டிசம்பர் 20, 2014ம் ஆண்டில் பாரி தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகி விட்டது.

எது எங்களின் பெரிய சாதனையா? இன்னும் நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதுதான் சாதனை. ஒரு சுதந்திர ஊடக தளமாக, கார்ப்பரேட் அதிகாரம் கோலோச்சும் காலத்திலும் செழித்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். பாரி தற்போது 15 மொழிகளில் தினசரி பிரசுரித்து வருகிறது. முதலீடு ஏதும் இன்றி, அரசின் நிதியும் கேட்கப்படாமலும் பெறப்படாமலும் இயங்கும் அறக்கட்டளையின் பிரதானப் பணி இதுதான். நேரடி கார்ப்பரேட் மானியங்களும் முதலீடுகளும் கிடையாது. விளம்பர வருவாயும் (கொள்கையாக) கிடையாது. பாரியை வாசிக்கவும் பார்க்கவும் கேட்கவும் நாங்கள் விரும்பும் மக்களின் பெரும்பான்மையை விலக்கும் ஆபத்து இருப்பதால் சந்தாக் கட்டணமும் கிடையாது. ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் என தன்னார்வம் கொண்டு இயங்கும் எண்ணற்ற ஆர்வலரக்ளை கொண்ட வலைப்பின்னல்தான் பாரி. குறிப்பிடத்தகுந்த பங்குக்கு திறன்சார் பணிகள் இருந்தாலும் அவையும் இலவசமாக தன்னார்வ உழைப்பில்தான் செய்யப்படுகிறது. பொதுமக்களின் தாராள நன்கொடைகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பாரியின் சுதந்திரத்தை மதிக்கும்  அறக்கட்டளைகளின் உதவிகள் போன்றவற்றின் மேல் பாரி கட்டப்பட்டிருக்கிறது.

அர்ப்பணிப்புணர்வும் பொறுமையும் கொண்ட ஊழியர்களால் தற்போது இயக்கப்பட்டு வரும் பாரி, இந்தியாவில் இயற்கையாகவும் வரலாற்றுப்பூர்வமாகவும் உருவாகி வளர்ந்திருக்கும் பகுதிகளின்  95 சதவிகித பகுதி சார்ந்த செய்திகளை முறையாக சேகரித்து அளிக்கும் ஒரே இணையதளம் ஆகும். கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் 90 கோடி மக்களை பற்றியும் அவர்களின் வாழ்க்கைகள், வாழ்வாதாரங்கள், பண்பாடுகள் பற்றியும் அவர்களின் தனித்துவமான 800 மொழிகள் பற்றியும் செய்திகளை வெளியிடும் ஒரே இதழியல் தளம் பாரிதான். சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைகளை அனைவருக்கும் கையளிக்க உறுதி பூண்டிருக்கிறோம். நகர்ப்புறங்களுக்கு வேலை தேடி புலம்பெயரும் பெரும் எண்ணிக்கையிலான கிராமப்புற மக்களை குறித்தும் கிட்டத்தட்ட 100 கோடி மனிதர்களை குறித்தும் நாங்கள்தான் செய்திகளை அளிக்கிறோம்.

தொடக்கத்திலிருந்தே பாரி நிறுவனர்களாக நாங்கள், இத்தளம் இதழியல் தளமாகவும் உயிர்த்திருக்கும் மக்களின் பெட்டகமாகவும் திகழ வேண்டும் என்பதில் தெளிவு கொண்டிருந்தோம். கார்ப்பரேட்டுகள் தீர்மானிக்கும் ‘ஊடக நேர்த்தி’ கோட்பாடுகளுக்குள் உட்படாத இதழியலை கொண்ட தளத்தைதான் நாங்கள் விரும்பினோம்.  மானுடவியல், அறிவியல்கள், சமூகவியல்கள் ஆகியவற்றின் அறிவாற்றலும் வலிமையும் கொண்ட தளத்தை நாங்கள் விரும்பினோம். எனவே, இதழியல் அனுபவம் கொண்ட பத்திரிகையாளர்களை பாரிக்குள் கொண்டு வந்ததோடு நின்று விடாமல், பத்திரிகை துறை சாராமல் பிற துறைகளில் இருந்த அறிவார்ந்தோரையும் முதல் நாளிலிருந்து பாரிக்குள் கொண்டு வரத் தொடங்கினோம்.

விளைவாக குழப்பம், மோதல், கருத்துபேதம், வாதம் (கசப்பானவை கூட) போன்றவை நேர்ந்தாலும் இறுதியில் அசாதாரண சாதனையை தளம் படைத்துக் கொண்டிருந்தது. ஏனெனில் எல்லா துறைசார் வல்லுநர்களும் ஒரு விஷயத்தில் புரிதல் கொண்டிருந்தனர்: கட்டுரையில் நம் குரல்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சாமானிய, அன்றாட மக்களின் குரல்களைதான் அவை பிரதிபலிக்க வேண்டும். எங்களின் களப்பணிக்கான விதிகள், மக்களின் குரல்களைதான் கட்டுரைகள் அதிகம் பிரதிபலிக்க வேண்டுமே தவிர, சொந்த குரல்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதை உறுதி செய்கின்றன. மேலும் கட்டுரைகள், கல்வி இதழ்களாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை போலவும் செய்தி அறிக்கை போலவும் இல்லாமல் கதைகளாக இருப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். முடிந்த வரை செய்கிறோம். விவசாயிகள், பழங்குடிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் பிற வாழ்க்கைத் தளங்களில் இருக்கும் எண்ணற்ற மக்களிடம் பேசி, கதைகளை வழங்குகிறோம். அவர்களையே எழுதவும் ஊக்குவிக்கிறோம். சமயங்களில் அவர்களை பாட வைக்கவும் செய்கிறோம்.

PHOTO • Jayamma Belliah
PHOTO • Jayamma Belliah

கிராமப்புற இந்தியாவுக்கென முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டு கிராம மக்களின் வாழ்க்கைகளை கொடுக்கும் ஒரே இதழியல் தளம் பாரி மட்டும்தான்.  பந்திப்பூர் தேசியப் பூங்காவின் விளிம்புகளில் உள்ள அனஞ்சிஹண்டி கிராமத்தின் ஜெனு குருபா பழங்குடியான ஜெயம்மா பெல்லையாவின் புகைப்படம். தன்னுடை நாளை அவர் பார்க்கும் விதத்தில் புகைப்படம் எடுக்கிறார். ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சிறுத்தைப் புலி படம், அவர் எடுத்ததுதான்

PHOTO • P. Indra
PHOTO • Suganthi Manickavel

கிராமப்புற இந்தியாவின் மீனவர்கள், தூய்மைப்பணியாளர்கள் என பல்வேறு சமூகங்களை பற்றி பாரி பேசுகிறது. இடது: மதுரையில் எந்த பாதுகாப்பும் இன்றி, கழிவுகளை சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளரான தந்தையின் புகைப்படத்தை எடுக்கிறார் பி. இந்திரா. வலது: நாகப்பட்டினத்தில் இறால் பிடிக்க போடப்பட்டிருந்த வலைகளை இழுக்கும் தனது சமூகத்து மீனவர்களான சக்திவேல் மற்றும் விஜய் ஆகியோரை சுகந்தி மாணிக்கவேல் புகைப்படம் எடுக்கிறார்

தற்போது நம் தளத்தில் கிட்டத்தட்ட 2,000 முழு நீளக் கதைக் கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றில் சில விருதுகள் பெற்ற தொடர்களில் இடம்பெற்றிருக்கின்றன. 15 மொழிகளில் அவற்றை நாங்கள் பிரசுரித்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான வாழ்வாதாரங்கள் (அழியும் தருவாயில் சில உள்ளன), விவசாயிகளின் போராட்டங்கள், காலநிலை மாற்றம், பாலினம் மற்றும் சாதிய அநீதிகள் மற்றும் வன்முறைகள், இசை மற்றும் பாடல் பெட்டகங்கள், எதிர்ப்பின் கவிதைகள், போராட்டங்களின் புகைப்படக் கலை போன்றவை இங்கிருக்கின்றன.

பாரி கல்விப் பிரிவு, மாணவ செய்தியாளர்கள் எழுதிய 230 கட்டுரைகளை கொண்டிருக்கிறது. பாரி கல்வி வெற்றி கண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் வேண்டி விரும்பி கேட்கும் தளமாக இது திகழ்கிறது. என்னால் எண்ணிட முடியாத அளவில் பல பயிற்சிப் பட்டறைகளையும் பயிற்சிகளையும் உரைகளையும் பல கல்வி நிறுவனங்களில் பாரி கல்விப் பிரிவு நடத்தியிருக்கிறது. போலவே பாரியின் சமூகதள முன்னெடுப்புகளும் புதிய தலைமுறையை சென்று அடைந்து கொண்டிருக்கின்றன. எங்களின் இன்ஸ்டாகிராம் பக்கம், 1,20,000 பேர் பின்பற்றும் பக்கமாக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும் எங்களின் படைப்பு எழுத்துகளும் கலைப்பிரிவும் பெரும் மரியாதையைப் பெற்றிருக்கிறது. படைப்புப் பிரிவு, அசாதாரண திறமை சிலவற்றை வெளிக்கொணர்ந்திருக்கிறது. நாட்டுப்புறக் கவிஞர்கள் முதல் பாடகர்கள், ஓவியர்களின் படைப்புகளையும் தனித்துவமான பழங்குடிக் குழந்தைகளின் ஓவியப் பெட்டகத்தையும் அது கொண்டிருக்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளின் நாட்டுப்புற பாடல்களை பாரி அளிக்கிறது. சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிருக்கும் அரவைக்கல் பாடல் பணி (Grindmill Songs Project) அதில் ஒரு பகுதி. அநேகமாக எங்கள் அளவுக்கு நாட்டுப்புற பாடல் தொகுப்பை பெருமளவில் கொண்டிருக்கும் தளம் வேறில்லை எனலாம்.

பத்து வருடங்களில் பல ஆச்சரியங்கள் கொண்ட கட்டுரைகளை பாரி பிரசுரித்திருக்கிறது. கோவிட் 19 காலத்தில் சுகாதாரம், புலப்பெயர்வுகள், அழிந்து வரும் கலைகள் மற்றும் தொழில்கள் என கட்டுரை வகைகளுக்கான பட்டியலுக்கு முடிவே இல்லை.

இந்த பத்து வருடங்களில் பாரி 80 விருதுகளையும் மரியாதைகளையும் பெற்றிருக்கிறது. 22 சர்வதேச விருதுகள் அவற்றில் அடக்கம். 80-ல் 77-தான் தற்போது தளத்தில் இருக்கின்றன. ஏனெனில், மற்ற மூன்றை, விருது ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் அளித்தால்தான் நாங்கள் பிரசுரிக்க முடியும். இதற்கு அர்த்தம், கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு 45 நாட்களுக்கு நாங்கள் ஒரு விருதை பெற்றிருக்கிறோம் என்பதுதான். இத்தகைய சாதனைக்கு அருகில் கூட எந்த ‘வெகுஜன’ ஊடக தளமும் வர முடியாது.

PHOTO • Shrirang Swarge
PHOTO • Rahul M.

இந்த இணையதளம் விவசாயிகளின் போராட்டத்தையும் விவசாய நெருக்கடியையும் விரிவாக செய்தியாக்கி இருக்கிறது. இடது: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் 2018ம் ஆண்டில், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாய நெருக்கடி குறித்த நாடாளுமன்ற விவாதம் ஆகியவற்றைக் கோரி டெல்லியின் ராமலீலா மைதானத்தை நோக்கி பேரணி செல்கின்றனர். வலது: இருபது வருடங்களுக்கு முன், புஜாரி லிங்கண்ணா ஒரு பட ஷூட்டிங்காக ஆந்திராவின் ராயல்சீமா பகுதியில் பயிர்களை பிடுங்க வேண்டியிருந்தது. தற்போது மனித நடவடிக்கைகள் மற்றூம் காலம் ஆகியவை அதே போன்றவொரு பாலைவனச் சூழலை அப்பகுதிக்கு கொண்டு வந்திருக்கிறது

PHOTO • Labani Jangi

எங்களின் படைப்பு எழுத்து மற்றும் கலைப் பிரிவுகள், ஒடிசாவின் பழங்குடி குழந்தைகளின்  ‘பழங்குடி குழந்தைகளின் கலைப் பெட்டகத்தை’ கொண்டிருக்கிறது. இடது: 6ம் வகுப்பு படிக்கும் ஓவியரான ஆங்குர் நாயக் இந்த ஓவியத்தை பற்றி சொல்கிறார்: ‘யானைகளும் குரங்குகளும் எங்களின் ஊருக்கு ஒருமுறை கொண்டு வரப்பட்டது. அவற்றை பார்த்து இந்தப் படங்களை நான் வரைந்தேன்.’ வலது: பல ஓவியர்கள் எங்களின் பக்கங்களுக்கு திறன்களை கொண்டு வருகிறார்கள். லபானி ஜங்கி வரைந்த ஓவியம்: முதியப் பெண்ணும் உறவினரும் தொற்றுக்கால முடக்கத்தின்போது நெடுஞ்சாலையில்

‘மக்களின் பெட்டகம்’ ஏன்?

வரலாற்றுரீதியாகவே, கல்வி பெற்ற வர்க்கங்களின் கொண்டாடப்பட்ட பதிவுகளுக்கு முரணாக, பழைய நூலகங்களும் பெட்டகங்களும் எல்லா மக்களின் அறிவையும் கொண்டிருக்கவில்லை. அவை பெரும்பாலும் மேட்டுக்குடித்தன்மை கொண்டதாகவே இருந்திருக்கின்றன; இருக்கின்றன. பெரும் மக்கட்பிரிவை விலக்கியே வைத்திருக்கிறது. (வேடிக்கை என்னவெனில், கேம் ஆஃப் த்ரோன்ஸ் இதை சரியாக எடுத்துக் காட்டியதுதான். தடை விதிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அடைய சாம்வெல் டார்லி கடுமையாக போராடுவார். ஆர்மி ஆஃப் தெ டெட் டுக்கு எதிரான போரின் நாளை சேமித்து வைத்த புத்தகங்கள் அவை என்பது குறிப்பிடத்தக்கது.)

அலெக்சாண்ட்ரியா, நாலந்தா போன்ற அறிவு பொதிந்த பழம்பெரும் நூலகங்கள் யாவும் சாமானியர்களை அனுமதித்திராதவை.

வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், பெட்டகங்களும் நூலகங்களும் பெரும்பாலும் அரசின் அதிகாரக் கட்டுபாடு நிறைந்த தளங்களாகதான் இயங்கி இருக்கின்றன. பெரும்பான்மை மக்களுக்கு தேவையான முக்கியமான தகவல்கள் யாவும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவும் சீனாவும் 62 வருடங்களுக்கு முன் 1962-ல் எல்லையில் போரிட்டன. இன்று வரை, அம்மோதலுடன் தொடர்பு கொண்ட முக்கிய ஆவணங்கள் எவையும் நாம் பெற முடியாது. நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகான புகைப்படங்களை அமெரிக்க ராணுவத்திடமிருந்து பெற பத்திரிகையாளர்கள் பல பத்தாண்டுகளாக போராட வேண்டியிருந்தது. எதிர்கால அணு ஆயுதப் போர்களில் பங்குபெற ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக பெண்டகன் அந்த தரவுகளை கையகப்படுத்தி வைத்திருந்தது.

மேலும் பல பெட்டகங்கள், ‘தனிப்பட்ட தொகுப்புகள்’ என்றும் இணைய நூலகங்களாகவும் பெட்டகங்களாகவும் தனியுரிமை கொண்டாடப்பட்டு, பொதுமக்களிடமிருந்து தள்ளி வைக்கப்படுகிறது. அந்த தரவுகள் அதே பொதுமக்களை சார்ந்ததுதான் என்றாலுமே இதுதான் நிலை.

இதுதான் மக்களின் பெட்டகம் உருவாக்கப்படக் காரணம். எந்த அரசாங்கத்துக்கும் பெருநிறுவனங்களுக்கும் அடிபணியாத பெட்டகம் இது. லாபத்துக்காக இன்றி இயங்கும் ஓர் இதழியல் தளம். நாங்கள் சொல்லும் கதைகளுக்கு சொந்தக்காரர்களான மக்களுக்கு மட்டும்தான் நாங்கள் பணிவோம். சமூகத்தாலும் ஊடகங்களாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள்தான் அவர்கள்.

காணொளி: ‘என் கணவர் வேலை தேடி தூரமாக சென்றிருக்கிறார்…’

இன்றைய ஊடக வெளியில் பிழைப்பது மிக மிகக் கடினம். நாங்கள் செய்வதற்கான புதிய, தனித்துவ யோசனைகளை அளிக்கும் பாரி குழு எங்களுக்கு இருக்கிறது. மேலும் இத்தகைய யோசனைகளை நேரடியாக நாங்கள் செயல்படுத்தத் தொடங்கிடுவோம். இன்னொரு மொழியை சேர்க்கலாம். இந்தியாவின் பல்வேறுபட்ட முகங்களை கொண்டு வரலாம். இந்தியாவின் மாவட்டங்கள் அனைத்தையும் (கிட்டத்தட்ட 800) சேர்ந்த சாமானியர்களின் முகங்களை பதிவு செய்திருக்கிறோம். அட, ஒவ்வொரு மாவட்டத்தின் ஒன்றியவாரியாக கூட செய்வோம்.

எங்களின் FACES பகுதியில், இந்தியாவின் நூற்றுக்கணக்கான ஒன்றியங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த முகங்களை பதிவேற்றியிருக்கிறோம். தொடர்ந்து அப்பணியை செய்கிறோம். பாரி தளத்தில் 526 காணொளிகளையும் கொண்டிருக்கிறோம்.

அழகான அந்த FACES பகுதியைத் தாண்டி, 20000-க்கும் மேற்பட்ட  புகைப்படங்களையும் (இன்னும் சரியான எண்ணிக்கை தெரியவில்லை) பாரி பிரசுரித்திருக்கிறது. காட்சிப்பூர்வமான தளம் இது என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும் நாட்டின் அற்புதமான புகைப்படக் கலைஞர்களையும் ஓவியர்களையும் நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பதிலும் பெருமிதம் கொள்கிறோம்.

பாரி நூலகத்தையும் விரிவாக்கலாமே! நூல்களை கடனளிக்கும் நூலகம் போல அல்ல இது, அவற்றை இலவசமாகவே இப்பிரிவு உங்களுக்கு அளிக்கும். பதிவிறக்கம் செய்து, ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நெசவாளர்கள் பற்றிய கதைக் கட்டுரைகளை கொண்ட அற்புதமான தொகுப்புகள் உருவாக்கியிருக்கிறோம். செய்முறையை, சம்பந்தப்பட்ட மக்களின் குரல் மற்றும் வாழ்வனுபவங்களின் மூலம் முன்னிலைப்படுத்தும் அக்கட்டுரைகள், நெசவு சந்திக்கும் பாதிப்புகளையும் முன்னிறுத்துகிறது. மக்களை அந்நியப்படுத்தும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளின் மொழிகளை அவை கொண்டிருப்பதில்லை. அத்தகைய அறிக்கைகள் எங்களின் பாரி நூலகப் பிரிவில் இருக்கும். அறிக்கைகள் சொல்பவற்றை பற்றிய தரவுகள் மற்றும் சுருக்கவுரைகளையும் அவை கொண்டிருக்கும். பாரி நூலகம் கொண்டிருக்கும் 900 அறிக்கைகளிலும் இவை இருக்கின்றன. இதற்கான உழைப்பு மிகவும் கடுமையானது.

இடது: பாரி நூலகம், தரவுகளை அனைவருக்கும் இலவசமாக அளிக்கிறது. வலது: FACES-ல் இந்தியாவின் பன்முகப்பட்ட முகங்களை பாரி பதிவு செய்திருக்கிறது

எங்களின் பெரும் சாதனையாக நாங்கள் கருதுவது எங்களின் பன்மொழித்தன்மையைத்தான். நாங்கள் அறிந்து, 15 மொழிகளில் மொத்த உள்ளடக்கத்தையும் அளிக்கும் செய்தித்தளம் உலகளவில் வேறில்லை. பிபிசி போன்ற தளங்கள் 40 மொழிகளில் செய்திகளை அளித்தாலும் மொழிகளுக்கு இடையிலான சமத்துவம் இருக்காது. அவர்களின் தமிழ் சேவை, ஆங்கில செய்திகளின் சிலவற்றை மட்டும்தான் கொண்டிருக்கும். பாரியிலோ ஒரு மொழியில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்படும் அதே நேரத்தில் மற்ற 15 மொழிகளிலும் பிரசுரிக்கப்பட வேண்டும். மேலும் தாய்மொழியில் எழுதவென செய்தியாளர்களை மென்மேலும் நாங்கள் வரவேற்றுக் கொண்டே இருக்கிறோம். எங்களின் பன்மொழி ஆசிரியர்கள், அவரவர் மொழிகளில் ஆசிரியப் பணி செய்தி கட்டுரையை தொகுப்பார்கள்.

எங்களின் பெரிய மொழிபெயர்ப்புக் குழுவின் இந்திய மொழி பணியாளர்கள் இயங்கும் பாரி பாஷை குழு, எங்களின் பெருமைக்குரிய குழு ஆகும். நினைத்துப் பார்க்க முடியாதவளவுக்கு நுட்பங்கள் நிறைந்த பெருமளவு வேலையை அவர்கள் செய்கின்றனர். கடந்த வருடங்களில் இக்குழு, 16,000 மொழிபெயர்ப்புகளை செய்திருக்கிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டி இன்னொரு முன்னோடி பணியையும் பாரி செய்து வருகிறது. அருகிப் போன மொழிகளுக்கான பணி! மிகுந்த சவால் நிறைந்த பணி இது. கடந்த 50 வருடங்களில் 225 இந்திய மொழிகள் அழிந்து போயிருக்கும் நிலயில், இருக்கும் பிறவற்றையும் அருகும் நிலையிலுள்ளவற்றையும் ஆவணப்படுத்தி, காக்க உதவுவது, எங்களுக்கு முன் இருக்கும் முக்கியமான பணிகளில் ஒன்றாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில் எங்களின் பணி, 33 மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் 381 மாவட்டங்களையும் சென்றடைந்திருக்கிறது. இந்தளவுக்கான வேலையை செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் புகைப்படக் கலைஞர்களும் பட இயக்குநர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் ஓவியர்களும் பன்மொழி ஆசிரியர்களும் பாரியின் நூற்றுக்கணக்கான பயிற்சி பணியாளர்களும் ஒன்றிணைந்து செய்து வருகின்றனர்.

PHOTO • Labani Jangi

இடது: பாரி 15 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டு பெரும் வாசகர்களை அடைந்து இந்திய மொழிகளின் பன்மைத்துவத்தை தூக்கி நிறுத்துகிறது. வலது: காட்சிப்பூர்வமான ஊடகமான நாங்கள், இதுவரை 20,000-க்கும் அதிகமான புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறோம்

இப்பணிகளை ஆர்வத்துடன் நான் சொன்னாலும், எங்களுக்கு கிடைக்கும் பணத்தைக் காட்டிலும் பெருமளவில் பொருட்செலவைக் கோரும் பணி இது. எனினும் நாங்கள் முன்னோக்கி செல்கிறோம். எங்களின் தொடர்புகள் நல்ல தொடர்புகள் என்பது எங்களுக்கு தெரியும். குறைந்தபட்சத் தேவைகளுக்கான நிதி உதவியேனும் கிடைக்குமளவுக்கு எங்களின் முன்னெடுப்பு இருக்குமென்பதை நாங்கள் உணர்ந்துதான் இருக்கிறோம். பாரி தொடங்கப்பட்ட முதல் வருட செலவு ரூ. 12 லட்சம். இப்போது ரூ. 3 கோடிக்கும் சற்று குறைவு. அதைக் கொண்டு, அந்த நிதியைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான விஷயத்தை நாங்கள் உருவாக்கி அளிக்கிறோம். நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை பெற்றிருக்கும் பெட்டகம் இது.

ஆமாம், இந்த பத்து வருடங்களாக நாங்கள் நீடிப்பது பெரும் சாதனைதான். ஆனாலும் கடந்த பத்து வருடங்களில் நாங்கள் கட்டியெழுப்பிய வேகம் தொடரவும் நீடிக்கவும் எங்களுக்கு உங்களின் ஆதரவு மிக மிக முக்கியம். எங்களின் நோக்கத்துடனும் விதிகளுடனும் ஒத்துப் போகிற எவரும் பாரிக்கென எழுதலாம், படங்கள் இயக்கலாம், புகைப்படங்கள் எடுக்கலாம், இசை பதிவு செய்யலாம்.

ஒருவேளை அடுத்த 25 வருடங்களிலோ 50 வருடங்களிலோ சாமானிய இந்தியர்கள் வாழ்ந்த விதங்களையும் அவர்களின் வேலை, உற்பத்தி, தயாரிப்பு, உணவு, பாடல், நடனம் போன்றவற்றை பற்றியும் தெரிந்து கொள்ள எவரும் விரும்பினால், பாரி மட்டும்தான் அவர்கள் அணுகக்கூடிய இடமாக இருக்கும். 2021ம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்ற நூலகம், பாரியை முக்கியமான தரவு தளமாக அங்கீகரித்து, நம்மையும் அவர்களின் நூலகத்தில் சேர்க்க அனுமதி கேட்டது. நாமும் சந்தோஷத்துடன் அனுமதி அளித்தோம்.

எந்த கட்டணமும் இல்லாத பாரி, இலவசமாக எவரும் பயன்படுத்த முடிகிற பொதுவெளி பல்லூடகமாகும்.  நம் காலத்தின் அற்புதமான முறைகளை கொண்டு வாழ்க்கைகளை கையாண்டு, கட்டுரைகளை படைக்கும் பாரி, இன்று இந்த நாட்டுக்கான தரவு பெட்டகமாக விளங்குகிறது. இதை நாட்டின் பொக்கிஷமாக ஆக்க எங்களுக்கு உதவுங்கள்.

தமிழில்: ராஜசங்கீதன்

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan