குனோவின் சிறுத்தைப் புலிகள் பற்றிய தகவல்கள் தேசிய பாதுகாப்பு சம்பந்தமானவை. அதை மீறுவது வெளிநாடுகளுடனான நம் உறவை கடுமையாக பாதிக்கும்.

ஜூலை 2024-ல் சிறுத்தைப் புலிகள் மேலாண்மை குறித்த தகவல்களை கேட்டு அனுப்பப்பட்டிருந்த தகவல் அறியும் உரிமைச் சட்டதின் கீழான மனுவுக்கு, மத்தியப் பிரதேச அரசாங்கம் கொடுத்த பதில் அதுதான். மனுவை அனுப்பிய போபாலின் செயற்பாட்டாளர் அஜய் துபே, “புலிகள் பற்றிய எல்லா தகவல்களும் வெளிப்படையாக இருக்கிறது. ஆனால் ஏன் சிறுத்தைப் புலிகளுக்கு மட்டும் அப்படி இல்லை? வன உயிர் மேலாண்மையில் வெளிப்படைத்தன்மைதான் அடிப்படை விதி,” என்கிறார்.

குனோ பூங்காவுக்கு அருகே இருக்கும் அகாரா கிராமத்தில் வாழும் ராம் கோபாலுக்கு, தேசிய பாதுகாப்புக்கும் வெளிநாட்டு உறவுகளுக்கும் அவரின் வாழ்க்கை கொடுக்கும் அச்சுறுத்தலை பற்றி தெரியாது. அவரும் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான பழங்குடிகளுக்கும் கவலைப்பட வேறு பல விஷயங்கள் இருக்கின்றன.

சமீபத்தில் அவரொரு ட்ராக்டர் வாங்கினார். வசதியால் அல்ல, வேறு காரணத்தால்.

“மோடிஜி எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். எங்களின் மாடுகளை கைவிடக் கூடாது என சொல்லியிருக்கிறார். ஆனால் இங்கு மேய்ச்சல் நிலமாக இருப்பது காடு மட்டும்தான். அங்கு சென்றால் வனத்துறையினர் எங்களை பிடித்து, சிறையில் அடைத்து விடுவார்கள். எனவே அவற்றுக்கு பதிலாக ஒரு ட்ராக்டரை வாடகைக்கு எடுக்க முடிவெடுத்தோம்.”

ராம் கோபாலும் அவரது குடும்பமும் சமாளிக்க முடியாத செலவு அது. குடும்ப வருமானம் அவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் வைத்திருக்கிறது. குனோ தேசியப் பூங்கா சிறுத்தைப் புலிகளுக்கான இடமாக மாற்றப்பட்ட பிறகு, காடு சார்ந்த  அவர்களின் வாழ்க்கைகளில் பெரும் இழப்பு நேர்ந்தது.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குனோ ஆறு முக்கியமான நீராதாரம். அதையும் அவர்கள் பயன்படுத்த முடியாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் காட்டுற்பத்தியை சேகரிக்க சகாரியா பழங்குடியினர் நுழைகின்றனர்

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: சண்டுவும் ராம் கோபாலும் விஜய்பூர் தாலுகாவின் அகாராவில் இருக்கிறார்கள். வாழ்வாதாரத்துக்கு அவர்கள் நம்பியிருந்த சிர் கோண்ட் மரங்கள் இப்போது சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. வலது: அவர்களின் மகன் ஹன்ஸ்ராஜ் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டார். கூலி வேலைக்கு புலம்பெயரும் முனைப்பில் இருக்கிறார்

பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதி 2022ம் ஆண்டில் தேசிய முக்கியத்துவம் பெற்றது. புலிகளுக்கு பூர்விகமாக இருக்கும் ஒரே நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியின் பிம்பத்தை உயர்த்துவதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகள் அந்த வருடத்தில் இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அவரது பிறந்தநாளில் அந்த சிறுத்தைப் புலிகளை அவர் வரவேற்றார்.

