2014 ஆம் ஆண்டில், ஒடிசாவின் பிசம்கட்டாக் வட்டாரத்தில் உள்ள வனத்துறை அதிகாரி ஒருவர் கந்துகுடா கிராமத்திற்குச் சென்று கிராம மக்களுக்கும், வனத்துறைக்கும் இடையேயான நீண்டகால மோதல் குறித்து விவாதித்தார். பெரியவர்கள் முன்னிலை வகிக்க, முற்றிலும் பெண்கள் கூடியிருந்த கூட்டம் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. மற்ற இந்திய கிராமங்களில், ஆண்கள் பெரும்பான்மையாக இருக்கும் கூட்டத்தில் ஒரு ஆண் பஞ்சாயத்து தலைவரை அவர் சந்தித்திருக்கலாம்.

ஆனால் இங்கு, ராயகடா மாவட்டத்தின் சமவெளிகளில் உள்ள பெரும்பான்மை பழங்குடியினரான கோண்டுகளில் (மக்கள் தொகை: 9, 67,911, இதில் 5,41,905 பேர் பல்வேறு பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்), பெண்களே பல முக்கியமான முடிவுகளை எடுக்கின்றனர். தந்தைவழி என்றாலும், ஆண்களும் பெண்களும் சமமாக வாழ்வதை சமூகம் உறுதி செய்கிறது. நியாம்கிரியில் உள்ள கரண்டிகுடா கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான லோகோநாத் நௌரி விளக்குவது போல், "மலையில் அமர்ந்திருக்கும் நியம ராஜா (நியாம்கிரியின் கடவுள்) ஆண். எங்கள் கிராம தெய்வம் பெண் [கிராமத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள குலக்குறி போன்ற மர அமைப்பு]. இந்த இருவரால்தான் நாங்கள் வளமாக இருக்கிறோம். இருவருக்கும் தீங்கு வந்தால் உயிர்வாழ முடியாது," என்றார்.

கோண்டு மக்களிடையே வேலைகளும் இந்தத் தத்துவத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் சமமாக பங்கேற்று தங்கள் கருத்துக்களை பாதுகாக்கின்றனர். ஆண்கள் விவசாயம் செய்து வேட்டையாடும்போது, பெண்கள் தங்கள் சமூகத்தின் மீதமுள்ள பணிகளை கவனித்துக்கொள்கிறார்கள்.

PHOTO • Parul Abrol

யூகலிப்டஸ் மரங்களை தங்கள் நிலத்தில் வலுக்கட்டாயமாக நடவு செய்யும் வனத்துறையின் முயற்சிகளுக்கு எதிராக கோசா குங்காருகா (இடது) மற்றும் சிங்காரி குங்காருகா (வலது) ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர்

கந்துகுடாவில், பெண்கள் அதைத்தான் செய்தார்கள். யூகலிப்டஸ் மரங்களை நடவு செய்வதை கிராமவாசிகள் எதிர்த்தனர் ( 1980 களில் பிரபலமடைந்த சமூக வனவியல் திட்டத்தின் மரபு). ஏனெனில் அம்மரங்கள் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. மேலும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ பெரிய நன்மைகளை அவை வழங்குவதில்லை. அம்மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான முயற்சிகளை கிராமவாசிகள் தொடர்ந்து முறியடித்த பிறகு அதிகாரி ஒருவர் வந்தார். இந்த சமூக பெண்களின் சம நிலையை அறியாத அவர், கிராமவாசிகள் தொடர்ந்து எதிர்த்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கத் தொடங்கினார்.

சிங்கரி குங்காருகா மற்றும் கொசா குங்காருகா ஆகிய இரண்டு முதியவர்கள், தாங்கள் மரங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், கிராமமக்களுக்கும், வன உயிரினங்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஏதாவது விதைக்குமாறு மட்டுமே கோருவதாகவும் விளக்க முயன்றனர். ஆனால் அந்த அதிகாரி கேட்காமல், தன்னை மிரட்டினார் என்றும் கோசா கூறுகிறார். இந்த நேரத்தில், பெண்கள் ஏராளமாக இருந்ததால், அதிகாரியை அடித்து விரட்டினர் என்று அவர் கூறுகிறார்.

இவர்கள் ஆபத்தானவர்கள் என்று கூறி அந்த அதிகாரி தப்பி ஓடிவிட்டார். மறுநாள் ஏராளமான போலீசார் வேனில் வந்தனர். கந்துகுடா ஆண்களும் அண்டை கிராமமக்களும் பெண்களுடன் திரண்டனர். ஒரு மோதலுக்கு பின்னர் போலீசார் பின்வாங்கினர். இதன் விளைவாக, கடந்த ஆண்டு அமைதியாக இருந்தது.

வழக்கமாக, இங்குள்ள ஒரு கிராமம் சுமார் 20-25 வீடுகளைக் கொண்ட தொகுப்பு அல்லது ஒரு குடும்பமாக இருக்கும். எல்லோரும் முடிவெடுப்பதில் பங்களிக்கிறார்கள். அவர்கள் காரணம் இருந்தால் மட்டும் பேசுகிறார்கள். தலைவர்கள் இல்லை, தகுதி மற்றும் பெரும்பான்மையின் அடிப்படையில் ஒரு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

PHOTO • Parul Abrol
PHOTO • Parul Abrol

இடது: இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் பிசம்கட்டக் வட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள் - ஆனால் பாரம்பரிய திட்டத்தின்படி, கோண்டு பெண்களின் கோரிக்கையின்படி வலது: கோண்டு வீட்டில் சேமிக்கப்படும் தானியங்கள்: இங்குள்ள மிகவும் விலைமதிப்பற்ற பொருட்கள் விதைகள்

செயல்பாடுகள் முதல் வாழ்க்கையை வாழ்வது வரை, ராயகடாவின் பெண்கள் மையப் புள்ளியாக உள்ளனர். அவர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு திருமண துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது. ஒரு கணவன் தனது மனைவியை தவறாக நடத்தினால், அல்லது அவள் வேறொருவரைக் காதலித்தால், அவள் பயப்படாமல் கணவனை விட்டு விலகலாம். குடும்ப வன்முறை அல்லது விவாதங்களில் கிராம அமைப்பு தலையிட முயற்சிக்கிறது. உறவில் நீடிப்பதா, வெளியேறுவதா என்ற முடிவு பெண்ணிடமே உள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளரான ஜெகநாத் மஞ்சி, ஒரு சம்பவத்தை நினைவுக் கூர்ந்தார். அவர் ஒரு சிறுவனாக இரவு வயல்களில் காவலுக்கு இருந்தபோது, தனது இருக்கையை சரிசெய்ய இலைகளை சேகரிக்க காட்டுக்குச் சென்றார். வனத்துறை காவலர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மஞ்சியின் தாயார் கோபமடைந்து காவல் நிலையத்தில் தர்ணா நடத்த கிராமமக்களை அணிதிரட்டினார். தனது மகன் விடுவிக்கப்படும் வரை அவர் போலீஸ்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கிராமத்தை தற்சார்பாக மாற்றுவதில் பெண்களின் பங்கு பிரதிபலிக்கிறது. குடும்பங்களுக்கு இடையேயான தொடர்புகளை அனுமதிக்கும் வகையிலும், சமூக வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையிலும் கிராமம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திரா ஆவாஸ் யோஜனாவின் கீழ் ஒரு பக்கா (செங்கல்) வீட்டுத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அரசு கட்டிடக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி, வீடுகள் தனியாக இருக்க வேண்டும். மற்ற வீடுகளை பார்த்திருக்கக் கூடாது. இது தங்கள் பாரம்பரிய கிராமத் திட்டத்தை அழித்துவிடும் என்று கூறி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரம்பரிய கட்டமைப்புகளை அனுமதிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்ற பிறகே கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முடிந்தது.

ஒரு கோண்டு வீட்டில் மிகவும் விலைமதிப்பற்ற பொருள் என்றால் அவை விதைகள். இவை பெண்களுக்கே உரித்தான பிரத்யேக களம். விதைகளை வகைப்படுத்தி, அடுத்த ஆண்டுக்கு அவற்றைப் பாதுகாத்து, தெய்வங்களுக்கு அர்ப்பணித்து, விதைக்கும் நேரத்தில் ஆண்களுக்கு சரியான வகைப்படுத்தலை வழங்குவது பெண்களின் கடமையாகும். விதைகளுக்கும் பெண்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு சமூகத்தில் பெண்களின் கௌரவம் மற்றும் முக்கியத்துவத்தின் குறியீடு.

PHOTO • Parul Abrol

முனிகுடா வட்டம், துலாரி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி துடுகா: விதைகள் மற்றும் உணவு மூலம், பெண்கள் கோண்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாவலர்களாக மாறுகிறார்கள்

முனிகுடா வட்டத்தில் உள்ள துலாரி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான ஸ்ரீமதி துடுகா, " பூமித்தாய் நமக்கு அவ்வப்போது அளிக்கும் கொடை விதைகள்  - அது அவள் நமக்கு அளிக்கும் கனி மற்றும் காணிக்கை. பக்கத்து கிராமத்தின் விதைகளை நாங்கள் வணங்க மாட்டோம் - அது எங்கள் சொந்த நிலத்தில் இருந்து வர வேண்டும். இப்படித்தான் நம் நிலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, எதிர்காலத்தில் நமக்கு அதிகம் கொடுக்கத் தயாராகிறது. அவளை நாம் அவமதிக்க கூடாது," என்கிறார்.

விதைகள் மற்றும் உணவு மூலம், பெண்கள் தங்கள் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாக மாறுகிறார்கள். உதாரணமாக, கோண்டு உணவில் தினை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ளூர் உணவுகளைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் ஒரு அரசு சாரா அமைப்பான வாழும் பண்ணைகளின் தேப்ஜீத் சாரங்கி கூறுகையில், "அழிந்து வரும், விலைமதிப்பற்ற வகைகளை பெண்கள் பாதுகாத்து சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கிறார்கள். தானியங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்கிறார்கள். அவற்றை சிதைவிலிருந்து பாதுகாப்பதன் மூலம் அடுத்த பருவகால விவசாயத் தேவைக்கு சேமிக்கிறார்கள். இவ்வகையில் அவர்கள் ,  சூழலியலுக்கு மிகவும் பொருத்தமான ஒரு குறிப்பிட்ட வகை பயிரைப் பாதுகாத்து, தற்சார்பு கொண்டவர்களாக மாறுகின்றனர்,” என்கிறார்.

குடும்பின் மூன்று முக்கிய செயல்பாட்டாளர்கள் - ஜானி, தேசரி மற்றும் பெஜுனி - பெஜுனி எப்போதும் ஒரு பெண். திருவிழாக்கள் மற்றும் விழாக்களின் போது சடங்குகளை ஜானி செய்கிறார்; தேசரி என்பவர் உள்ளூர் மருத்துவம் மற்றும் வானிலை முறைகள் பற்றிய அறிவுக் களஞ்சியமாக இருக்கிறார். ஒரு பெஜுனி கிராமத்து ஷாமன் (இந்த கட்டுரையின் முகப்புப் படத்தில் இடதுபுறம் இருப்பவர்) . அவர் அவ்வப்போது சாமியாடுகிறார், பல்வேறு கடவுள்களின் செய்திகளை சமூகத்திற்கு அனுப்புகிறார். வரவிருக்கும் ஆபத்துகள் மற்றும் தொற்றுநோய்களைப் பற்றி எச்சரிக்கிறார், மேலும் ஆண்கள் வேட்டைக்குச் செல்வதற்கு முன்பு வழிகாட்டுதல்களை வழங்குகிறார்.

தந்தைவழிச் சமூகங்களில் பொதுவாக பெண்கள் பெரும்பாலும் மதச் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஆனால் கோண்டுகளிடையே பெண்கள் கடவுள்களின் தூதுவர்களாகக் கூட இருக்கிறார்கள்.

தமிழில்: சவிதா

Parul Abrol

پارل ابرول نئی دہلی میں مقیم ایک آزادی صحافی ہیں۔ وہ ہندوستان ٹائمز اور آئی اے این ایس کے علاوہ دیگر کئی تنظیموں کے ساتھ کام کر چکی ہیں۔ وہ تصادمی اور ترقیاتی امور پر لکھتی ہیں، اور اس وقت کشمیر کی سیاسی تاریخ پر ایک کتاب لکھ رہی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Parul Abrol
Editors : Laxmi Murthy
Editors : Sharmila Joshi

شرمیلا جوشی پیپلز آرکائیو آف رورل انڈیا کی سابق ایڈیٹوریل چیف ہیں، ساتھ ہی وہ ایک قلم کار، محقق اور عارضی ٹیچر بھی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز شرمیلا جوشی
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

کے ذریعہ دیگر اسٹوریز Savitha