"நான் ஒரு தங்க நிற ஜரிகை சேர்த்து சில மடிப்புகள் தருகிறேன். கைகளில் சில கட்-அவுட்களையும் சேர்த்துக்கலாம். ஆனால் அதற்கு இன்னும் 30 ரூபா செலவாகும்."
இவை சாரதா மக்வானா தனது வாடிக்கையாளர்களுடன் நடத்தும் வழக்கமான உரையாடல்கள். அவர்களில் சிலர் சட்டை கைகளின் நீளம், சரிகை வகை மற்றும் முதுகு பக்கம் சரங்களுடன் இணைக்கப்பட்ட குஞ்சங்களின் எடை குறித்தும் கவனம் செலுத்துவதாக கூறுகிறார். "நான் துணியைக் கொண்டு அலங்காரப்பூ தைத்து ரவிக்கையில் சேர்ப்பேன்," என்று அவர் தனது திறமையைப் பற்றி பெருமிதம் கொள்கிறார். பின்னர் அவர் அதை எங்களுக்கு விளக்கிக் காட்டுகிறார்.
சாரதா மற்றும் அவரைப் போன்ற பிற உள்ளூர் ரவிக்கை தையல்காரர்கள், குஷால்கர் பெண்களின் விருப்பமான ஃபேஷன் ஆலோசகர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, புடவை அணியும் அனைத்து பெண்களுக்கும், அந்த 80 செ.மீ துணி அப்படியே தைக்கப்பட வேண்டும்.
பொதுக் கூட்டங்களில் கூட பெண்களுக்கு ஆதரவாக குரல் கிடைக்காத ஆணாதிக்க சமூகத்தில், பாலின பிறப்பு விகிதம் 1,000 ஆண்களுக்கு 879 பெண்கள் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது (தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு, NFHS-5 ), அங்கு பெண்கள் தங்கள் ஆடைகளை விருப்பப்படி வடிவமைத்துக் கொள்வது மகிழ்ச்சியளிக்கும் ஒன்று.
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய நகரம் தையல் கடைகளால் நிரம்பி வழிகிறது. ஆண்களுக்கான சட்டை, பேண்ட் தைப்பவர்கள், திருமண ஆடைகளுக்கான குர்தாக்கள், மணமகனுக்கான குளிர்கால கோட்டுகளை உருவாக்குபவர்கள் என பிரிக்கப்படுகிறார்கள். இரண்டுமே அமைதியானவை, ஆடைகளின் வண்ணங்கள் வெளிர் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தைத் தாண்டாது.
மறுபுறம், புடவை ரவிக்கை தையல்காரர்களின் கடைகளில், பல வண்ணங்களும், சுழலும் குஞ்சங்களும், பளபளக்கும் ஜரிகைகள் (தங்கம் மற்றும் வெள்ளி நிற ஜரிகை), வண்ணமயமான துணிகளின் துண்டுகள் என எங்கும் சிதறிக்கிடக்கின்றன. "இன்னும் சில வாரங்களில் திருமண காலம் தொடங்கும் போது நீங்கள் வர வேண்டும்," என்று 36 வயதான அவர் கூறுகிறார். அவரது முகம் பிரகாசமானது. "அப்போது நான் ரொம்ப பரபரப்பாக இருப்பேன்." மழை நாட்களை நினைத்து அவர் பயப்படுகிறார். அவருடைய வணிகம் பாதிக்கப்படுகிறது.
10,666 (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய நகரத்தில் குறைந்தது 400-500 ரவிக்கை தையல்காரர்கள் இருப்பதாக சாரதா கணக்கிடுகிறார். இருப்பினும் குஷால்கர் தாலுகா பன்ஸ்வாரா மாவட்டத்தில் மிகப்பெரியது. அங்கு 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அவரது வாடிக்கையாளர்கள் 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கூட வருகிறார்கள். "உகலா, பாவோலிபடா, சர்வா, ராம்கர் மற்றும் பிற கிராமங்களில் இருந்தும் எனக்கு வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். "அவர்கள் என்னிடம் வந்துவிட்டால் மீண்டும் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள்," என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார். உடைகள், தங்களின் வாழ்க்கை, உடல்நலம், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து தன்னிடம் வாடிக்கையாளர்கள் பேசுவதாக அவர் கூறுகிறார்.
முதன்முதலில் ரூ. 7,000க்கு ஒரு சிங்கர் இயந்திரத்தை அவர் வாங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலை பீக்கோ (ஓரம் அடித்தல்) போன்ற சிறிய வேலைகளுக்கு ஒரு சேலைக்கு 10 ரூபாய் வருமானம் பெறுவதற்காக பழைய உஷா தையல் இயந்திரத்தை அவர் வாங்கினார். அவர் உள்பாவாடை, பாட்டியாலா சூட்களையும் (சல்வார் கமீஸ்) தைக்கிறார். இதற்கு அவர் முறையே ரூ.60 முதல் ரூ.250 வரை வசூலிக்கிறார்.