சுவாரஸ்யம் என்னவென்றால், இயற்கை பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சிறுத்தைப் புலி, நம் தேசிய வன உயிர் செயல்திட்டம் 2017-2031-ல் இடம்பெறவில்லை என்பதுதான். பூர்விக மற்றும் அருகி வரும் உயிர்களை காப்பதற்கான முறைகளை பட்டியலிடும் அத்திட்டத்தில் கானமயில், கேஞ்சடிக் டால்ஃபின், திபெத்திய மான் போன்றவைதான் இடம்பெற்றிருக்கின்றன. சிறுத்தைப் புலிகள் கொண்டு வரப்படுவதற்கு உச்சநீதிமன்றம் 2013ம் ஆண்டில் தடை விதித்து அதற்கான ‘விரிவான அறிவியல் ஆய்வை’ சமர்ப்பிக்கக் கேட்டிருந்தது.

ஆனால் அது எதுவும் பொருட்படுத்தப்படாமல் நூற்றுக்கணக்கான கோடிகள் , சிறுத்தைப் புலி பயணத்துக்கும் விளம்பரங்களுக்கும் செலவழிக்கப்பட்டது.

பழங்கள், வேர்கள், மூலிகைகள், மரமெழுகு, விறகு போன்ற காட்டுற்பத்தியை சார்ந்திருந்த ராம் கோபால் போன்ற சகாரியா பழங்குடிகளின் வாழ்க்கைகளும் வாழ்வாதாரமும் குனோ பகுதியை சிறுத்தைப் புலி பூங்காவாக மாற்றியதால் பெரும் பாதிப்பை கண்டது. குனோ தேசியப் பூங்கா பெரும் பரப்பை ஆக்கிரமத்திருக்கிறது. 1,235 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் குனோ வனப் பிரிவில் அப்பகுதி இடம்பெற்றிருக்கிறது.

“சூரியன் உதித்து மறையும் வரையிலான 12 மணி நேரங்களுக்கு குறைந்தபட்சம் 50 மரங்களில் வேலை பார்ப்பேன். பிறகு நான்கு நாட்கள் கழித்து மர மெழுகு சேகரிக்க வருவேன். சிர் மரங்களிலிருந்து மட்டும் மாதத்துக்கு 10,000 ரூபாய் வருமானம் கிடைத்தது,” என்கிறார் ராம் கோபால். அந்த விலைமதிப்பற்ற 1,200 சிர் கோண்ட் மரங்களை அவர்கள் பயன்படுத்த தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சிறுத்தைப் புலிகளுக்கான மையமாக பூங்கா மாற்றப்பட்ட பிறகு, மரங்கள் மறைந்து விட்டன.

முப்பது வயதுகளில் இருக்கும் தம்பதியான ராம் கோபாலும் அவரது மனைவி சண்டுவும் குனோ பூங்காவின் விளிம்பில் சில பிகா மானாவாரி நிலத்தில் தங்களின் பயன்பாட்டுக்காக கொஞ்சம் விளைவித்துக் கொள்கின்றனர். “நாங்கள் உண்ணும் கம்பு விளைவிக்கிறோம். எள், கடுகு போன்றவற்றில் கொஞ்சத்தை விற்கிறோம்,” என்கிறார் ராம் கோபால். இங்குதான் ட்ராக்டரை விதைப்புக்கு வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை அவருக்கு நேர்ந்தது.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: சிர் மரங்கள் மெழுகுக்காக சீவப்படும் முறையை ராம் கோபால் காட்டுகிறார். வலது: தடை விதிக்கப்பட்டிருக்கும் குனோ காடுகளுக்கு அருகே உள்ள ஒரு ஆற்றுப்படுகையில் தம்பதியினர் நிற்கின்றனர்

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: ராம் கோபாலும் மனைவி சண்டுவும் தங்களின் பயன்பாட்டுக்காக சில பிகா மானாவாரி நிலத்தில் விளைவிக்கின்றனர். வலது: அகாரா வணிகர்களும் காட்டுற்பத்தி இழப்புக்கு வருந்துகின்றனர்

“காட்டைத் தாண்டி எங்களுக்கு ஒன்றும் கிடையாது. நிலத்துக்கு போதுமான நீரும் எங்களிடம் கிடையாது. காடு செல்ல எங்களுக்கு இப்போது அனுமதி இல்லாத நிலையில், வேலை தேடி நாங்கள் புலம்பெயர வேண்டும்,” என்கிறார் அவர். வழக்கமாக தெண்டு இலைகள் வாங்கும் வனத்துறையும் அதை குறைத்து விட்டது பெரும் அடியாக விழுந்திருக்கிறது. வருடம் முழுக்க அரசு வாங்கும் தெண்டு இலைகளால், உத்தரவாதமான வருமானம் பழங்குடியினருக்கு இருந்தது. இப்போது அது குறைந்து விட்டதால் ராம் கோபால் போன்றோரின் வருமானமும் குறைந்து விட்டது.

மத்தியப் பிரதேசத்தில் காடுகளை சுற்றி வாழும் மக்களுக்கு காட்டுற்பத்திதான் பிரதான வாழ்வாதாரம். அவற்றில் சிர் கோண்ட் மரம் முக்கியமானது. மார்ச் முதல் ஜூலை வரையிலான சைத், பைசாக், ஜைத் மற்றும் அசாத் ஆகிய கோடை மாதங்களை தவிர்த்து, வருடம் முழுக்க அம்மரம் அவர்களுக்கு மரமெழுகு தரும். குனோ தேசியப் பூங்காவிலும் சுற்றிலும் வசிப்போரில் பெரும்பாலானோர் பாதிக்கப்படத்தக்க பழங்குடி குழுவான (PVTG) சகாரியா பழங்குடியினர் ஆவர். இவர்களில் 98 சதவிகிதமானோர் காட்டுற்பத்தியைதான் வாழ்வாதாரமாக கொண்டிருக்கிறார்கள் என்கிறது இந்த 2022ம் வருட அறிக்கை .

ராஜு திவாரி போன்ற வணிகர்களுக்கு காட்டுற்பத்தியை உள்ளூர்வாசிகள் விற்கும் மையமாக அகாரா கிராமம் விளங்குகிறது. காடு செல்ல தடை விதிக்கப்படுவதற்கு முன், பல நூறு கிலோ மரமெழுகும் வேர்களும் மூலிகைகளும் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது என்கிறார் திவாரி.

“பழங்குடிகள் காட்டுடன் பிணைந்திருப்பவர்கள், நாங்கள் பழங்குடியுடன் இணைந்திருப்பவர்கள்,” என்கிறார் அவர். “காடுடனான அவர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், நாங்கள் அதன் தாக்கத்தை எதிர்கொள்கிறோம்.”

காணொளி: குனோவிலிருந்து வெளியேற்றம்: யாருடைய காடு இது?

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மரமெழுகு போன்ற காட்டுற்பத்திதான் காட்டிலும் சுற்றியும் வசிக்கும் மக்களுக்கான பிரதான வாழ்வாதாரம்

*****

ஒரு குளிரான ஜனவரி காலைப்பொழுதில், சில மீட்டர் கயிறு மற்றும் ஓர் அரிவாளுடன் ராம் கோபால் வீட்டை விட்டு கிளம்பினார். குனோ தேசியப் பூங்காவின் சுவரெழுப்பப்பட்ட எல்லை, அகாராவிலுள்ள அவரின் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அவர் அடிக்கடி அங்கு செல்வதுண்டு. இன்று அவரும் அவரது மனைவியும் விறகுகள் கொண்டு வரவிருக்கின்றனர். விறகுகளை கட்டத்தான் அந்தக் கயிறு.

விறகு எடுக்க முடியுமா என உறுதியாக தெரியாத மனைவி சண்டு கவலையுடன், “அவர்கள் (வனத்துறையினர்) உள்ளே சில நேரங்களில் விட மாட்டார்கள். நாங்கள் மீண்டும் திரும்பி வர வேண்டியிருக்கும்,” என்கிறார். எரிவாயு சிலிண்டர் பெறும் வசதி இல்லையென கூறுகிறார்கள்.

“பழைய (பூங்காவுக்குள் இருந்த) கிராமத்தில், குனோ ஆறு இருந்தது. எனவே 12 மாதங்களுக்கும் எங்களுக்கு நீர் கிடைத்தது. தெண்டு இலைகள், வேர்கள் மற்றும் மூலிகைகளும் கிடைத்தது…” என்கிறார் சண்டு.

குனோ பூங்காவுக்குள் வளர்ந்த சண்டு, 1999ம் ஆண்டில் ஆசிய சிங்கங்கள் கொண்டு வரப்படுவதற்காக இடம்பெயர்த்தப்பட்ட 16,500 பேருடன் வெளியேறிய பெற்றோருடன் வெளியேறினார். வாசிக்க: குனோ பூங்காவில் யாருக்கும் பிரதானப் பங்குக் கிடைக்கவில்லை

”நாளடைவில் எல்லாம் மாறி விடும். காட்டுக்குள் யாரும் செல்ல முடியாது,” என்கிறார் ராம் கோபால்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

’“பழைய (பூங்காவுக்குள் இருந்த) கிராமத்தில், குனோ ஆறு இருந்தது. எனவே 12 மாதங்களுக்கும் எங்களுக்கு நீர் கிடைத்தது. தெண்டு இலைகள், வேர்கள் மற்றும் மூலிகைகளும் கிடைத்தது…’ என்கிறார் சண்டு. விறகுகள் சேகரிக்க தம்பதியினர் குனோ காட்டுக்கு செல்கின்றனர்

PHOTO • Priti David
PHOTO • Priti David

ராம் கோபாலும் அவரது மனைவியும் காட்டில் விறகு சேகரிக்கின்றனர். எரிவாயு சிலிண்டர் வாங்க வசதியில்லை என்கின்றனர்

உள்ளூர் மக்களின் ஒப்புதலின்றி நிலத்தை பெறக் கூடாது என வன உரிமைகள் சட்டம் 2006 வலியுறுத்தியும் சிறுத்தைப் புலிகளின் வரவால் வன உயிர் (பாதுகாப்பு) சட்டம் 1972 உருவாக்கப்பட்டது. “...சாலைகள், மேம்பாலங்கள், கட்டடங்கள், வேலிகள், தடுப்புகள் போன்றவை கட்டலாம்… (ஆ) வன உயிர் மற்றும் விலங்குகள் மற்றும் சரணாலய பாதுகாப்பு கருதி தேவையான நடவடிக்கைகள் எடுக்கலாம்” என சட்டம் குறிப்பிட்டது.

ராம் கோபால் முதலில் எல்லைச் சுவர் பற்றி கேள்விப்பட்டபோது, “தோட்டத்துக்காக எனதான் முதலில் சொன்னார்கள். நாங்களும் சரியென விட்டுவிட்டோம்,” என்கிறார். ”ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு ‘நீங்கள் உள்ளே வரக் கூடாது’ என அவர்கள் சொன்னார்கள். ‘எல்லையைத் தாண்டி வரக் கூடாது. உங்களின் விலங்குகள் உள்ளே வந்தால் அபராதமோ சிறைத்தண்டனையோ விதிக்கப்படும்,’” என்கிறார் அவர். “நாங்கள் நுழைந்தால், 20 வருடங்களுக்கு நாங்கள் சிறை செல்ல வேண்டும் (எனக் கூறப்பட்டது). அதற்கு (பிணை எடுக்க) என்னிடம் பணம் கிடையாது,” என்கிறார் அவர் சிரித்தபடி.

மேய்ச்சல் உரிமை இல்லாததால், கால்நடை எண்ணிக்கை குறைந்து விட்டது. கால்நடை கண்காட்சி எல்லாம் கடந்தகால நிகழ்ச்சியாகி விட்டது என்கின்றனர் உள்ளூர்வாசிகள். 1999ம் ஆண்டில் நடந்த இடப்பெயர்வில் பலரும் தங்களின் கால்நடைகளை பூங்காவிலேயே விட்டு வந்து விட்டனர். புதிய சூழ்நிலைக்கு அவை தகவமைக்க முடியாமல் போகும் வாய்ப்பிருப்பதாக அவர்கள் எண்ணியதே இதற்குக் காரணம். இன்றும் கூட, பூங்காவை சுற்றி சுற்றும் மாடுகளும் எருதுகளும் உரிமையாளர்களால் கைவிடப்பட்டவைதாம். அவற்றை வன நாய்கள் தாக்கும் ஆபத்தும் இருக்கிறது. ஏனெனில் ரேஞ்சர்கள், “(பூங்காவுக்குள் நீங்களோ விலங்கோ சென்றால்) அவை உங்களை கண்டறிந்து கொன்றுவிடும்,” எனக் கூறியிருந்தனர்.

ஆனால் விறகுக்கான தேவை இருப்பதால் “அமைதியாக யாருக்கும் தெரியாமல்” பலரும் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். அகாராவில் வசிக்கும் சகூ, இலைகள் மற்றும் சுள்ளிகளை கட்டி தலையில் சுமந்து வந்து கொண்டிருக்கிறார். அறுபது வயதுகளில் அவ்வளவுதான் சுமக்க முடியுமென அவர் கூறுகிறார்.

“காட்டுக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி இல்லை,” என்கிறார் அவர், அமர்ந்து ஓய்வெடுக்கும்போது கேள்வி கேட்க சொல்லியபடி. “மிச்ச மாடுகளையும் நான் விற்க வேண்டும்.”

PHOTO • Priti David
PHOTO • Priti David

ராம் கோபால் ஒரு எல்லைச் சுவரில். 350 சதுர கிலோமீட்டர் அளவுக்கு சிறியதாக ஒரு காலத்தில் இருந்த குனோ சரணாலயம், ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகளை கொண்டு வர இரு மடங்கு பரப்பளவு ஆக்கப்பட்டது

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: அகாராவில் வசிக்கும் அறுபது வயது சகூ, இன்னும் விறகு எடுத்து வர முயலுகிறார். வலது: காட்டு உற்பத்தியை காஷி ராமும் சேகரித்திருக்கிறார். ஆனால் இப்போது காட்டுக்கு செல்ல அனுமதி இல்லை என்கிறார்

முன்பெல்லாம் மாட்டு வண்டி நிறைய விறகுகளை கொண்டு வந்து மழைக்காலத்துக்கும் சேர்த்து வைத்துக் கொள்வோம் என்கிறார் சகூ. மொத்த வீடும் மரக்கட்டையாலும் காட்டு இலைகளாலும் கட்டப்பட்டிருந்த காலத்தை அவர் நினைவுகூருகிறார். “எங்களின் விலங்குகளை மேய்க்கக் கொண்டு செல்லும்போது, விறகுகளையும் விலங்குகளுக்கு தீவனத்தையும் விற்பதற்கு தெண்டு இலைகளையும் சேகரிப்போம்.”

நூற்றுக்கணக்கான சதுர அடி நிலம் இப்போது சிறுத்தைப் புலிகளுக்கும் அவற்றை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமென இருக்கிறது.

அகாரா கிராமத்தில், எல்லாரின் சார்பாகவும் காஷி ராம் பேசுகிறார், “நல்ல விஷயம் ஏதும் (எங்களுக்கு) சிறுத்தைப் புலிகள் வந்ததால் நடக்கவில்லை. இழப்பு மட்டும்தான் மிச்சம்,” என

*****

செந்திகெடா, பட்ரி, பைரா-பி, கஜூரி குர்த் மற்றும் சக்பரோன் போன்ற கிராமங்களில் பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. நிலம் அளக்கப்பட்டு குவாரி ஆற்றில் அணை கட்டப்படவிருக்கிறது. அதனால் அவர்களின் நிலமும் வயலும் நீருக்குள் மூழ்கும்.

“கடந்த 20 வருடங்களாக அணையைப் பற்றி கேட்டு வருகிறோம். அதிகாரிகள், ‘உங்கள் கிராமங்களுக்கு பதிலாக அணை வரவிருப்பதால், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உங்களுக்கு கிடையாது,’ என்கிறார்கள்,” என்கிறார் ஜஸ்ராம் பழங்குடி. செண்டிகெடாவின் முன்னாள் ஊர்த் தலைவரான அவர், பலருக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்ட பலன்கள் கிடைக்கவில்லை என்கிறார்.

குவாரி ஆற்றிலிருந்து சற்று தூரத்திலுள்ள வீட்டின் கூரையில் நின்றிருக்கும் அவர், “அணை இந்த இடத்தில் வரும். எங்களின் கிராமமும் 7-8 கிராமங்களும் மூழ்கிவிடும். ஆனால் அதற்கான அறிவிப்பு இன்னும் வரவில்லை,” என்கிறார்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

குவாரி ஆற்றின் அணையால் நீரில் மூழ்கவிருக்கும் செண்டிகெதா கிராமத்தின் முன்னாள் ஊர்த்தலைவர் ஜஸ்ராம் பழங்குடி ஆவார். இங்கு மனைவி மஸ்லா பழங்குடியுடன் அவர்

PHOTO • Priti David

குவாரி ஆற்றில் கட்டப்படும் அணைக்கான வேலை தொடங்கி விட்டது. இத்திட்டம் நான்கு கிராமங்களையும் நூற்றுக்கணக்கான குடும்பங்களையும் இடம்பெயர்த்தும்

நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் மற்றும் நிலம் மற்றும் நியாயமான இழப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கை இது. ஏனெனில் சட்டப்படி இடப்பெயர்வினால் ஏற்படக்கூடிய சமூக தாக்கம் கிராம மக்களிடம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

“23 வருடங்களுக்கு முன் நாங்கள் வெளியேற்றப்பட்டோம். பெரும் கஷ்டத்தை அனுபவித்து மீண்டும் எங்களின் வாழ்க்கைகளை கட்டி எழுப்பினோம்,” என்கிறார் சக்பரா கிராமத்தின் சத்னம் பழங்குடி. ஜெய்ப்பூர், குஜராத் மற்றும் பிற பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அவர் அடிக்கடி செல்வதுண்டு.

வாட்சப்பில் வந்த ஒரு செய்திக் கட்டுரையில்தான் அணையை பற்றி சத்னம் தெரிந்து கொண்டார். “யாரும் எங்களிடம் பேசவில்லை. யார் அல்லது எத்தனை பேர் பாதிக்கப்படுவோம் என தெரியவில்லை,” என்கிறார் அவர். வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளையும் அவர்களின் நிலங்களையும் குறிப்பெடுத்து வைத்திருக்கின்றனர்.

அவரின் தந்தையின் மனதில் ஏற்கனவே இடம்பெயர்த்தப்பட்ட நினைவு இன்னும் மங்கவில்லை. இப்போது அவர் இரண்டாம் முறையாக இடம்பெயர்த்தப்படுவார். “எங்களுக்கு இரட்டை கஷ்டம்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Priti David

پریتی ڈیوڈ، پاری کی ایگزیکٹو ایڈیٹر ہیں۔ وہ جنگلات، آدیواسیوں اور معاش جیسے موضوعات پر لکھتی ہیں۔ پریتی، پاری کے ’ایجوکیشن‘ والے حصہ کی سربراہ بھی ہیں اور دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب تک پہنچانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priti David

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Video Editor : Sinchita Parbat

سنچیتا ماجی، پیپلز آرکائیو آف رورل انڈیا کی سینئر ویڈیو ایڈیٹر ہیں۔ وہ ایک فری لانس فوٹوگرافر اور دستاویزی فلم ساز بھی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sinchita Parbat
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan