“அப்ரி ஜோ ஆயேகா நா வோட் லேனே, தா கஹேங்கே கி பஹலே பென்ஷன் தோ [அவர்கள் வாக்கு கேட்க வரும்போது, ‘முதலில் எங்களுக்கு ஓய்வூதியம் கொடுங்கள்’ என்று அவர்களிடம் கேட்போம்],” என்கிறார் லிடாட்டி முர்மு.
ஜார்க்கண்ட்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள குசும்தி கிராமத்தின் குக்கிராமமான புருடோலாவில் உள்ள தனது மண் வீட்டிற்கு வெளியே ஒரு தட்டியில் (மேடையில்) அமர்ந்து அவர் பாரியிடம் பேசுகிறார்.
"நாங்கள் இம்முறை வீடுகளும், ஓய்வூதியங்களையும் கோருவோம்," என்று அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும், அவரது அண்டை வீட்டாரும், தோழியுமான ஷர்மிளா ஹெம்ப்ராம் கூறுகின்றார்.
அரசியல் தலைவர்களைக் குறிப்பிட்டு, "இந்த ஒரு முறை மட்டுமே அவர்கள் வருவார்கள்," என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். வாக்குப்பதிவுக்கு முன் வரும் அவர்கள், கிராமத்தில் உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். "அவர்கள் [அரசியல் கட்சிகள்] எங்களுக்கு 1,000 ரூபாய் கொடுப்பார்கள், அதில் ஆண்களுக்கு 500ம், எங்களுக்கு 500ம் கொடுப்பார்கள்," என்கிறார் ஷர்மிளா.
அரசாங்கத் திட்டங்கள் மற்றும் பலன்கள் பெரும்பாலும் இவர்களுக்கு கிடைக்காததால், இந்த பணம் ஏதோ ஒரு செலவுக்கு உதவுகிறது. லிட்டாட்டியின் கணவர் 2022 இல் திடீரென காலமானார் மற்றும் ஷர்மிளாவின் கணவர், ஒரு மாதம் நோய்வாய்ப்பட்டிருந்து பின்னர் 2023 இல் இறந்தார். துக்கத்தில் இருக்கும் இந்த பெண்கள், தாங்கள் வேலைக்குச் செல்லும்போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
கணவர்களை இழந்தபோது, லிடாட்டி மற்றும் ஷர்மிளா இருவரும், சர்வஜன் பென்ஷன் யோஜனா திட்டமான, விதவை ஓய்வூதியத் திட்டத்தைப் பெற முயன்றனர். இத்திட்டதின் படி 18 வயதுக்கு மேற்பட்ட விதவைகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது. "நாங்கள் பல படிவங்களை பூர்த்தி செய்தோம், முக்கியாவைக் [கிராமத் தலைவர்] கூட சென்று சந்தித்தோன், ஆனால் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை." என்கிறார் விரக்தியடைந்த லிட்டாட்டி.
ஓய்வூதியங்கள் மட்டுமல்ல, PMAY (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் மத்திய திட்டங்களின் வழங்கப்படும் வீடுகள் கூட பெரும்பாலான (43 சதவீதம்) பழங்குடியின சமூகங்களான சந்தால், பஹாரியா மற்றும் மஹ்லிவிற்கு (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) கிடைக்கவில்லை. "இந்த முழு கிராமத்தையும் சுற்றிப் பாருங்கள், ஐயா, யாருக்கும் காலனி [ PMAY இன் கீழ் ஒரு வீடு] இருக்காது," என்று ஷர்மிளா ஊர்ஜிதப்படுத்துகிறார்.
குசும்தியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில், ஹிஜ்லா கிராமத்தில், நிருனி மராண்டி மற்றும் அவரது கணவர் ரூபிலா ஹன்ஸ்தா ஆகியோர் கோவிட்-19 லாக்டவுனுக்கு முன்பு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், கேஸ் சிலிண்டரைப் பெற்றனர், ஆனால், “400 ரூபாய் கேஸ் சிலிண்டரின் விலை இப்போது 1,200 ரூபாய். அதை எப்படி வாங்க முடியும்?" என்று நிருனி மராண்டி கேட்கிறார்.
நல் ஜல் யோஜனா மற்றும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா போன்ற மற்ற அரசாங்கத் திட்டங்களும், MGNREGA மூலம் உறுதிசெய்யப்பட்ட வருமானங்களும், மாவட்டத் தலைமையகமான தும்கா நகரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவர்களது கிராமத்திற்கு கிடைக்கவில்லை. கிராமத்தில் உள்ள பல அடி பம்புகள் வறண்டு கிடக்கின்றன. அவரது குடும்பத்தினர் தண்ணீர் எடுப்பதற்காக ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்றுக்கு நடந்து செல்வதாக ஹிஜ்லாவாசி ஒருவர் நிருபரிடம் கூறுகிறார்.
வேலை வாய்ப்புகளும் அதிகம் இல்லைஒ. “[நரேந்திர] மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். அவர் [பிரதமராக] எத்தனை வேலைகளை இளைஞர்களுக்கு கொடுத்திருக்கிறார்? பல அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன,” என்கிறார் தினசரி கூலித் தொழிலாளியான ரூபிலா. இவர்கள் நெல், கோதுமை, மக்காச்சோளம் பயிரிட்டு கொண்டிருந்த இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் கடும் வறட்சி காரணமாக மூன்று ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படவில்லை. "ஒரு கிலோ 10-15 ரூபாய்க்கு வாங்கிய அரிசி, இப்போது ஒரு கிலோ 40 ரூபாய் ஆகிவிட்டது" என்கிறார் ரூபிலா.
ரூபிலா,பல ஆண்டுகளாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) வின் வாக்குச்சாவடி முகவராக இருந்து வருகிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பலமுறை வேலை செய்யாததை அவர் நேரில் பார்த்துள்ளார். “10-11 வாக்குகளை ஏற்கும் இயந்திரம், பன்னிரண்டாவது வாக்கின் போது, தவறான காகிதத்தை அச்சிடும்,” என்கிறார் ரூபிலா. அதை சரி செய்ய அவரிடம் ஒரு ஆலோசனை உள்ளது. "செயல்முறையானது, பட்டனை அழுத்தியதும், காகிதத்தைப் பெற்று, பார்த்து உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும், பின்னர் அதை முந்தைய அமைப்பைப் போலவே பெட்டியில் போடலாம்" என்கிறார் அவர்.
இங்குள்ள மக்களவைத் தொகுதி, பட்டியல் பழங்குடியினரைச் சார்ந்த ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜார்கண்டில் உள்ள தும்கா தொகுதியில், எட்டு முறை பதவி வகித்த, JMM நிறுவனர் ஷிபு சோரன், 2019ல் பிஜேபியின் (பாரதிய ஜனதா கட்சி) சுனில் சோரனிடம் தோல்வியடைந்தார். இப்போது, இரண்டும மாதங்களுக்கு முன்பு, JMMஇல் இருந்து BJPக்கு மாறிய ஷிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன், பாஜக சார்பாக, JMMஇன் நளின் சோரனை எதிர்த்துப் போட்டியிடுகிறார். JMM, இந்திய கூட்டணியின் ஒரு பகுதியாகும்.
ஜனவரி 31, 2024 அன்று ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்தப் பகுதியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. நில மோசடி தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் அவரைக் கைது செய்தது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
"இந்த முறை, எங்கள் கிராமத்தில் இருந்து ஒரு ஓட்டு கூட பாஜகவுக்குப் போகாது" என்கிறார் ரூபிலா. “ ஆஜ் ஆப்கா சர்கார் ஹை தோ அப்னே கிராஃப்தார் கர் லியா. ஏ பாலிடிக்ஸ் ஹை அவுர் ஆதிவாசி அச்சா ஸே சமஜ்தா ஹை [இன்று உங்கள் அரசாங்கம் ஆட்சியில் உள்ளதால், அவரை கைது செய்துள்ளீர்கள், இது அரசியல் என்று பழங்குடி சமூகத்திற்கு நன்கு புரிகிறது].
*****
தங்கள் முப்பதுகளில் இருக்கும் சந்தால் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த லிடாட்டி மற்றும் ஷர்மிளாவிற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை மற்றும் விவசாய பருவத்தில் ஆதியாவாக (குத்தகை விவசாயிகள்) வேலை செய்து, 50 சதவீத உற்பத்தியைப் பெறுகின்றனர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, “எகோ தனா கேதி நஹி ஹுவா ஹை [ஒரு வயலும் பயிரிடப்படவில்லை]” என்கிறார் ஷர்மிளா. தனக்குச் சொந்தமான ஐந்து வாத்துகளின் முட்டைகளை ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தசோரேடியில் உள்ள உள்ளூர் வாராந்திர ஹாட்டில் (சந்தையில்) விற்று, பிழைப்பு நடத்துகிறார்.
வருடத்தின் மீத நாட்களில், அவர்கள் பெரும்பாலும் தங்கள் கிராமத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் டூட்டோவில் (எலக்ட்ரிக் ரிக்ஷா) ரூ.20 செலவு செய்து பயணித்து உள்ள தும்கா நகரில் கட்டுமானத் தளங்களில் வேலை செய்கின்றனர். "நாங்கள் ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறோம்," என்று ஷர்மிளா நிருபரிடம் கூறுகிறார். “எல்லாமே விலை உயர்ந்ததாகிவிட்டது. சமாளித்து தானே ஆக வேண்டும்.”
"நாங்கள் கொஞ்சமாக சம்பாதித்து, கொஞ்சமாக சாப்பிடுகிறோம்," என்கிறார் லிட்டாட்டி, மேலும்என்று அவள் கைகளால் சைகை செய்து. "வேலை இல்லை என்றால், நாங்கள் மாத்-பாத் [அரிசி மற்றும் ஸ்டார்ச்] தான் சாப்பிட வேண்டும்." எதுவாயினும், அவர்களின் தோலாவில் வேலை எதுவும் கிடைப்பதில்லை என்று பெண்கள் கூறுகிறார்கள்.
இங்கு தும்கா மாவட்டத்தில், பெரும்பாலான பழங்குடியினரின் வாழ்வாதாரம் சாகுபடி அல்லது அது தொடர்புடைய வேலை, அல்லது அரசாங்கத் திட்டங்களைச் சார்ந்துள்ளது. குடும்பங்கள் பயன்பெறும் ஒரே அரசுத் திட்டம், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஐந்து கிலோ ரேஷன் மட்டுமே.
பெண்களின் பெயரில் தொழிலாளர் அட்டை இல்லை. “கடந்த ஆண்டு, கார்டு [தொழிலாளர் அட்டை] தயாரிக்க ஆட்கள் வந்தனர், வேலைக்கு சென்றிருந்ததால், நாங்கள் வீட்டில் இல்லை. அதன் பிறகு யாரும் வரவில்லை” என்கிறார் ஷர்மிளா. அந்த கார்டு இல்லாமல், அவர்களால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MNREGA) வேலை செய்ய முடியாது.
"அதனால எங்களுக்கு கிடைக்கும் வேலையை நாங்கள் செய்கிறோம்," என்று கூறும் லிடாட்டி, "ஜியாதா தோனே கா கம் மில்டா ஹை, கஹி கர் பான் ரஹா ஹை, டூ ஈட்டா தோ தியே, பாலு தோ தியே [எங்களுக்கு பெரும்பாலும் பொருட்களை சுமந்து செல்லும் வேலை தான் கிடைக்கும்; ஒரு வீடு கட்டப்பட்டால், நாங்கள் செங்கல் மற்றும் மணலை சுமந்து செல்கிறோம்].”
ஆனால் சர்மிளா சொல்வது போல் வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. “சில நாட்களில் வேலை கிடைக்கும், சில நாட்களில் வேலை கிடைக்காது. சில நேரங்களில், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வேலை கிடைக்காமல் போகலாம். அவர் கடைசியாக வேலைக்கு சென்றது நான்கு நாட்களுக்கு முன்பு. லிட்டாட்டியைப் போலவே, தனது மாமியார் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் ஷர்மிளா தான், அவரது வீட்டில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர் ஆவார்.
தோலாவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பொதுவான அடி பம்பிலிருந்து தண்ணீர் சேகரிக்கத் தொடங்குவதிலிருந்தே பெண்களுக்கு வேலை ஆரம்பமாகிறது. பின்னர் அவர்கள் சமைத்து மற்ற வீட்டு வேலைகளைச் செய்து முடித்த பிறகே, மண்வெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் கூடைகளை எடுத்துக் கொண்டு வேலை தேடுவதற்காக புறப்படுகிறார்கள். அவர்கள் சிமென்ட் சாக்குகளால் செய்யப்பட்ட ஒரு சிறிய குஷனான நெட்டோவையும் கொண்டு வருகிறார்கள். இதனை தலையில் எடையை வைப்பதற்கு முன்பு, வைத்துக் கொள்கிறார்கள்.
பெண்கள் தும்காவுக்கு வேலை தேடிச் செல்லும்போது, அவர்களின் குழந்தைகளை அவர்களுடன் வசிக்கும் தாத்தா பாட்டி கவனித்துக் கொள்கிறார்கள்.
“வேலை இல்லை என்றால், வீட்டில் எதுவும் இருக்காது. நாங்கள் சம்பாதிக்கும் நாட்களில், சில காய்கறிகளை வாங்க முடியும், ”என்கிறார் மூன்று குழந்தைகளுக்கு தாயான லிடாட்டி. மே முதல் வாரத்தில் காய்கறி வாங்க சந்தைக்கு சென்ற போது உருளைக்கிழங்கு கிலோ 30 ரூபாயாக இருந்தது. “தாம் தேக் கர் மாதா கரப் ஹோ கயா [விலையைக் கேட்டதும் என் தலையே சுற்றிவிட்டது],” என்று ஷர்மிளாவிடம் திரும்பி கூறுகிறார்.
"எங்களுக்கு ஜாது-போச்சா [பெருக்கும் துடைக்கும் சேலைகள்] போன்ற சில வேலைகளைக் கொடுங்கள், நாங்கள் தினமும் வேலை தேடி அலையாமல்; ஒரே இடத்தில் வேலை செய்யலாம்." என்று பாரி நிருபரிடம் லிடாட்டி கூறுகிறார். தங்கள் கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இதே நிலையில் இருப்பதாகவும், ஒரு சிலருக்கு மட்டுமே அரசு வேலை இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
“ நேதா லோக் வோட் கே லியே ஆதா ஹை, அவுர் சலா ஜாதா ஹை, ஹாம்லாக் ஓய்ஸேஹி ஜஸ் கா தஸ் [அரசியல்வாதிகள் வாக்கு கேட்டு வருவார்கள், போவார்கள்; ஆனால் எங்கள் நிலைமை மாறுவதில்லை]...” என்கிறார் ஷர்மிளா.
தமிழில் : அஹமத் ஷ்யாம்