குளிர்கால பயிர் அறுவடையை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதிகாலை ஏழு மணிக்கு க்ருஷ்ணா அம்புல்கர், சொத்து மற்றும் நீர் வரி வசூலிக்க கிளம்பி விடுகிறார்

“(இங்குள்ள) விவசாயிகள் ஏழ்மையில் இருக்கின்றனர். 65 சதவிகித இலக்கை கூட வசூலிக்க முடியாது,” என்கிறார் சம்கோலி பஞ்சாயத்து ஊழியரான அவர்.

சம்கோலி, நாக்பூரிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மனா மற்றும் கவாரி (பட்டியல் பழங்குடி) சமூகங்கள் வசிக்கும் அவ்வூரில் பெரும்பாலானோர் மானாவரி நிலத்தில் விவசாயம் பார்க்கும் குறுநில விவசாயிகளாக இருக்கின்றனர். விவசாயிகள் பருத்தி, சோயாபீன்ஸ், துவரை போன்றவற்றையும் கிணறோ ஆழ்துளைக் கிணறோ இருந்தால் கோதுமையைக் கூட விளைவிக்கின்றனர். நாற்பது வயது க்ருஷ்ணாதான் கிராமத்தில் இருக்கும் ஒரே பிற்படுத்தப்பட்ட சாதியினர். நாவி (நாவிதர்) சாதியை சேர்ந்தவர்.

புது டெல்லியில் தற்போதைய பட்ஜெட் விவசாயத்தில் கவனம் செலுத்துவதாகவும் மத்திய தர வர்க்கத்தினருக்கு வரி விலக்கு கொடுத்திருக்கும் பெருமிதத்தில் அனைவரும் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாயத்து வரி வசூலிக்க முடியாமல் அம்புல்கர் திணறிக் கொண்டிருக்கிறார். விவசாயிகள் பயிர் விலை சரிவு பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

க்ருஷ்ணாவின் கவலையை எளிதாக விளக்கலாம்: அவர் வசூலிக்க முடியவில்லை எனில் ஊதியம் கிடைக்காது. ஏனெனில் அவரின் ஊதியமான ரூ. 11,500, பஞ்சாயத்தின் வரி வசூல் தொகையான ரூ. 5.5 லட்சம் ரூபாயிலிருந்துதான் வருகிறது.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: க்ருஷ்ணா அம்புல்கர், சம்கோலி பஞ்சாயத்தின் ஒரே ஊழியர் ஆவார். பஞ்சாயத்து வரி வசூலிக்க முடியாத கவலையில் இருக்கிறார். அவரின் வருமானம் அந்த வசூலை நம்பித்தான் இருக்கிறது. வலது: சம்கோலியின் ஊர்த்தலைவரான ஷாரதா ராவத், இங்குள்ள விவசாயிகள் விலைவாசி உயர்வாலும் அதிகரிக்கும் இடபொருள் செலவாலும் சிரமத்தில் இருப்பதாக சொல்கிறார்

“எங்களின் இடுபொருள் செலவுகள் இரண்டு மடங்காகவும் மூன்று மடங்காகவும் மாறி விட்டது. விலைவாசி எங்களின் சேமிப்பை தின்று கொண்டிருக்கிறது,” என்கிறார் கோவாரி சமூகத்தை சேர்ந்த ஊர்த் தலைவரான ஷாரதா ராவத். 45 வயதாகும் அவரும், குடும்ப நிலத்தில் விவசாயம் செய்வதைத் தாண்டி விவசாயக் கூலியாகதான் வேலை பார்க்கிறார்.

பயிர் விலை சரிந்து விட்டது. சோயாபீன்ஸ், குறைந்தபட்ச ஆதார விலையான ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4,850 என்பதற்கும் 25 சதவிகிதம் குறைவாக விற்கிறது. பருத்தி விலைகள் பல வருடங்களாக குவிண்டாலுக்கு ரூ.7000 என்கிற விலையிலேயே நீடிக்கிறது. துவரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.7-7500க்குள் உழன்று வருகிறது. இவை யாவும் குறைந்தபட்ச ஆதார விலையோடு பொருத்தப்பட்டு கிடைக்கும் நிலவரம்.

எந்தக் குடும்பமும் வருடத்துக்கு 1 லட்சம் ரூபாயைத் தாண்டி சம்பாதிக்கவில்லை என ஊர்த்தலைவர் சொல்கிறார். ஒன்றிய பட்ஜெட்டின்படி, தனி நபர் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் உச்சவரம்பு அது.

“அரசாங்க பட்ஜெட் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது,” என்கிறார் ஷாரதா. “ஆனால் எங்களின் பட்ஜெட் சரிந்து கொண்டிருப்பது மட்டும் தெரியும்.”

தமிழில் : ராஜசங்கீதன்

Jaideep Hardikar

جے دیپ ہرڈیکر ناگپور میں مقیم صحافی اور قلم کار، اور پاری کے کور ٹیم ممبر ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز جے دیپ ہرڈیکر
Editor : Sarbajaya Bhattacharya

سربجیہ بھٹاچاریہ، پاری کی سینئر اسسٹنٹ ایڈیٹر ہیں۔ وہ ایک تجربہ کار بنگالی مترجم ہیں۔ وہ کولکاتا میں رہتی ہیں اور شہر کی تاریخ اور سیاحتی ادب میں دلچسپی رکھتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan