்... எல்லாரையும் மூக்குப்பொடி டப்பாவுக்கு வாக்களிக்கக் கேட்கிறார்,” என இந்து நாளிதழ் எழுதியது. அந்த காலக்கட்டத்தில் மூக்குப்பொடி டப்பாக்களின் நிறங்களாக மஞ்சள் அல்லது தங்க நிறம் இருந்தது. இந்து நாளிதழேகூட ’மஞ்சள் பெட்டிகளை நிரப்புங்கள்.’ என தலைப்புச் செய்தி எழுதியது.
“நிச்சயமாக நான் 12 வயதில் வாக்களிக்க முடிந்திருக்காது,” என்கிறார் நல்லகண்ணு. “ஆனால் நான் வெளியே சென்று என்னால் முடிந்த அளவுக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்தேன்.” மூன்று வருடங்கள் கழித்து தேர்தலை தாண்டிய அரசியல் பிரசாரங்களில் அவர் ஈடுபடவிருந்தார். “பறையடித்து கோஷங்கள்’ எழுப்பவிருந்தார்.”
ஆனால் அச்சமயத்தில் அவர் காங்கிரஸ் ஆதரவாளராக இருக்கவில்லை. “15 வயதிலிருந்து நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன்,” என்கிறார் நல்லகண்ணு. நண்பர்களை பொறுத்தவரை அவர் ’தோழர் ஆர்என்கே’. முறைப்படியான கட்சி உறுப்பினராக இன்னும் அவருக்கு சற்று வயதாக வேண்டியிருந்தது. ஆனால் அடுத்த சில பத்தாண்டுகளில் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிக முக்கியமான ஆளுமையாக ஆர்என்கே உருவானார். செங்கொடிக்கான ஆதரவை வேண்டி வெற்றிகரமாக பிரச்சாரம் செய்யும் இடத்தை அடைந்தார். மஞ்சள் பெட்டிக்கான பிரசாரம் முடிந்துபோனது.
*****
“திருநெல்வேலியில் நாங்கள் வசித்த பகுதியில் ஒரே ஒரு பள்ளிக்கூடம்தான் இருந்தது. எனவே அதை எளிமையாக ‘ஸ்கூல்’ என அழைத்தோம். அதுதான் அதனுடைய ஒரே பெயர்.”
நல்லகண்ணு சென்னையில் இருக்கும் அவருடைய சிறிய வீட்டு அலுவலகத்தில் அமர்ந்து நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே மேஜையில் சற்று தள்ளி சிறு சிலைகள் இருக்கின்றன. லெனின், மார்க்ஸ் மற்றும் பெரியார் ஆகியோரின் சிலைகள். அவருக்கு பின்னால் பெரிய அளவில் அம்பேத்கரின் தங்க நிறச்சிலை. அதற்கும் பின்னால் புரட்சிக்கவி சுப்பிரமணிய பாரதியின் பெரிய ஓவியம் ஒன்று. பெரியாரின் சிலைக்கு பின்னாலும் இன்னொரு ஓவியம். பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ். இவை எல்லாவற்றுக்கும் அடுத்தபடியாக 'குறைவான நீரை பயன்படுத்துக’ என நம்மை அறிவுறுத்தும் ஒரு நாள்காட்டி.
அந்த மொத்தக் காட்சியும், மூன்றாவது முறையாக நாம் பேசிக் கொண்டிருக்கும் அந்த மனிதரின் அறிவார்ந்த வளர்ச்சி மற்றும் வரலாறை எடுத்துச் சொல்வதாக இருந்தது. அது 2022-ம் ஆண்டின் ஜூன் மாதம் 25ஆம் தேதி. அவருடனான எங்களுடைய முதல் நேர்காணல் 2019-ம் ஆண்டில் நடந்தது.
”என்னை மிகவும் ஈர்த்த கவிஞர் பாரதியார்,” என்கிறார் நல்லகண்ணு. ”அவருடைய கவிதைகளும் பாடல்களும் பலமுறை தடை செய்யப்பட்டன.” ’சுதந்திரப் பள்ளு’ என்கிற பாடலிலிருந்து சில வரிகளை அவர் பாடுகிறார். பாரதியின் மிகச்சிறந்த கவிதை அது. ”1909-ம் ஆண்டில் அதை எழுதினாரென நினைக்கிறேன். அதாவது 1947-ம் ஆண்டில் இந்திய சுதந்திரத்தை பெறுவதற்கு, 38 ஆண்டுகளுக்கு முன்பே அவர் அதை பெற்று விட்டது போன்ற ஆனந்தத்தில் கொண்டாடினார்!”
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே
வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே
பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே
நம்மை ஏய்ப்போருக்கேவல் செய்யும் காலமும் போச்சே
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
பாரதி 1921-ம் ஆண்டிலேயே இறந்து விட்டார். நல்லகண்ணு பிறப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன். அந்தப் பாடலோ அதற்கும் முன்னதாகவே எழுதப்பட்டு விட்டது. ஆனால் அந்த பாடலும் பிற பாடல்களும் போராட்ட வருடங்களில் அவருக்கு பெரும் உதவியாக இருந்தன. 12 வயதுக்கு முன்பே பாரதியாரின் பல பாடல்களும் கவிதைகளும் ஆர்என்கேவுக்கு தெரிந்திருந்தது. சில பத்திகளையும் வரிகளையும் அவர் இன்றும் கூட நினைவுகூர முடிகிறது. ”சிலவற்றை நான் பள்ளியில் படிக்கும்போது இந்தி பண்டிதர் பல்லவேஷம் செட்டியாரிடம் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர். நிச்சயமாக இவை எதுவும் பள்ளி பாடத்திட்டத்தில் இருக்கவில்லை.
”பாரதியாரின் எழுத்துகளை கொண்ட ஒரு புத்தகத்தை S.சத்தியமூர்த்தி எங்கள் பள்ளிக்கு வந்த போது அவரிடம் நான் பெற்றேன். அது அவருடைய கவிதைகள் அடங்கிய தேசிய கீதம் என்ற புத்தகம்.” சத்தியமூர்த்தி ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் அரசியல்வாதியும் கலை போற்றுகிறவரும் ஆவார். 1917-ம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த அக்டோபர் புரட்சியை முதன்முதலாக குறிப்பிட்டவர் பாரதிதான். அதைக் கொண்டாடி ஒரு பாடல் கூட அவர் எழுதினார்.
பாரதி மீது கொண்டிருந்த அன்பின் ஊடாகவும் எண்பது ஆண்டுகளாக பங்கெடுத்த விவசாயம் மற்றும் உழைக்கும் வர்க்க போராட்டங்களின் ஊடாகவும் நல்லகண்ணுவை புரிந்து கொள்ள முயற்சிப்பது சிறப்பாக இருக்கும்.
வேறு விதத்தில் 'தோழர் ஆர்என்கே’வின் கதையை சொல்வதென்பது மிகவும் சிரமம். நான் சந்தித்த மிகவும் தன்னடக்கமான மனிதர்களில் அவரும் ஒருவர். அவர் பேசுகிற போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் பெரிய சம்பவங்கள் எதிலும் பிரதானமாக தன்னை நிறுத்திக் கொள்ள அவர் மறுக்கிறார். அவற்றில் சில சம்பவங்களில் அவரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனாலும் தன்னை முன்னிறுத்தி அச்சம்பவத்தை அவர் விவரிப்பதை நீங்கள் பார்க்கவே முடியாது.
”எங்கள் மாநிலத்தில் விவசாயிகளுக்கான இயக்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் தோழர் ஆர்என்கே,” என்கிறார் ஜி.ராமகிருஷ்ணன். சிபிஐ(எம்)மின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் ஜி ஆர், எந்த தயக்கமும் இன்றி, 97 வயது இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் பங்களிப்புக்கு மரியாதை அளிக்கிறார். ”அவரின் பதின்வயது காலம் தொடங்கி, பல ஆண்டு காலமாக, சீனிவாசராவுடன் சேர்ந்து அவர்தான் மாநிலம் முழுவதும் விவசாய சங்கங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியவர். இவர்கள்தான் இடதுசாரிகளுக்கான வலிமையை கொடுப்பவர்களாக இன்றும் இருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஓய்வற்ற பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களால் அந்த அடித்தளத்தை உருவாக்க நல்லகண்ணு உதவினார்.”
நல்லகண்ணுவின் போராட்டங்கள் விவசாயிகளின் போராட்டங்களை பெருமளவில் காலனியாதிக்க இயக்கத்துடன் இணைத்தது. மேலும் முக்கியமாக நிலபிரபுத்துவ எதிர்ப்பு போராட்டங்கள் அந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமாக இருந்தது. 1947-ம் ஆண்டுக்குப் பிறகும் அந்தப் போக்கு நீடித்தது. அவரின் போராட்டமும் பல மறக்கப்பட்ட சுதந்திரங்களுக்கான போராட்டமாகவும் இருந்தது. இன்னும் தொடர்கிறது.
”நாங்கள் இரவு நேரங்களில் அவர்களுடன் சண்டையிடுவோம். கற்களை எறிவோம். அவைதான் எங்களுடைய ஆயுதங்கள். அவர்களை விரட்டி அடிப்போம். சில நேரங்களில் அழைப்பு விடுத்து சண்டை போடுவோம். 1940-களில் நேர்ந்த போராட்டங்களில் பலமுறை இது நடந்தது. நாங்கள் சிறுவர்களாகதான் இருந்தோம். ஆனால் போராடினோம். இரவு பகலாக, எங்களுக்கு சாத்தியப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு போராடினோம்!”
யாரை எதிர்த்து போராடினார்கள்? எவற்றிலிருந்து யாரை விரட்டி அடித்தார்கள்? எங்கு விரட்டி அடித்தார்கள்?
”எங்களின் டவுன்களுக்கு அருகே இருந்த உப்பளத்தில் எல்லா உப்பளங்களும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தது. பணியாளரின் நிலைமையோ மிகவும் கொடுமையாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆலைப் போராட்டங்களின் போது இருந்த நிலைமை. நிறையப் போராட்டங்கள் நடந்தன. பொதுமக்களின் இரக்கமும் அவர்களுக்கு இருந்தது. ஆதரவும் இருந்தது.
”காவல்துறை உப்பள உரிமையாளர்களின் ஏவலாளாக நடந்து கொண்டது. ஒரு மோதலில் உதவி ஆய்வாளர் இறந்து போனார். அங்கிருந்த காவல் நிலையத்தின் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது. பிறகு அவர்கள் வாகன ரோந்து முறையை உருவாக்கினார்கள். பகற்பொழுதில் அவர்கள் உப்பளங்களுக்கு செல்வார்கள். இரவானதும் எங்கள் கிராமங்களுக்கு அருகே வந்து முகாமிடுவார்கள். அப்போதுதான் நாங்கள் அவர்களுடன் மோதினோம்.” இந்தப் போராட்டங்களும் மோதல்களும் சில வருடங்களுக்கு தொடர்ந்தன. ”ஆனால் 1942-ம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் வந்தபோதுதான் அவை அதிகமாயின.”
இப்போராட்டங்களில் எல்லாம் நல்லகண்ணு கலந்து கொண்டதை அவரின் தந்தை ராமசாமி தேவர் ரசிக்கவில்லை. விவசாயியான அவர் நான்கைந்து ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருந்தார். ஆறு குழந்தைகள். இளம் ஆர்என்கே வீட்டில் அடிக்கடி தண்டிக்கப்படுவார். சில நேரங்களில் அவரின் தந்தை பள்ளிக் கட்டணம் கட்ட கூட மறுப்பார்.
”’உன் மகன் படிக்கவில்லையா?’ என மக்கள் அவரிடம் கேட்பார்கள். அவர் எப்போதும் வெளியே சென்று கத்துவார். காங்கிரஸ் கட்சியில் போய் சேர்ந்துவிட்டார்.” பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கான கெடு ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை இருக்கும். ’பள்ளி கட்டணத்திற்கு பணம் கேட்டால் என்னை கத்துவார்: ’உன்னுடைய படிப்பை நிறுத்திவிட்டு விவசாயத்தில் உன் மாமாக்களுக்கு உதவு,’ என்பார்.”
”நாட்கள் ஓடும். அப்பாவுக்கு நெருக்கமான யாராவது அவரை சமாதானப்படுத்துவார். என்னுடைய போக்கை நான் தொடர மாட்டேன் என அவர்கள் அவருக்கு சத்தியம் செய்வார்கள். அதற்குப் பிறகுதான் அவர் கட்டணத்தை கட்டுவார்.”
ஆனால் ”அவர் என் வாழ்க்கையையும் இயல்பையும் எதிர்ப்பது அதிகரிக்க தொடங்கியபோது, எனக்கும் அவருக்குமான முரண்பாடும் அதிகரித்தது. மதுரை ஹிந்து கல்லூரியில் தமிழ் இன்டர்மீடியட் வரை படித்தேன். அது திருநெல்வேலி சந்திப்பில் இருந்தது. ஆனால் மதுரை ஹிந்து கல்லூரி என அழைக்கப்பட்டது. அங்கு இரண்டு வருடங்கள் மட்டும் தான் நான் படித்தேன். அதற்கு மேல் முடியவில்லை.”
ஏனென்றால் அவர் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். அவர் பணிவின் காரணமாக சொல்ல மறுத்தாலும் குறிப்பிடத்தகுந்த வகையில் போராட்டங்களை அவர் ஒருங்கிணைக்கவும் தொடங்கியிருந்தார். இளம் தலைவராக ஆர்என்கே உருவாகிக் கொண்டிருந்தார். ஆனால் புகழை எப்போதும் அவர் நாடியது இல்லை. தவிர்த்தே வந்தார்.
அவர் பங்கெடுத்த நடவடிக்கைகள் மற்றும் முன்னெடுத்த செயல்பாடுகள் ஆகியவற்றின் வரிசையை சரியாக சொல்வது சிரமம். ஏனெனில் அவற்றின் எண்ணிக்கை அதிகம். பல்வேறு முனைகளில் நடத்தப்பட்டவையும் கூட.
எனினும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பல முக்கியமான தருணங்களை நமக்கு சொல்கிறார்: ”வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது நடந்த போராட்டங்கள்.” அச்சமயத்தில் அவருக்கு 17 வயது கூட ஆகவில்லை. ஆனால் முக்கியமான ஆளுமையாக மாறிவிட்டிருந்தார். 12லிருந்து 15 வரையிலான வயதுகளில் தான் அவர் கம்யூனிஸ்ட் ஆக மாறினார்.
எந்த மாதிரியான போராட்ட சந்திப்புகளை அவர் ஒருங்கிணைத்தார் அல்லது பங்கெடுத்தார்?
தொடக்கத்தில் ”தகரத்தாலான மெகா ஃபோன்களை நாங்கள் வைத்திருந்தோம். கிராமத்திலோ டவுனிலோ கிடைக்கும் நாற்காலிகளையும் மேஜைகளையும் ஒன்றாக போட்டு பாடத் துவங்குவோம். முக்கியமாக கூட்டத்திடம் பேசும் பேச்சாளருக்குதான் அந்த மேஜை. அதில்தான் பேச்சாளர் ஏறி நின்று பேசுவார். நினைவில் கொள்ளுங்கள், கூட்டம் தவறாமல் வந்து சேரும்.” மீண்டும் மக்களை ஒருங்கிணைப்பதில் அவர் கொண்டிருந்த முக்கியமான பங்கை பற்றி அவர் பேசவில்லை. அவரைப் போன்ற காலாட்படையினரால்தான் அது சாத்தியமானது.
”பிற்பாடு ஜீவானந்தம் போன்ற பேச்சாளர்கள் அந்த மேஜைகளில் ஏறி நின்று பெரும் கூட்டங்களின் முன் உரையாற்றுவார்கள். மைக்குகள் எல்லாம் இருக்காது. அவருக்கு அவை தேவைப்படவில்லை.
”கொஞ்ச காலம் கழித்து நல்ல மைக்குகளும் ஸ்பீக்கர்களுக்கும் எங்களுக்கு கிடைக்கத் தொடங்கின. ’சிகாகோ மைக்’ என அழைக்கப்பட்ட மைக்குகள்தான் மிகவும் பிடித்தமானவை. அல்லது சிகாகோ ரேடியோ சிஸ்டம் என சொல்லலாம். நிச்சயமாக அவற்றை அடிக்கடி எங்களால் வாங்க முடியவில்லை. அந்த அளவுக்கு வசதியும் இல்லை.”
பிரிட்டிஷார் வந்து ஒடுக்கும்போது என்ன செய்வார்கள்? எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வார்கள்?
”அது போன்ற சூழல்கள் நிறைய இருந்தன. உதாரணமாக ராயல் இந்தியக் கடற்படையின் கலகம் (1946 ). கம்யூனிஸ்டுகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டார்கள். அதற்கு முன்பு கூட ரெய்டுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் கிராமங்களின் ஒவ்வொரு கட்சி அலுவலகத்திலும் பிரிட்டிஷார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அது சுதந்திரத்திற்கு பிறகும் தொடர்ந்தது. கட்சிக்குத் தடை விதிக்கப்பட்ட போது அது நடந்தது. எங்களிடம் செய்திகளும் பத்திரிகைகளும் கூட இருந்தன. உதாரணமாக ஜனசக்தி. பிறவகை தொடர்பு கொள்ளும் வழிகளும் இருந்தன. பல நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்ட சில வகை சமிக்ஞைகளை பயன்படுத்தினோம்.
”கட்டபொம்மன் காலத்தில் மக்கள், வீட்டு வாசலில் வேப்பிலைகளை வைத்திருந்ததைப் போல. வீட்டில் இருக்கும் யாருக்கோ அம்மை அல்லது பிற நோய்கள் வந்திருக்கிறது என்பதை குறிப்பிடுவதற்கான அடையாளம் அது. ஆனால் அந்த வீட்டுக்குள் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான ரகசிய அடையாளமாகவும் அது பயன்படுத்தப்பட்டது.
”வீட்டுக்குள் குழந்தை அழும் குரல்கள் கேட்டால் கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என அர்த்தம். வாசலின் அருகே இருக்கும் மாட்டுச்சாணம் ஈரமாக இருந்தால் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது என அர்த்தம். மாட்டுச்சாணம் காய்ந்து விட்டால் அது உடனே கிளம்பி செல்வதற்கான அடையாளம். ஆபத்து வருகிறது என்பதற்கான அடையாளம். அல்லது கூட்டம் நடந்து முடிந்து விட்டது என்பதற்கான அடையாளமாகவும் அது இருந்தது.”
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்என்கேவுக்கான பெரும் ஊக்கமாக எது இருந்தது?
”கம்யூனிஸ்ட் கட்சிதான் எங்களுக்கான பெரும் ஊக்கத்தை வழங்கியது.”
*****
”நான் கைது செய்யப்பட்டதும் ஏன் என்னுடைய மீசை எடுத்தேனா?” ஆர்என்கே சிரிக்கிறார். ”நான் எடுக்கவில்லை. மேலும் என் முகத்தை மறைப்பதற்காகவும் அதை நான் செய்யவில்லை. அப்படி இருந்திருந்தால் ஏன் முதலில் நான் ஒரு மீசை வளர்க்க வேண்டும்?
”காவலர்கள் சிகரெட்டை கொண்டு என் மீசையை பொசுக்கினார்கள். மெட்ராஸ் நகரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற இன்ஸ்பெக்டர் என்னை சித்திரவதை செய்ய அதை செய்தார். அதிகாலை 2 மணிக்கு அவர் என்னுடைய கைகளை கட்டிப்போட்டார். அடுத்த நாள் காலை 10 மணிக்குதான் அவற்றை கழற்றிவிட்டார். பிறகு ரொம்ப நேரத்துக்கு தடியால் என்னை அடித்துக் கொண்டிருந்தார்.”
எல்லா சக சுதந்திரப் போராட்டக்காரர்கள் போல அவரும் அந்த சம்பவத்தை எந்தவித தனிப்பட்ட வெறுப்புணர்வும் இன்றி நினைவுகூர்ந்தார். சித்திரவதை செய்தவர் மீது எந்த வெறுப்பும் அவருக்கு இல்லை. தொடர்ந்து வந்த நாட்களில் அந்தக் காவல் ஆய்வாளர் மீது தன் வஞ்சத்தை தீர்க்க ஆர்என்கே முயலவில்லை. அப்படி அவருக்கு ஒரு முறை கூட தோன்றவுமில்லை.
”இச்சம்பவம் நடந்தது 1948-ம் ஆண்டில்,” என்கிறார். அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு. ”மெட்ராஸ் உள்ளிட்ட பல மாகாணங்களில் கட்சி தடை செய்யப்பட்டது. 1951-ம் ஆண்டு வரை தடை நீடித்தது.
”நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டி இருந்ததையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாங்கள் ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. இப்போராட்டங்கள் 1947-ம் ஆண்டுக்கும் ரொம்ப முன்னதாகவே தொடங்கப்பட்டு சுதந்திரத்திற்கு பின்னாலும் நீடித்தது.
”சுதந்திரப் போராட்ட இயக்கம், சமூக மாற்றம், நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றை நாங்கள் ஒன்றாக்கினோம். அப்படித்தான் நாங்கள் இயங்கினோம்.
”மேம்பட்ட, சமமான ஊதியங்களுக்காக நாங்கள் போராடினோம். தீண்டாமை ஒழிக்க போராடினோம். கோவில் பிரவேச இயக்கங்களிலும் நாங்கள் முக்கியமான பங்காற்றினோம்.
” ஜமீன்தாரி முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்கான பிரசாரம் பெரிய இயக்கமாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. மாநிலத்தில் பல முக்கியமான ஜமீன்தார்கள் இருந்தனர். நாங்கள் மிராசுதாரி (வாரிசுரிமை வழியாக கிடைக்கப்பெறும் நில உரிமை) மற்றும் இனாம்தாரி (இலவசமாக ஆட்சியாளர்களிடமிருந்து தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் கிடைக்கப்பெறும் நிலங்கள்) முறைகளை எதிர்த்து சண்டையிட்டோம். இந்தப் போராட்டங்களில் முன்னணி வகித்தது கம்யூனிஸ்டுகள்தான். பெரும் நிலப்பிரபுக்களையும் அவர்களின் தனியார் படைகளையும் ரவுடிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
”புண்ணியூர் சாம்பசிவ ஐயர், நெடுமணம் சாமியப்ப முதலியார், பூண்டி வண்டியார் போன்றவர்கள் இருந்தனர். ஆயிரக்கணக்கான வளமான நிலத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள்.”
ஓர் அற்புதமான வரலாற்றுப் பாட வகுப்பில் இப்போது நாங்கள் அமர்ந்திருந்தோம். அந்த வரலாற்றை உருவாக்க உதவிய மனிதரே எங்களுக்கு அப்பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.’
‘சுதந்திரப் போராட்டம், சீர்திருத்தம், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஆகியவற்றை ஒன்றாக்கினோம். மேம்பட்ட, சமமான ஊதியங்களுக்காக நாங்கள் போராடினோம். தீண்டாமை ஒழிக்க போராடினோம். கோவில் பிரவேச இயக்கங்களிலும் நாங்கள் முக்கியமான பங்காற்றினோம்’
”பல காலமாக பின்பற்றப்பட்டு வந்த பிரம்மதேயம் மற்றும் தேவதான முறைகளும் இருந்தன.
”பிரம்மதேய முறைப்படி ஆட்சியாளர்களால் நிலங்கள் இலவசமாக பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை ஆண்டு அந்த நிலத்தில் வரும் லாபங்களை எடுத்துக் கொண்டனர். அவர்கள் நேரடியாக சென்று விவசாயம் செய்ய மாட்டார்கள். ஆனால் லாபங்களை மட்டும் பெற்றுக் கொள்வார்கள். தேவதான முறைப்படி இத்தகைய நிலங்கள் பரிசுகளாக கோவில்களுக்கு வழங்கப்படும். சில நேரங்களில் ஒரு மொத்த கிராமமும் கூட கோவிலுக்கு வழங்கப்படும். சிறு விவசாயிகளும் பணியாளர்களும் அவர்களின் உத்தரவின் கீழ் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை எதிர்த்து யாரேனும் நின்றால் அவர்களை வெளியேற்றி விடுவார்கள்.
”இத்தகைய மடங்கள், 6 லட்சம் ஏக்கர் நிலங்களை சொந்தமாக கொண்டிருந்தன. இப்போது கூட இருக்கலாம். ஆனால் அவற்றின் அதிகாரம் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் வலுவாக குறைக்கப்பட்டிருக்கிறது.
”ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் 1948-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால் ஜமீன்தார்களுக்கும் பெருநில உடைமையாளர்களுக்கும்தான் நிவாரணம் வழங்கப்பட்டது. அவர்களின் நிலத்தில் கடுமையாக உழைத்த மக்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. வசதியான குத்தகை விவசாயிகள் கொஞ்சம் நிவாரணம் பெற்றனர். வயல்களில் உழைத்த ஏழைகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. 1947-ம் ஆண்டு தொடங்கி 49-ம் ஆண்டு வரை பெருமளவுக்கான வெளியேற்றங்கள் இந்த கோவில் நிலங்களில் நடந்தது. ”விளைவிப்பவர்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால் தான் அவர்கள் நன்றாக வாழ முடியும்” என்ற முழக்கத்துடன் நாங்கள் பெருமளவுக்கான போராட்டங்களை தொடங்கினோம்.”
”1948-ம் ஆண்டு தொடங்கி 1960-ம் ஆண்டு வரை எங்களின் இந்த உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்தன. முதலமைச்சராக இருந்த ராஜாஜி, நிலப்பிரபுக்கள் மற்றும் மடங்களின் பக்கம் நின்று கொண்டார். ”உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்” என நாங்கள் கூறினோம். ராஜாஜியோ நிலத்துக்கான ஆவணங்களை கொண்டிருப்பவர்களுக்குதான் நிலம் சொந்தம் என்றார். ஆனால் எங்களின் போராட்டங்களினால் இந்தக் கோவில்களும் மடங்களும் கொண்டிருந்த அதிகாரம் உடைய ஆரம்பித்தது. அவர்களின் அறுவடை விதிகளையும் முறைகளையும் நாங்கள் எதிர்த்தோம். அடிமைகளாக இருக்க நாங்கள் மறுத்தோம்.
”நிச்சயமாக இவை எல்லாவற்றையும் சமூகப் போராட்டங்களிலிருந்து பிரித்து பார்த்து விட முடியாது.
”ஓர் இரவில் கோவிலில் நடந்த ஒரு போராட்டத்தை பார்த்தது எனக்கு நினைவில் இருக்கிறது. எல்லா கோவில்களிலும் ரத விழாக்கள் நடத்தப்படும். விவசாயிகள்தான் ரதங்களை கயிறு கட்டி வெளியே இழுத்துக் கொண்டு வருவார்கள். வெளியேற்றங்கள் தொடர்ந்தால் விவசாயிகள் எங்கும் வந்து ரதங்களை வெளியே எடுத்து வர மாட்டார்கள் என நாங்கள் சொன்னோம். மேலும் நடவுக்குப் பிறகு கொஞ்சம் தானியங்களை எடுத்துக் கொள்வதற்கான எங்களின் உரிமையையும் நாங்கள் உறுதிப்படுத்தினோம்.”
இப்போது அவர் சுதந்திரப் போராட்ட காலத்திற்கு முன்னும் பின்னும் ஆக நகர்கிறார். ஒரு கட்டத்தில் அது குழப்பம் விளைவிப்பதாக இருக்கிறது. இன்னொரு கட்டத்தில் அது அக்காலச் சூழலின் சிக்கலான தன்மையையும் புரிய வைக்கிறது. பல வகை சுதந்திரப் போராட்டங்கள் இருந்தன என்பதை உணர வைக்கிறது. அவற்றில் சிலவற்றுக்கு தெளிவான தொடக்க தேதிகளும் முடிவு தேதிகளும் இல்லை. ஆர்என்கே போன்றோர் அத்தகைய சுதந்திரங்களை வெல்வதற்கான முனைப்பில் உறுதியாக இருந்தனர்.
”மேலும் நாங்கள் எல்லா காலத்திலும் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் சித்திரவதை மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக போராடியிருக்கிறோம்.
”1943-ம் ஆண்டில் தலித் தொழிலாளர்களுக்கு சாட்டையடி தண்டனை கொடுக்கப்பட்டது. சாட்டை ஏற்படுத்திய காயங்களில் மாட்டுச் சாணம் கரைக்கப்பட்ட நீர் ஊற்றப்பட்டது. அதிகாலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும். சேவல் கூவியதும் அவர்கள் வேலையில் இருக்க வேண்டும். மிராசுதாரரின் நிலங்களில் கால்நடைகளை குளிப்பாட்டவும் மாட்டுச்சாணத்தை சேகரிக்கவும் வயல்களுக்கு நீர் பாய்ச்சவும் அவர்கள் இருக்க வேண்டும். அந்த காலத்து தஞ்சாவூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டிக்கு அருகே ஒரு கிராமம் இருந்தது. அங்கு தான் நாங்கள் எங்களுடைய போராட்டத்தை நடத்தினோம்.
”விவசாய சங்கத்தின் சீனிவாச ராவின் தலைமையில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. ”செங்கொடி ஏந்தியதற்காக தாக்கப்பட்டால் திருப்பித் தாக்கு” என்பதுதான் போராட்டத்தின் உணர்வாக இருந்தது. இறுதியில் திருத்துறைப்பூண்டியின் மிராசுதாரர்களும் முதலியார்களும் சாட்டையடிக்கு எதிரான ஒப்பந்தத்துக்கு வந்தனர். மாட்டுச் சாண நீர் பயன்படுத்த மாட்டோம் என்றும் பிற காட்டுமிராண்டி செயல்முறைகள் நிறுத்தப்படும் என்றும் உறுதி அளித்தனர்.”
1940-கள் தொடங்கி 1960-கள் வரையிலான எல்லா மகத்தான போராட்டங்களிலும் தன்னுடைய பெரும் பங்கை பெரிய அளவில் சொல்லாமல் ஆர்என்கே அடக்கி வாசிக்கிறார். ஸ்ரீனிவாசராவுக்கு பிறகு தமிழ்நாட்டின் அனைத்து இந்திய விவசாய சங்கத் தலைவராக அவர் ஆனார். 1947-ம் ஆண்டுக்கு பிறகான ஆண்டுகளில் அந்த காலாட்படை வீரர், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நடத்தப்பட்ட போராட்டங்களின் வலிமையான தளபதியாக மாறினார்.
*****
இருவருமே உற்சாகமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் இருந்தனர். சிபிஐ(எம்) தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான N.சங்கரய்யாவின் வீட்டில் நாம் ஒரு நேர்காணலை நடத்துகிறோம். அதாவது அவரும் நல்லகண்ணுவும் சேர்ந்து கலந்து கொண்ட நேர்காணல். எண்பது ஆண்டுகள் தோழமைகளாக இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டது அந்த அறையில் இருந்த எங்கள் அனைவரையும் நெகிழ்த்திய விஷயமாக இருந்தது.
கசப்புணர்வோ கவலையோ இல்லையா? 60 வருடங்களுக்கு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்த போது அவர்கள் இருவரும் இரு வேறு பாதைகளில் சென்றனர். அது இணக்கமான பிரிவாக இருக்கவில்லை.
”ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் பல பிரச்சினைகளிலும் போராட்டங்களிலும் ஒன்றிணைந்து பணியாற்றியிருக்கிறோம்,” என்கிறார் நல்லகண்ணு. ”ஒருவர் மீது ஒருவர் முன்பு கொண்டிருந்த அதே தோழமை உணர்வுடன்.”
”நாங்கள் இருவரும் சந்திக்கும்போது ஒரே கட்சியாக மாறி விடுவோம்,” என்கிறார் சங்கரய்யா.
தற்காலச் சூழலில் அதிகரித்து வரும் மத மோதல்கள் மற்றும் வெறுப்புணர்வு ஆகியவற்றை பற்றிய அவர்களின் கருத்து என்ன? அவர்கள் சுதந்திரம் வாங்கி கொடுத்த தேசம் உயிருடன் நீடிக்கும் என நம்புகிறார்களா?
”அவநம்பிக்கை அதிகமாக இருந்த காலக்கட்டம் சுதந்திரப் போராட்டத்திலும் இருந்திருக்கிறது,’ என்கிறார் நல்லகண்ணு. ’உங்களால் ஜெயிக்க முடியாது என சொல்லியிருக்கிறார்கள். இந்த உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றார்கள். எங்களின் சில குடும்பங்கள் கூட போராட்டங்களிலிருந்து நாங்கள் விலகியிருக்க வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால் நாங்கள் அந்த எச்சரிக்கைகள் மற்றும் மிரட்டல்கள் ஆகியவற்றைத் தாண்டி எழுந்து நின்றோம். அதனால்தான் நாங்கள் இன்றும் இங்கிருக்கிறோம்.”
அதே நேரத்தில் பரந்துபட்ட அளவில் ஒற்றுமை கட்டி எழுப்பப்படுவதற்கான தேவையும் இருப்பதாக இருவரும் சொல்கின்றனர். கடந்த காலத்தை சேர்ந்தவர்களிடமிருந்து பல விஷயங்கள் கற்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ”இஎம்எஸ் (நம்பூதரிபாட்) இருந்த அறைக்குள் காந்தியின் புகைப்படம் கூட இருந்ததென நான் நினைக்கிறேன்,” என்கிறார் ஆர்என்கே.
நம்மிடையே இருக்கும் லட்சக்கணக்கான பேரையும் அச்சுறுத்துகிற அரசியல் சூழல் நிலவும் போது எப்படி இந்த இரண்டு பேரும் அமைதியாகவும் நம்பிக்கையோடும் இருக்கின்றனர்? தோளை குலுக்கியபடி நல்லகண்ணு சொல்கிறார்: ”இதைவிட கொடுங்காலத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என.
பின்குறிப்பு:
2022ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று - The Last Heroes: Foot soldiers of Indian Freedom had already gone to press புத்தகம் பதிப்புக்கு சென்றுவிட்ட சமயத்தில், தமிழ்நாடு அரசாங்கம் தகைசார் தமிழர் விருதை ஆர்என்கேவுக்கு வழங்கியது. தமிழ்ச்சமூகத்துக்கும் மாநிலத்துக்கும் அளப்பரிய பங்களித்த ஆளுமைகளுக்கு தமிழ்நாட்டின் உயரிய விருதான இந்த விருது 2021ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. 10 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் கொண்டிருக்கும் இந்த விருதை ஆர்என்கேவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழில்: ராஜசங்கீதன்