விளக்கு அணைந்திடாத வண்ணம் ஒரு நபர் வேகமாக திரைக்கு பின் சென்று மறைகிறார். ஒரு மணி நேரம் நீளும் கூத்தில், பல முறை அவர் இதை, கருவியையும் சக தொழிலாளர்களையும் தொந்தரவு செய்திடாமல் செய்கிறார்.
அவர்களை அனைவரும், பார்வையாளர்களுக்காக மறைந்திருந்து கூத்து காட்டும் தோல்பாவைக் கூத்து கலைஞர்கள் ஆவர்.
வெள்ளைத் திரையின் மறுபக்கத்திலிருந்து அக்கலைஞர்கள் தங்கள் கைகளிலுள்ள பொம்மைகளை தொடர்ந்து அசைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் கால்களருகே அடுத்து பயன்படுத்தப்படவிருக்கும் 50-60 பொம்மைகள் கிடக்கின்றன. பேச்சாளர்கள் கதை சொல்ல, நிழல்களின் வழி காட்சிப்படுத்தப்படுகிறது.
இக்கலையின் இயல்புக்கு, சிறப்பான கூத்து பாராட்டப்படாமல் போகாது. எனவே ராமச்சந்திரப் புலவருக்கு 2021ம் ஆண்டில், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. விருது பெற்றதும் அந்த தோல்பாவைக்கூத்து கலைஞர் பேசிய உரையில், “இந்த அங்கீகாரமும் பெருமையும், இக்கலையை உயிரோடு வைத்திருக்க உழைத்த மொத்தக் குழுவுக்கும் உரியது,” என்றார்.
எனினும் புலவர் மற்றும் குழுவின் வெற்றிக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. விமர்சகர்களும் பக்தர்களும் கலையை வணிகமாக அவர்கள் மாற்றிவிட்டார்கள் என குற்றஞ்சாட்டினர். ராமச்சந்திரா, விமர்சனத்தை பெரிதாக பொருட்படுத்தவில்லை. “நாம் உண்ணவும் உயிர் வாழவும் அது வணிகமாகத்தான் இருக்க வேண்டும்,” என்கிறார் அவர். “நடிகர்களும் நடனக் கலைஞர்களும் கட்டணம் பெறும்போது, நாமும் ஏன் அதை செய்யக் கூடாது?”
பாரம்பரியமாக, தோல்பாவைக்கூத்து கோவில் வளாகத்துக்குள், கேரளாவின் அறுவடை விழாவின்போது நடத்தப்பட்டது. ஆனால் கடந்த 20 வருடங்களில் 63 வயது ராமச்சந்திராவும் பாலக்காடிலுள்ள அவரது காவலப்பரா பொம்மலாட்டக் குழுவும் பெரும் முயற்சிகளை எடுத்து, நவீன தளத்தில் தோல்பாவைக்கூத்து நடப்பதை உறுதி செய்திருக்கின்றனர். இப்போது நிழல் கூத்து பல மாற்றங்களையும் பல பரீட்சார்த்த முயற்சிகளையும் உட்செரித்து வந்திருக்கிறது. பாரம்பரிய விழாவின் நிகழ்ச்சியை பற்றி அனைவருக்குமான தோல்பாவைக்கூத்து கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
ராமச்சந்திராவின் தந்தையான கிருஷ்ணன்குட்டி புலவர்தான், தோல்பாவைக்கூத்தை வெளியுலகத்துக்கு கொண்டு வரும் முடிவை எடுத்தவர். இந்து மத இதிகாசங்களான ராமாயணம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட கூத்துகளை தாண்டி பல கதைகளை உள்ளடக்கத் தொடங்கின. கேரளாவின் பாரம்பரிய நிழல் கூத்து வடிவத்தில் காந்தியின் கதை, முதன்முதலாக அக்டோபர் 2004-ல் எடப்பாலில் நடத்தப்பட்டது. பிறகு அது தொடர்ந்து இதுவரை 220-க்கு மேற்பட்ட முறைகள் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த பெரும் வரவேற்பு, காவலப்பரா குழுவுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கியது. திரைக்கதைகளையும் பொம்மை ஓவியங்களையும் மன உத்திகளையும் உருவாக்கத் தொடங்கினர். உரைகள் வழங்கவும் ஸ்டுடியோவில் பாடல்கள் உருவாக்கவும் தொடங்கினர். இயேசு பிறப்பு, மகாபலி, பஞ்சதந்திரம் எனப் பலவகை கதைகளை அடிப்படையாகக் கொண்டு இக்குழு திரைக்கதைகளை உருவாக்கத் தொடங்கியது.
புத்தரின் ஆன்ம தாக்கம் குறித்து குமாரநஷன் எழுதிய ‘சண்டாளபிக்ஷுகி’ கவிதை போன்றவற்றின் மூலம் சமூக விழிப்புணர்வையும் காவலப்பரா கலைஞர்கள் உருவாக்கினர். பிறகு 2000மாம் ஆண்டுகளில், முக்கியமான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அளிக்கும் தளமாக அது மாறியது. ஹெச்ஐவி விழிப்புணர்வு, காடழிப்புக்கு எதிரான பிரசாரம், தேர்தல் பிரசாரங்கள் போன்றவற்றையும் அக்குழு செய்தது. பலதரப்பட்ட கலை வடிவங்களுடனும் கலைஞர்களுடனும் அவர்கள் இணைந்து கலவையான நிகழ்ச்சிகளையும் உருவாக்கினர்.
இன்றைய உலகில் தொடர்வதற்கான தோல்பாவைக்கூத்தின் புதுமை, முயற்சி ஆகியவற்றை பற்றிய ஒரு ஆவணப்படம்.
இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளையின் (MMF) மானியத்தில் எழுதப்பட்டது
தமிழில்: ராஜசங்கீதன்