செய்யாத குற்றத்துக்காக டெம்பு மஞ்சி சிறையிலிருப்பதாக அவரின் குடும்பம் சொல்கிறது.
ஜெஹனாபாத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, அவரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டு சாட்சிகளாக முன் வைக்கப்பட்ட பொருட்கள், அவரது வீட்டை சேர்ந்தவைதான் என்பதை போலீஸால் நிரூபிக்க முடியவில்லை என்கிறது குடும்பம்.
அவரின் 35 வயது மனைவியான குணா தேவி சொல்கையில், “பொய் வழக்கில் அவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்,” என்கிறார்.
அவரின் நம்பிக்கைக்கு வலு சேர்ப்பது போல், டெம்பு குற்றஞ்சாட்டப்பட காரணமாக இருந்த ஐந்து சாட்சிகளும் காவலர்கள்தான். அவரின் விசாரணையில் ஒரு தனித்த சாட்சி கூட சாட்சியம் கூறவில்லை. பிகாரின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (திருத்த) சட்டம் 2016 -ன்படி அவர் விசாரிக்கப்பட்டார்.
“மதுபானம் எங்கள் வீட்டின் பின்னால் இருந்த வயலில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலத்தின் உரிமையாளர் யாரென எங்களுக்கு தெரியாது. காவலர்கள் கண்டுபிடித்த மதுவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொன்னோம்,” என்கிறார் குணா தேவி. ஆனால் அவர்கள் அவரை பொருட்படுத்தவில்லை. “மது உங்களின் வீட்டுக்கு பின்னால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. வேறு யார் காரணமாக இருக்க முடியும்?,” என்றார்கள் காவலர்கள் அவரின் மன்றாடலை புறம் தள்ளி.
டெம்பு மஞ்சி 2019-ல் சிறைக்குள் தள்ளப்பட்டார். மூன்று வருடங்கள் கழித்து மார்ச் 25, 2022 அன்று ஐந்து வருட கடுங்காவல் தண்டனையும் வீட்டில் மது காய்ச்சி விற்றதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.
டெம்பு மஞ்சி மற்றும் குணா தேவி ஆகியோர், அவர்களின் நான்கு குழந்தைகளுடன் ஜெஹனாபாத் மாவட்டத்தின் கெனாரி கிராமத்திலுள்ள ஓரறை வீட்டில் வசிக்கின்றனர். அவர்கள் முசாகர் சமூகத்தை சேர்ந்தவர்கள். முசாகர் வசிப்பிடத்தில்தான் வசிக்கின்றனர். ரெய்டு நடந்த மார்ச் 20, 2019 அன்று டெம்பு வீட்டில் இல்லை. நிலவுடமையாளர்களுக்காக அறுவடையை சுமந்து அவர்களின் வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் உதவியாளர் வேலைக்காக சீக்கிரமாகவே கிளம்பி சென்று விட்டார்.
ஜனவரி 2023-ல் பாரி சென்றிருந்தபோது, பிற பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுடன் குணா தேவி குளிர்கால பகலில் வெப்பமேற்றிக் கொண்டிருந்தார். குப்பை கூளங்கள் சுற்றி கிடந்தன. துர்நாற்றம் வீசியது.
கெனாரியில் மொத்தம் 2,981 பேர் (கணக்கெடுப்பு 2011) வசிக்கின்றனர். மூன்றில் ஒருவர் பட்டியல் சாதியை சேர்ந்தவராக இருப்பர். பிகாரில் மகாதலித் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் முசாகர்களையும் உள்ளடக்கிய சாதி அது. மாநிலத்தின் ஏழ்மையான, மிகவும் விளிம்புநிலையில் இருக்கும் சமூகமாகவும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய சமூகமாகவும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
சட்டமுறைகள் பற்றி தெரிவிக்கப்படாததாலும் அவர்கள் பதட்டத்தில் இருக்கின்றனர். “மது விலக்கு சட்டத்தில் குற்றஞ்சாட்டப்படும் முதல் ஆட்கள் முசாகர்களாக இருப்பது யதேச்சையான விஷயம் அல்ல. இச்சமூகத்தை ஆபத்தானதாக சித்தரிக்கும் தன்மைக்கும் இதில் பங்கு உண்டு,” என சுட்டிக் காட்டுகிறார் பாட்னாவை சேர்ந்த இந்தி பத்திரிகையான சப் ஆல்டர்னின் ஆசிரியர் மகேந்திர சுமன்.
சுமன் குறிப்பிடும் முசாகர் சகோதரர்களின் பெயிண்ட் தொழில் செய்பவரும் மற்றவரான மஸ்தான் மஞ்சியும் தினக்கூலி தொழிலாளர்கள். அவர்கள்தான் மது விலக்கு சட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் ஆட்கள். மே 2017-ல் கைது செய்யப்பட்ட அவர்கள், 40 நாட்களில் குற்றஞ்சாட்டப்பட்டனர். தலா ஐந்து வருட சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
சமூகத்தின் மீது சுமத்தப்படும் களங்கமும் அச்சமூகத்தினரை மது தொடர்பான வழக்குகளில் இலக்காக்குவதை சுலபமாக்குவதாக அவர் சொல்கிறார். “முசாகர்களை கைது செய்தால் எந்த சிவில் அமைப்பும் வேறு அமைப்பும் போராட்டம் நடத்தாது என அவர்களுக்கு (காவலர்கள்) தெரியும்,” என்கிறார் அச்சமூகத்துடன் பல்லாண்டுகளாக வாழ்ந்து பணியாற்றிய சுமன்.
டெம்புவின் வழக்கை பொறுத்தவரை, குற்றஞ்சாட்டப்பட்ட மது வீட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவர் குற்றஞ்சாட்டப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஜெஹனாபாத்தின் வழக்கறிஞரான ராம் வினய் குமார் டெம்புவின் வழக்கறிஞராக ஆஜரானார். வழக்கிலுள்ள இடைவெளிகளை சுட்டிக்காட்டி, “டெம்பு மஞ்சியின் வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியல் இரு தனித்த நபர்களின் கையெழுத்தோடு தயாரிக்கப்பட்டிருந்தபோதும் அவர்களின் சாட்சியங்கள் கொடுக்கப்படவில்லை. பதிலாக, ரெய்டு செய்த காவலர்கள் வந்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்,” என்கிறார்.
50 வயது ராம் வினய், இங்குள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 24 வருடங்களாக வழக்கிறஞராக இருந்து வருகிறார். “உறவினர்களை எதிர்தரப்பு சாட்சிகளாக்க கேட்கும்படி டெம்பு மஞ்சியிடம் கூறினேன். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனவே எதிர்தரப்பிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஏதுவாக எந்த சாட்சியமும் கொடுக்க முடியவில்லை.”
இதே போல தனித்த சாட்சி இல்லாத காரணத்தால், ராம்விருஷா மஞ்சி என்கிற முசாகர் ஒரு சட்ட சிக்கலில் சிக்கினார். ஜெஹனாபாத்தின் கோசி ஒன்றியத்திலுள்ள கண்டா கிராமத்தின் பள்ளிக்கு மகாதலித் குழந்தைகளை ராம்விருஷா கொண்டு சென்று கொண்டிருந்தார்.
கல்வியறிவு பெற்ற 45 வயதான அவர், கிராம உதவியாளராக அரசின் கல்வித்துறையால் நியமிக்கப்பட்டவர். குழந்தைகளை கண்டா அரசு ஆரம்பப் பள்ளிக்கு அழைத்து சென்று கற்பிப்பதுதான் அவருக்கான பணி.
பள்ளியை கிட்டத்தட்ட நெருங்குகையில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் ராம்விருஷா கைது செய்யப்பட்டார். “திடீரென ஒரு டஜன் காவலர்கள் தோன்றினர். ஒருவர் என் சட்டைக் காலரை பிடித்தார்,” என்கிறார் அவர் மார்ச் 29, 2019 அன்று நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து. ஒரு வெள்ளை பிளாஸ்டிக் பாத்திரத்தை காட்டி, ஆறு லிட்டர் மது அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக காவலர்கள் கூறினர். (காவல்துறை வீட்டுக்கே வரவில்லை என குடும்பம் கூறுகிறது.)
அனைவரும் பார்க்க சகுராபாத் காவல் நிலையத்துக்குக் அவர் கொண்டு செல்லப்பட்டு மதுவிலக்கு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கொஞ்ச நேரத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவம்தான் கைதுக்கு காரணமென நம்புகிறார் ராம்விருஷா. பள்ளிக்கு அவர் சென்று கொண்டிருக்கையில் காவல்ர்கள் சாலையை மறித்து நின்று கொண்டிருந்ததை பார்த்தார். அவர்களை விலகச் சொன்னதற்கு, “என்னை திட்டி அவர்கள் அடிக்கக் கூட செய்தனர்,” என்கிறார் அவர். அடுத்த அரை மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
காவலர்களை பார்த்து கூட்டம் கூடியது. “என்னை பிடித்தபோது அப்பகுதியில் கூட்டம் இருந்தது. ஆனால் காவலர்கள் யாரையும் சாட்சியாக அழைக்கவில்லை. கைப்பற்றிய பொருட்களுக்கு அத்தாட்சியாக எந்த தனி நபரின் கையெழுத்தையும் அவர்கள் பெறவில்லை,” என்கிறார் அவர். பதிலாக, கிராமவாசிகள் கைதின்போது ஓடி விட்டதாக முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.
“தனித்த சாட்சிகள் இருக்க வேண்டும். காவலர்களே சாட்சிகளாகும்போது ஒரு தலைப்பட்சமான சாட்சியங்களே கிடைக்கும்,” என்கிறார் ஜெஹனாபாத்தில் வழக்கறிஞராக இருக்கும் ஜிதேந்திர குமார். அவரின் நீண்டகாலப் பணியில் மதுவிலக்கு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட பலருக்காக அவர் வாதாடியிருக்கிறார்.
ரெய்டுகளுக்கு காவலர்கள் செல்லும்போது அதில் ஈடுபடும் காவலர்களையே சாட்சிகளாக பயன்படுத்துவார்கள் எனக் கூறுகிறார் ஜிதேந்திரா. இது சட்டவிரோதமானது. நீதிமன்றத்தில் நிற்காது என்றும் கூறுகிறார்.
காவலர்கள் சம்பவ இடத்துக்கு ரெய்டு செய்ய வரும்போது மக்கள் அங்கு இருப்பார்கள். ஆனால், “அவர்களுக்கு பதிலாக ரெய்டு நடத்துபவர்களே (காவலர்கள்) சாட்சிகளாகவும் வருவார்கள். கைது செய்யப்பட்டவர் தனது குற்றமற்ற தன்மையை நிரூபிக்க பெரும் தடையாக இது இருக்கும்,” என்கிறார்.
“ரெய்டுகளின்போது காணொளி எடுக்கப்படுவதை கட்டாயமாக்க வேண்டுமென நாங்கள் நீதிமன்றத்தை கேட்டிருக்கிறோம்,” என்கிறார் அவர். “துரதிர்ஷ்டவசாமாக எங்களின் வார்த்தைகள் பொருட்படுத்தப்படவில்லை.”
ஏப்ரல் 2016-லிருந்து பிகாரின் மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் இருக்கிறது. மதுவிலக்கு வழக்குகள் வேகமாக விசாரிக்கப்படவென ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனியாக ஓர் ஆயத்தீர்வை நீதிமன்றம் இருக்கிறது.
வேகமாக மதுவிலக்கு சட்ட வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்கிற நிர்பந்தம், காவலர்கள் தங்களுக்கு ஏதுவாக சூழலை பயன்படுத்த வழிவகுத்து தருவதாக வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டவர்களும் கூறுகின்றனர்.
24 ஜனவரி 2024 அன்று நீதிமன்றச் செய்திகளை கொண்ட Live Law தளத்தின் அறிக்கையின்படி, மே 11 2022 வரை மொத்தமாக 3,78,186 வழக்குகள் மதுவிலக்கு சட்டத்தில் பதிவாகியிருக்கிறது. 1,16,103 வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்க தொடங்கியிருந்தாலும் வெறும் 473 வழக்குகள்தான் 11 மே 2022 வரை முடிவடைந்திருக்கின்றன.
மார்ச் 2022-ல் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான என்.வி.ரமணா, ஜாமீனில் வெளிவரக்கூடிய மதுவிலக்கு சட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிரம்பி வழிகின்றன என சுட்டிக்காட்டி, அது வழக்குகள் விசாரிக்கப்படுவதை தாமதப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார்.
ஜெஹனாபாத்தில் வழக்கறிஞராக இருக்கும் சஞ்சீவ் குமார் சொல்கையில், “அபரிமிதமான ஆற்றலை அரசாங்கம் ஆயத்தீர்வை வழக்குகளுக்கு திருப்பி விடுகிறது. விளைவாக பிறவற்றின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார்.