சாரதா ஒரு அழகுக்கலை நிபுணராகவும் உள்ளார். கடையின் பின்புறம் ஒரு முடிதிருத்த நாற்காலி, ஒரு பெரிய கண்ணாடி, ஒப்பனை பொருட்கள் ஆகியவற்றை வைத்துள்ளார். புருவங்களை திருத்துவது, உடல் முடிகளை அகற்றுவது, ப்ளீச்சிங், முடிதிருத்தம், சிறு குழந்தைகளுக்கு, குறிப்பாக வம்பு செய்யும் குழந்தைகளுக்கு முடி திருத்தம் செய்வது என அழகு கலைகளின் பட்டியல் நீள்கிறது. இவற்றிற்கு ரூ.30 முதல் 90 வரை வசூலிக்கப்படுகின்றன. "பெண்கள் ஃபேஷியலுக்காக பெரிய பார்லர்களுக்குச் செல்கிறார்கள்," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அவரை காண குஷால்கரில் உள்ள முக்கிய சந்தைக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து தினமும் சுமார் 40 பேருந்துகள் குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்தோருடன் செல்கின்றன. பன்ஸ்வாரா மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் மட்டுமே நடக்கிறது. வேறு வாழ்வாதாரங்கள் இல்லாததால் ஏராளமானோர் துயரத்துடன் புலம்பெயர்கின்றனர்.
நகரத்தின் பஞ்சால் பகுதியின் ஒரு குறுகிய தெருவில், அவல், ஜிலேபி போன்ற காலை சிற்றுண்டிகளை விற்கும் சிறிய இனிப்புக் கடைகளின் பரபரப்பான சந்தையைக் கடந்து, சாரதாவின் ஒற்றை அறை தையல் கடை மற்றும் அழகு நிலையம் உள்ளது.
36 வயதான இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்தார்; அவர் ஒரு டாக்ஸி ஓட்டுநராக இருந்தார். அவர் கல்லீரல் பிரச்சினையுடன் போராடி உயிரிழந்தார். சாரதா, அவரது குழந்தைகள், மாமியார், மறைந்த கணவரின் சகோதரர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
ஒரு தற்செயலான சந்திப்பு தனது வாழ்க்கையை மாற்றியதாக அந்த இளம் கைம்பெண் கூறுகிறார். "நான் அங்கன்வாடியில் ஒரு மேடத்தை சந்தித்தேன், அவர் சகி மையத்திற்கு சென்று நீங்கள் விரும்பியதைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றார்.” இந்த மையம் - லாபநோக்கற்றது - சந்தைப்படுத்தக்கூடிய திறன்களை இளம் பெண்கள் கற்றுக்கொள்வதற்கான இடமாகும். தேவைக்கேற்ப பயிற்சி நேரங்களை அமைத்துக் கொள்ளலாம் என்பதால், வீட்டு வேலைகள் முடிந்ததும் அங்கு சென்றார்; சில நாட்களில் ஒரு மணி நேரம் முதல் அரை நாள் வரை அங்கு அவர் செலவிட்டார். பயிற்சி பெறுபவர்களிடம் இருந்து இந்த மையம் மாதம் ரூ.250 கட்டணம் வசூலித்தது.
"தையல் வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, முழுமையாக கற்பிக்கப்பட்டது," என்று நன்றியுடன் கூறுகிறார் சாரதா. "உங்களால் முடிந்ததை எனக்குக் கற்றுக்கொடுங்கள் என்றேன், 15 நாட்களில் தேர்ச்சி பெற்றேன்!" என்றார். புதிய திறன்களுடன் கூடிய தொழில்முனைவோராக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த தொழிலை அமைக்க அவர் முடிவு செய்தார்.
"குச் அவுர் ஹி மசா ஹை, குத் கி கமாயி [ சொந்த வருமானத்தை வைத்திருப்பது ஒரு வித்தியாசமான உணர்வு]", என்றும் அன்றாட செலவுகளுக்கு தனது கணவர் குடும்பத்தை சார்ந்திருக்க விரும்பாத மூன்று குழந்தைகளின் தாய் கூறுகிறார். "நான் என் சொந்தக் காலில் நிற்க விரும்புகிறேன்."
20 வயதாகும் மூத்த மகள் ஷிவானி, பன்ஸ்வாராவில் உள்ள ஒரு கல்லூரியில் செவிலியருக்கு படித்து வருகிறார்; 17 வயதாகும் ஹர்ஷிதா மற்றும் 12 வயதாகும் யுவராஜ் ஆகிய இருவரும் குஷால்கரில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். அவரது குழந்தைகள், மேல்நிலைக்கு அரசுப் பள்ளியை விரும்பியதால் 11ஆம் வகுப்பு வரும்போது தனியார் பள்ளியை விட்டு வெளியேற உள்ளதாகவும் அவர் கூறுகிறார். “தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களை அடிக்கடி மாற்றுகிறார்கள்.”
சாரதாவிற்கு 16 வயதில் திருமணம் ஆகிவிட்டது. அவரது மூத்த மகள் அந்த வயதை அடைந்தபோது, தாய் காத்திருக்க விரும்பினார். ஆனால் அந்த இளம் கைம்பெண்ணின் பேச்சை யாரும் கேட்கவில்லை. அவரும் அவரது மகளும் ஒத்து வராத திருமணத்தை ரத்து செய்ய விரும்பினர். ரத்து செய்துவிட்டதால் இளம் பெண் இப்போது சுதந்திரமாக இருக்கிறார்.
சாரதா கடைக்கு அருகே கடை காலியாக இருந்தபோது, ஒற்றை பெற்றோராக இருக்கும் தனது தோழியை தையல் கடை அமைக்க வற்புறுத்தினார். "ஒவ்வொரு மாதமும் வருமானம் வித்தியாசமாக இருந்தாலும், சொந்தக் காலில் நிற்க முடியும் என்று நான் நன்றாக உணர்கிறேன்."
தமிழில்: சவிதா