அவரை எனக்கு அவர்கள் அறிமுகப்படுத்தியபோது, அவரது பெயர் குறித்த என் முதல் எண்ணம் அனைத்தும் தவறாகிப் போனது. அவர்கள் அவரை லடைதி தேவி என்று அழைக்கிறார்கள் (மேலோட்டமாக மொழிபெயர்த்தால், சண்டைக்காரி என்று பொருள்), ஆனால் என்னைப் பொறுத்தவரை, அந்த முதல் பார்வையில் அவர் ஒரு தன்னம்பிக்கை கொண்ட வீராங்கனை - அவரது பலங்களால் தேறியவர் - மிக முக்கியமாக, அவர் தனது பலவீனங்களை அறிந்தவர் என்பதாக தெரிந்தது.
என்னை ஒரு நாற்காலியில் அவர் அமரச் சொல்கிறார். நாம் சமமாக அமர்ந்து உரையாட வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் தயக்கத்துடன் தனக்காக இன்னொருவரை அழைக்கிறார். இரண்டு அறைகள் கொண்ட அவள் வீட்டின் வராண்டாவில் நாங்கள் இருக்கிறோம்.
நான் உத்தராகண்டின் உத்தம் சிங் நகரின் சித்தார்கஞ்ச் வட்டத்தில் உள்ள சல்மாதா கிராமத்தில் இருக்கிறேன். இது சுமார் 112 குடும்பங்களைக் கொண்ட ஒரு கிராமமாகும், மாநிலத்தின் மிகப்பெரிய பழங்குடியினரான தாருஸ் பெரும்பாலும் இங்கு வசிக்கின்றனர் - புராணப்படி, ராஜபுத்திர ராஜ வம்சத்துடன் தொடர்புபடுத்துகிறது. உள்ளூர்ப் பெண்கள் விரும்பும் ஒருவராக லடைதி என்ற தாரு எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். அவரது கதையை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
2002-ம் ஆண்டிற்கு முந்தைய தனது வாழ்க்கை நிகழ்வுகளை அவர் கூறுகிறார். "நான் யார் - சாதாரணப் பெண் தானா? என நினைத்தபோது சிலர் வந்து குழு அமைக்க அழைத்தனர் - அது பலத்தை கொடுக்கும் என்று கூறினர். நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும்" என்றனர்.