*****
ராம்விருஷா மஞ்சிக்கு ஜாமீன் வழங்க ஜெஹனாபாத் நீதிமன்றம் 22 நாட்களை எடுத்துக் கொண்டது. அச்சமயத்தில் அவரின் குடும்பம் பணத்துக்கு வழியின்றி, அங்குமிங்கும் ஓடி, வழக்குக்கு மட்டுமே 60,000 ரூபாய் செலவழிக்க நேர்ந்தது. அவரின் மாத வருமானத்தை விட ஆறு மடங்கு அதிக தொகை. தற்போது சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். அடுத்த விசாரணை ஆகஸ்டில் வருகிறது. “நான்கு வருடங்களாக வழக்கு முடங்கிக் கிடக்கிறது. செலவுகளும் அதிகரித்துவிட்டது,” என்கிறார் அவர்.
மூன்று மகள்களும் ஒரு மகனும் என அவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். ஏழு முதல் 20 வரையிலான வயதுகளில் அவர்கள் இருக்கின்றனர். மூத்த மகளுக்கு 20 வயது. இப்பிரச்சினை முடியாமல் அவரின் திருமணத்தை பற்றி குடும்பத்தால் யோசிக்க முடியவில்லை. ராம்விருஷா சொல்கையில், “பள்ளிக்கு சென்று பாடம் கற்பிக்க எனக்கு தோன்றவில்லை. மன அழுத்தத்தில் இருக்கிறேன். ஐந்து மணி நேரங்களுக்கு பதிலாக இரண்டு மணி நேரம்தான் தூங்க முடிகிறது,” என்கிறார்.
குணா தேவி நீதிமன்ற குமாஸ்தாவுக்காக 25,000 ரூபாய் செலவழித்திருக்கிறார். “ஒருமுறை அல்லது இருமுறை நான் நீதிமன்றத்துக்கு சென்றேன். ஒரு குமாஸ்தாவை அங்கு சந்தித்தேன். வழக்கறிஞர் இல்லை,” என்கிறார் அவருக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் காகிதங்கள் எதையும் படிக்கத் தெரியாமல்.
டெம்பு சிறைக்கு சென்றுவிட்டதால், உணவுக்கு குடும்பம் கடுமையாக சிரமப்பட்டது. அவர்களுக்கு நிலம் இல்லை. நடவு மற்றும் அறுவடை காலங்களில்தான் குணா தேவிக்கு விவசாயக் கூலி வேலை கிடைக்கும். அவர்களின் இரு மகள்களும் இரு மகன்களும் 10-லிருந்து 15 வரையிலான வயதுகளில் இருக்கின்றனர்.
நீண்டு மெலிந்திருக்கும் 15 வயது மகன் ராஜ்குமாரை பற்றி சொந்த ஊர் மகஹியில் அவர் சொல்கையில், “என் மகன் கொஞ்சம் சம்பாதிக்கிறான்,” என்கிறார். தந்தை 2019-ல் சிறைக்கு சென்றபோது ராஜ்குமார் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். கல்வியை இடைநிறுத்திவிட்டு, அன்றிலிருந்து சந்தையில் மூட்டை தூக்க ஆரம்பித்து விட்டார். நாளொன்றுக்கு 300 ரூபாய் ஈட்டுகிறார். மைனரான அவருக்கு அந்த வேலை கடினமான வேலை.
இவற்றுக்கிடையில் குணா தேவியையும் ஒரு தனி மதுவிலக்கு சட்ட வழக்கில் காவலர்கள் குற்றஞ்சாட்டி, ‘தலைமறைவாக இருக்கிறார்’ என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“கைது ஆவதை தவிர்க்க, உறவினரின் வீட்டுக்கு சென்று குழந்தைகளுடன் இரவை கழிக்கிறேன். அவர்கள் என்னையும் பிடித்துவிட்டால், என் நான்கு குழந்தைகளுக்கு என்ன ஆவது?”
சில இடங்கள் மற்றும் நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
இக்கட்டுரை பிகாரின் விளிம்புநிலை மக்களுக்காக போராடிய ஒரு தொழிற்சங்கவாதியின் நினைவில் வழங்கப்படும் மானியப்பணிக்காக எழுதப்பட்டது
தமிழில்: ராஜசங்கீதன்