2018ம் ஆண்டு நில உரிமையாளர் ஆனார் கட்டமிடி ராஜேஸ்வரி. “சொந்தமாக நிலம் வைத்திருக்கும் பெண்ணாகப் போகிறேன் என்பதை நினைத்து மகிழ்ந்தேன்.”
கையில் உள்ள நில உரிமைப் பத்திரத்தைப் பார்த்து அவர் அப்படி நினைத்தார்.
எங்கேபள்ளி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவில், பார்வாட் என்ற இடத்தில் அந்த 1.28 ஏக்கர் நிலத்தை ரூ.30 ஆயிரம் கொடுத்து வாங்கியிருந்தார் அவர். ஆனால், ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும் அந்த நிலம் அவருக்கு உரிமையானது என்பதை அரசாங்கம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்கிறார் அவர்.
நிலம் வாங்கி சில மாதங்களிலேயே பட்டாதாரர் பாஸ் புத்தகம் வாங்குவதற்குத் தேவையான, நில உரிமைப் பத்திரம், வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அவருக்கு கிடைந்துவிட்டன. ஆனால் “ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும், பட்டாதாரர் பாஸ்புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. பட்டாதாரர் பாஸ்புத்தகம் இல்லாத நிலையில் உண்மையில் இந்த நிலம் என்னுடையதுதானா?”
நிலத்தின் உரிமை மாறிவிட்டது என்பதை பத்திரம் காட்டுகிறது. ஆனால், அந்த உரிமை தொடர்பாக கூடுதல் தகவல்களை பட்டாதாரர் பாஸ்புத்தகம் தரும். பட்டாதாரர் பெயர், சர்வே எண், நில வகை உள்ளிட்ட தகவல்கள் பட்டாதாரர் பாஸ்புத்தகத்தில் இடம்பெறும். நில உரிமையாளரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வட்டாட்சியரின் கையொப்பம் ஆகியவையும் அதில் இருக்கும்.
தெலங்கானா நில உரிமை மற்றும் பட்டாதாரர் பாஸ்புத்தகச் சட்டம் 2020 -ன் கீழ், ‘ தரணி ’ என்கிற ஆன்லைன் நில ஆவண நிர்வாகத் தளம் தொடங்கப்பட்டபோது, ராஜேஸ்வரிக்கு நம்பிக்கை கொஞ்சம் அதிகமானது.
இந்த தளம் தொடங்கப்பட்ட நேரத்தில், இதை விவசாயிகளுக்கு இணக்கமான தளம் என்று குறிப்பிட்ட தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், “நிலம் பதிவு செய்வதை இந்த தளம் எளிமைப்படுத்துகிறது, விரைவுபடுத்துகிறது. நிலப்பதிவுக்காக மக்கள் பல அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலை இனி இருக்காது,” என்று குறிப்பிட்டார்.
“தரணி (தளம்) எங்கள் பிரச்சனையை தீர்க்கும் என்றும், ஒரு வழியாக எங்களுக்கு பட்டாதாரர் பாஸ்புத்தகம் வந்து சேரும் என்றும் நாங்கள் நம்பினோம்,” என்று கூறினார் ராஜேஸ்வரியின் கணவர் ராமுலு. “2019 வரை, குறைந்தது மாதம் இரண்டு முறை வட்டாட்சியர் அலுவலகத்துக்குப் போய் வந்துகொண்டிருந்தோம்.”
2020ம் ஆண்டு மக்கள் தரணி தளத்துக்குப் போய் பார்த்தபோது, அதில் பலரது நிலத்தின் சர்வே எண்கள் இல்லை என்பதும், அதை யாரும் தனிப்பட்ட முறையில் சேர்க்க முடியாது என்பதும் தெரியவந்தது.
“[பெயர், ஏக்கர் கணக்கு, சர்வே எண் இல்லாமல் இருப்பது போன்ற] பிழைகள் ஏதாவது இருந்தால் அவற்றைத் திருத்தும் வாய்ப்பு இப்போது மிகவும் குறைவாக இருப்பதுதான் தரணி தளத்தில் உள்ள பெரிய பிரச்சனைகளில் முக்கியமானது,” என்று கூறுகிறார் கிசான் மித்ரா அமைப்பின் விகாராபாத் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆலோசகருமான பார்கவி உப்புலா.
20 கி.மீ. தொலைவில், விகாராபாத் மாவட்டம், கிர்கெட்பள்ளி என்ற இடத்தில், தனது பெயர் தவறாகப் பதிவான காரணத்தால் தனது நிலத்தை சட்டபூர்வமாக சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் உள்ளார் முடவத் பத்யா. தளத்தில் இவரது பெயர் ‘பத்யா லம்படா’ என்று பதிவாகியுள்ளது. இரண்டாவதாக இருப்பது தெலங்கானாவில் பட்டியல் பழங்குடியாகப் பதிவாகியுள்ள சாதிப் பெயர். இவரது பெயர் ‘முடவத் பத்யா’ என்று இருக்கவேண்டும்.
40 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஏக்கர் நிலம் வாங்கினார், தற்போது 80 வயது ஆகும் முடவத் பத்யா. “மற்றவர்கள் நிலங்களில் விவசாயம் செய்து, கட்டுமானத் தளங்களில், செங்கல் சூளைகளில் பல ஆண்டுகள் வேலை செய்து சொந்தமாக நிலம் வாங்கினேன்”. மக்காச்சோளம், சோளம் ஆகியவற்றை இவர் விளைவித்தார். ஆனால், “விவசாயத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் போதுமானதாக இல்லை. பலத்த மழையால் பெரும்பாலான பயிர்கள் அழிந்துவிடும்,” என்கிறார் அவர்.
இவரது பெயர் தவறாகப் பதிவாகியிருப்பதால், தெலங்கானாவில் செயல்படுத்தப்படும் ரயத்து பந்து திட்டத்தின் கீழ் இவரால் பயன் பெறமுடியவில்லை. இந்த திட்டத்தின்கீழ் குறைந்தது ஓர் ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஒவ்வோர் ஏக்கர் நிலத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம் ரூபாய் ஆண்டுக்கு இரண்டு முறை (சம்பா, குறுவை சாகுபடிகளுக்கு) மானியமாக வழங்கப்படும்.
தரணி தளத்தில் உள்ள குறைகளைக் களைய தாங்கள் முயற்சி செய்து வருவதாகவும், ஆனால், இந்தக் குறைபாடுகள் அரசியல் கருவியாக ஆக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார், விகாராபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, பெயர் வெளியிட விரும்பாத ஓர் அலுவலர். தற்போதைக்கு ‘ குறிப்பான நில விவரங்கள் ’ என்ற பிரிவின் கீழ் பெயர், ஆதார், புகைப்படம், பாலினம், சாதி போன்ற 10 விவரங்களைத் திருத்த முடியும்.
40 கிலோ மீட்டருக்கு அப்பால், போபனவரம் கிராமத்தை சேர்ந்த ரங்கய்யாவின் பெயர் தரணி தளத்தில் கச்சிதமாக சரியாக இடம் பெற்றுள்ளது. இருந்தபோதும் அவருக்கும் ரயத்து பந்து திட்டத்தின்கீழ் பணம் வரவில்லை. ரங்கய்யாவுக்கு போபனவரம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. அவருக்கு 1989ம் ஆண்டு அந்த நிலம் வழங்கப்பட்டது. தெலங்கானாவில் பட்டியல் சாதியாக உள்ள பேட ஜங்கம் சாதியைச் சேர்ந்தவர் அவர்.
“2019-2020 காலக்கட்டத்தில் எனக்கு மூன்று தவணை வந்தது. தரணி இணைய தளத்தில் எனது நிலவிவரங்கள் டிஜிடல் பதிவாக மாறிய பிறகு எனக்கு பணம் வருவது நின்றுபோனது,” என்று விவரித்தார் 67 வயதான ரங்கையா. ஒவ்வொரு தவணையிலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் (ஏக்கருக்கு 5 ஆயிரம்) வந்துகொண்டிருந்தது.
“எந்த அதிகாரியும் எனக்கு தெளிவான பதிலைத் தரவில்லை. ஒருவேளை அவர்களுக்கே என்ன சொல்வது, ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியாமல் இருக்கலாம்,” என்றார்.
தரணி இணையதளத்தில் பிழைகளை நாமாக சரி செய்யும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லை என்கிறார் பார்கவி. மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசகராக இருக்கும் இவர், “வழங்கப்பட்ட நிலமாக இருந்தால், வாரிசுதாரர் பெயரை மாற்றும் வசதி மட்டுமே தளத்தில் உள்ளது.” வழங்கப்பட்ட நிலத்தை விற்க முடியாது. அது வழிவழியாக பரம்பரைக்குச் செல்லும். அவ்வளவே.
கிர்கெட்பள்ளி கிராமத்தில், ஓர் அறை மட்டுமே கொண்ட கூரை வீட்டில் தனது இளைய மகனோடு வசிக்கிறார் பத்யா. அவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
ரயத்து பந்து திட்டத்தின் மூலம் இவருக்குப் பணம் வராதது மட்டுமல்ல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தின் கீழ் அவருக்கு கிடைத்துக் கொண்டிருந்த 260 நாள் வேலையும், அவரது கிர்கெட்பள்ளி கிராமம் பக்கத்தில் உள்ள விகாராபாத் நகராட்சியோடு இணைந்தது முதல் நின்றுபோனது.
தனது பெயரை இணையதளத்தில் சரி செய்யும்படி விகாராபாத் வருவாய்த் துறை அலுவலகத்தில் 2021ம் ஆண்டு குறைதீர்வு மனு ஒன்றை அளித்தார் அவர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
"நிலத்தை விற்க வேண்டுமென என் (இளைய) மகன் சொல்லிக் கொண்டிருந்தான். விற்ற பணத்தைக் கொண்டு ஒரு காரை வாங்கி, டாக்சி ஓட்டுநராகப் போவதாக சொன்னான். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஒருவேளை நான் ஒப்புக் கொண்டிருக்கலாம்" என்கிறார் பத்யா.
*****
தரணி தளத்தின் பதிவில், தங்கள் நிலத்தின் சர்வே எண் இல்லை என்பது குறித்து ஒரு வழியாக, 2022 நவம்பரில், விகாராபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜேஸ்வரியும் ராமுலுவும் ஒரு விண்ணப்பம் அளித்தனர்.
அதன் பிறகு, நடவடிக்கை கோரி, இருவரும் கோட்டபள்ளி வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், விகாராபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் வாரம் ஒரு முறை செல்வார்கள். அவர்கள் வீட்டில் இருந்து விகாராபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு பஸ் மூலமாக வந்து செல்ல ஆளுக்கு ரூ.45 டிக்கெட் செலவு ஆகிறது. வழக்கமாக அவர்கள் காலையிலேயே கிளம்பி, மாலைதான் வீடு திரும்புவார்கள். “எங்கள் இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்குச் சென்ற பிறகு, பட்டாதாரர் பாஸ்புத்தகம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நாங்கள் வீட்டில் இருந்து கிளம்புகிறோம்,” என்கிறார் ராஜேஸ்வரி.
2018ம் ஆண்டின் இறுதியில் இருந்து அவர்கள் பார்வாடில் உள்ள 1.28 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார்கள். “ஜூன் மாதத்தில் (பருத்தி) பயிரிடுகிறோம். ஜனவரி நடுப்பகுதியில் பூக்கள் பூக்கின்றன. இந்தப் பகுதியில் பணமும், தண்ணீரும் பற்றாக்குறையாக இருப்பதால், இந்த ஒரு பயிரை மட்டுமே சாகுபடி செய்கிறோம்,” என்கிறார் ராமுலு. ஒவ்வோர் ஆண்டும் ஒரு குவிண்டால் அளவுக்கு (100 கிலோ) சாகுபடி செய்யும் அவர்கள் அதை ரூ.7,750-க்கு விற்கிறார்கள்.
பட்டாதாரர் பாஸ்புத்தகம் இல்லாமல், அவர்களால் ரயத்து பந்து திட்டத்தில் நிதியுதவி பெறமுடியவில்லை. இதனால், சுமார் 8 தவணை நிதியுதவியான சுமார் ரூ.40 ஆயிரம் வருவது தவறிவிட்டது என்கிறார்கள் அவர்கள்.
அவர்களுக்கு இந்த நிலுவைத் தொகை வருவதற்கான வாய்ப்பு இல்லை என்கிறார் பார்கவி.
போபனவரத்தை சேர்ந்த ரங்கையாவுக்கு ரயத்து பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வருவது நின்றுவிட்டது. எனவே, குறைவான நிதியை வைத்துக்கொண்டு அவரால், ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சோளமும், மஞ்சளும் மட்டுமே பயிர் வைக்க முடிகிறது.
ஆனால், ஒன்றிய அரசு இணையதளம் ரங்கையாவை சரியான முறையில் அடையாளம் காண்கிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி ( PM-KISAN ) மூலம் அவருக்குப் பணம் வருகிறது. இந்த திட்டத்தில் சிறிய, விளிம்பு நிலை விவசாயிகளுக்கு அவர்களது ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது.
“ஒன்றிய அரசு என்னை பயனராக அடையாளம் கண்டுள்ள நிலையில், மாநில அரசு ஏன் பயனாளர்கள் பட்டியலில் இருந்து என்னை நீக்கியது?,” என்று ரங்கையா கேள்வி எழுப்பினார். “இது தரணி தளத்தை அறிமுகம் செய்த பிறகே நிகழ்ந்தது.”
*****
நிலத்தின் உரிமையாளர்களாக சட்டப்படி அங்கீகரிக்கப்படுவதற்காக காத்திருந்து வெறுப்படைந்த ராஜேஸ்வரியும், ராமுலுவும் 2023ம் ஆண்டு ஜனவரியில் கால்நடை வளர்ப்பைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பாரம்பரியமாக கால்நடைகள் மேய்க்கும் கொல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தனியார் வட்டிக்காரரிடம், ஓராண்டில் திருப்பிச் செலுத்தும் வகையில், மாதம் 3 சதவீத வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கினார் அவர். ஓராண்டு காலத்துக்கு அவர் மாதம் ரூ.3,000 கட்ட வேண்டும். இது வட்டித் தொகை மட்டுமே.
“சில மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் ஆடுகளை விற்கத் தொடங்குவோம். ஒவ்வோர் ஆட்டுக்குட்டியும், ரூ.2,000 முதல் 3,000 வரை விலை போகும். வளர்ந்த ஆடுகள் அவற்றின் உடலைப் பொறுத்து தலா ரூ.5,000 முதல் 6,000 வரை விலை போகும்,” என்று விளக்கினார் ராமுலு.
பட்டாதாரர் பாஸ்புத்தகத்துக்காக இன்னும் ஓராண்டு என்றாலும் முயற்சி செய்து பார்ப்பது என்று அவர்கள் உறுதியாக உள்ளார்கள். ஆனால் ராஜேஸ்வரி சோர்வாக இப்படிக் கூறினார்: “என் பெயரில் சொந்தமாக நிலம் வரவே வராதோ என்னவோ?”
ரங் தே நிதியுதவியில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்