"ஒவ்வொரு முறை பட்டியில் [உலை] தீ மூட்டும்போதும் எனக்கு காயம் ஏற்படுகிறது", என்கிறார்.
சல்மா லோஹரின் விரல்களில் தழும்புகள், இடது கையில் இரண்டு வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. அந்தக் காயங்களை வேகமாக ஆற்றுவதற்கு உலையிலிருந்து ஒரு பிடி சாம்பலை எடுத்து அதில் பூசுகிறார்.
சோனிபட்டின் பஹல்கர் சந்தையில் ஜக்கி எனப்படும், தொடர் கூடாரங்களை அமைத்து தங்கியுள்ள ஆறு குடும்பங்களில், 41 வயதான அவரது குடும்பமும் ஒன்று. ஒருபுறம் பரபரப்பான மார்க்கெட் சாலை, மறுபுறம் நகராட்சி குப்பைக் கிடங்கு, அருகிலேயே அரசாங்க கழிப்பறை மற்றும் தண்ணீர் தொட்டி வேறு. சல்மாவும், அவரது குடும்பமும் இந்த `வசதி’களை நம்பித்தான் தங்கியுள்ளனர்.
கூடாரங்களுக்கு மின் இணைப்பெல்லாம் கிடையாது, 4-6 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தால், முழு கூடாரமும் வெள்ளத்தில் மூழ்கிவிடும் – கடந்த அக்டோபரில் (2023) மூழ்கியதுபோல. அப்படியான நேரங்களில் அவர்கள் கட்டிலில் கால்களை மடக்கி உட்கார்ந்து, தண்ணீர் வடியும் வரை காத்திருபார்கள் – இதற்கே 2-3 நாட்கள் ஆகும். "அப்படியேன நேரங்களில் ரொம்ப நாறும்", என்கிறார் சல்மாவின் மகன் தில்ஷாத்.
"வேற எங்க போவது?" என கேட்கிறார் சல்மா. "குப்பைகளுக்கு பக்கத்திலேயே குடியிருப்பதால் அடிக்கடி உடம்புக்கு (நோய்) வருகிறது. குப்பையில் மொய்க்கும் ஈக்கள், எங்கள் உணவிலும் மொய்க்கின்றன. ஆனா, வேற எங்கே போவது?"
காடியா, கதியா அல்லது கடுலியா லோஹர்கள் என அழைக்கப்படும் இவர்கள் ராஜஸ்தானில் நாடோடி பழங்குடியினராகவும் (என்.டி), பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் பட்டியலிடப்பட்டுள்ளனர். இச்சமூகத்தினர் டெல்லி, ஹரியானாவிலும் வசிக்கின்றனர். ராஜஸ்தானில் நாடோடி பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டுள்ள அவர்கள், ஹரியானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராவர்.
அவர்கள் கூடாரமிட்டுள்ள மார்க்கெட் மாநில நெடுஞ்சாலை 11-க்கு அருகில் உள்ளது. அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், இனிப்பு வகைகள், சமைலுக்குப் பயன்படுத்தப்படும் மசாலாக்கள், மின் சாதனங்கள் போன்ற பலவற்றை விற்கும் இடமாக அது வாடிக்கையாளர்கள் பலரையும் கவர்கிறது. பலர் ஸ்டால்களை அமைத்து விற்பனை செய்துவிட்டு, சந்தை முடிந்தவுடன் கிளம்பிச் செல்கிறார்கள்.
ஆனால் சல்மா போன்றவர்களுக்கு சந்தை தான் வீடும், வேலைசெய்யும் இடமும்.
"எனது அன்றாடப் பணிகள் காலை 6 மணிக்கு தொடங்கும். சூரியன் உதிக்கும்போது, நான் உலையை பற்ற வைத்து, குடும்பத்திற்கு சமைத்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும்", என்று 41 வயதாகும் அவர் கூறுகிறார். தனது கணவர் விஜய்யுடன் சேர்ந்து, அவர் ஒரு நாளைக்கு இரண்டு முறை உலையில் நீண்ட நேரம் வேலை செய்கிறார். இரும்பு துண்டுகளை உருக்கி பாத்திரங்களாக்க சுத்தியலால் அடிக்கிறார். ஒரே நாளில் நான்கு அல்லது ஐந்து பொருட்களை செய்து விடுகிறார்கள்.
சல்மாவுக்கு பிற்பகலில் சிறிது ஓய்வு கிடைக்கிறது. சூடான தேநீரை அவர் கட்டிலில் அமர்ந்தபடி குடிக்கிறார். அருகில் அவரது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்: அவரது ஒரே மகள் தனுவுக்கு 16 வயது, இளைய மகன் தில்ஷாத்துக்கு 14 வயது. அவரது அண்ணியின் மகள்களான ஷிவானி, காஜல் மற்றும் சிடியா ஆகியோரும் அருகில் உள்ளனர். ஒன்பது வயதான சிடியா மட்டுமே பள்ளிக்குச் சென்று படிக்கிறார்.
"இதை வாட்ஸ்அப்பில் போடுவீர்களா?" என்று சல்மா கேட்கிறார். "அப்படியென்றால், முதலில் என் வேலையைப் பத்தி சொல்லுங்கள்!"
சல்லடைகள், சுத்தியல்கள், மண்வெட்டிகள், கோடரிகள், உளிகள், சட்டிகள் போன்ற பல முழுமைப் பெற்ற கருவிகள் பிற்பகல் வெய்யிலில் பளபளக்கின்றன.
"இந்த கூடாரத்தில் எங்களது கருவிகள்தான் விலைமதிப்பு மிக்கவை", என்று ஒரு பெரிய உலோக வாணலிக்கு முன்னால் அமர்ந்தபடி அவர் கூறுகிறார். அவர் கையில் இருந்த தேநீர்க் கோப்பைக்குப் பதிலாக ஒரு சுத்தியலும், உளியும் வைக்கப்படுகின்றன. தனது வேலை அனுபவத்தை கொண்டு , வாணலியின் அடிப்பகுதியில் துளைகளை அவர் அடைக்கிறார். ஒவ்வொரு இரண்டு அடிகளுக்குப் பிறகும் உளியின் கோணத்தை மாற்றுகிறார். "இந்த சல்லடை சமையலறைக்கு அல்ல. விவசாயிகள் தானியங்களை பிரித்தெடுக்க இதைப் பயன்படுத்துகிறார்கள்.”
உள்ளே, காலை, மாலை என இருவேளை அவர்கள் ஏற்றும் உலைக்கு முன்னால் விஜய் இருக்கிறார். அவர் வளைத்துக் கொண்டிருந்த இரும்புக் கம்பி சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது. ஆனால் அவர் வெப்பத்தைப் பற்றி கவலைப்படாதது போல் தோன்றியது. உலையை தயார் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டபோது, அவர் சிரிக்கிறார், "உள்ளே தீ ஒளிரும் போது மட்டுமே எங்களுக்குத் தெரியும். காற்று ஈரமாக இருந்தால், அதிக நேரம் எடுக்கும். நாம் பயன்படுத்தும் நிலக்கரியைப் பொறுத்து வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஆகும்." தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ நிலக்கரி ரூ.15 முதல் ரூ.70 வரை விலை போகிறது. சல்மாவும், விஜய்யும் அதை மொத்தமாக வாங்க உத்தரபிரதேசத்தில் உள்ள செங்கல் சூளைக்கு செல்கின்றனர்.
விஜய் இரும்புக் கம்பியின் பளபளக்கும் முனையை தட்டையாக தட்டத் தொடங்குகிறார். சிறிய உலை இரும்பை போதுமான அளவிற்கு, உருக்க முடியாத அளவுக்கு இருப்பதால் அவர் கடுமையாக தனது பலத்தைப் பயன்படுத்துகிறார்.
லோஹர்கள் தங்களை 16-ம் நூற்றாண்டில் ராஜஸ்தானில் ஆயுதம் தயாரிக்கப் பணியமர்த்த்ப்பட்ட கொல்லர் சமூக வம்சாவளி எனக் கூறிக் கொள்கின்றனர். அவர்கள் முகலாயர்களால் சித்தோர்கர் பகுதி கைப்பற்றப்பட்ட பின்னர், வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தனர். "அவர்கள் எங்கள் முன்னோர்கள். இப்போது நாங்கள் மிகவும் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்கிறோம்" என்று புன்னகைக்கிறார் விஜய். "ஆனால் அவர்கள் கற்றுக் கொடுத்த கைவினையை நாங்கள் இன்னும் பின்பற்றுகிறோம். அவர்களைப் போலவே நாங்களும் இந்த `கதாய்’களை (தடித்த வளையல்களை) அணிகிறோம்", என்கிறார்.
தனது பிள்ளைகளுக்கும் இந்த தொழிலை அவர் கற்றுக் கொடுத்து வருகிறார். "தில்ஷாத் இதில் திறமைக்காரன்," என்கிறார் அவர். சல்மா மற்றும் விஜய்யின் இளைய மகன் தில்ஷாத், கருவிகளை சுட்டிக் காட்டுகிறார்: "அவை ஹதோடாக்கள் [சுத்தியல்கள்]. பெரியவை கான் என்று அழைக்கப்படுகின்றன. பாபு [அப்பா] சூடான உலோகத்தை இடுக்கியால் பிடித்து, கெஞ்ச்சி [கத்திரிக்கோல்] பயன்படுத்தி அதை வளைவுகளாக வடிவமைக்கிறார்", என்றார்.
சிடியா கைகளால் இயக்கப்படும் விசிறியின் கைப்பிடியை சுழற்றத் தொடங்குகிறாள். இது உலையின் வெப்பநிலையை சீராக்குகிறது. சாம்பல் நாலாபுறமும் பறக்க, அவர் சிரிக்கிறார்.
ஒரு பெண் கத்தி வாங்க வருகிறார். சல்மா அதன் விலை 100 ரூபாய் என்கிறார். அதற்கு அப்பெண், "இதற்கு 100 ரூபாய் எல்லாம் தர முடியாது. பிளாஸ்டிக்கில் மலிவாக வாங்கிக் கொள்ளலாமே”. பேரம் பேசி ரூ.50க்கு இருவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
புறப்பட்டு செல்லும் அந்தப் பெண்ணைப் பார்த்து சல்மா பெருமூச்சு விடுகிறார். இரும்பை விற்று அவர்களால் குடும்பம் நடத்த முடியாது. பிளாஸ்டிக் ஒரு கடுமையான போட்டியாளர். அதன் உற்பத்தி வேகத்திற்கு ஈடுகொடுக்கவோ, விலையை ஈடுகட்டவோ அவர்களால் முடியாது.
"நாங்கள் இப்போது பிளாஸ்டிக் விற்பனையையும் தொடங்கிவிட்டோம்," என்கிறார் அவர். "என் மைத்துனர் கூடாரத்திற்கு முன்பாக ஒரு பிளாஸ்டிக் கடை போட்டுள்ளார். என் சகோதரர் டெல்லிக்கு அருகில் திக்ரி எல்லையில் பிளாஸ்டிக் பொருட்களை விற்கிறார்." அவர்கள் சந்தையில் உள்ள மற்ற விற்பனையாளர்களிடமிருந்து பிளாஸ்டிக்கை வாங்கி வேறு இடங்களில் விற்கிறார்கள். ஆனால் இன்னும் அவர்களால் லாபம் ஈட்ட முடியவில்லை.
தனது மாமன்கள் டெல்லியில் நன்கு சம்பாதிப்பதாக தனு கூறுகிறார். "பெருநகர மக்கள் இதுபோன்ற சின்ன விஷயங்களுக்கு செலவு செய்ய தயாரா இருக்காங்க. அவர்களுக்கு 10 ரூபாய் பெரிய காசில்லை. ஒரு கிராமவாசிக்கு, இது பெரிய பணம், அவர்கள் அதை எங்களுக்காக செலவிட விரும்பவில்லை. அதனால்தான் என் மாமன்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள்."
*****
"என் குழந்தைகள் படிக்க வேண்டும் என விரும்புகிறேன்," என்று 2023-ம் ஆண்டில் நான் சல்மாவை முதன்முதலில் பார்த்தபோது அவர் தெரிவித்த வார்த்தைகள். நான் அப்போது அருகிலுள்ள பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவனாக இருந்தேன். "அவர்கள் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன்." தேவையான சான்றிதழ்கள் இல்லாததால் அவரது மூத்த மகன் மேல்நிலைப் பள்ளியை தொடர முடியாமல் போனது. இதற்காக அவர் மிகவும் வருத்தப்படுகிறார். அவனுக்கு இப்போது 20 வயதாகிறது.
"ஆதார், குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் என அவர்கள் கேட்ட அனைத்தையும் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியரகம் வரை எடுத்துக்கொண்டு ஓடினேன். எண்ணற்ற காகிதங்களில் என் கட்டை விரலால் கைநாட்டு வைத்தேன். அதனால் எந்த பலனும் இல்லை" என்றார்.
தில்ஷாத்தும் கடந்த ஆண்டு ஆறாம் வகுப்புடன் படிப்பை கைவிட்டான். "அரசுப் பள்ளிகள் பயனுள்ள எதையும் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனால் என் தங்கை தனுவுக்கு நிறைய தெரியும். அவள் எழுத, படிக்க தெரிந்தவள். தனு எட்டாம் வகுப்பு வரை படித்தாள், ஆனால் மேலும் தொடர விரும்பவில்லை” என்றார். அருகிலுள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு இல்லை என்பதால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேவாராவில் உள்ள பள்ளிக்குச் செல்ல கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்க வேண்டும்.
"மக்கள் என்னை முறைத்துப் பார்க்கிறார்கள்," என்கிறார் தனு. "அவர்கள் மிகவும் அசிங்கமாகப் பேசுகிறார்கள். நான் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எனவே இப்போது தனு வீட்டில் தங்கி தனது பெற்றோருக்கு உதவுகிறார்.
திறந்தவெளியில், பொது தண்ணீர் தொட்டிகளுக்கு அருகில் மொத்த குடும்பத்தினரும் குளிக்க வேண்டும். தனு மெதுவாக, "நாங்கள் திறந்த வெளியில் குளிக்கும்போது எல்லோராலும் எங்களைப் பார்க்க முடியும்" என்றார். ஆனால் பொதுக் கழிப்பறைக்கு ஒருமுறை செல்ல ரூ.10 செலவாகிறது. இது முழு குடும்பத்திற்கும் பெரிய செலவு. அவர்களின் வருமானம் கழிப்பறையுடன் கூடிய ஒரு முறையான வீட்டை வாடகைக்கு எடுக்க போதுமானதாக இல்லை, எனவே நடைபாதையில் தங்க வேண்டி உள்ளது.
குடும்பத்தில் யாருக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்படவில்லை. அவர்கள் நோய்வாய்ப்பட்டால், பாத் கல்சா ஆரம்ப சுகாதார மையம் (PHC) அல்லது சியோலியில் உள்ள ஒரு சுகாதார மையத்திற்குச் செல்கிறார்கள். தனியார் கிளினிக்குகள் அதிக செலவாகும் என்பதால் அவை கடைசி தேர்வாகும்.
பணத்தை சல்மா கவனமாக செலவழிக்கிறார். "பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால், நாங்கள் குப்பை சேகரிப்பவர்களிடம் செல்வோம்," என்கிறார் அவர். "அவர்களிடம் எங்களுக்கு 200 ரூபாய்க்கு ஆடைகள் கிடைக்கின்றன."
சில நேரங்களில் அந்த குடும்பம் சோனிபட்டில் உள்ள மற்ற சந்தைகளுக்கும் செல்கிறது. "நவராத்திரியை முன்னிட்டு நடக்கும் ராம் லீலாவுக்கு செல்வோம். பணம் இருந்தால் தெருவோர உணவு சாப்பிடுவோம்" என்கிறார் தனு.
" என் பெயர் முசல்மான் (முஸ்லிம்) என்றாலும், நான் ஒரு இந்து" என்று சல்மா கூறுகிறார். "ஹனுமான், சிவன், கணேஷ் என அனைவரையும் வணங்குகிறோம்."
"நாங்கள் எங்கள் முன்னோர்களை அவர்களின் தொழில்களை செய்து வணங்குகிறோம்!" என்று தில்ஷாத் சட்டென்று சொல்ல, அவன் அம்மா சிரிக்கிறாள்.
*****
சந்தையில் வியாபாரம் மந்தமாகும்போது, சல்மாவும் விஜய்யும் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தங்கள் பொருட்களை விற்கின்றனர். இது மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நடக்கும். அவர்கள் கிராமங்களில் விற்பனை செய்வது அரிது. ஆனால் அப்படிச் செய்யும்போது அதிகபட்சம் 400 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். "சில நேரங்களில் நாங்கள் மிகவும் சுற்றித் திரிகிறோம், எங்கள் கால்கள் உடைந்துவிட்டதைப் போல உணர்கிறோம்" என்கிறார் சல்மா.
சில நேரங்களில், கிராமவாசிகள் அவர்களுக்கு கால்நடைகளைக் கொடுக்கிறார்கள் - இளம் கன்றுகளை பால் கொடுக்கும் தாயிடமிருந்து பிரிக்க வேண்டும். முறையான வீட்டை வாடகைக்கு எடுக்க போதிய வருமானமின்றி, அக்குடும்பம் வேறு வழியின்றி நடைபாதையில் தங்குகின்றனர்.
இளம் தனு இரவில் குடிகாரர்களைப் விரட்டி அடிப்பதைக்கூறி சிரிக்கிறாள். தில்ஷாத் தொடர்கிறார் - "நாங்கள் அவர்களை அடித்து, கத்தி விரட்ட வேண்டும். எங்க அம்மாக்கள், அக்கா-தங்கச்சிகள் இங்கு தூங்குகிறார்கள்”.
அண்மையில், நகர் நிகாமைச் (சோனிபட் மாநகராட்சி) சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் அவர்களை வேறு எங்காவது போய்விடுமாறு கூறியுள்ளனர். கூடாரங்களுக்குப் பின்னால் குப்பை கொட்டும் இடத்தில் தடுப்பு கதவுகள் போட வேண்டும் என்றும், அவர்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை காலி செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வந்து குடும்பத்தின் ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளில் உள்ள தரவுகளை பதிவு செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் வந்து சென்றதற்கான எந்த சான்றினையும் கொடுப்பதில்லை. எனவே, அவர்கள் யார் என்று இங்கே யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை இப்படி நடக்கிறது.
"எங்களுக்கு ஒரு வீட்டுமனை கிடைக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள்", என்கிறார் தனு. "என்ன வகையான மனை? எங்கே? இது சந்தையிலிருந்து வெகு தொலைவில் உள்ளதா? அவர்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை" என்றார்.
குடும்பத்தின் வருமானச் சான்றிதழில் அவர்கள் ஒரு காலத்தில் மாதம் 50,000 ரூபாய் சம்பாதித்ததாக கூறப்பட்டுள்ளது. இப்போது, அவர்கள் சுமார் 10,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கின்றனர். பணம் தேவைப்படும் போது உறவினர்களிடம் கடன் வாங்குகின்றனர். நெருங்கிய உறவினர்கள் என்றால், வட்டி குறையும். அவர்கள் போதுமான அளவு விற்கும்போது பணத்தை திருப்பித் தருகிறார்கள், ஆனால் பெருந்தொற்றுக்குப் பிறகு விற்பனை சரிந்துள்ளது.
"கோவிட் எங்களுக்கு ஒரு நல்ல நேரம்," என்கிறார் தனு. "சந்தை அமைதியாக இருந்தது. அரசு லாரிகளில் இருந்து எங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைத்தன. மக்கள் வந்து முகக்கவசங்களை விநியோகிப்பார்கள்" என்றார்.
சல்மா வேறு மாதிரி யோசிக்கிறார், "பெருந்தொற்றுக்குப் பிறகு, மக்கள் எங்களை சந்தேகிக்கின்றனர். அவர்களின் பார்வையில் வெறுப்பு இருக்கிறது." ஒவ்வொரு முறையும் அவர்கள் வெளியே செல்லும்போது, சில உள்ளூர்வாசிகள் சாதி அடிப்படையில் அவதூறு செய்து, வார்த்தைகலால் துன்புறுத்துவதாகச் செய்கிறார்கள்.
"அவர்கள் எங்களை தங்கள் கிராமங்களில் தங்க விட மாட்டார்கள். எங்கள் சாதியை ஏன் இவ்வளவு இழிவுபடுத்துகிறார்கள் என்று புரியவில்லை. தங்களை உலகம் சமமாக மதிக்க வேண்டும் என்று சல்மா விரும்புகிறார். "ரொட்டி என்பது அனைவருக்கும் ரொட்டி தான் – நாம் அனைவரும் ஒரே உணவைதான் சாப்பிடுகிறோம். நமக்கும் பணக்காரருக்கும் என்ன வித்தியாசம்?"
தமிழில்: சவிதா