"நான் சிறுவயதில் இருந்தே இந்த வேலையை (விவசாயக் கூலி) செய்து வருகிறேன், எனக்கு ஒன்பது வயதாகும் முன்பிருந்தே இதை செய்கிறேன்", என்று 54 வயதான தினக்கூலி தொழிலாளி கூறுகிறார். சுமன் ஒருபோதும் பள்ளிக்குச் சென்றதில்லை. அவரது தந்தை இறந்த பிறகு, தனது மாமாவின் (தாய்மாமன்) வயலில் அவர் வேலை செய்யத் தொடங்கினார்.
"இந்திரா காந்தி இறந்த ஆண்டு [1984] எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு திருமண வயது நினைவில் இல்லை, ஆனால் 16-20 வயது இருக்கும், "என்று அவர் கூறுகிறார். இவர் பண்டு சம்ப்ரே என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். "கர்ப்ப காலம் முழுவதும் நான் வேலை செய்தேன்,", என்று சுமன் கூறுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கட்டுமான வேலையை விட்டுவிட்டு விவசாய வேலைக்கு சுமன் திரும்பினார். இவர் தனது 15 வயது நம்பிரதா, 17 வயது கவிதா, 12 வயது குரு, 22 வயதான துல்ஷா, 27 வயதான சில்வினா ஆகிய 5 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுமனின் தாயார் நந்தாவும் அவர்களுடன் பால்கர் மாவட்டத்தில் உள்ள உமேலா கிராமத்தில் வசிக்கிறார்.
"நான் கட்டாயத்திற்காக வேலை செய்கிறேன். எனக்கு வேறு வழியில்லை" என்கிறார் சுமன். இவரது குடும்பம் மல்ஹார் கோலி சமூகத்தைச் சேர்ந்தது (மகாராஷ்டிராவில் பட்டியல் பழங்குடியினராக பட்டியலிடப்பட்டுள்ளது).














