வசதி படைத்தவரோ ஏழையோ, முதியவரோ இளையவரோ எவராகினும் தங்களின் காலணிகளை கழற்றிவிட்டு அரசரின் கால்களை தொட வேண்டும். எனினும் ஓர் எளிய இளைஞன், நிமிர்ந்து நின்று அவரை நேரடியாக கண்கள் நோக்கி பார்த்தான். எந்த இரு முரண் கருத்தையும் ஒடுக்கும் அரசரின் முன் அத்தகைய எதிர்ப்புதன்மையை காட்டுவது பஞ்சாபின் ஜோகா கிராமத்தை சேர்ந்த பெரியவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. கொடுங்கோல அரசருக்கு கோபத்தை வரவழைத்தது.

அந்த இளைஞனின் பெயர் ஜாகிர் சிங் ஜோகா. அவரின் வீரம் நிறைந்த தனிநபர் போராட்டம், ஒன்றிய தொழிற்துறை பாதுகாப்பு படை (CISF) கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் தற்போதைய மண்டி மக்களவை உறுப்பினரும் பாலிவுட் பிரபலமுமான கங்கனா ரனாவத்தை அறைவதற்கு 90 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்தது. ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிக்க முயன்ற பாடியாலா அரசர் புபிந்தர் சிங்கை எதிர்த்துதான் ஜோகா தன் போராட்டத்தை பதிவு செய்தார். அது 1930களில் நடந்த சம்பவம். அடுத்த நடந்த விஷயங்கள் நாட்டுப்புற இலக்கியமாகி காணாமல் போனது. ஆனால் ஜோகாவின் போராட்டம் முடிந்துவிடவில்லை.

பத்தாண்டுகள் கழித்து, ஜோகாவும் லால் கட்சியிலிருந்து அவரின் அப்போதைய தோழர்களும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டத்தை கிஷன்கரில் (தற்போது சங்க்ரூர் மாவட்டத்தில் இருக்கிறது) நடத்தி, புபிந்தர் சிங்கின் மகனின் கட்டுப்பாட்டில் இருந்த 784 கிராமங்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கைப்பற்றி, நிலமற்றவர்களுக்கு விநியோகித்தனர். பாடியாலாவின் முன்னாள் ராணுவ வீரரும் பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சருமான கேப்டன் அம்ரிந்தர் சிங், புபிந்தர் சிங்கின் பேரன்.

அந்த நிலம் மற்றும் பிற போராட்டங்களை தொடர்ந்து 1954ம் ஆண்டில் ஜோகா நாபா சிறையிலடைக்கப்பட்டார். ஆனாலும் அவரை மக்கள் தேர்தலில் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் 1962, 1967 மற்றும் 1972 ஆண்டுகளிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

PHOTO • Jagtar Singh

இடது: 1930-களில் ஜாகிர் சிங் ஜோகாவின் எதிர்ப்பு ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிக்க முயன்ற பாடியாலா அரசர் புபிந்தர் சிங்கை எதிர்த்து இருந்தது. வலது: ஜுன் 2024-ல் சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் தன்னுடைய எதிர்ப்பை, புதிதாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கங்கனா ரனாவத்தை எதிர்த்து பதிவு செய்திருக்கிறார்

”பஞ்சாபில் போராட்ட உணர்வு காற்றில் நிரம்பியிருக்கிறது. பஞ்சாபின் தனிநபர் எதிர்ப்பு - பெரும்பாலும் தன்னிச்சையாக எழும் - போராட்ட வடிவத்துக்கான நீண்ட மரபின் சமீபத்திய கண்ணிதான் குல்விந்தர் கவுர். அந்த மரபு ஜோகாவால் தொடங்கப்படவுமில்லை. குல்விந்தர் கவுரோடு முடியப் போவதுமில்லை,” என்கிறார் ஓய்வு பெற்ற பேராசிரியரும் இன்குலாபி யோதா: ஜாகிர் சிங் ஜோகா (புரட்சி வீரர்: ஜாகிர் சிங் ஜோகா)  ஜோகாவின் சுயசரிதை புத்தகத்தை எழுதியவருமான ஜக்தார் சிங்.

தன்னிச்சையாக எழும் இத்தகைய தனிநபர் போராட்டங்கள், பஞ்சாபின் எளிய பின்னணியை சேர்ந்த மக்களால் முன்னெடுக்கப்படுபவை. சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிளான குல்விந்தர், கபுர்தாலா மாவட்டத்தின் மகிவால் கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் தாயான வீர் கவுரும் விவசாயிதான். அவரைத்தான் கங்கனா ரனாவத் கொச்சைப்படுத்தியதால்தான் குல்விந்தர் தன் எதிர்ப்பை பதிவு செய்தார்.

ஜோகாவுக்கு முன்பு, பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு எதிராக நடந்த லாகூர் சதி வழக்கில் அப்ரூவராக மாறிய ஜெய்கோபால் மீது நீதிமன்றத்துக்குள்ளேயே (1929-30) பிரேம்தத்தா வர்மா செருப்பு வீசினார். “திட்டம் போட்டு நடந்த விஷயம் அல்ல அது. வர்மாவின் எதிர்ப்பு தன்னிச்சையாக நடந்தது. விசாரணையின்போது அவரும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிறரும் சித்ரவதை செய்யப்பட்டனர்,” என்கிறார் The Bhagat Singh Reader எழுதிய பேராசிரியர் சமன் லால் .

நேர்மையற்ற விசாரணைக்கு பிறகு, பகத் சிங்கும் இரண்டு தோழர்களும் மார்ச் 23, 1931 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்பட்டனர். (இளையவரான வர்மாவுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை). சரியாக ஒரு வருடம் கழித்து, அவர்களின் நினைவஞ்சலியின்போது, கண்டதும் சுடுவதற்கான உத்தரவையும் பொருட்படுத்தாமல் 16 வயது ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், ஹோஷியார்பூரின் மாவட்ட நீதிமன்றத்துக்கு மேல் இருந்த பிரிட்டிஷ் கொடியைக் கிழித்து போட்டு, மூவண்ணக் கொடியை ஏற்றினார்.

“யூனியன் ஜாக் கொடியை கீழிறக்க வேண்டுமென்கிற அழைப்பை முதலில் காங்கிரஸ் கட்சிதான் கொடுத்தது. ஆனால் பின்வாங்கியது. சுர்ஜீத் தன்னிச்சையாக செயல்பட்டார். பிறகு நடந்தது வரலாறு,” என்கிறார் உள்ளூர் வரலாற்றாய்வாளர் அஜ்மெர் சிது. பல பத்தாண்டுகளுக்கு பிறகு, நினைவறைகளில் ஊடாக ஆய்ந்து சொல்கையில் சுர்ஜீத், “அந்த நாளன்று நான் செய்ததை நினைத்து இன்றும் பெருமைதான்,” என்றார். ஒரு அறுபது ஆண்டுகளுக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானார் சுர்ஜீத்.

PHOTO • Daily Milap / courtesy Prof. Chaman Lal
PHOTO • Courtesy: Prof Chaman Lal

1930களின் லாகூர் சதி வழக்கு பற்றி தி டெய்லி மிலாப்பின் போஸ்டர் (இடது). பிரேம்தத்தா வர்மா (வலது), பக்த் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு எதிராக அப்ரூவராக மாறிய ஜெய்கோபால் மீது நீதிமன்றத்துக்குள்ளேயே வர்மா செருப்பு வீசினார்

PHOTO • Courtesy: Amarjit Chandan
PHOTO • P. Sainath

இடது: 1932ம் ஆண்டில் ஹோஷியர்பூரின் மாவட்ட நீதிமன்றத்தின் மேல் இருந்த பிரிட்டிஷ் கொடியை ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் கிழித்தெறிந்து மூவண்ணக் கொடியை தன் 16 வயதில் ஏற்றினார். பஞ்சாபின் ஃபில்லார் சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரின் 1967-ல் வெற்றியடைந்த பிறகான காட்சி. வலது: புரட்சியாளர் பகத் சிங்கின் மருமகனான பேராசிரியர் ஜக்மோகன் சிங் (நீல ஆடை) ராம்கரிலுள்ள வீட்டில் ஜுக்கியானுடன்

1932ம் ஆண்டு கொடி சம்பவத்துக்கு சில வருடங்களுக்கு பிறகு, சுர்ஜீத்தின் தோழரும் அவரை விட பல வருடங்கள் இளையவருமான பகத் சிங் ஜுக்கியான் முக்கியமான சம்பவத்தை 11 வயதில் செய்தார். மூன்றாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்திருந்தார் ஜுக்கியான். கல்வித்துறை அதிகாரி அவரை வாழ்த்தி மேடையேற்றி பரிசு கொடுத்துவிட்டு, ‘பிரித்தானியா வாழ்க, ஹிட்லர் ஒழிக,’ என முழங்கச் சொல்ல, இளம் ஜுக்கியானோ பார்வையாளர்களை பார்த்து, ‘பிரித்தானியா ஒழிக, இந்துஸ்தான் வாழ்க,’ என முழங்கினார்.

உடனே அடித்து தூக்கியெறியப்பட்ட அவர், மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. வாழ்வின் கடைசி நாட்கள் வரை, ஜுக்கியான் தான் செய்ததில் பெருமைதான் கொண்டிருந்தார். 2022ம் ஆண்டில் 95ம் வயதில் இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன் பாரியின் நிறுவன ஆசிரியர் பி. சாய்நாத்திடம் ஜுக்கியான் பேசிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.

அதே உணர்வைத்தான், சகோதரி குல்விந்தர் கவுரை ஜூன் 12ம் தேதி சந்தித்து விட்டு வெளியே வந்து ஊடகத்திடம் பேசிய ஷேர் சிங் மகிவாலும் வெளிப்படுத்தினார்: “அவள் செய்ததை குறித்து அவளோ நாங்களோ வருத்தப்படவில்லை. எனவே மன்னிப்பு கேட்பதற்கான தேவையே இல்லை,” என அவர் உறுதிப்படுத்தினார்.

பஞ்சாபில் மிகச் சமீபமாக கூட இத்தகைய தனிநபர் எதிர்ப்புகள் பல வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயத் தற்கொலைகள், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றின் மத்தியில் பஞ்சாபின் பருத்தி விளைவிக்கும் பகுதிகளுக்கு 2014ம் ஆண்டு சிரமமான காலமாக இருந்தது. எந்த மாதத்திலும் நம்பிக்கையான வருமானம் பெற முடியாத விக்ரம் சிங் தனாவுலா, அவரது கிராமத்திலிருந்து 100 கிலோமீட்டர் பயணித்து, ஆகஸ்ட் 15, 2014 அன்று மூவண்ணக் கொடியை முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் ஏற்ற வந்திருந்த கன்னா டவுனுக்கு சென்றார்.

PHOTO • Courtesy: Vikram Dhanaula
PHOTO • Shraddha Agarwal

2014ம் ஆண்டு விக்ரம் சிங் தனாவுலா (இடது), வேலையில்லாத இளைஞர்கள் மட்டும் விவசாயிகளை அலட்சியப்படுத்திய காரணத்துக்காக முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மீது காலணி வீசினார். 2021ம் ஆண்டில் பஞ்சாபின் பெண்கள் விவசாயப் போராட்டங்களின் முன்னணி வகித்தனர் (வலது)

தனாவுலா காலணியை எறியும்போது பாதல் அப்போதுதான் தன் உரையைத் தொடங்கியிருந்தார். “அவரின் முகத்தை என்னால் சுலபமாக தாக்கியிருக்க முடியும். ஆனால் காலணியை தெரிந்தே மைக் அருகே வீசினேன். வேலையில்லா இளைஞர்களின் பிரச்சினை மற்றும் போலி விதை, பூச்சிக்கொல்லி மருந்து போன்றவற்றால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் பக்கமும் அவர் கவனம் திருப்ப வேண்டும் என்று விரும்பினேன்.”

தனாவுலா கிராமத்தில் வசிக்கும் அவர் 26 நாட்கள் சிறையில் கழித்தார். அவர் செய்ததில் அவருக்கு வருத்தம் இருக்கிறதா? “எங்குமே நம்பிக்கைக்கான சாத்தியம் கூட தென்படாதபோதுதான் பத்து வருடங்களுக்கு முன் நான் செய்தது போன்றோ, தற்போது குல்விந்தர் கவுர் செய்தது போன்றோ செய்யும் கட்டத்துக்கு ஒருவர் செல்வார்,” என்கிறார் அவர். பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கி தற்போதைய பாஜக அரசாங்கம் வரை, தனித்த குரல்கள் இருந்தே வந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் தனக்கே உரிய அடர்த்தியையும் இலக்கை நோக்கிய பயணத்தையும் விளைவுகள் எதிர்பாராமல் கொண்டிருந்தன.

பஞ்சாபுடனான கங்கனா ரனாவத்தின் உறவு 2020ம் ஆண்டில், விவசாயப் போராட்டம் உச்சம் பெற்றிருக்கும்போது மாற்றம் அடைந்தது. மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய பெண் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசினார். பிற்பாடு அந்தச் சட்டங்களை நவம்பர் 19, 2021-ல் ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. “ஹா ஹா ஹா ஹா சக்தி வாய்ந்த இந்தியர் என டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டையில் இடம்பெற்ற அதே பாட்டிதான் அவர். 100 ரூபாய் அவருக்குக் கொடுத்தால் போதும்,” என கங்கனா ட்வீட் செய்திருந்தார்.

கங்கனாவின் வார்த்தைகளை பஞ்சாப் மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் ஜுன் 6ம் தேதி, குல்விந்தர் கவுர், “அவர் (கங்கனா), டெல்லியில் போராடிய விவசாயிகளை 100, 200 ரூபாய் வாங்கிக் கொண்டு வந்து போராடுவதாக கூறினார். அச்சமயத்தில் என் தாயும் போராட்டத்தில் இருந்தார்,” எனக் கூறியதும் அந்த வார்த்தைகள் நினைவில் மீண்டன. கங்கனாவை குல்விந்தர் அறைந்த காட்சியை கண்டதாக எவரும் இதுவரை கூறவே இல்லை. ஆனால் அது நடந்திருந்தாலும், ஜூன் 6ம் தேதி அது தொடங்கியிருக்கவில்லை.

காணொளி: கங்கனாவின் வார்த்தைகளின் மீதான கோபம் பற்றிய முன்கதை

பஞ்சாபின் பெரும்பாலான இந்த தன்னிச்சையான தனிநபர் எதிர்ப்புகள், சாமானிய எளிய மக்களிடமிருந்து வெளிப்பட்டவை

சண்டிகர் விமானநிலையத்தின் ’அறைந்த சம்பவம்’ நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன் டிசம்பர் 3, 2021 அன்று, மணாலியிலிருந்து கங்கனா ரனாவத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது கார் பஞ்சாபுக்குள் நுழைந்ததும் பெண் விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். கங்கனாவுக்கு மன்னிப்பு கேட்பதை தவிர வேறு வழியில்லை. தற்போதைய பிரச்சினையிலும் கூட, குல்விந்தருக்கும் சகோதரர் ஷேர் சிங் மகிவாலுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் கூட, குடும்பம் மற்றும் மரியாதை பற்றிய முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன.

“பாதுகாப்பு படைகளில் பல தலைமுறைகளாக நாங்கள் வேலை பார்த்து வருகிறோம்,” என்கிறார் மகிவால். “குல்விந்தருக்கு முன், தாத்தாவின் குடும்பத்தை சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் ராணுவத்தில் பணிபுரிந்தனர். தாத்தாவும் ராணுவத்தில் இருந்தார். அவரின் ஐந்து மகன்களில் மூவர், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தனர். 1965 மற்றும் 1971 ஆண்டுகளின் போர்களில் நாட்டுக்காக போராடியிருக்கிறார்கள். அத்தகையவர்களின் நாட்டுப் பற்றுக்கு கங்கனா போன்றவர்களிடமிருந்து சான்றிதழ் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” எனக் கேட்கிறார் ஷேர் சிங் மகிவால்.

குல்விந்தர் கவுர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 35 வயதாகும் அவர், இன்னொரு சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிளை மணம் முடித்து இரண்டு குழந்தைகள் கொண்டிருக்கிறார். ஒரு ஆண் குழந்தைக்கு வயது ஐந்து. பெண் குழந்தைக்கு வயது ஒன்பது. குல்விந்தர் கவுரின் பணி பறிபோகும் நிலை. ஆனாலும் பஞ்சாபை முழுவதுமாக தெரிந்திருப்பவர்களுக்கு, தனி நபர் எதிர்ப்பு காட்டுபவர்கள் தங்களின் செயல்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனத் தெரியும். அந்த செயல்கள் நல்ல எதிர்காலத்துக்கு வித்திடும் என்றும் தெரியும். “ஜோகா மற்றும் கவுர் ஆகியோர் எங்களின் கனவுகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன என்றதற்கான அடையாளங்கள்,” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஹர்தேவ் சிங் அர்ஷி. ஜாகிர் சிங் ஜோகாவுடன் முதன்முறையாக அவர் அறுபது வருடங்களுக்கு முன் நட்பானார். ஜாகிர் சிங்கின் கிராமமான ஜோகாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ததேவாஸ் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஷி. இரு கிராமங்களுமே மன்சா மாவட்டத்தை சேர்ந்தவை.

1954ம் ஆண்டில் பஞ்சாபின் சட்டமன்றத்துக்கு ஜோகா தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிறையில் இருந்தார். சுர்ஜீத், பகத் சிங் ஜுக்கியான் மற்றும் பிரேம் தத்தா வர்மா ஆகியோர் பஞ்சாபின் தனிநபர் எதிர்ப்பு போராளிகளின் நீண்ட மரபையும் அதன் போராட்ட இலக்கியத்தையும் சேர்ந்தவர்கள்

ஷேர் சிங் மகிவால், சகோதரர் குல்விந்தர் ஆகியோர் சம்பவத்தை பற்றி பேசும் காணொளி

தனி நபர் எதிர்ப்பு காட்டுபவர்கள் தங்களின் செயல்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனினும் அவர்களின் தனிமனித வீரம் நல்ல எதிர்காலத்துக்கு வித்திடுபவை

பேரணிகளும் ஊர்வலங்களும் தொடர்ச்சியாக பஞ்சாப் மற்றும் சண்டிகரில் குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக நடத்தப்படவிருக்கின்றன. இவை யாவும் குல்விந்தரின் அறையை நியாயம் என்றோ சரி என்றோ கொண்டாடவில்லை. பஞ்சாபின் விவசாயிகளின் மரியாதைக்காக ஒரு மக்களவை உறுப்பினரையும் பிரபலத்தையும் எதிர்த்து நின்ற ஓர் எளிய கான்ஸ்டபிளை கொண்டாடவே இந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதாக இம்மக்கள் நினைக்கின்றனர். எளிமையாக சொல்வதெனில் குல்விந்தரின் செயல்பாட்டை, பஞ்சாபின் தன்னிச்சையாக வெளிப்படும் தனிநபர் எதிர்ப்புணர்வு பாரம்பரியத்தின் நீட்சியாகவே அம்மக்கள் பார்க்கின்றனர்.

மொத்த சம்பவமும் பல கவிதைகளையும் பாடல்களையும் மீம்களையும் கேலிச்சித்திரங்களையும் மாநிலம் முழுக்க உருவாக்கியது. இன்று பாரி, இக்கட்டுரையுடன் அந்தக் கவிதைகள் சிலவற்றை பிரசுரிக்கிறது. பிரபல நாடகாசிரியரும் பஞ்சாபி ட்ரிப்யூனின் முன்னாள் ஆசிரியருமான ஸ்வராஜ்பிர் சிங்தான் கவிஞர்.

பாதுகாப்பு படை வேலையை வேண்டுமானால் குல்விந்தர் கவுர் இழக்கலாம். ஆனால் பெருமளவு பரிசுகளும் சட்ட உதவியும் அவருக்குக் கிடைக்கிறது. ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படுகின்றன. ஆனால் ஜோகாவை போல பெரிய பணியும் கூட அவருக்கு பஞ்சாப் சட்டமன்றத்தில் காத்திருக்கலாம். ஏனெனில் ஐந்து இடைத்தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. பஞ்சாபில் இருக்கும் பலர் அவர் போட்டியிடுவார் என நினைக்கின்றனர்.

PHOTO • PARI Photos

இடது: சண்டிகர் விமான நிலையத்தில் சம்பவத்துக்கு பிறகு குல்விந்தர் கவுர். வலது: ஜூன் 9, 2024 அன்று கங்கனாவுக்கு எதிராகவும் குல்விந்தருக்கு ஆதரவாகவும் மொஹாலியில் நடந்த பேரணி

___________________________________________________

சொல் ஓ தாயே

ஸ்வராஜ்பிர்

தாயே ஓ தாயே
உன் மனதில் என்ன இருக்கிறதென சொல், ஓ தாயே
என் மனதில் எரிமலைகள் பொங்கி வழிகிறது.

ஒவ்வொரு நாளும் நம்மை அறைவது யாரென சொல்?
நம் தெருக்களில் அத்துமீறுபவர்கள் யார்,
தொலைக்காட்சிகளில் உறுமுபவர்கள் யார்?

வலியோர் மற்றும் பணக்காரர் அறைகளை நாம் தாங்குகிறோம்.
பூமியின் வறியோர் வலியை தாங்குகிறார்கள்.
அரசின் வாக்குறுதிகள் பொய்த்து போகின்றன.

ஆனால் சில நேரங்களில்
ஆம், மிகச் சில சமயங்களில்
எழுந்து நிற்கிறாள் தாக்கப்பட்ட ஏழைப் பெண்.

வலிய உணர்வுகள் என்னுள் எழுகின்றன,
அவள் எழுந்து கையை சுழற்றுகிறாள்
ஆளும் பேய்களை எதிர்க்க அவள் துணிகிறாள்

இந்த குத்து,
இந்த அறை, தாக்குதல் அல்ல ஓ தாயே.
அது ஓர் ஓலம், அலறல், வலிக்கும் என் இதயத்தின் உறுமல்.

சிலர் சரி என்கிறார்கள்
சிலர் தவறு என்கிறார்கள்
மாண்பு என்கிறார்கள் இல்லை என்கிறார்கள்
என் தாய் உனக்காக ஓலமிடுகிறது.

உன்னையும் மக்களையும் மிரட்டினர் வலியோர்
வலிமை கொண்டோர் உனக்கு சவால் விட்டனர்.
அந்த வலியோர்தான் என் இதயத்தை பிளந்தார்கள்.

அது என் இதயம்தான் தாயே
என் ஓலமிடும் இதயம்.
மாண்போ திமிரோ
உன்னை நோக்கிய ஓலமும் அழுகையும் அது.
சிலர் சரி என்கிறார்கள்
சிலர் தவறு என்கிறார்கள்.

ஆனால் இது என் இதயம், ஓ தாயே
என் எதிர்ப்பு நிறைந்த சிறு இதயம்தான் உன்னிடம் பேசுகிறது.

(மொழிபெயர்த்தவர் சரண்ஜித் சோஹால்)

ஸ்வராஜ்பிர் ஒரு நாடகாசிரியரும் பத்திரிகையாளரும் பஞ்சாபி ட்ரிப்யூனின் முன்னாள் ஆசிரியரும் ஆவார்

தமிழில்: ராஜசங்கீதன்

Vishav Bharti

وشو بھارتی، چنڈی گڑھ میں مقیم صحافی ہیں، جو گزشتہ دو دہائیوں سے پنجاب کے زرعی بحران اور احتجاجی تحریکوں کو کور کر رہے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Vishav Bharti

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Illustration : Antara Raman

انترا رمن سماجی عمل اور اساطیری خیال آرائی میں دلچسپی رکھنے والی ایک خاکہ نگار اور ویب سائٹ ڈیزائنر ہیں۔ انہوں نے سرشٹی انسٹی ٹیوٹ آف آرٹ، ڈیزائن اینڈ ٹکنالوجی، بنگلورو سے گریجویشن کیا ہے اور ان کا ماننا ہے کہ کہانی اور خاکہ نگاری ایک دوسرے سے مربوط ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Antara Raman
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan