"ஆண்டுதோறும் கோடையில் ஒரு மாதம் இங்கு வந்து பணம் சம்பாதிப்போம்," என்று சாந்தி தனது வண்ணமயமான துப்பட்டாவை நெற்றிக்கு அருகில் இழுத்து, தனது ஒன்பது வயது பேரன் அமர்ஜீத்தை ராவணஹதா வாசிப்பைத் தொடருமாறு கூறுகிறார். "பஜாவோ, பஜாவோ [வாசி, வாசி]," என்று அவர் அவனிடம் சொல்கிறார். அவன் பெரிய ஆர்வமின்றி கம்பிகளுக்கு இடையே வில்லை அசைத்து இசைக்கிறான்.
மலையின் வியூ பாயிண்டிற்கு செல்லும் வழியில் சாந்தியையும், அமர்ஜீத்தையும் (மேலே முகப்புப் படத்தில் இருப்பவர்) சந்திக்கிறோம். தர்மசாலாவுக்கு சற்று மேலே இமாச்சல பிரதேசத்தின் மெக்லியோட்கஞ்சிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடி கிராமத்தில் சாலையின் ஓரத்தில் உள்ள உயரமான மேடையில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
சாந்தி கொஞ்சம் மன்னிப்புக் கோரும் தொனியில், "சிறுவனின் [அமர்ஜீத்] தாத்தா ராவணஹதா வாசிப்பதில் மிகவும் தேர்ந்தவர். ஆனால் இன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவரால் வர முடியவில்லை. நாங்கள் எப்போதும் இந்த கருவியை வாசித்து, பாடல்களை பாடுவோம். ஆனால் என் பேரனுக்கு அதில் ஆர்வமில்லை. இப்போதெல்லாம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்கிறார்கள். எனவே அவன் [எங்கள் கிராமத்தில்] உள்ள பள்ளிக்குச் செல்கிறான்," என்று அவர் கூறுகிறார்.
நீ எந்த வகுப்பு படிக்கிறாய் என்று அமர்ஜீத்திடம் நான் கேட்டேன். "சௌதி மே [நான்காவதில்]," என்று புன்னகையுடன் அவன் பதிலளிக்கிறான்.
இராவணஹதா - அதாவது 'ராவணனின் கை' - இரண்டு நரம்புகள் கொண்ட இசைக்கருவி ஆகும். இதன் ஒரு முனையில் தேங்காய் ஓடு மற்றும் ஆட்டுத் தோலால் செய்யப்பட்ட ஒரு கிண்ணம் உள்ளது. வாசிப்பவர் அரை தேங்காய் முனையை தனது நடுப்பகுதிக்கு எதிராக பிடித்து, நீண்ட மூங்கில் குச்சியை வெளிப்புறமாக சுட்டிக்காட்டுகிறார். ஒரு உலோகக் கம்பியும், விலங்குகளின் முடியால் ஆன கம்பியும் நீளமாக கட்டப்பட்டுள்ளன. இசை உருவாக்க வில் அவற்றின் குறுக்கே நகர்த்தப்படுகிறது.



