அவர் செய்தது ஒரு வியப்பூட்டும் மேஜிக் நிகழ்ச்சி போல இருந்தது. தன்னுடைய பழைய பெட்டியில் இருந்து டி.ஃபாத்திமா பெரும் செல்வக் குவியல்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு அற்புதமான கலைப்படைப்பு.. தூத்துக்குடிக் கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் வாழ்ந்த ஒரு வலுவான பெரிய மீன், இன்று சூரிய ஒளி, உப்பு முதலியவற்றின் உதவியோடு, திறன் வாய்ந்த கரங்களால், கருவாடாக, ஒரு கலைப்படைப்பு போல உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஃபாத்திமா ஒரு கட்டப்பாறை மீனை உயர்த்திப் பிடிக்கிறார். அவர் உயரத்தில் பாதி இருக்கிறது. அதன் வாயில் இருந்து வால் வரை அதன் உடல் வெட்டப்பட்ட தடம் தெரிகிறது. அப்படி அதன் உடல் வெட்டப்பட்டு, அதன் உள்ளே இருக்கும் குடல் முதலானவை அகற்றப்பட்டு, உப்பு திணிக்கப்பட்டு, உக்கிரமான வெயிலில் கருவாடாக மாறியிருந்தது அந்தக் கட்டப்பாறை மீன். தெரெசாபுரத்தின் உக்கிரமான வெயிலில், மீன், மண், மக்கள் என அனைவருமே காய்ந்து போய்க் கிடக்கிறார்கள்.
ஃபாத்திமாவின் முகத்திலும் கைகளிளும் உள்ள சுருக்கங்கள், மீனைக் கருவாடாக்கும் சிரமமான தொழிலின் கதையைச் சொல்கின்றன. ஆனால், ஃபாத்திமா நமக்கு வேறொரு கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அது அவரும், அவரது ஆச்சியும் கருவாடுகளை உற்பத்தி செய்து விற்ற பழங்கதை. இன்னொரு ஊரில், இன்னொரு தெருவில் நடந்த கதை. 2004 ஆம் ஆண்டு வந்த சுனாமி, எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. அது சகதியையும், சாக்கடையையும் வீட்டுக்குள் கொண்டு வந்து கொட்டியது. அதன் விளைவாக, அவருக்கு ஒரு புதிய வீடு கிடைத்தது. ஆனால், அதில் புதிய பிரச்சினை ஒன்று இருந்தது. அந்தப் புதிய வீடு பழைய வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. கடற்கரைக்குச் சென்று மீன் வாங்கி வர பஸ் பிடித்து, அரை மணி நேரம் பயணம் செல்ல வேண்டியிருந்தது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் அவர் சகோதரியும் மீண்டும் பழைய வீடு இருந்த இடமான தெரெசாபுரத்துக்கே வந்து சேர்ந்தார்கள். தெரெசாபுரம் தூத்துக்குடி நகரின் விளிம்பில் உள்ளது. வீட்டையும் கடையையும் ஒட்டி அகலப்படுத்தப்பட்ட கால்வாய் ஓடிக் கொண்டிருக்கிறது.
64 வயதாகும் ஃபாத்திமா, அவரது ஆச்சி செய்த மீன் வியாபாரத்தை, தனக்குத் திருமணமாகும் வரை செய்து வந்தார். இருபதாண்டுகளுக்கு முன்பு அவர் கணவர் இறந்த பின்பு, மீண்டும் அந்த வியாபாரத்தைத் தொடங்கினார். ‘அந்தக் காலத்துல, அப்போ எனக்கு 8 வயசா இருக்கும். அப்ப கரைல மீன் துள்ளத் துள்ள உயிரோடு ஃப்ரெஷ்ஷா கிடைக்கும். ஆனா, இன்னிக்கு எல்லாம் ஐஸ் மீன் தான்’, என்கிறார் ஃபாத்திமா. மீன் பிடிப் படகுகள் தங்களுடன் ஐஸ் கொண்டு செல்கிறார்கள். பல நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்கிறார்கள். பிடிக்கப்படும் மீன்கள் ஐஸ் பெட்டியில் பத்திரமாக வருகின்றன. மீன் வணிகம் லட்சங்களில் நடக்கிறது. ‘அன்னிக்கு மீன் வியாபாரம் அணா பைசாவுல நடந்துச்சு.. நூறு ரூபாய்ங்கறது பெரிய விஷயம்.. இன்னிக்கு வியாபாரம் ஆயிரங்கள்ல, லட்சங்கள்ல நடக்குது’.
ஃபாத்திமாவின் ஆச்சி உயிரோடிருந்த காலத்தில், எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. பனையோலைக் கூடையில் கருவாடுகளைப் போட்டுக் கொண்டு தலையில் சுமந்து சென்றார்கள். ‘பத்து கிலோமீட்டர் வரைக்கும் நடந்து போயி, பட்டிக்காட்டுல வித்துட்டு வருவாங்க’. இப்போது, கருவாடுகளை அலுமினியப் பாத்திரங்களில் போட்டுக் கொண்டு, பேருந்தில் பயணம் செய்கின்றனர். தூரத்தில் உள்ள நகரங்கள், அண்டை மாவட்டங்கள் வரை கொண்டு செல்கிறார்கள்.
’கொரொனா வர்றதுக்கு முன்னாடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் ரோட்ல இருக்கற எல்லா கிராமத்துக்கும் போவோம்.. இப்ப திங்கக் கிழம, திங்கக் கிழம ஏரல் சந்தைக்குப் போறதோட சரி’, என்கிறார் காற்றில் திசைகளை நமக்கு வரைந்து காட்டி. (ஆகஸ்டு, 2022). தன் கருவாட்டுச் சுமையை ஏரல் சந்தைக்குக் கொண்டு செல்ல, ஆட்டோ மற்றும் பஸ் செலவு மட்டுமே அவருக்கு 200 ரூபாய் ஆகிறது. அது போக, சந்தைக்கு நுழைவு வரியா 500 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கு. சந்தைல ஒரு வசதியும் கிடையாது. வெயில்லதான் ஒக்காரணும்.. அதுக்கே இவ்வளவு காசு கொடுக்கனும் என்கிறார் ஃபாத்திமா. ஆனால், அது பரவாயில்லை என்பதுதான் அவர் எண்ணமாக இருக்கிறது. ஏனெனில், ஒருநாள் சந்தையில் அவர் ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் வரை வியாபாரம் செய்கிறார்.
நாலு திங்கட்கிழமை வியாபாரம் மட்டுமே மாதம் முழுவதுக்கும் போதாதல்லவா? இந்த வணிகத்தின் பிரச்சினைகளை ஃபாத்திமா மிகத் தெளிவாக அறிந்திருக்கிறார். ‘பத்து இருவது வருஷம் முன்னாடி, ரொம்ப தூரம் போக வேண்டியதில்ல.. தூத்துக்குடி பக்கத்துலயே கடல்ல நெறய மீன் கிடைக்கும்.. இன்னிக்கு ரொம்ப தூரம் போனாலும், பெரிசாக் கிடைக்கிறதில்ல’.
கடலில் மீன் வளம் குறைந்து போனதை, தன் வாழ்க்கை அனுபவத்தினூடே, ஒரு நிமிடத்தில் சுருக்கமாகச் சொல்கிறார். ‘அப்பெல்லாம், ராத்திரி மீன் பிடிக்கக் கெளம்பிப் போய், அடுத்த நாள் சாயங்காலம் திரும்பிருவாங்க.. இன்னிக்கு கன்னியாகுமரி, சிலோன், அந்தமானுன்னு 15-20 நாள் ஆயிருது போயிட்டு வர’.
இது பெரும் பிரச்சினை. எங்கும் பரவியிருக்கும் பிரச்சினை. தூத்துக்குடி அருகில் உள்ள கடல்பரப்பில் குறைந்து வரும் மீன்வளம். இந்தப் பிரச்சினையை அவரால் தீர்க்க முடியாது. ஆனால், அது இவரது வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது
ஃபாத்திமா முன்வைக்கும் பிரச்சினைக்கு ஒரு பெயர் இருக்கிறது, ‘அதீத மீன்பிடிப்பு’. கூகுளில் தேடினால், நொடியில் அதற்கு 1.8 கோடி தீர்வுகள் கிடைக்கின்றன. அவ்வளவு பொதுவான பெரும் பிரச்சினை. உணவு மற்றும் வேளாண் கழகம், (Food and Agriculture Organisation) உலகளவில் மக்களுக்குத் தேவையான விலங்குப் புரதத்தில், 17% கடலில் இருந்து கிடைக்கிறது என்கிறது. இது மொத்த புரதத்தில் 9% ஆகும் (2019). ‘ஒவ்வொரு வருடமும், 80-90 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு கடல் உணவை நாம் எடுத்துக் கொள்கிறோம்’, என்கிறார் பால் க்ரீன்பெர்க் என்னும் நூலாசிரியர். இவர், ‘American Catch and Four Fish’, என்னும் நூலை எழுதியவர். இது மொத்த சீன மக்களின் எடைக்குச் சமமானது’ , என்கிறார் க்ரீன் பெர்க். மலைக்க வைக்கும் ஒப்பீடு.
இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. பிடிக்கப்படும் எல்லா மீனும் உண்ணப்படுவதில்லை. மற்ற உணவுப் பொருட்களைப் போலவே பதப்படுத்தப்பட்டு வருங்கால உபயோகத்துக்காகப் பாதுகாக்கப்படுகிறது. இதில் மிகப் பழங்காலப் பதப்படுத்தும் முறைதான் மீனை உப்பிட்டு, கருவாடாக மாற்றும் முறை.
*****
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும், செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;
எம்மனோரில் செம்மலும் உடைத்தே
நற்றினை 45 : நெய்தல் திணை (கடலும் கடல் சார்ந்த இடமும்)
தலைவியின் தோழி தலைவனுக்குச் சொன்னது. பாடியவர் பெயர் தெரியவில்லை
இது காலத்தால் அழியாத சங்கப் பாடல். 2000 ஆண்டுகள் பழமையானது. இதில் உப்பு வணிகர்கள் மற்றும் கடற்கரை வரை வந்து செல்லும் கலங்கள் பற்றிய சுவாரஸ்யமான பல குறிப்புகள் உள்ளன. உப்பிட்டு வெயிலில் காயவைத்துப் பதப்படுத்தும் முறைகள் இதர கலாச்சாரங்களிலும் உள்ளனவா?
உள்ளதுதான் என்கிறார் உணவு அறிவியல் அறிஞர் டாக்டர் கிருஷ்ணேந்து ராய். கடல்வழி பரவிய வெளிநோக்கு அரசுகள் மீன்பிடித்தலை அணுகிய விதம் முற்றிலும் வேறானது. பெரும் கலங்களைக் கட்டுதல் மற்றும் அவற்றை இயக்கும் திறன் முதலியன மீனவர் குலங்களில் இருந்துதான் வந்தன. இதை வைக்கிங், வெனிஷியன், போர்த்துக்கீசிய, இஸ்பானிய சமூகங்களில் காண முடியும்
’மாமிசத்திலுள்ள மதிப்புள்ள புரதங்களை நீண்ட நாள் கெட்டுவிடாமல் வைத்திருக்க, நீண்ட தூரம் கப்பல் வழிப் பயணம் மேற்கொள்ள குளிரூட்டும் முறை கணடுபிடிப்பதற்கு முன்பு, உப்புக் கண்டம் போடுதல், காற்றில் உலரவைத்தல், புகை போடுதல், நொதித்தல் (மீன் சாஸ்) போன்ற வழிகளே இருந்தன’, என்கிறார் கிருஷ்ணேந்து. இவர் ந்யூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மத்திய தரைக்கடலைச் சுற்றியிருந்த ரோமப் பேரரசில், ‘கரும்’, (Garum – நொதிக்க வைக்கப்பட்ட சாஸ்) என்னும் மீன் சாஸ் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு உணவுப் பொருள். ரோமப் பேரரசு அழிந்த போது, இந்த உணவும் அத்தோடு அழிந்து போனது’.
தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் கருவாடு செய்யும் குடிசைத் தொழில் என்பது, ‘ மீன்களில் உள்ள மாமிசத்தைக் கெடுக்கும் பாக்டீரியாக்களையும், நொதிகளையும் (Enzymes) அழித்து, அவை உருவாகி வளரந்து பரவாமல் தடுக்கும் முறை’ , என்கிறது உணவு மற்றும் வேளாண் நிறுவனம்.
‘கருவாடு உற்பத்தி செய்வது என்பது மிகவும் குறைந்த செலவில் மீனைப் பதப்படுத்தும் முறையாகும். இது இரு வழிகளில் செய்யப்படுகிறது. முதலாவது முறையில், உலர் உப்பு, மீனின் உடல் மீது தடவப்பட்டு மீன்கள் வெயிலில் உலர வைக்கப்படுகின்றன. இரண்டாவது வழியில் உப்புக் கரைக்கப்பட்ட நீரில் மீன்கள் கொட்டப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன’, என்கிறது உணவு மற்றும் மேலாண் நிறுவனம். இதன் வழி மீன்களை பல மாதங்கள் கெடாமல் வைத்திருக்க முடியும்.
நீண்ட நெடிய வரலாறு கொண்ட கருவாடு, மிகக் குறைந்த செலவில் எளிதாக உணவைப் பதப்படுத்தும் முறையாகும். இருந்தாலும், இதைச் சமூகம் ஏளனமாகவே பார்க்கிறது, தமிழ் சினிமா இதற்கு நல்ல உதாரணம். ருசி என்னும் மேல் கீழ் படித்தளத்தில், கருவாடு எங்கே உள்ளது?
‘இதில் மேல் கீழ் எனத் தளங்களாகப் பிரித்துப் பார்க்கும் சிந்தனைகளின் பங்களிப்பு உள்ளது. எங்கெல்லாம், சில வகை பிராமணியச் சிந்தனையுடனான மேலாதிக்கம் பரவியதோ அங்கெல்லாம் நீரைச் சார்ந்த உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீதான இழிவான பார்வை உள்ளது. குறிப்பாக உப்பு நீரைச் சார்ந்த உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் கீழானவையாகப் பார்க்கப்படுகின்றன. இடம் மற்றும் தொழில் சார்ந்து சாதியம் உருவான போது, சமூகப் படித்தளத்தில் மீன் பிடித்தல் ஒதுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது’, என்கிறார் டாக்டர் ரே.
‘மனிதன் மிக அதிகமாக வேட்டையாடிப் பிடித்து உண்ணும் உணவு மீன். இதனால் இதை மதிக்கவோ அல்லது வெறுக்கவோ செய்யலாம். உணவு தானிய உற்பத்தி, அதற்கான கட்டமைப்பு, நிலம், நீர்ப்பாசனம் மற்றும் அதைச் சார்ந்திருக்கும் கோவில்கள் என மனிதனால் திருத்தப்பட்டு, சமஸ்கிருதமயமாக்கப்பட்ட சூழலில், உணவு உற்பத்தி பொருளாதார, சமூக மேம்பாட்டுப் பொருளாக மதிக்கப்படுகிறது. மீன் பிடித்தல் இழிவாகப் பார்க்கப்படுகிறது.
*****
வீட்டின் நிழலில் அமர்ந்து, சகாயபூரணி, பூமீனை (பால் மீன்) பதப்படுத்தத் தொடங்குகிறார். தெரசாபுரம் ஏலத்தில் 3 கிலோ 300 ரூபாய் என வாங்கி வந்த மீன்களின் செதில்களை ‘சர் சர்’, எனச் செதுக்கித் தள்ளுகிறார். இந்த இடம் ஃபாத்திமாவின் கடைக்கு எதிரில் உள்ளது. அருகிலுள்ள கால்வாய் நீர் கறுப்பாக இருக்கிறது. நீரை விட சேறு அதிகமாக இருக்கிறது. பதப்படுத்தப்படும் மீன்களில் இருந்து வெளிப்படும் செதில்கள் எங்கும் பறக்கின்றன. சில என் உடையின் மீதும் விழுவதைப் பார்த்துச் சிரிக்கிறார். அவருக்கு சிரிப்பு அவ்வளவு சுலபமாக வருகிறது. நாங்களும் அவருடன் இணைந்து கொள்கிறோம். அவர் வேலையைத் தொடர்கிறார். இரண்டே வெட்டில், மீனின் துடுப்புகள் மீனுடலில் இருந்து நீக்கப்படுகின்றன. அடுத்து மீனின் கழுத்துக்குள் கத்தியை நுழைத்து வெட்டுகிறார்.. ‘தட் தட் தட்’ ஆறுமுறை கத்தி இறங்க கழுத்து வெட்டப்படுகிறது.
அவருக்குப் பின்னால் கட்டப்பட்டிருக்கும் வெள்ளை நாய், வெயில் தாங்க முடியாமல் நாக்கு வெளியில் தொங்க இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அடுத்து, கத்தியை உடலில் நுழைத்து, ஒரு புத்தகத்தைப் பிரிப்பது போல, உடலைப் பிளந்து குடலை உருவியெறிகிறார். அரிவாளால், மீனின் தசைகளில் ஆழமாக வெட்டுகிறார். மேலும் சிறு சிறு கோடுகள் கிழிக்கிறார். ஒரு கை முழுக்க உப்பை எடுத்து வெட்டப்பட்ட மீனுடலில் வெட்டப்பட்ட இடங்களிலெல்லாம் தடவுகிறார். பிங்க் நிற தசைகள் முழுக்க உப்புப் படிகக் கற்கள் நிறைகின்றன. இப்போது வெயிலில் உலர மீன் தயார். அரிவாளையும் கத்தியையும் நீரில் கழுவி வைத்து விட்டு, நீருக்குள் கையைவிட்டுக் கழுவிவிட்டு, கைகளை உதறுகிறார். ‘வாங்க’, எனச் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடக்கிறார். நாங்கள் அவரைப் பின் தொடர்கிறோம்.
2016 ஆம் ஆண்டு, கடல் மீன் துறை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில், 2.62 லட்சம் பெண்களும், 2.74 லட்சம் ஆண்களும் மீனவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இதில் 91% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் என அந்தக் கணக்கெடுப்பு சொல்கிறது.
வெயில் படாத ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, ஒரு நாளைக்கு எவ்வளவு விற்பனையாகும் என சகாயபூரணியைக் கேட்கிறேன். ‘ஆண்டவர் நமக்குன்னு என்ன வச்சிருக்காரோ அதப் பொறுத்தது. நாம வாழறதே அவரோட கிருபைதானே’, என்கிறார். உரையாடலில், அடிக்கடி ஏசு கிறிஸ்து வந்து போகிறார். ‘ஆண்டவர் கிருபைல எல்லாக் கருவாடும் வித்துருச்சின்னா, 10:30 மணி வாக்கில திரும்பிருவோம்’.
இந்த மனநிலையை அவர் பணிபுரியும் இடத்திலும் காண முடிகிறது. கால்வாய்க்கு அருகிலுள்ள இடத்தில்தான் அவர் கருவாடுகளைக் காய வைக்கிறார். அது சரியான இடம் இல்ல.. ஆனா வேற வழி? வெயில் மட்டுமில்ல.. சில சமயம் திடீர்னு மழை வந்துட்டாலும் சிரமம். ’அன்னிக்கு கருவாடக் காயவச்சிட்டு, வீட்டுக்கு வந்து சித்த கண்ணசந்தேன்.. ஒரு ஆளு ஓடி வந்து, மழ பேயுதுன்னு சொல்றாரு. ஓடிப் போயி கருவாட அள்றதுக்குள்ள பாதி, மழைல நனைஞ்சிருச்சு.. சிறு மீன்.. எல்லாம் கெட்டுப் போச்சு தெரியுமா’, என்கிறார்.
67 வயதாகும் சகாயபூரணி, கருவாடு உலர்த்துவதை தன் சித்தியிடம் இருந்து கற்றுக் கொண்டார். மக்கள் மீன் சாப்பிடறது அதிகரித்துவிட்டதை ஒப்புக் கொள்ளும் சஹாயபுராணி,, கருவாடு சாப்பிடுவது குறைந்து வருகிறது என்கிறார். ‘மீன் சாப்பிடறவங்க இப்ப ஃப்ரெஷ்ஷா வாங்கிக்கறாங்க. சில சமயம் விலையும் குறைவாக் கெடைக்கும். அப்பறம் தினமும் மீன் சமைக்கறதில்ல.. மத்த கறி காய், பிரியாணி, சாம்பார்ன்னு மாறிக்கிறாங்க...
இன்னொரு முக்கியக் காரணம் – டாக்டர்கள்.. ‘கருவாட்ல உப்பு நிறைய இருக்கு.. அது ரத்தக் கொதிப்பை அதிகரிக்கும்.. அதனால சாப்பிட வேணாம்னு சொல்லிடறாங்க.. அதனால மக்கள் கருவாட்ட அதிகம் விரும்பறதில்ல’, என உதட்டைப் பிதுக்கிறார். அவரது உடல்மொழி ஏமாற்றத்தையும், கையறு நிலையையும் ஒரே சமயத்தில் நமக்கு உணர்த்துகிறது.
கருவாடு தயாரானதும், அதற்கென ஒதுக்கப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. ‘பெரிய மீனுன்னா ரொம்ப நாள் கெடாது’ என்கிறார். அவர் மீனை வெட்டி, உப்பிட்டுப் பதப்படுத்துவதிலேயே அத்தொழில் மீதான அவரது செயல்திறனை நாம் காண முடிகிறது. கொஞ்சம் மஞ்சளும், உப்பும் தடவி, நியூஸ் பேப்பர்ல காத்துப் போகாம கட்டி ஃப்ரிஜ்ஜுல வச்சிட்டா, ரொம்ப நாள் கெடாது’.
சகாயபூரணியின் அம்மா உயிருடன் இருந்த காலத்தில், வறுத்த கருவாடும் கஞ்சியும்தான் அதிகமாக உண்ணப்பட்டதாம். ’பெரிய பானைல முருங்கக் காய், கத்திரிக்காய், மீனு எல்லாம் சேத்து, கொழம்பு மாதிரிக் கொதிக்க வச்சு, கஞ்சியில ஊத்திக் குடிக்கறதுதான்.. இப்பத்தான் எல்லாம் தனித்தனியா, நீட்டா சமைக்கறாங்க.. அரிசியக் கூட தனியாத்தான் சோறா வடிச்சுக்கறாங்க.. பக்கத்துல கூட்டு, முட்டப் பொரியல்னு.. 40 வருஷத்துக்கு முன்னாடி கூட்டுங்கற வார்த்தையையே நான் கேட்டது கிடையாது’, என பலமாகச் சிரிக்கிறார்
அதிகாலை 4:30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பும் சகாயபூரணி, 10-15 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு பஸ்ஸில் பயணிக்கிறார். ‘பிங்க் கலர் பஸ்ஸுல இப்பலாம் இலவசமாப் போலாம்’, என்கிறார். 2021 ஆம் ஆண்டிலிருந்து தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம் என அறிவித்ததைச் சொல்கிறார். ‘ஆனா, கருவாட்டுக் கூடைக்கு டிக்கெட் உண்டு. அது, தூரத்தப் பொறுத்து 10 ரூபாய்ல இருந்தது 24 ரூபாய் வரைக்கும் வரும். பொதுவா கண்டக்டருக எங்களக் கொஞ்சம் அனுசரிச்சுப் போவாங்கன்னு சொல்லி விட்டுச் சிரிக்கிறார்.
பஸ்ஸை விட்டு இறங்கிய உடன், கிராமம் முழுக்க நடந்து போய் கருவாடு விற்று வருகிறார். கஷ்டமான வேலதான் என்னும் சகாயபூரணி, போட்டியும் அதிகம் என்கிறார். ’மீனு வித்த காலத்துல நெலம இன்னும் மோசம்.. நாங்க ரெண்டு வீடு போய் வர்றதுக்குள்ளார, ஆம்புளைக சைக்கிள்ல மொத்த கிராமத்தையும் சுத்தி வந்துருவாங்க. நடக்கறது ரொம்ப கஷ்டம்.. ஆம்புளக சைக்கிள்ல போய் எங்கள சுலபமா தோக்கடிச்சுருவாங்க’, என்னும் சகாயபூரணி, கருவாடு மட்டுமே விற்கிறார்.
கருவாட்டு விற்பனை எப்போதுமே சீராக இருக்காது. ’பண்டிகை காலங்கள்ல, மக்கள் நாட்கணக்குல, சில சமயம் வாரக்கணக்குல கறி சாப்பிட மாட்டாங்க. அப்பல்லாம் கருவாடு விக்கறது ரொம்பக் குறைவா இருக்கும்’. ‘அஞ்சு வருசம் முன்னாடி கூட இப்படி நெறயப் பேரு விரதம் புடிச்சதுல்ல. இப்பத்தாம் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு’, என்கிறார். ’ஆடு கெடா வெட்டற பண்டிகைள்ல, நெறயப் பேரு சொந்தக்காரங்களுக்குக் குடுக்க கருவாடு வாங்குவாங்க.. கிலோக் கணக்குல வாங்கறவுங்களும் உண்டு’, என்கிறார் பூரணியின் மகள் 36 வயதான நான்சி.
கருவாடு சீசன் இல்லாத காலத்துல கடன் வாங்கித்தான் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.. ‘பத்து வட்டி.. தின வட்டி, வார வட்டி, மாச வட்டின்னெல்லாம் கணக்கு உண்டு.. மழக் காலத்துல, மீன்பிடி தடை காலத்துல, இப்படித்தான் பொழப்ப ஓட்டியாகனும். சில பேரு நகைய அடகு வைப்பாங்க.. அடகுக் கடை இல்லன்னா பேங்கில.. கடன் வாங்கியே ஆகனும்.. வேற வழியில்ல.. ‘, என்கிறார் சமூக சேவகியான நான்சி மேலும். ‘வேறெதுக்கு? சோத்துக்குதான்’, எனச் சொல்லி முடிக்கிறார் சகாயபூரணி.
கருவாட்டுத் தொழிலில், உழைப்புக்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை. காலை 1300 ரூபாய்க்கு வாங்கிய சாளை மீனை சுத்தம் செய்து உப்பிட்டு, இரண்டு நாட்கள் காயவைத்து, மூன்றாம் நாள் பஸ் சார்ஜ் கொடுத்து பயணம் செய்து விற்று வந்தால், அவருக்கு 500 ரூபாய் லாபம் கிடைக்கும். செலவெல்லாம் போக, ஒரு நாளக்கி 125 ரூபாய்தான் கிடைக்கும் இல்லியா?’, எனக் கேட்டேன்.
ஆமாம் எனத் தலையாட்டிய சகாயபூரணியின் முகத்தில் சிரிப்பில்லை.
*****
தூத்துக்குடியில் கருவாட்டுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் பொருளாதாரத் தரவுகள் தெளிவாக இல்லை. கடல் மீன் துறைக் கணக்கெடுப்பின் தரவுகளில் இருந்து, சில புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன. தெரெசாபுரத்தில் கருவாட்டுத் தொழிலில் 79 பேர் ஈடுபட்டிருப்பதாகவும், தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் 465 பேர் இருப்பதாகவும் அந்தப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டு மீனவர்களில் 9% மக்கள் மட்டுமே கருவாட்டுத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இதில் 87% பேர் பெண்கள். இது உலக சராசரியை விட மிக அதிகம் என்கிறது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு . உலகில் மீன் பதப்படுத்தும் குடிசைத் தொழிலில் 50% பேர் மட்டுமே இருக்கிறார்கள் எனவும் இந்த அறிக்கை சொல்கிறது.
இத்தொழிலின் லாப நஷ்டக் கணக்குக்கான தரவுகள் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ மீன், கொஞ்சம் இளகினால், 400 ரூபாய்க்கு விலை போகிறது. அதை, ‘குளு குளு’, என அழைக்கிறார்கள். குழைந்து போவது போல கைவிரல்களை அழுத்தி நமக்குக் காட்டுகிறார்கள். மீன் வாங்குபவர்கள் வேண்டாமென விட்டுப் போகும் இந்த மீன்களைத்தான் கருவாடு உற்பத்தி செய்பவர்கள் வாங்குகிறார்கள். சிறிய மீன்களை விடப் பெரிய மீன்களை வாங்குவதையே இவர்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள்.. ஏனெனில், பதப்படுத்துதல் சுலபம். வேலை குறைவு
5 கிலோ மீனைப் பதப்படுத்த ஃபாத்திமாவுக்கு ஒரு மணி நேரம் ஆகிறது. இதுவே, சின்ன மீன்களா இருந்தா ரெண்டு மணி நேரமாகும் என்கிறார். உப்புத்தேவையும் மீனைப் பொருத்து மாறுபடுகிறது. பெரிய மீனுக்கு, அதன் எடையில் பாதிக்குப் பாதி உப்பைப் போட வேண்டியிருக்கிறது. உறுதியான பொடி மீனாக இருந்தால், எடையில் 8 ல் ஒரு பங்கு உப்புப் போட்டாலே போதும்
கருவாடு உற்பத்தி செய்பவர்கள், உப்பை, நேரடியாக உப்பளங்களில் இருந்தே வாங்கி விடுகிறார்கள். தேவைக்குத் தகுந்தாற் போல, 1000 ரூபாய், 3000 ரூபாய் என மொத்தமாக வாங்கிக் கொள்கிறார்கள். மூணு சக்கர சைக்கிளிலோ அல்லது ‘குட்டி யானை’, என அழைக்கப்படும் சின்ன டெம்போக்களிலோ ஏற்றிக் கொண்டு வருகிறார்கள். நீல நிற ப்ளாஸ்டிக் ட்ரம்களில் உப்பு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
‘கருவாடு பண்றது, எங்க பாட்டி காலத்துல இருந்தே மாறாமத்தான் இருக்குது’, என்கிறார் ஃபாத்திமா. மீன்களோட செதில்கள் நீக்கப்பட்டு, வயிற்றுப் பாகங்கள் கிழித்தெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன. பின்னர் உப்புத் தடவப்பட்டு, வெயிலில் உலர்த்தப்படுகின்றன. வேல ரொம்ப சுத்தமா இருக்கும் எனச் சொல்லி, அருகிலிருக்கும் கூடைகளில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் கருவாடுகளைக் காண்பிக்கிறார். கிலோ 150-200 வரை விலை போகும். பக்கதில் ஊலி மீன் துணியில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் கீழே ப்ளாஸ்டிக் பக்கெட்டில், சாளைக் கருவாடு. ‘வேல சரியில்லாம, காக்கரே மூக்கரேன்னு இருந்தா யாராச்சும் வாங்க வருவாங்களா? பெரிய பெரிய மனுசங்க.. ஏன் போலீஸ்காரவுங்க கூட நம்மகிட்ட வந்து கருவாடு வாங்கிகிட்டு போறாங்க.. ஏன்னா வேல அவ்வளவு சுத்தம்னு பேர் வாங்கியிருக்கோம்’, என பக்கத்துக் கடையில் இருந்து அவர் தங்கை ஃப்ரெட்ரிக் குரல் கொடுக்கிறார்.
இந்தத் தொழிலில் கைகளில் காயங்களும் சிராய்ப்புகளும் சகஜம். ஃப்ரெட்ரிக் தன் கைகளைக் காட்டுகிறார்.. கத்தி வெட்டுக் காயங்கள்.. பெரும் வெட்டுக் காயம், மேலான காயம் என அவரது வாழ்க்கையே நம்முன் வந்து போகிறது. அவரது கைரேகைகளை விட, அந்தக் காயங்களே அவரது வருங்காலத்தையும் சொல்லி விடுகின்றன.
‘எங்க மாப்பிள்ள மீன் புடிச்சுக் கொண்டாராங்க.. நாங்க நாலு தங்கச்சிகளும் அத வச்சி, கருவாடு செஞ்சி விக்கறோம்’, என்கிறார் ஃபாத்திமா. ‘அவருக்கு நாலு ஆப்பரேஷன் ஆயிருச்சு. இனிமே கடலுக்குப் போக முடியாது. அதனால, தெரெசாபுரம் சந்தைல இல்லன்னா தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்துல மீனு வாங்கிக் கொண்டாருவாரு. அவருக்குக் கொஞ்சம் கமிஷன் கொடுத்துட்டு, நாங்க மீன வாங்கி, கருவாடு செஞ்சுக்குவோம். அவர் ஃபாத்திமாவின் மைத்துனர். ஆனால், ஃபாத்திமா அவரை மாப்பிள்ளை என்றுதான் அழைக்கிறார்.
அனைவருக்கும் வயது 60 க்கும் மேல்.
ஃப்ரெட்ரிக் தன் பெயரை, ‘பெட்ரி’, எனத் தமிழில் சொல்கிறார். அவர் கணவர் ஜான் சேவியர் இறந்த பின்னர், கடந்த 37 வருடங்களாக தனி மனுஷியாக உழைத்து வருகிறார். தன் கணவரையும், ‘மாப்பிள்ளை’, என்றே குறிப்பிடுகிறார். ‘மழக் காலத்துல கருவாடு செய்ய முடியாது. பொழப்பு ரொம்ப கஷ்டம். வேற வழியில்லாம மாசம் 5 வட்டி, 10 வட்டின்னு கடன் வாங்குவோம்’, என்கிறார் ப்ரெட்ரிக். வருடம் 60-120% வட்டி!
சகதியாக இருக்கும் கால்வாயின் ஓரத்தில், ஒரு பந்தலின் கீழ் அமர்ந்திருக்கும் ஃப்ரெட்ரிக், புதுசா ஒரு ஐஸ் பெட்டி கிடைத்தால் நல்லாயிருக்கும் என நினைக்கிறார்.. ‘பெரிசா, கெட்டியான மூடியோட கெடச்சா நல்ல இருக்கும்.. கருவாட்ட பத்திரமா வச்சி, மழக்காலத்துல விக்கறதுக்கு வசதியா.. எப்பவுமே பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட வாங்கிகிட்டே இருக்க முடியுமா? எல்லோருக்கும் தொழில் மொடங்கிக் கிடக்குது.. யாருகிட்ட பணம் இருக்கு.. சில சமயம் பால் பாக்கெட் வாங்கறதுக்கே கஷ்டமா இருக்கு’, என்கிறார்.
கருவாடு விற்று வரும் பணம் வீட்டுச் செலவுக்கு, சாப்பாட்டுக்கு, மருந்து மாத்திரைக்கே சரியாகி விடுகிறது.. ‘ப்ரசர், சுகர் மாத்திரை’, ந்னு அழுத்திச் சொல்கிறார். மீன் பிடித் தடைக்காலத்தில், சாப்பாட்டுக்கே கடன் வாங்கித்தான் ஆகனும் என்கிறார். ‘ ஏப்ரல், மே மாசத்துல மீன் குஞ்சு பொரிக்கும்னு, மீன் புடிக்கத் தடை இருக்கு. அதனால எங்க பொழப்பு நடக்காது. அக்டோபர் – ஜனவரி மாசத்துல, மழைல, உப்புக் கிடைக்காது.. வாங்கிக் கருவாடு செஞ்சு காய வைக்க வெயிலு இருக்காது.. இந்த மாசங்களுக்குன்னு காசு சேத்து வைக்கற அளவுக்கு எங்களுக்கு வருமானமில்ல’.
4500 ரூபாய்ல ஒரு புது ஐஸ்பெட்டி.. இரும்புத்தராசு.. ஒரு அலுமினியக் குண்டான்.. இவை கிடைத்தாலே, தங்கள் வாழ்வில் பெரும் மாற்றம் வந்து விடும் என நம்புகிறார் ஃப்ரெட்ரிக். ‘எனக்கு மட்டும் இல்ல.. எல்லாத்துக்கும்தான்.. இருந்தா சமாளிச்சுக்குவோம்’, என்கிறார்.
*****
கைகளினால் பயிர்களை அறுவடை செய்து, பதப்படுத்தும் வேலைகளை தமிழ்நாட்டில் பெரும்பாலும் வயதான பெண்களே செய்கிறார்கள். இதற்கு ஒரு மறைமுக விலை இருக்கிறது. அது அவர்களது நேரம் மற்றும் குறைவான கூலி
கருவாடு உற்பத்தியும் அதற்கு விலக்கல்ல.
பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல் வரலாறெங்கும் பரவலாக காணக்கிடைக்கிறது. ’வழிபாடு, சுகமளித்தல், கல்வி கற்பித்தல் போன்ற தொழில்கள் முறைப்படுத்தப்படுகையில், அதனுடன் பெண்ணை இழிவு செய்வது போன்ற சூனியம், சூனியக்காரிகள், வயதான மனைவிகள், பேய்கள் என்னும் அடைமொழிகளும் இணைந்தே வருகின்றன’, என விளக்குகிறார் டாக்டர். ரே. பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்த நூற்றுக்கணக்கான உதாரண விழுமியங்கள் பெண்கள் மீது சுமத்தப்படுகின்றன. இது தற்செயலானதல்ல. திட்டமிட்டே செய்யப்படுவது. இன்றைய தொழில்முறை சமையல் நிபுணர் என்பவர் ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்னும் மரபு உருவானது இப்படித்தான். இதற்கு முன்பு கடவுளுக்கு வழிபாடு நடத்தும் ஆண்கள் இதைச் செய்தார்கள். மருத்துவர்கள் இதைச் செய்தார்கள். பேராசிரியர்கள் இதைச் செய்தார்கள்.
தூத்துக்குடி நகரின் இன்னொரு புரத்தில், உடல் உழைப்பால் உப்பு உற்பத்தி செய்யும் எஸ்.ராணி என்பவரின் வீட்டில் கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி என்பதன் செய்முறை விளக்கத்தைக் கண்டோம். ஒராண்டுக்கு முன்பு, செப்டெம்பர் 2021 ல், சுட்டெரிக்கும் சூரியனின் கீழ், மின்னும் உப்புப் படிகங்களை உற்பத்தி செய்யும் ராணியின் கடின உழைப்பைப் பார்த்தோம்.
ராணி வாங்கும் கருவாடு, உள்ளூர் உப்பினால், அவர் வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. அதில் குழம்பு செய்ய எலுமிச்சை அளவில் உருட்டப்பட்ட புளியை நீரில் கரைக்கிறார். தேங்காயை உடைத்து, அரிவாளின் உதவியோடு வெளியே எடுக்கிறார். தேங்காயைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, ஒரு மிக்சியில் , சின்ன வெங்காயங்களுடன் போட்டு, பட்டுப் போல மென்மையாகும் வரை அரைக்கிறார். ‘கருவாட்டுக் குழம்பு 2-3 நாள் வரைக்கும் தாங்கும்.. வேலைக்குப் போகையில, கஞ்சியோட கொண்டுட்டுப் போக ஏத்தது’, என நமக்கு விளக்குகிறார்.
அடுத்து, 2 முருங்கைக்காய், வாழைக்காய், கத்திரிக்காய், 3 தக்காளி எனக் காய்கறிகளை நறுக்குகிறார். ஒரு கொத்து கருவேப்பிலை, மசாலாப் பாக்கெட் என லிஸ்ட் முடிகிறது. மீன் வாசனை பிடித்த வீட்டுப் பூனை, சுற்றிச் சுற்றி, ‘மியாவ் மியாவ்’, எனக் கத்தி வருகிறது. ராணி, ஒரு பாக்கெட்டைத் திறந்து, நகரா, அசலாக்குட்டி, பாறை, சாளை எனப் பலவகையான கருவாடுகளை எடுக்கிறார். ‘இந்தப் பாக்கெட் 40 ரூபாய்’, எனச் சொல்லும் ராணி, அதில் பாதியை அன்றைய சமையலுக்கு எடுத்துக் கொள்கிறார்.
‘கருவாட்டு அவியல்’, னு ஒரு ஐட்டம் இருக்கு. எனக்கு ரொம்பப் புடிக்கும் என்கிறார் ராணி. கருவாட்டோடு, புளி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு செய்வது. புளிப்பும் சுவையுமாக இருக்கும் இதை உப்பளத்துக்கு வேலைக்குச் செல்கையில், அனைவரும் எடுத்துச் செல்கிறார்கள். பேசப்பேச, இராணியிடமிருந்தும், அவரது தோழிகளிடமிருந்தும், புதுப் புது சமையல் குறிப்புகள் கொட்டிக் கொண்டேயிருக்கின்றன. ’சீரகம், பூண்டு, கடுகு, பெருங்காயம் எல்லாத்தியும் ஒன்னாப் போட்டு பொடிச்சு, தக்காளி, புளி, மிளகு எல்லாம் போட்டு, கருவாட்டையும் போட்டு கொதிக்க வச்சா, அது மொளகுத்தண்ணி. புதுசா புள்ள பெத்த பொம்பளகளுக்கு அது ரொம்ப நல்லது. ஏன்னா, அதுல நெறய மருத்துவ குணம் இருக்கு’, என்கிறார் ராணி. அது புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவுவதாக நம்பப்படுகிறது. கருவாடு போடாத மொளகுத்தண்ணியை, தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்லாமல், அதைத் தாண்டிய உலகமும் ‘இரசம்’, என அழைக்கிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயேர்கள் இதைக் கடத்திக் கொண்டு சென்று தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு, இதை, ‘முலிகட்டாணி’, என அழைக்கிறார்கள்
பேசிக் கொண்டே, ராணி, கருவாட்டை, தண்ணீரில் கழுவுகிறார். கருவாட்டின் தலை, வால், துடுப்புகளை வெட்டியெறிகிறார். ‘இங்கே எல்லோருமே கருவாடு சாப்பிடுவார்கள்’, என்கிறார் சமூக சேவகரான உமா மகேஸ்வரி. ‘குழந்தைங்க அப்படியே சாப்புடுவாங்க.. எங்க ஊட்டுக்காரர் மாதிரி ஆட்கள், சுட்டு சாப்பிடுவாங்க.. விறகு அடுப்பு சாம்பல்ல போட்டுச் சுடனும்.. நல்ல வாசனையா இருக்கும்.. ரொம்ப ருசியா இருக்கும்’, எனச் சுட்டுகிறார் உமா
உள்ளே குழம்பு கொதிக்கத் தொடங்கியதும், ப்ளாஸ்டிக் சேரை எடுத்து வெளியே போட்டுக் கொண்டு அமர்கிறார் ராணி. நாங்கள் பேசத் தொடங்குகிறோம்.. தமிழ் சினிமாக்களில், கருவாட்டைக் கேலி செய்வதைப் பற்றிக் கேட்கிறேன். புன்னகைக்கிறார் இராணி. ‘சில சாதிக்காரங்க அசைவம் சாப்பிட மாட்டாங்க.. அந்த மாதிரி ஆட்கள்தான் கேலி செய்வாங்க.. சிலருக்கு கருவாடு நாத்தம்.. எங்களுக்கு அது மணம் ‘, என அத்துடன் கருவாடு தொடர்பான சர்ச்சையை முடித்துக் கொள்கிறார் தூத்துக்குடி உப்பளங்களின் ராணி.
இந்த ஆய்வுக் கட்டுரை, பெங்களூர் அஸிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆய்வு நிதி நல்கையின் நிதி உதவியோடு எழுதப்பட்டது.
தமிழில் : பாலசுப்ரமணியம் முத்துசாமி