எங்கள் கிராமமான பல்சுண்டேயில், ஏழு வெவ்வேறு பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்களில் வார்லி மக்கள் அதிகம். வார்லி, கோலி மஹாதேவ், கட்கரி, மா தாகூர், கா தாகூர், தோர் கோலி மற்றும் மல்ஹார் கோலி ஆகிய ஏழு பழங்குடி சமூகங்களின் மொழிகளையும் நான் கற்றுக்கொண்டேன். இது நான் பிறந்த இடம், என் கர்மபூமி; நான் இங்கு தான் கல்வி கற்றேன் என்பதால் எனக்கு அவற்றை கற்பது ஒன்றும் கடினமாக இல்லை.
நான் பால்சந்திர ராம்ஜி தனகரே. மொகதாவில் உள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்.
நண்பர்கள் அடிக்கடி என்னிடம் சொல்வார்கள், "நீங்கள் கேட்கும் எந்த மொழியையும் எளிதில் பேச ஆரம்பிக்கிறீர்கள்,"என. நான் எந்த சமூகத்திற்குச் சென்றாலும், மக்கள் என்னை தங்கள் சொந்த மண்ணைச் சேர்ந்தவனாக, சொந்த மொழியில் பேசுபவனாகப் பார்க்கிறார்கள்.
பழங்குடியினப் பகுதி குழந்தைகளுடன் உரையாடிய போது, அவர்கள் பள்ளிக் கல்வியில் பல சவால்களை எதிர்கொள்வதை உணர்ந்தேன். பழங்குடியினர் பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற விதி மகாராஷ்டிரா அரசில் உள்ளது. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் உள்ளூர் மொழியைக் கற்க வேண்டும் என்பதால் இந்த மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இங்கே மொகதாவில், வார்லி மிகவும் பரவலாக பேசப்படுகிறது. பள்ளியில் அம்மொழி பேசும் குழந்தைகள் பலர் உள்ளனர். நாம் அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்றால், முதலில் மராத்தி வார்த்தையை அறிமுகப்படுத்த வேண்டும், பின்னர் அதே வார்த்தையை வார்லியில் விளக்க வேண்டும். பிறகு ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இது எளிதான விஷயம் அல்ல. ஆனால் இங்குள்ள குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். கடின உழைப்பாளிகள். நிலையான மராத்தி மொழியை அவர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியதும், அவர்களுடன் தொடர்புகொள்வது அற்புதமானது. இருப்பினும், இங்குள்ள கல்வியின் தர நிலை அதற்கேற்ற வளர்ச்சியை எட்டவில்லை. இது காலத்தின் தேவை. ஏறத்தாழ 50 சதவீத மக்கள் இன்னும் கல்வியறிவின்றி உள்ளனர். இப்பகுதியின் வளர்ச்சியும் ஒப்பீட்டளவில் பின்தங்கியே உள்ளது.
1990-கள் வரை, இந்தப் பகுதியில் 10 ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள் யாரும் இருக்கவில்லை. புதிய தலைமுறை மெதுவாக முறையான கல்வியைத் தொடரத் தொடங்கியுள்ளது. உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 25 வார்லி மாணவர்கள் சேர்ந்தால், சுமார் எட்டு மாணவர்கள் மட்டுமே 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள். இடைநிற்றல் விகிதம் மிக அதிகமாக உள்ளது. அந்த எட்டு பேரில் 5-6 பேர் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். 12 ஆம் வகுப்பை எட்டும் போது இன்னும் அதிகமான மாணவர்கள் வெளியேறுகிறார்கள். எனவே இறுதியாக 3-4 மாணவர்கள் மட்டுமே பள்ளியை முடிக்கிறார்கள்.
தாலுகா அளவில் இளங்கலை பட்டப்படிப்பை தொடர முடியும். சுமார் 10 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். ஆனால் இப்பகுதியில் வேறு எதுவும் இல்லை. மாணவர்கள் மேற்கல்விக்காக நாசிக் அல்லது பால்கர் போன்ற நகரங்களுக்கு பயணம் செய்கிறார்கள். இதனால் இந்த தாலுகாவில் சுமார் மூன்று சதவீத மக்கள் மட்டுமே இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர்.
வார்லி சமூகத்தில், குறிப்பாக கல்வி விகிதம் குறைவாக உள்ளது. அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் அவர்களின் சொந்த மொழியில் தொடர்புகொள்வதன் மூலம், ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்கும் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
இதை ஆவணப்படுத்த உதவிய AROEHAN-ன் ஹேமந்த் ஷிங்கடேவுக்கு பாரி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
நேர்காணல்: மேதா கலே
இந்தக் கட்டுரை பாரியின் அருகி வரும் மொழிகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது நாட்டின் பாதிக்கப்படக்கூடிய, அருகும் நிலையில் உள்ள மொழிகளை ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வார்லி என்பது இந்தியாவில் குஜராத், டாமன் & டையூ, தாத்ரா & நகர் ஹவேலி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் வார்லி அல்லது வர்லி பழங்குடிகளால் பேசப்படும் ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். யுனெஸ்கோவின் அட்லஸ் ஆஃப் லாங்குவேஜசில், இந்தியாவில் பாதிக்கப்படக்கூடிய மொழிகளில் ஒன்றாக வர்லியை பட்டியலிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பேசப்படும் வார்லி மொழியை ஆவணப்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
தமிழில்: சவிதா