கிருஷ்ணாஜி பரித் உணவகத்தில் யாரும் சும்மா இல்லை.

மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, முக்கியமான நீண்ட தூர ரயில்கள் ஜல்கான் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. அங்கு தினமும் சுமார் 300 கிலோ கத்தரிக்காய் சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டு, பேக் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இது, ஜல்கான் நகரின் பழைய BJ மார்க்கெட்டில் சுவற்றில் துளை கொண்ட கடையாகும். இங்கு தொழிலதிபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் சோர்வடைந்த கட்சித் தொண்டர்கள் வரை வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

ஒரு வெப்பமான வார நாள் மாலையில் இரவு உணவு நேரத்திற்கு சற்று முன்பு, கிருஷ்ணாஜி பரித்தின் உள்ளே சுத்தம் செய்தல், நறுக்குதல், நசுக்குதல், உரித்தல், வறுத்தல், பொறித்தல், கிளறுதல், பரிமாறல் மற்றும் பேக்கிங் ஆகியவற்றை காணலாம். பழைய திரையரங்கிற்கு வெளியே ஒரு காலத்தில் காத்திருந்த மக்கள் வரிசையைப் போன்று இங்கு மூன்று வரிசைகளில் மக்கள் நிற்கிறார்கள்.

இதில் முக்கிய கதாபாத்திரங்கள் 14 பெண்கள்.

PHOTO • Courtesy: District Information Officer, Jalgaon

2024 ஏப்ரல் கடைசி வாரத்தில் கிருஷ்ணாஜி பரித்திற்கு உள்ளே தேர்தல் விழிப்புணர்வு வீடியோவை படமாக்கி ஜல்கான் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் வெளியிட்டார். இந்த வீடியோ லட்சக்கணக்கான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு பார்க்கப்பட்டதாக மாவட்ட தகவல் அதிகாரி தெரிவித்தார்

அவர்கள் உணவு தயாரிப்பின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் மூன்று குவிண்டால் கத்திரிக்காயை, பைங்கன் கா பர்தா என்று அழைக்கப்படும் கத்தரிக்காய் பரித் சமைப்பார்கள்.  ஜல்கான் மாவட்ட நிர்வாகம் பரபரப்பான கடைக்குள் தேர்தல் விழிப்புணர்வு வீடியோவை எடுத்த பிறகு, அவர்களின் முகங்களும் இப்போது பிரபலமடைந்துவிட்டது.

மே 13 அன்று நடந்த ஜல்கான் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில் பெண்களின் வாக்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த வீடியோவில், கிருஷ்ணாஜி பரித்தின் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பற்றியும், வாக்குரிமையைப் பயன்படுத்தும் செயல்முறை குறித்தும், அன்று அவர்கள் கற்றுக்கொண்டதையும் ஆலோசித்தனர்.

"வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன் நின்று, விரல்களில் மை வைக்கப்பட்ட  கணம், நாங்கள் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கிறோம் என்பதை மாவட்ட ஆட்சியரிடமிருந்து கற்றுக்கொண்டேன்," என்று மீராபாய் நரல் கொண்டே கூறுகிறார். அவரது குடும்பம் ஒரு சிறிய முடிதிருத்தும் கடையை நடத்தி வருகிறது. உணவகத்திலிருந்து கிடைக்கும் அவரது சம்பளம் குடும்ப வருமானத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. "நம் கணவர் அல்லது பெற்றோர் அல்லது முதலாளி அல்லது தலைவரைக் கேட்காமல் இயந்திரத்தின் முன் நம் தேர்வை செய்யலாம்."

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில், சிறப்பான குளிர்கால கத்தரிக்காய்கள் உள்ளூர் சந்தைகளில் குவியும் போது, கிருஷ்ணாஜி பரித்தின் சமையலறையில் உற்பத்தி திறன் 500 கிலோவாக உயர்ந்திருக்கும். புதிதாக அரைத்த மிளகாய், கொத்தமல்லி, வறுத்த வேர்க்கடலை, பூண்டு மற்றும் தேங்காய் ஆகியவற்றின் சுவை ஒரு பக்கம் என்று பெண்கள் கூறுகின்றனர். மலிவு விலையும் கூட்டத்திற்கு இன்னொரு காரணம். 300 ரூபாய்க்கும் குறைவான விலையில்,  ஒரு கிலோ பரித் மற்றும் சில கூடுதல் பொருட்களை குடும்பங்கள் வாங்கிச் செல்லலாம்.

10 x 15 அடி சமையலறையில், நான்கு அடுப்புகள் பரபரப்பாக இருக்கும்போது ஒரு உலை, பருப்பு வறுவல், பனீர்-மட்டர் மற்றும் பிற சைவ பொருட்கள் உட்பட மொத்தம் 34 பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. எனினும், இந்த உணவு பட்டியலில் கிரீடம் பெறுவது பரித் மற்றும் ஷேவ் பாஜி ஆகும். இது கடலை மாவில் நனைத்து பொரித்த சேவின் குழம்பாகும்.

PHOTO • Kavitha Iyer
PHOTO • Kavitha Iyer

இடது: உள்ளூர் விவசாயிகள், சந்தைகளிலிருந்து சிறந்த தரமான கத்திரிக்காய்களை கிருஷ்ணா பரித் வாங்கி தினமும் 3 முதல் 5 குவிண்டால் கத்திரிக்காய் தயாரிக்கின்றனர். வலது: இரவு உணவு தேவைக்கான புதிய குழம்பு மற்றும் பரித் தயாரிப்பிற்காக இரவு 7:30 மணியளவில் வெங்காயம் நறுக்கப்பட காத்திருக்கிறது

PHOTO • Kavitha Iyer
PHOTO • Kavitha Iyer

இடது: கிருஷ்ணாஜி பரித்தின் சிறிய சமையலறைக்குள் நான்கு அடுப்புகளில் ஒன்றின் அருகே பட்டாணி, மசாலாப் பொருட்கள், பாலாடைக்கட்டி  மற்றும் புதிதாக சமைத்த பருப்பு வறுவல் இரண்டு கேன்கள் வைக்கப்பட்டுள்ளன. வலது: ரசியா படேல் கொப்பறை தேங்காயை நசுக்குவதற்கு அல்லது பேஸ்டாக அரைப்பதற்கு சிறிய துண்டுகளாக நறுக்குகிறார். ஒரு நாளுக்கு 40 தேங்காய்கள் வரை துண்டுகளாக அவர் நறுக்கிறார்

மலிவு விலை, விலைவாசி குறித்து உரையாடல் மாறும்போது, பெண்கள் தீவிரம் காட்டுகின்றனர். பாதுகாப்பான சமையல் எரிவாயுவுக்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெற முடியவில்லை என்றும், ஆவணங்களில் சிக்கல் இருப்பதாகவும், 46 வயதான புஷ்பா ராவ்சாஹேப் பாட்டீல் கூறுகிறார்.

60 வயதை கடந்த உஷாபாய் ராம சுதருக்கு வீடு இல்லை. "லோகன்னா மூலபூத் சுவித மிலாயலா ஹவ்யேத், நாஹி [மக்களுக்கு அடிப்படை சேவைகள் கிடைக்க வேண்டும், இல்லையா]?" என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்து  சொந்த ஊருக்குத் திரும்பிய அப்பெண் கூறுகிறார். "அனைத்து குடிமக்களுக்கும் வாழ்வதற்கு வீடு இருக்க வேண்டும்."

பெரும்பாலான பெண்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். 55 வயதாகும் ரசியா படேலின், வீட்டு வாடகை 3,500 ரூபாய் என்று கூறுகிறார். இது அவரது சொற்பமான மாத வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு. "ஒவ்வொரு தேர்தலிலும் மெஹங்காய் [பணவீக்கம்] குறித்த வாக்குறுதிகளை நாங்கள் கேட்கிறோம்," என்று அவர் கூறுகிறார். "தேர்தலுக்குப் பிறகு, எல்லாவற்றின் விலைகளும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன."

சுதந்திரமாக வாழ்வதற்காகவும், வேறு வாய்ப்பின்றியும் இந்த வேலையைச் செய்வதாக பெண்கள் கூறுகின்றனர். சுதர் 21 ஆண்டுகளாகவும், சங்கீதா நாராயண் ஷிண்டே 20 ஆண்டுகளாகவும், மாலுபாய் தேவிதாஸ் மகாலே 17 ஆண்டுகளாகவும், உஷா பீம்ராவ் தங்கர் 14 ஆண்டுகளாகவும் இங்கு பணியாற்றி வருகின்றனர். இன்னும் பலர் பல ஆண்டுகளாக இங்கு வேலை செய்கின்றனர்.

முதல் தொகுப்பாக 40 முதல் 50 கிலோ கத்திரிக்காயைத் தயாரிப்பதில் அவர்களின் நாள் தொடங்குகிறது. கத்தரிக்காயை வேகவைத்து, வறுத்து, உரித்து, சதைப்பற்றுள்ள உட்புறங்களை கவனமாக பிரித்தெடுத்து கையால் கூழ் செய்ய வேண்டும். கிலோ கணக்கில் பச்சை மிளகாயை எடுத்து பூண்டு, வேர்க்கடலை சேர்த்து கையால் இடிக்கின்றனர். இந்த தெச்சா (அரைத்த பச்சை மிளகாய் மற்றும் வேர்க்கடலை சேர்ந்த உலர்ந்த சட்னி), சூடான எண்ணெயுடன் நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்துடன் தாளித்து, சமைத்த கத்திரிக்காயில் சேர்க்கப்படும். பெண்கள் தினமும் சில டஜன் கிலோ வெங்காயத்தை நறுக்குகிறார்கள்.

PHOTO • Kavitha Iyer
PHOTO • Kavitha Iyer

இடது: பெண்கள் தினமும் சுமார் 2,000 போளிகள் அல்லது சப்பாத்திகளையும், கூடுதலாக கம்பு மாவில் தயாரிக்கப்பட்ட 1,500 பக்ரிகளையும் தயாரிக்கின்றனர். வலது: கிருஷ்ணாஜி பரித்தின் 'பார்சல் டெலிவரி' ஜன்னலுக்கு வெளியே பிளாஸ்டிக் பைகளில் குழம்பு காத்திருக்கின்றன

கிருஷ்ணாஜி பரித்திற்கு உள்ளூர் வாடிக்கையாளர் மட்டுமின்றி, தொலைதூர நகரங்கள் மற்றும் தாலுக்காக்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். பச்சோரா, புசாவல் போன்ற 25 கி.மீ முதல் 50 கி.மீ தூரத்தில் இருந்து வந்தவர்கள் உணவகத்தில் உள்ள ஒன்பது பிளாஸ்டிக் மேசைகளில் இரவு உணவை முன்னதாகவே சாப்பிடுகின்றனர்.

டோம்பிவலி, தானே, புனே மற்றும் நாசிக் உள்ளிட்ட 450 கி.மீ தூர இடங்களுக்கு கிருஷ்ணாஜி பரித் உணவகத்திலிருந்து தினமும் 1,000 பார்சல்கள் ரயிலில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

2003ஆம் ஆண்டில் அசோக் மோதிராம் போலே என்பவரால் நிறுவப்பட்ட கிருஷ்ணாஜி பரித் அதன் பெயரை உள்ளூர் சாமியாரிடமிருந்து பெற்றது. அவர் சைவ உணவகம் இலாபகரமானது என்பதை இக்கடை நிரூபிக்கும் என்று உரிமையாளரிடம் கூறினார். இங்கு கிடைக்கும் பரித் என்பது லேவா பாட்டீல் சமூகத்தினரால் சிறப்பாக சமைக்கப்படும் நம்பகமான பாரம்பரிய வீட்டு தயாரிப்பு உணவாகும் என்று மேலாளர் தேவேந்திர கிஷோர் போலே கூறுகிறார்.

வடக்கு மகாராஷ்டிராவின் கந்தேஷ் பகுதியில் சமூக-அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த லேவா-பாட்டீல் சமூகம், தங்கள் சொந்த பேச்சுவழக்குகள், சமையல், கலாச்சார வேர்களைக் கொண்ட ஒரு விவசாய சமூகமாகும்.

கத்தரிக்காய் குழம்பின் நறுமணம் உணவகத்திற்குள் ஊடுருவ, பெண்கள் இரவு உணவுக்காக போளி மற்றும் பக்ரிகளை தயார் செய்ய தொடங்குகிறார்கள். பெண்கள் தினமும் சுமார் 2,000 போளிகளையும் (சப்பாத்தி, கோதுமையால் செய்யப்பட்ட தட்டையான ரொட்டி) மற்றும் சுமார் 1,500 பக்ரிகளையும் (தானியங்களில் செய்யப்படும் தட்டை ரொட்டி, பொதுவாக கிருஷ்ணாஜி பரித்தில் கம்பு அல்லது மக்காச்சோளத்தில்) தயாரிக்கின்றனர்.

சீக்கிரமே இரவு உணவு நேரம் வந்துவிடும், அன்றைய வேலைகள் முடியும்போது  பெண்கள் சோர்வடையத் தொடங்குவார்கள். ஒரு நேரத்தில் ஒரு பரித் பார்சல் மட்டுமே.

தமிழில்: சவிதா

Kavitha Iyer

کویتا ایئر گزشتہ ۲۰ سالوں سے صحافت کر رہی ہیں۔ انہوں نے ’لینڈ اسکیپ آف لاس: دی اسٹوری آف این انڈین‘ نامی کتاب بھی لکھی ہے، جو ’ہارپر کولنس‘ پبلی کیشن سے سال ۲۰۲۱ میں شائع ہوئی ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز Kavitha Iyer
Editor : Priti David

پریتی ڈیوڈ، پاری کی ایگزیکٹو ایڈیٹر ہیں۔ وہ جنگلات، آدیواسیوں اور معاش جیسے موضوعات پر لکھتی ہیں۔ پریتی، پاری کے ’ایجوکیشن‘ والے حصہ کی سربراہ بھی ہیں اور دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب تک پہنچانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priti David
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

کے ذریعہ دیگر اسٹوریز Savitha